தாய்மொழிப் புலமை உள்ளவராலேயே முழுமையான மனிதராக திகழ முடியும்

 Monday, February 21, 2022 - 9:10am

- இன்று உலக தாய்மொழி தினம்

காலமாற்றத்தின் சவால்களால் அருகிப் போகாமல், தன்னை தகவமைத்துக் கொண்டு நிலைத்து நிற்பது தமிழ்மொழி

அப்போதைய கிழக்கு பாகிஸ்தானின் தலைநகர் டாக்காவில் 1952-ம் ஆண்டு, வங்கதேச மொழியைஆட்சி மொழியாக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, மாணவர்கள் சிலர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

தாய்மொழிக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த மாணவர்களின் நினைவாக 2000- ஆம் ஆண்டு முதல், ஆண்டு தோறும் பெப்ரவரி 21- ஆம் திகதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாப்பட்டு வருகிறது. 2013- ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சுவழக்கில் இருப்பதும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் அழியும் தறுவாயில் இருப்பதும் கண்டறியப்பட்டன.

இதையடுத்து அனைத்து மொழிகளையும் பாதுகாக்க ஏதுவாக தாய்மொழி தினத்தன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, இன்று உலகெங்கும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழிக்கே உரிய சிறப்புத் தன்மைகள் உள்ளன. ஒவ்வொரு இனக் குழுவுக்கும் அடையாளமாக இருப்பது அவர்களின் தாய்மொழி. தாய்மொழியைக் கற்றுக் கொள்வது இயல்பான, எளிமையான செயல். தாய்மொழியைக் கற்றுக் கொள்ளாமல் ஓர் அயல் மொழியையோ, குடியேற்ற மொழிகளையோ கற்றுக் கொள்ள முயற்சிப்பது அறியாமை.

ஒவ்வொரு மொழிக்கும் சில தனித்தன்மைகள் உள்ளன. தாய்மொழியில் உள்ள அனைத்தையும் பிற மொழிகளில் மொழிபெயர்த்து விட முடியாது. உதாரணமாக, தமிழில் 'மனம் குளிர வரவேற்கிறோம்' என்ற சொற்றொடரை ஆங்கிலத்தில் 'Warm Welcome' என்று மொழிபெயர்க்கும் போது அதன் பொருளே மாறுபட்டு விடும்.

எழுத்தறிவிற்கு தாய்மொழிக் கல்வி மிக அவசியம். ஆபிரிக்க நாடான கானாவில் நடைபெற்ற ஓர் ஆய்வில், பிறமொழிக் கல்வி கற்றவர்களை விட, தாய்மொழிக் கல்வி கற்றவர்களுக்கு 40 சதவீதம் எழுத்தறிவுத்திறன் அதிகமாக இருக்கின்றது என்பது உறுதியாகி இருக்கின்றது. எவராவது தாய்மொழிக் கல்வியினை புறக்கணித்தால் அவர்கள் தாய்மொழியில் புலமை பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள் அத்துடன் அவர்களால் எந்த மொழியிலும் துல்லியமான சொற்களைக் கொண்டு தங்களுடைய கருத்துகளை ஆழமாக சொல்ல முடிவதில்லை. இலக்கியமாகட்டும், அன்றாட வாழ்வியலாக இருக்கட்டும், அரசியலாக இருக்கட்டும், அறிவியலாக இருக்கட்டும்... துல்லியமாக பேச, எழுத, கேட்டு புரிந்து கொள்ள திறமை உடையவர்களாக இருத்தல் அவசியம்.

தமிழ்மொழியின் சிறப்பு பற்றி இங்கு கூற வேண்டுமெனில் தமிழறிஞர் பேராசிரியர் கா.சிவத்தம்பி "தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் இருக்கிறது" என்று கூறுவார். ஆகவே, தமிழ் மொழியின் மேன்மை அதன் தொன்மையிலும், தொடர்ச்சியிலும் இருக்கின்றது என்பதே அவரது கருத்தாகும்.

இரண்டாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட மரபுடையது நம் தமிழ்மொழி, இந்த மரபு உலகத்தில் வெகு சில மொழிகளுக்கு மட்டும்தான் உண்டு. கிரேக்க மொழிக்கு இந்த சிறப்பு உண்டு, ஆனால் தொன்மையான கிரேக்க மொழியின் இலக்கியத்தை இன்றைக்கு அவர்களால் எளிதாக கற்றுக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முடியாது.

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியமான திருக்குறளை இப்போதும் புரியும்படியாக வாசித்தறிய முடிகின்றது. திருக்குறளில் உள்ள சொற்கள் பல நம்முடைய இன்றைய வாழும் மொழியிலும் இருக்கின்றன. இந்த அளவிற்கு தொடர்ச்சியான மரபுடைய மொழிகள் உலகத்தில் இல்லவே இல்லை என்று சொல்லலாம்.

சீன மொழியான மண்டரின், அரபு மொழி என தொன்மையான மொழிகள் எதனை எடுத்துக் கொண்டாலும் அதனுடைய தொடர்ச்சி அறுந்து போயிருக்கின்றது. வடமொழியினை எடுத்துக் கொண்டால் அது வாழும் மொழியாக இல்லை. எபிரேய மொழியினை புதுப்பித்துக் கொண்டு இருக்கின்றார்கள், அதன் தொன்மையை மீண்டும் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் தமிழில் அறுபடாத தொடர்ச்சி இருக்கின்றது. இடையில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் குறைந்தது 500 ஆண்டுகள் அந்நியர் ஆதிக்கத்தில் இருந்தன. அப்படி இருந்த போதிலும் தமிழ்மொழி எந்த விதமான அரசின் துணையும் இல்லாமல் மக்களால் மட்டுமே தொடர்ச்சியாக உயிர்ப்புத்தன்மையுடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருக்குறளோ, சங்க இலக்கியங்களோ எதுவாயினும் ஒவ்வொரு தலைமுறையும் , அடுத்த தலைமுறைக்கு இந்த இலக்கியங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வோடு செயல்பட்டு இருக்கின்றனர். நாம் புதியதாக கற்றுக் கொள்ளும் மொழி நம்முடைய தாய்மொழியாக மாறப் போவதில்லை. எப்பொழுதும் குடியேற்ற மொழிகள் அயல் மொழிகளாகத்தான் இருக்கும்.

தமிழ் நவீன காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்கின்றது. தற்கால தொழில்நுட்பங்கள் வளரத் தொடங்கிய காலத்தில், தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைத்து தமிழை புழங்கத் தொடங்கியவர்கள் தமிழ் பேசும் மக்கள்.

உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களுடைய தனித்தன்மையில் இந்த நுட்பத்தை எடுத்து சென்றுள்ளனர். எந்த தொழில்நுட்பம் எடுத்துக் கொண்டாலும் ஏதாவது ஒரு தமிழ்மொழி பேசுபவர் அதில் தமிழை பயன்படுத்தும் வகையில் வடிவமைத்து வைத்திருப்பார். பெரியதாக அரசு, அதிகார உதவியில்லாமலேயே தமிழ்மொழி, தமிழர்களால் வளர்ந்து வந்திருக்கின்றது.

தாயைப் போலவே ஒவ்வொரு தாய்மொழியும் சிறந்தது. உலகத்தில் இப்பொழுது சுமார் 7,000 தாய்மொழிகள் பேசப்படுவதாக கூறப்படுகிறது.

சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலையில் "மொழி பெயர் தேயத்து புலம்பெயர் மாக்கள் கலந்து இனிது உரையின் முட்டாச் சிறப்பின் பட்டினம்" என்ற வரிகள் உள்ளன. இது ஒரு மிகசிறந்த பன்மையம் பற்றிய புரிதலுக்கான ஒரு அடையாளம் ஆகும். இந்த நாளில் நமது மொழியை நேசிக்கவும், பிற மொழி பேசும் மக்களை மதிக்கவும் கற்றுக் கொள்ள அனைவரும் உறுதியெடுக்க வேண்டும். மொழி பண்பாட்டினுடைய மிகப்பெரும் கருவூலம். உலகில் அடையாளம் காணப்பட்டுள்ள 6000 மொழிகளில் ஏறக்குறைய 43 சதவீத மொழிகள் அருகிவரும் நிலையில் உள்ளன. இதில் சில நூறு மொழிகள் மட்டுமே கல்வித்துறையிலும், அரசுத்துறையிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

100க்கும் குறைவான மொழிகள்தான் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகின்றன. உலக மயமாக்கலால் தாய்மொழிகள் வேகமாக அருகி வருகின்றன. மக்கள் தங்களது பாரம்பரிய அறிவினையும், பண்பாட்டினையினையும் நிலைநிறுத்திக் கொள்ள தங்களது தாய்மொழியினைக் காத்துக் கொள்வது அவசியம்.

மொழி என்பது மனிதர்களின் கல்வி, மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மாத்திரமல்ல, அது பண்பாட்டு அடையாளம். நமது மொழி குறித்து நமக்கு எவ்வளவு கவனம் தேவை என்பதையே இந்த நாளில் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.    நன்றி தினகரன்

No comments: