சீவனிலே சிவத்தைக் காணும் சீரிய சைவம்!


பல்வைத்திய கலாநிதி   ' சிவஞானச்சுடர்
பாரதி இளமுருகனார்

                               

 

அன்றொரு நாள்…..

 

வீதியிலே வேகமாக விரைந்து வந்த

       மிகப்பெரிய வாகனத்தால் தாக்குண் டநாதன்

நாதியற்ற வன்போலக் குற்றுயி ரோடு

       நாலடிக்கு வீசப்படக் கண்டே ஒருவன்

சாதிமதம் பார்க்காது ஓடி வந்து

       தாங்கிமெல்லத் தூக்கிமுத லுதவி செய்து

பீதியோடோர் மருத்துவமனை தனிலே சேர்த்துப்

       பிழைக்கவைத்த பரனைப்பார்த்து நாதனும்கேட்டான்….

  

 

 

 

 

தொடர்ந்த நாதன்…’

 

 உண்டுடுத்திப் பிறர்க்குதவா தவராய் வாழும்

        உன்மத்தர் போலலாது உயிர்து டிக்கக்

கண்டவுடன் கடிதினிலே எனைநீ தூக்கிக்

        கன்றுதனை அணைத்திட்ட தாய்ப்பசு போல

அண்டிவந்து உதவிசெயக் கொண்ட காரணம்

        அறியேனே! மனிதநேயப் பண்போ? அன்றித்

தொண்டுளமோ? தூயவுன்னில் தோன்றா திருக்கும்

        சோதியனோ? கடவுளைப்போல் காத்தாய் என்றான்!

 

 

பரனும் உடனே……..

 

உயிர்க்கொலையும் கொன்றதினை உண்பதை யுமெங்கள்

        உயர்வான சைவமதம் ஏற்கா தென்றும்

உயிரொன்று  துன்பத்தால் துடிக்கும் போது

        உடன்சென்று உதவிசெய வேண்டு  மென்றும்

உயிர்களுள்ளே உறைவதெங்கள் உத்தம னான

        ஒப்புயர்விலாப் பொற்புநிறை சிவனே என்றும்

பயிர்களுக்குத் தண்மழைபோல் எனக்குப் பெற்றோர்

        பாய்ச்சிவிட்ட சைவநெறிப்  பண்பின் விழைவே

 

பரன் மேலும் தொடர்ந்தான்…….

 

சீவகாருண் ணியத்தையென்றும் பெரிதாய் மதித்துச்

        சிறுவயதில் இருந்தேநான் உயிரொன் றனுக்கும்

பாவச்செயல் மனதறிந்து செய்த தில்லை!

        பரிதாப நிலைகண்டால் உதவி செய்யத்

தேவதூதன் போலுடனே சேவை செய்வேன்!

        திருவருளால் உன்னுயிரும் பிழைத்ததேஎன்றான்

 ஆவதெல்லாம் சிவன்செயலென் றுணர்ந்த நாதன்

        அன்புடனே கரங்கூப்பி நன்றி சொன்னான்.

 

சைவத்தின் உயர்வதனைச் சற்றே கேட்பீர்! 

 
காணுகின்ற உயிர்களிலே சிவனைக் காணும்

        கருத்ததனை  வலியுறுத்தும் சைவசித் தாந்தம்!  

பேணுகின்ற தலைசிறந்த சமய மான

        பெருஞ்சைவம் உயிர்க்கொலையை ஏற்ப தில்லை!

வேணுமென்று அறிவிலிகள் சைவசம யத்தின்

        வேள்விகளில் உயிர்ப்பலியும் உண்டெனப் பொய்யை

நாணமின்றி மேடைகளில் பொச்ச டித்து

        நாவீணி ஊற்றவூற்றச்  சொல்கின் றாரே!.
 

 

சிறுதெய்வ வழிபாட்டைச் செய்து மக்களைச்

        திசைதிருப்பி ஏமாற்றி வயிறு வளர்க்க

நெறிதவறிப் பூசைவைப்போர் ஆரம் பித்ததோ?

        திறமான பங்கிறைச்சி கிடைக்கு மென்று  

அறிவிலாப்பணம் படைத்தவர்தம் சிந்தையில்  எழுந்ததோ?

        அறம்பிழைத்தோர் நூலிலிட்ட இடைச்செரு கலாலோ?

குறிப்பிட்டுச் சொல்வதென்றால் சைவவேள் வியிலே

       கொடியவுயிர்ப் பலியென்றும் இருந்த திலையே!
  திருமந்திரம் உயிர்ப்பலியைச் செப்பிய துண்டோ?

        சிவனார்தம் கைப்படவே புனைந்த வாசகம்

 அருமருந்தாம் மூவர்களின் தமிழ்மந் திரங்கள்

       அந்தோயிவை உயிர்ப்பலியை அரற்ற விலையே!

 உருவெடுத்த உயிர்களிலே சிவனைக் காணும்

        ஒப்பரிய சைவத்தைக் கொச்சைப் படுத்தும்

 இருள்மனத்தோர் இழிசெயல்கள் கோயில் களிலே 

        இடம்பெறாது பார்ப்பதென்றும் சைவர்தம் கடனே!

 

 

பணம்படைத்த சிலர்கூடிப் பண்பிலாச் செயலெனப்

         பலன்தராச்சிறு தெய்வங்களுக் கெழுந்த பதிகளில்

இணக்கமொடு  இறந்ததனை உண்ப தற்கு

        ஈனச்செயல் கொலைதானென் றுணர்ந்தும் அந்தோ

குணம்மாறிப்பூசைசெய்வோர் வழிந டத்தக்

        கோழியாடு துடிதுடிக்கப் பலியிடும் செயலைக்

 கணங்கூட அனுமதிக்கா தெதிர்ப்பைக் காட்டிக்

        காருண்ணியம் உயிர்வாழ வழிசெய வேண்டும்.!

 

 

இகமதிலே நடந்துவரும் இழிவுச் செயல்களால்

        எற்படுமிவ் வேதனைக்கு முடிவேதும் இலையோ?

சுகதுக்க மாயுயிரைத் தொடரும் சஞ்சித

        சூழ்வினையைப் பிறவிதொறும் அவ்வவ் வுயிர்கள்

பகலிரவாய் அனுபவித்துப் பலனெனக் கழித்துப்

       பற்றிநிற்கும் இருண்மலத்தின் வலியொ ழித்தால்

அகமதிலொன் றாயுடனாய் வேறாய் நின்று

       ஆயுள்தனைக் கணித்துநிற்கும் சிவத்தை உணரும்!

 

                                                  

  கொறோனா வரக் காரணம் இவையோ? 

 


 

 

 

பணத்திற்கு ஒருநீதி ஏழைக் கேது?

       பண்பைவிட்டு வீதிக்கோர் சாதி என்ற

குணங்கெட்ட செயல்கள்தம் விளைவின் பயனோ?

       கொலைசெய்து வாயில்லா உயிர்பல வதைத்துப்

பிணந்தின்ற கொடுமையதன் வினையின் பயனோ?

       பெருமழிவைக் கண்டுவிட்ட இயற்கையின் தீர்ப்போ?

கணக்கற்ற உயிர்ப்பலியைக்  கொறோனா வியற்றிக்    

       காசினியைக் கலக்கியதும் இவையின் விழைவோ?

 

 

ஆதிசிவன் அருள் வேண்டும்!.

 


 

 


 

 

 மலிந்துவிட்ட கொலைவெறியும் மதவெறிச் செயலும்

       மாதருக்கு இழைக்கப்படும்  பாதகச் செயலும்

கலிகாலம் முடியுமுன்னர் மனித இனத்தால்

      கரையின்றிப்  பெருகிறதே! காலத்தின் கோலம்

நிலைமாறி உலகமைதி நிலைக்க வேண்டில்

       நீசர்கள் மனம்மாறி  இறைசிந் தனையால்

அலைகின்ற மனதடக்கி அன்பைப் பெருக்க

      ஆதிசிவன் கண்திறந்து அருளல் வேண்டும்!.

  

No comments: