"த.தே.கூ. எம்.பிக்கள் முன்னறிவிப்பு இன்றி வருகை"
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு முழு அறிக்கையும் பாராளுமன்றில் கையளிப்பு
இலங்கை வருகிறார் அமெரிக்க உயரதிகாரி
20 வருடங்களின் பின்னர் லண்டனில் சந்தேக நபர் கைது
சஹ்ரானின் மனைவி மீதான வழக்கு மே.27க்கு ஒத்திவைப்பு
இலங்கை வரும் முன்னரான PCR மார்ச் 01 முதல் அவசியம் இல்லை
"த.தே.கூ. எம்.பிக்கள் முன்னறிவிப்பு இன்றி வருகை"
"ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்தைத் தவறாகப் பிரதிபலிக்க திட்டமிட்ட சதி"
- ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூட்டமைப்பு எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஜனாதிபதி அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதியைச் சந்தித்து மகஜரொன்றைக் கையளிக்கவே தாம் வந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை தொடர்பில் எவ்வித முன்னறிவிப்பும் விடுக்கப்படவில்லை என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று (24) ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான எவ்வித முன்னறிவிப்பும் அவர்களால் வழங்கப்படவில்லை. ஜனாதிபதி இன்று முற்பகல் ஏற்கனவே திட்டமிட்டிருந்த வேலைத்திட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில், பிரதமரைச் சந்திப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் அந்தக் கூட்டத்துக்குச் செல்லாமல் ஜனாதிபதி அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இல்லாத போது வருகை தந்த நிலையில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டம், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்தைத் தவறாகப் பிரதிபலிப்பதற்கு திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதி என்பது தெளிவாகிறது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தமிழ் மக்களின் குறைகளை கேட்டறிவதற்காக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளதாகவும், முன் கூட்டியே சந்திக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கைகள் சுமார் 3 ஆண்டுகளாக தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுள்ளதாக த.தே.கூ. எம்.பி. ஆர். சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் கணக்கில் இது தொடர்பில் பதிவொன்றை பதிவு செய்துள்ள அவர், அதனைத் தொடர்ந்தே நாம் அவரது சந்திப்பை எதிர்பார்த்து அவரது அலுவலகத்திற்கு வெளியே நிற்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நன்றி தினகரன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு முழு அறிக்கையும் பாராளுமன்றில் கையளிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அது தொடர்பான ஆதாரங்கள் உள்ளிட்ட அனைத்து தொகுதிகளும் பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
88 தொகுதிகளைக் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (22) காலை ஜனாதிபதி சட்டப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை (பகுதியளவில்) கடந்த 2021 பெப்ரவரி 23ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. சட்ட ரீதியான காரணங்களுக்காக அது தொடர்பான சாட்சிய பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் அல்லது தடயங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அறியக்கிடைத்த விடயங்களை மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டுமென்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில், பாராளுமன்ற உறுப்பினர்களின் மேலதிக பரிசீலனைக்காக அவை தொடர்பான கோப்புகள் பாராளுமன்றத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை வருகிறார் அமெரிக்க உயரதிகாரி
மனித உரிமைகள், வர்த்தகம் மற்றும் முதலீடு சம்பந்தமாக பிரதானமாக கவனம் செலுத்தப்படும் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உதவி இராஜாங்க செயலாளராக பதவியேற்ற பின்னர், அவர் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் செய்கிறார். டொனால்ட் லு, நேற்றுமுன்தினம் தொலைபேசியில் செய்தியாளர்கள் சிலருடன் பேசியுடன் அடுத்த மாதம் பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலக தமிழர் பேரவை ஆகிய தரப்புடன் கடந்த நவம்பர் மாதம் வொஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றிலும் டொனால்ட் லு கலந்துக்கொண்டார். நன்றி தினகரன்
20 வருடங்களின் பின்னர் லண்டனில் சந்தேக நபர் கைது
யாழ்ப்பாணத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல பத்திரிகையாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலையுடன் சம்மந்தப்பட்ட சந்தேகநபர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு பொறுப்பான பொலிஸார் கடந்த கிழமை நோர்தாம்ப்டன்ஷயாரில் உள்ள அவரின் வீட்டில் வைத்து, அவரைக்கைது செய்ததாக பெருநகர பொலிஸின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 வயதான சந்தேகநபர் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டம் 2001இன் பிரிவு 51கீழ், குற்றங்கள் புரிந்தாரென்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
2000ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலைச் சம்பவத்துடன் இந்நபர் தொடர்புடையவர். இந்த நடவடிக்கை குறித்து நிமலராஜனின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களுக்கு சிறப்பு அதிகாரிகள் ஆதரவளித்து வருகின்றனர். விசாரணைகள் தொடர்கின்றன.
விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களைப் பெறுவதற்கு அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர் – குறிப்பாக இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வசிக்கும் இலங்கை சமூகத்தவர்களிமிருந்து, இத்தகவலை எதிர்பார்ப்பதாக பெருநகர பொலிஸின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குப் பொறுப்பான தளபதி றிச்சர்ட் ஸ்மித் தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்
சஹ்ரானின் மனைவி மீதான வழக்கு மே.27க்கு ஒத்திவைப்பு
அரச சட்டத்தரணியின் ஆட்சேபனையும் நிராகரிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை வழக்கு எதிர்வரும் மே (27) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில், இவ்வழக்கு (24) விசாரணைக்கு எடுத்துக்காள்ளப்பட்டபோதே, மே 27 வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.இதன்போது சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணி, பிரதிவாதிக்கு எதிரான சான்றாக முன்வைக்கப்படும் அவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சிங்கள மொழியில் உள்ளதால், அதன் தமிழ் மொழிபெயர்ப்பு அவசிமென நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
குற்றப்பத்திரத்தின் இணைப்பு ஆவணங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால், அவை தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்படல் வேண்டும் எனவும் அப்போதே பிரதிவாதிக்கு தன்பக்க நியாயங்களை முன்வைக்க முடியுமாக இருக்கும் எனவும் ஹாதியாவின் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
எனினும், சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய, அரச சட்டத்தரணி மாதினி விக்கினேஸ்வரன், பிரதிவாதிகள் கோரிக்கைக்கமைய, மொழிபெயர்ப்பு வழங்கப்பட வேண்டியது அவசியமில்லயென தெரிவித்து, தமது ஆட்சேபனையை முன்வைத்துள்ளார்.
எவ்வாறாயினும் அந்த ஆட்சேபனையை நிராகரித்துள்ள கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி, அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள மொழி உரிமை தொடர்பில் ஆராய்கின்றபோது, பிரதிவாதி புரிந்துகொள்ளக் கூடிய மொழியில் , குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் குற்றப்பத்திர இணைப்புகள் காணப்பட்டால் மாத்திரமே நியாயமான வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து செல்லக் கூடிய சூழலை ஏற்படுத்தமென சுட்டிக்காட்டினார். இந்நிலையிலேயே வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 மற்றும் 26 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சாரா ஜஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் என்பவர் வெடிபொருட்களை தயாரித்தமை மற்றும் அவற்றை சேகரித்து வைத்திருந்தமை தொடர்பில் அறிந்திருந்தும், அந்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்காமை குறித்து
பயங்கரவாத தடைச் சட்டத்தின் 05 ஆம் அத்தியாயத்தின் அ, ஆ பிரிவுகளின் கீழ்,பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக குற்றப் பகிர்வுப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
இலங்கை வரும் முன்னரான PCR மார்ச் 01 முதல் அவசியம் இல்லை
- முழுமையாக தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயம்
மார்ச் 01 முதல், முழுமையாக தடுப்பூசி பெற்று இலங்கை வரும் பயணிகள், தங்களது வருகைக்கு முன் பெற வேண்டிய PCR அல்லது ரெபிட் அன்ரிஜன் சோதனையை (RAT) மேற்கொள்வது அவசியம் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்டுள்ள வழிகாட்டலிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமான தடுப்பூசியேற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையில், இலங்கைக்கு வரும் பயணிகள், பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி டோஸ்களை முழுமையாக பூர்த்தி செய்து, 2 வாரங்கள் (14) நாட்கள் பூர்த்தியடைந்திருப்பார்களாயின், அவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் என கருத்தில் எடுக்கப்படுவர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணி ஒருவர் 2 டோஸ் தடுப்பூசிகளை அல்லது பரிந்துரைக்கப்பட்ட அதன் கலவையை பெற்றிருப்பாராயின், அவர் முழுமையாக தடுப்பூசி பெற்றவராக கருத்திலெடுக்கப்பட்டு இலங்கைக்குள் நுழைய அனுமதி பெறுவார்.
பயணி ஒருவர் அனுமதியளிக்கப்பட்ட ஒரு டோஸ் தடுப்பூசியை (உதாரணம்: Janssen Vaccine) பெற்றிருப்பாராயின் அவரும் முழுமையாக தடுப்பூசி பெற்றவராக கருதப்படுவார்.
ஒரு டோஸ் தடுப்பூசி பெற்று 2 வாரங்கள் பூர்த்தியடைந்த 8 வயது மற்றும் அதற்கு கீழ்ப்பட்டவர்கள் முழுமையான தடுப்பூசி பெற்றவர்களாக கருதப்படுவர்.
கொவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்ட கடந்த கால வரலாற்றைக் கொண்ட பயணிகளுக்கு, புறப்படும் திகதிக்கு 7 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை நோய்த்தொற்று கண்டறியப்பட்டிருந்தால், குறைந்தபட்சம் இரண்டு டோஸ் தடுப்பூசிகளில் ஒன்றையாவது செலுத்தியிருந்தால், புறப்படுவதற்கு முன்னரான கொவிட்-19 சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இதனை உறுதிப்படுத்த நோய் கண்டறிந்த அட்டை (diagnosis card) அல்லது சரிபார்க்கக்கூடிய சான்றுகள் அல்லது முன்னர் பெற்ற (PCR அறிக்கை அல்லது ரெபிட் அன்ரிஜன் சோதனை அறிக்கை) COVID-19 சோதனை அறிக்கையை (ஆங்கிலத்தில்), நோயின் கடந்தகால வரலாற்றின் சான்றாகக் காண்பிக்க முடியும். தடுப்பூசி போடப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகும், தொற்று ஏற்பட்ட ஏழு நாட்களுக்குப் பிறகும் அவர்கள் புறப்பட வேண்டும்.
கொவிட்-19 நோய்த்தொற்றின் வரலாற்றைக் கொண்ட பயணிகள், புறப்படும் திகதிக்கு 6 மாதங்களுக்கும் மேலாக, இரண்டு டோஸ் தடுப்பூசியின் ஒற்றை டோஸுடன், கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி தொற்று இல்லையெனும் புறப்படுவதற்கு முன்னரான கொவிட்-19 சோதனை அறிக்கையை தம் வசம் வைத்திருக்க வேண்டும். அவர்கள் தடுப்பூசி பெற்று இரண்டு வாரங்களுக்கு பின்னர் புறப்பட வேண்டும்.
இலங்கைக்கு வரும் முழுமையாக தடுப்பூசி போடாத 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து பயணிகளும், புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் ஆங்கில மொழியிலான கொவிட்-19 தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்ட PCR பரிசோதனை அறிக்கையை பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கில மொழியிலான ரெபிட் அன்ரிஜென் சோதனை அறிக்கையை (சுயமாக பெற்ற முடிவுகள் அனுமதிக்கப்படாது) சுமார் 48 மணி நேரத்திற்குள் பெற்றிருக்க வேண்டும்.
கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்ற அனைத்துப் பயணிகளும் தங்கள் பயணம் முழுவதும் தாங்கள் தடுப்பூசி போட்டதற்கான ஆங்கில மொழியிலான ஆதாரத்தை தம் வசம் வைத்திருப்பது அவசியமாகும்.
கொவிட்-19 நோய்த்தொற்றின் கடந்தகால வரலாற்றைக் கொண்ட அனைத்து பயணிகளும் கட்டாயம் நோய்த்தொற்றின் 7 நாட்களுக்குப் பின்னர் புறப்பட வேண்டும்.
இவ்வனைத்து வழிகாட்டல்களும் 2022 மார்ச் 01ஆம் திகதி 00:00 மணி முதல் விமான நிலையங்கள் அல்லது துறைமுகங்கள் வழியாக இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு பொருந்தும்.
இலங்கையில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு கட்டளைச் சட்டம் 1897 இலக்கம் 03 இற்கு அமைய, முழு இலங்கைக்கும் உரிய பொறுப்பாளர் எனும் வகையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயத்தினால் மேற்குறிப்பிட்ட வழிகாட்டல்களில் எவ்வேளையிலும் தேவைக்கு ஏற்ப திருத்தங்களை மேற்கொள்ள முடியும். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் விடுக்கப்பட்டுள்ள வழிகாட்டல் வருமாறு...
நன்றி தினகரன்
No comments:
Post a Comment