தெள்ளத் தெளிவுடனே சிந்தித்தல் நங்கடனே !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 


உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிவுடனே சிந்தித்தல் நங்கடனே 
கள்ளங் கபடமதை கனவதிலும் காணாமல்
உள்ளுவதை உயர்வாக உணர்வுடனே கலந்திடுவோம்  !

வெள்ளமென வேகமுடன் வீழ்த்தவரும் வினைகளையும்
வெங்கொடுமைத் தீயெனவே பொசுக்கவரும் வேட்கையையும் 
பொங்கிவரும் ஆசையெனும் பொல்லாத ஆற்றினையும்
எங்களிடம் வாராமல் இருப்பதற்கு இறைநினைப்போம்  !

பசித்திரு தனித்திரு விழித்திரு நினைத்திரு 
அணைத்திரு அகற்றிடு ஆணவம் ஒதுக்கிடு
படித்திடு திருமுறை பகர்ந்திடு நல்லுரை
இருத்திடு மனமதில் இறையது விருப்பினை  ! 

வெறுத்திடு பகைமையை விரட்டிடு பொய்மையை
பெருக்கிடு மெய்மையை இருத்திடு பொறுமையை 
நசுக்கிடு கோபத்தை நயந்திடு தர்மத்தை 
இருத்திடு கருணையை இறுக்கிடு இறையடி !  

No comments: