ஸ்வீட் சிக்ஸ்டி 4 - பலே பாண்டியா - - ச சுந்தரதாஸ்

.

இந்திய சுதந்திரத்துக்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய கட்டபொம்மனின் வரலாற்றை படமாகியவர் பிரபல தயாரிப்பாளரும் டைராக்டருமான பி ஆர் பந்துலு.சிவாஜியின் நடிப்பில் இவர் உருவாக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் மாபெரும் வெற்றி பெற்றது.அந்த துணிவில் அடுத்ததாக வா உ சி யின் வரலாற்றை கப்பலோட்டியத் தமிழன் என்ற பெயரில் படமாக்கினார்.சிவாஜியின் நடிப்பில் வெளியான இந்த படம் பெரு தோல்வியை சந்தித்தது.இதனால் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்த பந்துலுவுக்கு உதவ சிவாஜி முன் வந்தார்.சம்பளம் ஏதுமின்றி மிக குறுகிய காலத்துக்குள் ஒரு படத்தில் நடித்து கொடுக்க சிவாஜி முன் வரவே அப்படி உருவான படம் தான் பலே பாண்டியா.


இம்முறை சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகிகள் வரலாறுகளை படமாக்கி சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பாத பந்துலு முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை படத்தை தயாரிக்கத் தொடங்கினார்.குறுகிய கால தயாரிப்பு என்பதால் நிறைய நடிகர்களைத் தேடி அலையாமல் மூன்று வேடத்தில் சிவாஜி கணேசன் இரட்டை வேடத்தில் எம் ஆர் ராதா இவர்களுடன் தேவிகா பாலாஜி எம் ஆர் சந்தானம் வசந்தி சந்தியா இவர்களை வைத்து படத்தை மளமளவென்று வெறும் இரண்டே வாரங்களில் எடுத்து முடித்து விட்டார்.

அப்பாவி பாண்டியன்,சயன்டிஸ் சங்கர்,கொள்ளைக்காரன் மருது என்று மூன்று வேடங்களை ஏற்று சிவாஜி நடித்தார்.மூன்று மாறுபட்ட குணாம்சங்களை தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் அவர்.வழக்கமாக கம்பீரக் குரலில் பேசி நடிக்கும் சிவாஜி இதில் சங்கர் வேடத்தில் மிக சன்னமான குரலில் அடக்கமாக நடித்து வித்தியாசம் கட்டியிருந்தார்.மருதுவின் மானரிஸமும் ஜோர்.அவர் தான் அப்படி என்றால் இரட்டை வேடத்தில் வரும் எம் ஆர் ராதா தன் குரல்,நையாண்டி வசனம்,அங்க சேட்டைகள் என்று பலவகைகளிலும் பிய்த்து உதறி இருந்தார். நீயே உனக்கு என்றும் நிகரானவன் பாடலில் எம் ஆர் ராதா பண்ணும் அட்டகாசம் சிரிக்காதவர்களையும் சிரிக்க வைத்து விடும். வழக்கமாக மிடுக்கான வேடத்தில் வரும் பாலாஜிக்கு இதில் அசடு வழியும் நகைச்சுவை வேடம்.குறையின்றி அதனை செய்திருந்தார்.தேவிகா வழக்கம் போல் நடித்திருந்தார்.ஒரு சிவாஜிக்கு தேவிகா ஜோடி என்றால் மற்றொரு சிவாஜிக்கு ஜோடி சந்தியா.இதற்கு ஆறு ஆண்டுகள் கழித்து சந்தியாவின் மகள் ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு சிவாஜிக்கு கிடைத்தது காலத்தின் கோலம்.





படத்தில் இவர்களுடன் போட்டி போடுவது பாடல்கள் தான்.அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே பாடல் கண்ணதாசனின் கவித்திறனுக்கு ஒரு சாம்பிள். வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்,யாரை
எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல,நான் என்ன சொல்லி விட்டேண்ணே ஏன் மயங்குகிறாய்,ஆதி மனிதன் காதலுக்கு பின் அடுத்த காதல் இதுதான் என்று எல்லாப் பாடல்களும் கண்ணதாசன்,விஸ்வநாதன் ,ராமமூர்த்தி,டீ எம் எஸ் ,சுசிலா,ஸ்ரீனிவாஸ்,ஜமுனாராணி ஆகியோரின் கூட்டில் இனிமையாக ஒலிக்கிறது.

படத்தின் வசனங்களை மா ரா எழுதியிருந்தார்.திரைக்கதையை மற்றுமொரு இயக்குனரான தாதாமிராசி எழுத,வீ ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருந்தார்.ரசிகர்கள் கப்பலோட்டியத் தமிழனை கை விட்டது போல் செய்யாது பாண்டியனை வெற்றி பெற வைத்து பந்துலுவை கரையேற்றினார்கள்!




No comments: