மறந்த பெயர் (நடைக் குறிப்பு) கன்பரா யோகன்


 
பாதையோரமெங்கும் வளரும் புற்களை, புதர்களாக்கிவிடுகிறது மழை.    இம்முறை அடிக்கடி அது வந்து  கோடை காலத்தில் நகர சேவைகள் திணைக்களத்தின் வேலையாட்களுக்கு  மூச்சு விட நேரமில்லாமல் பண்ணி விட்டது. புற்கள் பூத்து விதை நிலத்தில் விழுந்தும் கூட வெட்டி முடிக்கமுயாமல் அவர்கள்  திணறுமளவுக்கு இருகரையும் இடுப்பளவு வரை வளர்ந்து விட்ட அந்த பாதையில் நடப்பவர்கள் ஒருவரையொருவர் பார்த்து எங்கே போய்த் தொலைந்தார்கள் இந்த நகர சேவை என்று முணு முணுப்பதை கேட்க முடிகிறது.

வீட்டுக் காணிகளில் இரண்டு வாரங்களுக்கொருமுறை இந்தக் கோடையில் புல்லை வெட்டிக் களைத்துப் போனவர்களுக்கு நகர சேவையை குறை சொல்வதில் ஒரு தனி இன்பம் இருக்கிறது போலும். ஆனாலும் பிந்தியென்றாலும்  வந்து ஒரேயடியாக வெட்டிப்  புற்தரையை மைதானம்போல  சமவெளியாகி விட்டுப் போவதையும் நகர சேவை  செய்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த நடை பாதையில் ஐவரை வழமையாகக் காண்பதுண்டு.

இப்போது  அவர்களில் நான்கு பெயர்களே நினைவுக்கு வந்தன. மேர்பி, செக்கர்ஸ், லியரி, டெலி, ஐந்தாம் பெயர் துப்பரவாக மூளையின்று மறந்து விட்டது.  மேலுள்ள பெயர்கள் ஆட்களில் பெயர்கள் என்றா நினைத்தீர்கள்? அவையெல்லாம் நடையில் செல்பவர்களுடன் கூட நடந்தோ ஓடியோ வரும் நாய்களின் பெயர்களே.!  அவர்களின் எஜமானர்களை எனக்கு அடையாள கண்டு உரையாடுவதற்கு நாய்களின் பெயர்களே நினைவில் நிற்கின்றன.

எஜமானர்களின் பெயர்கள் எதையும்  நினைவில் வைத்திருக்க முடியாததையிட்டு  அவர்களும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

ஒவ்வொரு முறையும் 'ஹௌவ் ஆர் யு மேர்பி?' என்றோ அல்லது  'ஹௌவ் ஆர் யு லியரி? என்றோ நாயை முதலில் பார்த்து  உரையாடத் தொடங்குவதும் எஜமானர்களுக்கு திருப்தியே.

இப்போதெல்லாம் எனது ஞாபகத்தை பரீட்சித்துப் பார்ப்பதற்காக  அடிக்கடி வீட்டுக்கு இடம், வலம் , முன்னே, பின்னே இருக்கும் அயலவர்களின் பெயர்களை நினைப்பூட்டிப் பார்த்துக் கொள்வதுண்டு. அப்படியிருந்தும் சில பெயர்கள் அவ்வப்போது தவறிப் போகின்றன.

 

மனித மூளை  என்பது ஒரு விசித்திரமான எந்திரம். அது நினைவுகளில் எவற்றை நிரந்தரமாகச் சேமித்து, அல்லது எதை  தற்காலிகமாக வைத்திருப்பது அல்லது அழித்து விடுவது  என்று தன் பாட்டுக்கு முடிவெடுத்து விடுகிறது.

கணினியில் பைல்களை அளிக்கும் போது ' நிச்சயமாக அழிக்கப்போகிறாயா?'   என்பது போல  நாகரீகமாக கேட்டு முடிவெடுக்காத சர்வாதிகாரி அது. ஏன் அழித்தாய் என்று அதனோடு சண்டைக்குப் போக முடியுமா?

இந்த கோவிட் காலத்தில்  பலரும் வேவ்வேறு காலப் பகுதிகளில் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டிய தேவையேற்பட்டதில் ஒழுங்காக நடை செல்லும் பலரது நேர அட்டவணையில் மாற்றங்கள் வந்து முன்னர் நடை பாதையில் சந்தித்த பலரை இப்போது காண முடியவில்லை.

நானும் 2020 இல் கார் காலத்திலும் , 2021 இல் வசந்த காலத்திலும் , 2022 இல் கோடை காலத்திலும்  சில காலம் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டி வந்தது. யன்னலினூடு தெரியும் வானத்தையும், மரங்களையும் அவற்றில் வரும் மாற்றங்களையும் வேவ்வேறு பருவங்களில் பார்த்தவாறே வேலை செய்த அனுபவம் புதிது.

பாதையில் அருகிலுள்ள வேலிக் கரையோரம் நின்ற பிளம் மரங்கள் பழங்களைக் கொட்டியபின் இப்போது ஆப்பிள் ஆங்காங்கே காய்  பிடித்திருக்கிறது. காலை நடையில் இவையெல்லாம் தவறாது கடந்து செல்லும் காட்சிகள்.

ஆனால்  கிட்டதட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக சந்திக்காமல் போய்விட்ட அந்த ஐந்தாம் பேர்வழியை இன்று காண்பேன் என்று நினைத்திருக்கவில்லை.

பாதையில் துரத்தில் வந்தவனைக் கண்டதும் மறந்து விட்ட அந்த ஐந்தாவது நாயின் பெயரை வலிந்து நினைவில் மீட்டுக் கொண்டு வர முயற்சித்தும் எனக்குத் தோல்விதான். ஒரு தர்மசங்கடமான நிலையினை எப்படிச் சமாளிக்கப் போகிறேன் என்று எண்ணிக்கொண்டே அவனை நெருங்குகையில் ஒன்றை அவதானித்தேன். அவனுடன்  அந்த கறுத்த நிற  நாய் இன்று கூட வரவில்லை.

வந்தவன் என்னைப்பார்த்து ‘குட் மோர்னிங்’ என்றான். நான் சற்றுத் துணுக்குற்றபடி ‘குட் மோர்னிங்’ சொல்லிவிட்டு அவன் கால்களைப் பார்த்தேன்.  அதனைப் புரிந்து கொண்டவன்,

' பெலா வயதாகி வருத்தமாகிக் கிடந்தாள்.  வீ  புட் ஹேர் டௌன் வித் அன் இன்ஜெக்சன்'  என்றான்.  கருணைக்கு கொலையை குறிப்பிடும் இந்த வசனங்களின் அர்த்தம் எனக்கு சற்று தாமதாகப் புரிந்தது. சுருக்கமாகவே இன்றைய உரையாடலை முடித்துக் கொண்டோம் .

இப்பொது  பெலா என்ற அந்தப் பெயர் எனக்கு நினைவில் வந்தாலும் இனி அது எனக்குத் தேவைப்படாது.

ஆகவே அடுத்த முறை அவனது பெயரை கேட்டு நினைவில் வைத்துக்  கொள்ள வேண்டும். நீண்ட கால அறிமுகத்துக்குப்  பிறகு பெயரை இப்போது  கேட்பதும் ஒரு தர்மசங்கடமான வேலைதான்.

No comments: