பல புதிய குரல்கள் பல அறிந்த குரல்கள் இப்படி விதவிதமான குரல்கள் அந்த தொலைபேசி ஊடாக வந்துபோகும். வணக்கம் என்று கூறியதும் வணக்கம் ஐயா என்று பாசத்தோடு ஒலிக்கின்ற ஒரு குரல் அவரை நேரில் பார்த்து பேசுவது போல் இருக்கும். இவ்வளவு சாந்தமாக, அன்பாக, இனிமையாக அந்தக் குரல் பேசும் . நான்தான் ஐயா பத்மநாதன் பேசுறன் என்பார் காலம்சென்ற பத்மநாதன் ஐயா அவர்கள். சொல்லாமலே அவருடைய குரல் அவரை யாரென்று காட்டிக் கொடுத்துவிடும் ஆனாலும் தன்னுடைய பெயரை சொல்லியே பேசுவார். என்னிலும் பார்க்க எத்தனையோ வயசு மூத்த பெரியவர் ஆனால் அவர் பேசுகின்ற போது என்னை ஐயா என்றுதான் அழைத்துக் கொள்வார். நான் பலமுறை கேட்டிருக்கிறேன் ஏன் ஐயா நீங்கள் பெயரை சொல்லியே அழைக்கலாம் என்பேன் ஒரு சிரிப்பு ஒரு புன்னகை அவ்வளவுதான். தொடர்ந்தும் அப்படியே தான் அழைத்தார்.
பாடல்களைப் பற்றி பேசுவார். இவருடைய வயதொத்தவர்கள் பழைய பாடல்களை ரசித்து கொண்டிருப்பார்கள், பழைய பாடல்களில் இருக்கின்ற இனிமை புதிய பாடல்களிலே இல்லை என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்பார்கள், ஆனால் இவர் கேட்பதில் பல புதிய பாடல்கள் ஆகத்தான் இருக்கும். பல புதிய பாடல்களை எனக்கு அறிமுகம் செய்தவர் திரு பத்மநாதன் ஐயா அவர்கள். "ஐயா இந்த படத்துல ஒரு பாட்டு ஒன்று வந்திருக்கு கேட்ட நீங்களோ தெரியாது" என்பார் சில வேளைகளில் அந்த பாடலை நான் கேட்டு ரசித்து இருப்பேன் சில வேளைகளில் நான் கேட்காமல் இருந்திருப்பேன். அந்த பாடலை உடனடியாக தேடி எடுத்து கேட்டு பார்ப்பேன் மிக இனிமையாக, எனக்குப் பிடித்ததாக இருக்கும். அவருடைய அந்த ரசனையும் என்னுடைய ரசனையும் எங்கோ ஒரு இடத்தில் ஒத்துப் போகின்றததாக இருக்கும்போல் தெரிகின்றது.
அதிகமாக ஒர் இரு பாடலை மீண்டும் மீண்டும் கேட்பார் நானும் சிரித்துக்கொண்டு அவர் தொலைபேசியை எடுத்தவுடன் என்னய்யா இந்த பாட்டா என்று கேட்டால் அவர் சிரித்து விட்டு இந்தப் பாட்டை போடுங்கள் என்பார். அந்தப்பாடல் சுப்ரமணியபுரம் படத்தில் வரும் "கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்" பாடல் அல்லது பூமியின் அழகே பருத்தியின் சுடரே பாடல் . ஒரு இளமை ததும்பும் மனிதனாக புதிய பாடல்களில் இசையை, புதிய பாடல்களின் வரிகளை, புதிய பாடல்களின் ரம்மியத்தை எல்லாம் ரசித்த ஒரு இளைஞனாக நான் அவரை காண்பேன் . அப்படி என்னோடு பேசிப்பழகிய பத்மநாதன் ஐயா சென்ற வாரம் மண்ணுலகை விட்டு சென்றுவிட்டார். அவருடைய இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவரை பார்த்தபோது கண்கள் குளமாகியது.
அவர் இறப்பதற்கு ஒரு இரண்டு வாரங்களுக்கு முன்பு எனது மனைவி சாந்தியுடன் பேசிக் கொண்டிருக்கின்றத போது இவரைப் பற்றிய பேச்சு வந்தது, அப்போது நான் மனைவியிடம் கூறினேன் இவரை சென்று ஒரு முறை பார்க்க வேண்டும் அவரோடு பேச வேண்டும் என்று கூறினேன். இயந்திரமான உலக வாழ்க்கையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் நினைத்ததை நினைத்த உடன் முடித்துவிடவேண்டும் தவறவிட்டால் மீண்டும் அதைச் செய்ய முடியாது என்ற விடயம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. அவரை சென்று பார்க்க முடியாமலேயே போய் விட்டது. ஆனால் அவர் உயிரற்ற உடலை மட்டும் தான் பார்க்க முடிந்தது வேதனையாக இருந்தது.
இப்படியான பல மனிதர்களை சந்தித்து இருக்கின்றேன். இந்த உலகத்தை விட்டு அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் உறவினர்கள் அல்லது பழகியவர்கள் அல்ல வானலைகளில் தொலைபேசி ஊடாக பழகியவர்கள். அன்பு உள்ளங்கள் எப்போதுமே உண்மை பிடிப்போடு உரையாடுபவர்கள். என் மனதில் சிம்மாசனம் இட்டு உட்க்கார்த்திருப்பவர்கள்.
ஒரு அம்மா ஒருமுறை கேட்டார் தொடர்ந்து உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன் ஆனால் உங்களைப் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டார் நான் கூறினேன் நிலைய கலையகத்துக்கு வாருங்கள் பார்க்கலாம் பேசலாம் என்று கூறினேன். அவர் கூறினார் நான் வெளியில் வெளிக்கிடுவதில்லை என்று. அடுத்த தடவை பேசுகின்றபோது அவரிடம் கூறினேன் உங்களுடைய முகவரியை தாருங்கள் நான் அடுத்த கிழமை வந்து உங்களை நேரில் பார்க்கின்றேன் என்று. தந்தார் குறிப்பிட்ட அந்த நாள் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மரண அறிவித்தல் வருகின்றது அந்த அம்மா இந்த பூவுலகை விட்டு சென்றுவிட்டார். தாங்க முடியாத வேதனை மனதை சுட்டெரித்தது. இப்படி எத்தனை நல்ல உள்ளங்கள் அதில் பத்மநாதன் ஐயா விசேடமாக என்னுடைய மனதில் இடம் பிடித்த ஒருவர்
ஒரு சில தடவைகள் அவருடைய வீடு சென்று அவரோடு உரையாடி இருக்கின்றேன் அவருடைய மகள் ஜசோதா ஒரு தங்கையை போன்றவர் இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் அவரோடு நிறைய பழகி இருக்கிறேன். பத்மநாதன் ஐயா அவர்களை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் அம்மாவிற்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த அஞ்சலிகள். பத்மநாபன் அய்யா அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையட்டும்
அவருடைய விருப்ப பாடல்களில் ஒன்றான கவிஞர் சேரனின் வரிகளில் பூமியின் அழகே பருதியின் சுடரே
2 comments:
பாஸ்கரன்,
உங்கள் அஞ்சலிக்குறிப்புக்கு மிக்க நன்றி. ஒவ்வொரு வார்த்தைகளிலும் உண்மை ததும்பி நிற்கிறது.
அப்பா அமைதியானவர்.ஆனால், மிக சொற்பமான நண்பர்களை மட்டும் கொண்டிருந்தவர். அவர்கள் சரீர ரீதியாக தூரமாக வாழ்ந்த போதும், அவரின் இதயத்துக்கு மிக அண்மையாக வாழ்ந்தார்கள். உண்மையானவர்களாக அவர்கள் இருந்தார்கள். நீங்களும் அவர்களில் ஒருவர்.
அதே நேரம் அவர் ஒரு சிறந்த அவதானி. பாடல்களின் மகா ரசிகர். அவர் எதுபற்றியும் விமர்சனங்கள் செய்வதில்லை. ஆனால், அமைதியாகப் பிடித்ததை மட்டும் பற்றிக் கொள்வார். நடை உடை பாவனைகளில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றியவர்.
ATBC வானொலி எப்போதும் எங்கள் வீட்டில் ஒலித்துக் கொண்டிருக்கும். இரவு உணவின் பின்னர் வழக்கமாக தன் அறைக்கு அவர் போய் விடுவது வழக்கம். உணவருந்திய பிறகும் அவர் தன் இருக்கையில் வந்திருக்கிறார் என்றால் அது உங்கள் நிகழ்ச்சியைக் கேட்பதற்காகவே இருக்கும். அவர் உங்கள் நிகழ்ச்சியையும்; AJ ஜெயச்சந்திரா அவர்கள் நடத்தும்’இவ்வார நேயர்’ நிகழ்ச்சியையும் விருப்போடு செவிமடுப்பார்.
அண்மையில், வானொலி கேட்கமுடியாத தூரத்தில் அவர் சுகவீனமுற்றிருந்த போதொன்றில் என் தந்தையாரைக் குறிப்பிட்டு அவர் விரும்பிய பாடல் ஒன்றை நீங்கள் ஒலிபரப்பி இருந்தீர்கள். அதனை நான் அவருக்குத் தெரிவித்து அப் பாடலைப் போட்டுக் காட்டினேன். அவர் முகத்தில் மலர்ந்த அந்தப் புன்னகை நீங்கள் எமக்களித்த மறக்கவொண்ணாத ஒரு மலர்நகை.அத்துணை அழகாய் அது இருந்தது. அன்பு சுடர்விட்டு பிரகாசித்த அபூர்வமான தருணம் ஒன்று அது!!
படைப்பாளி ரசிகன் இணைப்பு என்பது பந்தங்கள் கடந்தது.என் தந்தையின் மனதுக்கினியவராக இறுதி வரை நீங்கள் இருந்தீர்கள் பாஸ்கரன்! அவரது தெரிவு எத்துணை உண்மையானதாக இருந்திருக்கிறது என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள். ஒரு ரசிகனுக்கு மிகச் சிறந்த அஞ்சலியை நீங்கள் அன்பு தோய்ந்த சொற்கள் சொரிந்து ஆராதித்து விட்டீர்கள் பாஸ்கரன். அதன் அழகை; தாற்பரியத்தை உங்கள் அஞ்சலிக் குறிப்பில் காண்கிறேன்.
உங்கள் பணி நலம் சிறக்க!
’அன்பே சிவம்’
’மக்கள் சேவையே மகேசன் சேவை’ - இவை எல்லாம் முதலில் இதயத்தில் இருந்து ஆத்மார்த்தமாக பிறப்பெடுக்கிறது. அதற்கு உங்கள் இந்த அஞ்சலிக்குறிப்பு சாட்சி!
மனமார்ந்த நன்றி.
அன்புடன்,
யசோதா.பத்மநாதன் ( மகள்)
நன்றி யசோதா.
பாஸ்கரன்,
Post a Comment