என் தேவனே… என் தேவனே… ஏன் என்னைக் கைவிட்டீர்…? அவதானி


இயேசு கிறிஸ்து ஆறுமணி நேரம் சிலுவையில் தொங்கினார். முதல் மூன்று மணி நேரங்கள் அவர் ரோம வீரர்களாலும், மற்றவர்களாலும், அடிக்கப்பட்டு, இழிவாக பேசப்பட்டு, எள்ளி நகையாடப்பட்டார், வேதனைகளை அனுபவித்தார். அவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டார். ஆறாம் மணி நேரம் முதல், ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியை  இருள் சூழ்ந்து கொண்டது. அந்த ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு:  “ ஏலி! ஏலி! லாமா சபக்தானி “ என்று உரத்துச் சத்தமிட்டுக் கூப்பிட்டார் ! அதற்கு “ என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்..? “ என்று அர்த்தம்.

குறிப்பிட்ட  குரலின்  வரிகளை நாம் பரிசுத்த வேதாகமத்தில் படித்திருப்போம்.

ஒவ்வொரு வருடமும் ஏப்ரில் மாதம் வரும் பெரியவெள்ளி ( Good Friday )


தினத்தில் தேவாலயங்கள் சென்று வழிபட்ட மக்கள், யேசுபிரான் உயிர்த்த ஞாயிறு தினத்தில் காலையிலேயே அங்கு மீண்டும் வந்து பிரார்த்தித்துவிட்டு, சம்மனசுகள் புடைசூழ யேசுவின் திருச்சொரூபம் பவனிவரும் காட்சியை கண்டுகளிப்பார்கள். வழக்கமாக உலகெங்கும் நடக்கும் இந்த நிகழ்வு,  இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்,  கடந்த 2021 ஆம் ஆண்டுவரையில்  பெரும் துயரமாகவே அனுட்டிக்கப்பட்டது.

இவ்வருடமும்  அத்தகைய துயர நாளைத்தான் நாம் கடக்கவிருக்கின்றோம். எனினும், குறிப்பிட்ட ஈஸ்டர் தினம் வரும்போதெல்லாம் அனைத்து மக்களுக்கும் அவர்களை அறியாமலேயே பதட்டம் தொற்றிவிடுகிறது.

ஒரு காலத்தில்,  தமிழரசுக்கட்சியின் பிதாமகர் தந்தை செல்வநாயகம், இலங்கையில் பதவிக்கு வந்த  நீல – பச்சைக் கட்சித்தலைவர்களுடன் ( பண்டாரநாயக்கா – டட்லி சேனநாயக்கா )  ஒப்பந்தம் செய்து, அவற்றை நடைமுறைப்படுத்த முடியாத சூழல் வந்ததும்,  “ இனிமேல் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்    என்றார்.


தற்போது,  2019 ஆம் ஆண்டு  நடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக  அநியாயமான முறையில் கொல்லப்பட்டவர்களுக்கும்,  அச்சம்பவங்களினால் உடல் – உளப்பாதிப்படைந்தவர்களுக்கும் இதுவரையில் நீதி கிடைக்காதிருப்பதை அவதானிக்கும்போது, யேசுபிரான் சிலுவையில்  அறையப்பட்டபோது சொன்ன வாசகங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

கத்தோலிக்க பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, இலங்கை அரசு,  நடந்த கொடுமைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து,  நீதியின் முன்னால் நிறுத்தும் என்ற நம்பிக்கையை இழந்த நிலையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். 

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் கடந்த மைத்திரி – ரணில் நல்லாட்சி


காலத்தில் நடந்தது.  அதனை சுட்டிக்காண்பித்தே ராஜபக்‌ஷ சகோதரர்கள் தேர்தல் பிரசாரங்கள் மேற்கொண்டு,    2009 இல்  பயங்கரவாதத்தை முறியடித்தவர்கள் நாங்களே, தாம் பதவியிலிருந்திருந்தால், ஈஸ்டர் தாக்குதல் நடந்திருக்காது  “ எனச்சொல்லிச் சொல்லியே தமது வாக்கு வங்கியை பெருக்கி பதவிகளுக்கு வந்தனர்.

முன்னைய அரசு காலத்திலும் இன்றைய அரசு காலத்திலும் நீதிவிசாரணை என்ற பெயரில், இதுவரையில், நீதியரசர் விஜித் நல்லகொட தலைமையில் நடந்த விசாரணையில் வெளியான அறிக்கை, நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை, தேசிய பாதுகாப்பு குறித்து, நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை, இந்த அறிக்கைகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சரவையின் அறிக்கை, என்பன தயாரிக்கப்பட்டன.

ஆனால், இதுவரையில் உண்மையான குற்றவாளிகள் நீதியின் முன்னால் நிறுத்தப்படவில்லை.   இது இவ்விதமிருக்க,  அரசும், சட்டமா அதிபர் திணைக்களமும் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல சாட்சியங்களை மறைத்துவிட்டிருப்பதாக பேராயர் மல்கம் ரஞ்சித் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.  அத்துடன் சட்டமா அதிபர் அரசியல்வாதிகளின் கையாளாக செயற்படக்கூடாது எனவும்  இடித்துரைத்திருக்கிறார்.

அவரை இதற்கு முன்னர் சந்தித்த அரசுத் தலைவர்கள் வழங்கிய உறுதிமொழிகளும் காற்றில் பறந்துவிட்டன.

இத்தகைய செய்திகளின் பின்னணியில் அண்மையில்,  உயிர்த்த


ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி அமைக்கப்பட்டுள்ள ஆயர்கள், பாதிரியார்கள், மற்றும் வழக்கறிஞர்கள் இணைந்திருக்கும் தேசியக்குழுவும்  அரசின் அசமந்தப்போக்கை சுட்டிக்காண்பித்து  கண்டனம் தெரிவித்துள்ளது.

இவ்வேளையில், தேசிய கத்தோலிக்க தொடர்பாடல் ஆணைக்குழுவினால் அண்மையில் தித்த ( முற்றுப்புள்ளி ) என்ற நூலும் இப்பதிவில் மேலே சொல்லப்பட்ட விசாரணை அறிக்கைகளை உள்ளடக்கி வெளியாகியுள்ளது.

இந்த நூலின் பின்புற அட்டையில் ஒரு பௌத்த மதகுரு குறிப்புகளை எழுதியுள்ளார்.

இத்தருணத்தில் மற்றும் ஒரு புதிய செய்தியையும் இங்கு தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

உலக அரங்கில் மட்டுமல்ல, எமது உள்நாட்டு அரங்கிலும் பரபரப்பூட்டும் சம்பவங்கள் நடக்கும் பட்சத்தில், அச்சம்பவங்களை பின்னணியாக வைத்து கதைகள், நாவல்கள் எழுதப்பட்டிருப்பதை அறிவோம். அத்துடன் திரைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன.

இம்மாதம் தமிழ்நாட்டில் F I R என்ற திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலினின் புதல்வரும் தற்போது தமிழக சட்டசபையில் உறுப்பினராகியிருப்பவருமான  நடிகர் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார்.

விஷ்ணுவிஷால், கௌதம் வாசுதேவ மேனன் நடித்துள்ள இந்தத்திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேசரீதியாக நன்கு அறியப்பட்ட பயங்கரவாத இயக்கத்தையும் பேசுபொருளாக்கியிருக்கும் இத்திரைப்படத்தின் இறுதிக்காட்சிகளில் இந்தியப்பிரதமர் மோடியின் பாத்திரத்திலும் ஒருவர் நடித்திருக்கிறார்.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் கோயில் , நட்சத்திர விடுதிகளில் நடந்த தாக்குதல் சம்பவக் காட்சிகளையும் காண்பித்து குறிப்பிட்ட F I R  திரைப்படத்தை எடுத்து பணம் பண்ணிவிட்டார்கள்.

இத்திரைப்படம் சில நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலுக்குப்பின்னர், இத்தனை சம்பவங்கள் நடந்துவிட்டன. 

ஆனால்,  அன்று காரணமின்றி உயிரிழந்தவர்களுக்கும், உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதிதான் கிடைக்கவில்லை.

அதனால், அம்மக்களின் உணர்வுகளை மாத்திரம் அல்ல, ஆண்டகை பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களின் ஆதங்கத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.

அதனால்தான்,   “ தேவனே தேவனே ஏன் என்னை கைவிட்டீர்  “ என்று கேட்கத் தோன்றுகிறது.

 

No comments: