உலகச் செய்திகள்

 அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் ரஷ்யா மீதான தடைகள் உக்கிரம்

 ரஷ்யா வான், தரை மற்றும் கடல் வழியாக தாக்குதல்

 ரஷ்ய படையெடுப்பு: முழு வீச்சில் தாக்குதல்; ரஷ்யா மீது கடுமையான தடைகளுக்கு திட்டம்

உக்ரைன் தலைநகரை நோக்கி ரஷ்ய துருப்புகள் முன்னேற்றம்

செர்னோபில் அணு நிலையத்தை கைப்பற்றியது ரஷ்ய இராணுவம்

உக்ரைனியக் குடியிருப்பாளர்கள் மெட்ரோ நிலையங்களில் தஞ்சம்

உக்ரைன் தலைநகரில் இருந்து வெளியேற மக்கள் முண்டியடிப்பு

நாட்டிலேயே தங்கி இருக்க உக்ரைன் ஜனாதிபதி முடிவு

உக்ரைன் அகதிகளை ஏற்க அண்டைய நாடுகள் தயார்அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் ரஷ்யா மீதான தடைகள் உக்கிரம்

உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பு ஒன்று ஆரம்பித்திருப்பதாக அறிவித்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யா மீது பரந்த அளவிலான தடைகளை அறிவித்துள்ளார்.

'மேற்கத்தேய நிதி அமைப்பில் இருந்து ரஷ்ய அரசை நாம் துண்டிக்கிறோம்' என்று பைடன் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு உக்ரைனின் இரு கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு துருப்புகளை அனுப்ப ரஷ்ய அரசியல்வாதிகள் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அனுமதி அளித்ததை அடுத்தே பைடனின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த கிளர்ச்சியாளர் பகுதிகளில் சுதந்திரத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. இது உக்ரைன் நாட்டின் இறைமைக்கு எதிரான செயலாக பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் இந்த செயல் பரந்த அளவான ஆக்கிரமிப்பு ஒன்றுக்கான காரணியாகவே மேற்கத்தேய நாடுகள் பார்க்கின்றன. அமைதி காப்பு பணிகளுக்காக உக்ரைனில் இருந்து பிரிந்துள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பிராந்தியங்களுக்கு ரஷ்ய துருப்புகள் நுழைய புட்டின் கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டிருந்தார். இதனை முட்டாள்தனமானது என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு ரஷ்யாவில் பல்வேறு புதிய துருப்பினர் மற்றும் தளபாடங்கள் குவிக்கப்பட்டிருப்பது மற்றும் பெலாரஸில் உக்ரைன் எல்லைக்கு அருகில் விமானத்தளத்தில் 100க்கும் அதிகமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை செய்மதி படங்களை ஆதாரம் காட்டி அமெரிக்க விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான மக்சார் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்ய இராணுவம் சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படாததோடு கிழக்கு உக்ரைனுக்கு ரஷ்ய துருப்புகள் அனுப்பப்பட்டது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் ரஷ்ய அரசை நேரடியாக இலக்குவைத்த நடவடிக்கைளில் முதல் கட்ட திட்டத்தை அறிவித்த ஜோ பைடன், 'எளிமையாகக் கூறுவதென்றால், உக்ரைனின் பெரும் பகுதியை வசப்பமுத்தும் அறிவிப்பையே ரஷ்யா வெளியிட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

இதில் ரஷ்ய வெளிநாட்டு கடனுக்கு எதிராகவும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதன்மூலம் மேற்கத்தேய நிதி நிறுவனங்களில் இருந்து தனது நிதி உதவிக்காக இனியும் நிதி திரட்டுவதற்கு ரஷ்யாவுக்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் உயர் மட்டத்தில் உள்ளவர்களையும் அமெரிக்கா தண்டித்துள்ளது. 'கிரெம்லின் கொள்கைகளில் மோசடி இலாபங்களை அவர்கள் பகிர்ந்துகொள்வதோடு அதன் வலிகளையும் அவர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும்' என்று பைடன் தெரிவித்தார்.

கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பிராந்தியங்களுடன் கொடுக்கல் வாங்கல் வைப்பதற்கு அமெரிக்க நிறுவனங்களுக்கு அந்த நாடு ஏற்கனவே தடை விதித்தபோதும் சில நிறுவனங்களே அதனை செயற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய வங்கிகள் மற்றும் தனி நபர்கள் மீது பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் கடந்த செவ்வாய்க்கிழமை தடைகளை விதித்தன.

இதில் உக்ரைனின் பிரிந்த பிராந்தியங்களை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதற்கு வாக்களித்த ரஷ்ய பாராளுமன்ற மேலவையின் 351 உறுப்பினர்களை இலக்கு வைத்து பரந்த அளவில் ரஷ்ய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்தில் 27 உறுப்பு நாடுகளும் இணங்கியுள்ளன.

ரஷ்யாவின் ஐந்து வங்கிகள் மற்றும் அதன் பிரிட்டனில் இருக்கும் சொத்துகள் முடக்கப்படுவதாக பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். மூன்று ரஷ்ய செல்வந்தர்கள் மீது பிரிட்டன் பயணத் தடை விதிக்கவுள்ளது. கனடா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளும் இவ்வாறான நடவடிக்கைகள் பற்றி உறுதி செய்துள்ளன.

மறுபுறம் நார்டு ஸ்ட்ரீம்–2 எனும் முக்கிய எரிவாயு குழாய்க்கு வழங்கிய ஒப்புதலை ஜெர்மனி நிறுத்தி வைத்துள்ளது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள கடலோரப் பகுதியில் இருந்து ஜெர்மனியின் லப்மின் வரை பால்டிக் கடலுக்கு கீழே 1200 கிலோ மீற்றர் நீளத்துக்கு இந்த எரிவாயு குழாய் அமைந்துள்ளது.

ரஷ்ய அரசு மற்றும் மேற்கத்திய எரிவாயு நிறுவனங்கள் ஆகியவற்றால் கூட்டாக அமைக்கப்பட்டுள்ள இந்த எரிவாயுக் குழாய் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை சுமந்து செல்ல அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இதற்கான பணிகள் முழுமையடைந்தாலும் இன்னும் எரிவாயு கொண்டு செல்லப்படுவது ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதை ஜெர்மனி ரத்து செய்துள்ளது.

நார்டு ஸ்ட்ரீம் என்ற முதல் எரிவாயு குழாய் 2011ஆம் ஆண்டு முதல் இயக்கத்தில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் உக்ரைன் மீதான முழு அளவிலான ஆக்கிரமிப்பின்போது எடுப்பதாக அச்சுறுத்தப்பட்ட தடைகள் அளவுக்கு தற்போதைய தடைகள் செல்லவில்லை. நிலைமை மோசமடைந்தால் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவும் ரஷ்யாவின் எல்லையில் அல்லது அதற்கு அருகில் இருக்கும் எஸ்தோனியா, லத்வியா மற்றும் லிதுவேனியா ஆகிய நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு தமது துருப்புகளை நகர்த்தி வருவதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியில் இருக்கும் சுமார் 800 துருப்புகள் மற்றும் எப்–35 போர் விமானங்கள் மற்றும் 20 தாக்குதல் ஹெலிகொப்டர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படவிருப்பதோடு இதன்போது போலந்திற்கு படையினர் அனுப்பப்படவுள்ளனர்.

உக்ரைன் பிரச்சினை தொடர்பான இராஜதந்திர முயற்சிகள் இதுவரையில் தோல்வியை சேந்தித்துள்ளன. பல ஆண்டுகளாக நீடிக்கும் கிழக்கு உக்ரைன் பிரச்சினையை தடுக்கும் நோக்கிலான உக்ரைன் உடன்படிக்கைகள் இனியும் நடைமுறையில் இல்லை என்று ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் இன்று வியாழக்கிழமை இடபெறவிருந்த சந்திப்பு ரத்துச் செய்யப்படுவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

'ஆக்கிரமிப்பு ஆரம்பித்திருப்பதை எம்மால் பார்க்க முடிகிறது. இராஜதந்திரத்தை ரஷ்யா ஒட்டுமொத்தமாக நிராகரித்திருப்பது தெளிவாகத் தெரியும் நிலையில், இந்த நேரத்தில் சந்திப்பை ஏற்படுத்துவது அர்த்தமற்றது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தமது அணுகுமுறையை மாற்றினால் அமெரிக்காவால் ரஷ்யாவுடன் பேச முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடி காரணமாக ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதற்கு அலோசித்து வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி கூறியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நாட்டு மக்களுக்கு உறையாற்றிய செலென்ஸ்கி, மேலதிக இராணுவத்தினரை பயிற்சிக்கு அழைத்தார். எனினும் உக்ரைன் தொடர்ந்தும் இராஜதந்திர முயற்சி ஒன்றை தொடர்வதாக தெரிவித்துள்ளார்.

முழுமையான இராணுவ குவிப்பு ஒன்றுக்கு தேவை இருக்காது என்று அவர் கூறினார்.   நன்றி தினகரன் 
ரஷ்யா வான், தரை மற்றும் கடல் வழியாக தாக்குதல்

இதுவரை 40 பேர் பலி: நகரை விட்டு வெளியேற மக்கள் முண்டியடிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா வான், தரை மற்றும் கடல் வழியாக நேற்று வியாழக்கிழமை முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பித்தது. இரண்டாம் உலகப்

போருக்குப் பின் ஐரோப்பாவில் ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு எதிராக நடத்தும் மிகப்பெரிய தாக்குதலாக இது மாறியுள்ளது.

உக்ரைனின் பிரதான நகரங்களில் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் வெடிப்புகள் இடம்பெற்று வருகின்றன.

கிழக்கு செர்னிஹிவ், கார்கிவ் மற்றும் லுஹன்ஸ் பிராந்தியங்கள் மற்றும் தெற்கில் கடல் வழியாக ஒடெசா மற்றும் மரியுபோல் நகரங்களுக்குள் ரஷ்ய துருப்புகள் நுழைந்திருப்பதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பெலாரஸ் நாட்டு எல்லை ஊடாகவும் ரஷ்ய படைகள் நாட்டுக்குள் வருதாக உக்ரைன் கூறியுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவில் நேற்று சூரியோதயத்திற்கு முன்னர் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. அருகிலுள்ள பிரதான விமானநிலையத்தில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதோடு நகர் முழுவதும் சைரன் ஒலி எழுப்பப்பட்டது. பீதியடைந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கும் நகரை விட்டு வெளியேறுவதற்கும் முண்டியடிக்கின்றனர்.

உக்ரைன் மீதான படை நடவடிக்கை பற்றிய புட்டினின் அறிவிப்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. உக்ரைனில் இனப்படுகொலைக்குள்ளாகும் ஆபத்தை எதிர்கொள்ளும் ரஷ்ய குடிமக்கள் உட்பட மக்களை பாதுகாப்பதற்கான “விசேட இராணுவ நடவடிக்கை” ஒன்றுக்கு உத்தரவிட்டதாக புட்டின் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் தமது நாட்டை அழிப்பதே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நோக்கமென்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிட் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மக்களுக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதில் நடவடிக்கையாக கடும் தடைகள் விதிக்கப்படுவது பற்றி உறுதி அளித்தார்.

தாம் ஜி7 தலைவர்களை சந்திக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யா மீது இதுவரை இல்லாத கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார தலைவர் ஜோசெப் பொரெல் உறுதி அளித்துள்ளார்.

ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு மத்தியில் இதுவரை சுமார் 40 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் ஒலெக்சி ரெஸ்டோவின் குறிப்பிட்டுள்ளார். எனினும் கொல்லப்பட்டவர்களில் பொதுமக்கள் இருப்பது பற்றி அவர் குறிப்பிட்டு கூறவில்லை.

இந்நிலையில் ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

44 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாடான உக்ரைன், ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு அடுத்து மிகப்பெரிய நாடாகும். சோவியட் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ரஷ்யாவிடமிருந்து பிரிவதற்கு அந்நாட்டின் அதிகப் பெரும்பான்மை மக்கள் வாக்களித்தனர். அந்த நாடு நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகளில் இணைய முயன்று வருகிறது.   நன்றி தினகரன் ரஷ்ய படையெடுப்பு: முழு வீச்சில் தாக்குதல்; ரஷ்யா மீது கடுமையான தடைகளுக்கு திட்டம்

உக்ரைன் மீது ரஷ்யா வான், தரை மற்றும் கடல் வழியாக நேற்று வியாழக்கிழமை முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவில் ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு எதிராக நடத்தும் மிகப்பெரிய தாக்குதலாக இது மாறியுள்ளது.

உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்ய ஏவுகணைகள் பொழிந்து வருகின்றன. கிழக்கு செர்னிஹிவ், கார்கிவ் மற்றும் லுஹன்ஸ் பிராந்தியங்கள் மற்றும் தெற்கில் கடல் வழியாக ஒடெசா மற்றும் மரியுபோல் நகரங்களுக்குள் ரஷ்ய துருப்புகள் நுழைந்திருப்பதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவில் நேற்று சூரியோதயத்திற்கு முன்னர் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. அருகில் உள்ள பிரதான விமானநிலையத்தில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதோடு நகர் முழுவதும் சைரன் ஒலி எழுப்பப்பட்டது.

தொடர்ச்சியான வெடிப்புகளால் ரஷ்ய எல்லைக்கு நெருக்கமாக உள்ள உக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கார்கிவ்வில், குடியிருப்பு கட்டடங்கள் அதிர்ந்து வருவதாக அங்கிருப்போர் தெரிவித்துள்ளனர். மக்கள் பீதியில் நகரை விட்டு வெளியேற முண்டியடிப்பதாக குடியிருப்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது நாட்டை அழிப்பதே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நோக்கம் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

“உக்ரைனில் புட்டின் முழு அளவிலான ஆக்கிரமிப்பை தொடுத்துள்ளார். அமைதியான உக்ரைனிய நகரங்கள் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன” என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ட்மிட்ரோ குளேபா, ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு ஆக்கிரமிப்புப் போர். உக்ரைன் தம்மை பாதுகாக்கும் மற்றும் வெற்றிபெறும். புடினை உலகினால் தடுக்க முடியும் மற்றும் தடுக்க வேண்டும். செயற்படுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டு ஒன்பது பேர் காயமடைந்திருப்பதாக உக்ரைன் உள்விவகார அமைச்சின் ஆலோசகர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது படை நடவடிக்கை பற்றிய புட்டினின் அறிவிப்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. உக்ரைனில் இனப்படுகொலைக்கு உள்ளாகும் ஆபத்தை எதிர்கொள்ளும் ரஷ்ய குடிமக்கள் உட்பட மக்களை பாதுகாப்பதற்கான “விசேட இராணுவ நடவடிக்கை” ஒன்றுக்கு உத்தரவிட்டதாக புட்டின் குறிப்பிட்டிருந்தார்.

“உக்ரைனின் அழிவை தடுப்பது மற்றும் இராணுவமயமாக்களை தடுப்பதற்காக நாம் பாடுபடுவோம்” என்று புட்டின் கூறினார். “நவீன உக்ரைனிய பூமியில் இருந்து தொடர்ந்து வரும் அச்சுறுத்தலுடன் ரஷ்யாவின் பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் இருப்பை உணர முடியாது. இரத்தம் சிந்தப்படுவதற்கான அனைத்து பொறுப்பையும் உக்ரைனின் ஆளும் அரசு ஏற்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார். 44 மில்லிய மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாடான உக்ரைன் ரஷ்யாவுக்கு அடுத்து ஐரோப்பாவில் மிகப்பெரிய நாடாகும். சோவியட் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ரஷ்யாவிடம் இருந்து பிரிவதற்கு அந்நாட்டின் அதிகப் பெரும்பான்மை மக்கள் வாக்களித்தனர். அந்த நாடு நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகளில் இணைய முயன்று வருகிறது.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை புட்டின் கடந்த சில மாதங்களாக மறுத்து வந்தார். எனினும் உக்ரைன் ரஷ்யாவில் இருந்து எதிரிகளால் செதுக்கப்பட்ட ஒரு செயற்கை உருவாக்கம் என்று அழைத்தார்.

உக்ரைன் மக்களுக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதில் நடவடிக்கையாக கடும் தடைகள் விதிக்கப்படுவது பற்றி உறுதி அளித்தார்.

தாம் ஜி7 தலைவர்களை சந்திக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யா மீது இதுவரை இல்லாத கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார தலைவர் ஜோசெப் பொரெல் உறுதி அளித்துள்ளார்.

“இரண்டாம் உலகப் போருக்குப்பின்னர் ஐரோப்பாவின் இருண்ட மணித்தியாலங்களில் ஒன்றாக இது உள்ளது” என்று பொரெல் தெரிவித்தார். எனினும் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை முழு வீச்சில் இடம்பெறுவது பற்றி உடன் உறுதி செய்ய முடியாதுள்ளது. “உக்ரைனை ஆக்கிரமிப்பது எமது திட்டத்தில் உள்ளடங்காது. நாம் எதையும் வலுக்கட்டாயமாக திணிக்கப்போவதில்லை” என்று புட்டின் கூறியுள்ளார்.

நியூயோர்க்கில் கூடிய ஐ.நா பாதுகாப்புச் சபை அவசரக் கூட்டத்தில் பேசிய புட்டின், ரஷ்ய படைகளுக்கு மக்களை பாதுகாக்கும்படி தாம் உத்தரவிட்டதாகவும் உக்ரைன் இராணுவம் ஆயுதங்களை கீழே போடும்படியும் குறிப்பிட்டார். புட்டின் உட்பட ரஷ்யா மீது சாத்தியமான அனைத்துத் தடைகளையும் விதிக்கும்படி உலகத் தலைவர்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

புட்டின் உத்தரவு பிறப்பித்து மூன்று மணி நேரத்தின் பின் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில், உக்ரைன் விமானத் தளங்களில் இராணுவ உட்கட்டமைப்புகளை கைப்பற்றியதாகவும் அதன் வான் பாதுகாப்பை சீரழித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

கீவ் மற்றும் வடக்கில் கார்கிவ்வில் இருக்கும் இராணுவ கட்டளை மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றதாக உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மறுபுறம் ரஷ்யத் துருப்புகள் ஒடெசா மற்றும் மிரியுபோலை அடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அசோவ் கடலில் கப்பல் போக்குவரத்துகளை மூடியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மரியுபோல் உட்பட உக்ரைன் துறைமுகங்களுக்குச் செல்லும் இந்த நீரிணை ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.   நன்றி தினகரன் 
உக்ரைன் தலைநகரை நோக்கி ரஷ்ய துருப்புகள் முன்னேற்றம்

பெரும் உயிர்ச் சேதம்: மக்கள் வெளியேற்றம்

முழு வீச்சில் இடம்பெற்று வரும் ரஷ்ய படையெடுப்பை முறியடிக்கும் முயற்சியில் உக்ரைன் இராணுவம் ஈடுபட்டிருக்கும் நிலையில், தலைநகர் கீவ்வுக்கு அருகில் உக்கிர மோதல் வெடித்துள்ளது.

தலைநகரின் புறநகர் பகுதியில் உள்ள விமானத் தளம் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை கடும் மோதல் வெடித்திருப்பதோடு தலைநகர் கீழ் ரஷ்ய துருப்புகளிடம் வீழும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

உக்ரைனின் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளால் கடந்த வியாழக்கிழமை ரஷ்ய படை தாக்குதலை ஆரம்பித்த நிலையில் ரஷ்ய தாக்குதல்கள் பல முனைகளிலும் இடம்பெற்று வருகின்றன. கீவ்வில் வெடிப்புகள் இடம்பெற்று வருகின்றன. அங்கு குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று சேதமடைந்துள்ளது.

நகருக்குள்ளும் அதன் வடக்கு புறநகர் பகுதிகளிலும் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நாசக்காரர்கள் ஏற்கனவே தலைநகருக்குள் இருக்கலாம் என்று உக்ரைன் அரசு எச்சரித்துள்ளது.

வான் தாக்குதல்கள் உக்கிரமடைந்த நிலையில் கீவ்வில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்தில் பொதுமக்கள் அடைக்கலம் பெற்றனர். இதில் மக்கள் செரிந்து வாலும் பொஸ்னியாக் பகுதியிலும் வான் தாக்குதல்கள் இடம்பெற்றள்ளன. இதில் குறைந்தது ஏட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.

‘புட்டின் நீங்கள் விலங்குபோல் அறுக்கப்படுவதை நாம் பார்க்க விரும்புகிறோம்’ என்று கீவ் குடியிருப்பாளரான நிக் பீக் பி.பி.சி தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

தலைநகரில் ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாகவும் ரஷ்ய விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் படையினர் என குறைந்தது 137 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. 100,000க்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக ஐ.நா கணித்துள்ளது. குறைந்தது 1,000 உக்ரைனியர்கள் இரயில் மூலம் போலந்தின் ப்ரிசெமிசில் நகரை சென்றடைந்துள்ளனர்.

ரஷ்யா தனது படை நடவடிக்கையை ஆரம்பித்தது தொடக்கம் குறைந்தது 450 வீரர்களை அது இழந்திருப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வொல்லஸ் குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சி உரையில் போர் பிரகடனத்தை வெளியிட்டிருந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஏதேனும் நாடு இதில் தலையிட முயன்றால் இதுவரை சந்திக்காத விளைவை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

ஏவுகணை மற்றும் வான் தாக்குதல்கள் உக்ரைனிய நகரங்களில் மழை போல் பொழிந்து வருவதோடு ஊக்ரைனின் பரந்த எல்லைப் பகுதிகளின் மூன்று பக்கங்களில இருந்து டாங்கிகள் முன்னேறி வருகின்றன. ரஷ்யா உக்ரைன் எல்லைகளில் பல வாரங்கள் படைகளை குவித்து வைத்திருந்த நிலையிலேயே இந்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.

தலைநகரை கைப்பற்ற ரஷ்ய பெரும் படை பலத்தை உருவாக்கி வருவதாக மேற்குலக உளவுத்துறை அதிகாரிகள் முன்னதாக எச்சரித்திருந்தனர்.

பெரும் குழப்ப சூழலுக்கு மத்தியிலும் தொடர்ந்து போராடுவதாக உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி உறுதி அளித்துள்ளார். புதிய இரும்புத் திரை விழுகின்றபோதும் தமது நாடு தனது மேற்கு பக்கத்தில் நீடிப்பதை உறுதி செய்வது தமது பணி என்று அவர் கூறினார்.

உக்ரைனின் அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள மேலதிக படையினரையும் செலென்ஸ்கி போருக்கு அழைதுள்ளார். ஆயுதம் சுமக்க முடியுமான அனைவரும் ரஷ்யாவை முறியடிக்கு முயற்சியில் இணையும்படி உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் அழைப்பு வீடுத்துள்ளார்.

தாக்குதலின் தீவிரம் பற்றி மேற்குலகத் தலைவர்கள் அதிர்ச்சி மற்றும் கோபத்தை வெளியிட்டுள்ளனர். பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய கூட்டணி நாடுகள் ரஷ்யாவை தண்டிக்கும் கடுமையான தடைகள் பற்றி உறுதி அளித்துள்ளன. எனினும் உக்ரைனுக்கு படைகளை அனுப்ப எந்த நாடும் முன்வரவில்லை.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ என்ற வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு, தமது துருப்புகளை ரஷ்யா எல்லை நோக்கி நகர்த்தியுள்ளது. சில உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு இராணுவ உதவியை வழங்கியுள்ளன.

பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மெக்ரோன், ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதில் தாக்குதல்களை உடன் நிறுத்தும்படி வலியுறுத்தி இருக்கும் மெக்ரோன், பாரிய தடைகள் பற்றியும் புட்டினை எச்சரித்ததாக பிரான்ஸ் அரசு குறிப்பிட்டுள்ளது. எனினும் இரு தலைவர்களும், ‘தீவிரமாக மற்றும் வெளிப்படையாக தமது கருத்துகளை பரிமாரிக்கொண்டதாக’ ரஷ்ய அரசு இந்த உடையாடல் பற்றி குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா கீவ்வை கைப்பற்றி அரசாங்கத்தைக் கவிழ்க்க எண்ணுவதாக அமெரிக்கா மற்றும் உக்ரைனிய அதிகாரிகள் நம்புகின்றனர்.   நன்றி தினகரன் 
செர்னோபில் அணு நிலையத்தை கைப்பற்றியது ரஷ்ய இராணுவம்

செர்னோபில் அணு நிலையத்தை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இன்று ஐரோப்பாவுக்கே மிக அச்சுறுத்தலான ஒன்றுக்கு வெறுமனே அர்த்தமற்ற தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் மகைலோ பொடோலியக் இந்தத் தாக்குதல் குறித்து தெரிவித்துள்ளார்.

1986 இல் செர்னோபிலில் இடம்பெற்ற வெடிப்பு ஒன்று பாதிப்பு மற்றும் செலவு என இரண்டிலும் மனித வரலாற்றில் மிக மோசமான அணு அனர்த்தம் ஒன்றுக்கு வித்திட்டது.

ரஷ்யா தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பில் நீடித்தால் அவ்வாறான நிலை மீண்டும் ஏற்படக்கூடும் என்று உக்ரைன் ஜனாதிபதி எச்சரித்தார்.

“1986 இல் இடம்பெற்ற அவலம் மீண்டும் நிகழ்வதை தவிர்க்க எமது காவலர்கள் தமது உயிரை கொடுத்து வருகின்றனர்” என்று ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். “இது ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் எதிரான போர் பிரகடனமாக உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த அணுத் தளத்தில் மற்றொரு சுற்றுச்சூழல் அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சு எச்சரித்துள்ளது.

செர்னோபில் அணு நிலையத்தை சூழவுள்ள 32 கிலோமீற்றர் சுற்றளவு பகுதி 36 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றும் பெரும்பாலும் உயிர்கள் வாழ தகுதியற்ற பிரதேசமாகவே உள்ளது. இந்த ஆலையின் மேலும் மூன்று உலைகள் கடந்த 2000 ஆம் ஆண்டு மூடப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. 1986 கசிவுக்கு பின்னர் இந்த பகுதியில் கதிர்வீச்சு இன்றும் ஆபத்தான அளவிலேயே உள்ளது.

கடந்த வியாழக்கிழமை உக்ரைனுக்கு படையெடுத்த ஆரம்பத்திலேயே செர்னோபில் அணு நிலையம் உள்ள பகுதிக்கு ரஷ்ய துருப்புகள் நுழைந்துள்ளன.   நன்றி தினகரன் உக்ரைனியக் குடியிருப்பாளர்கள் மெட்ரோ நிலையங்களில் தஞ்சம்

ரஷ்ய படையெடுப்பின் முதல் நாள் தாக்குதலில் இருந்து தப்புவதற்கு உக்ரைனியர்கள் நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையங்களில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

கீவ் மற்றும் கார்கிவ் மெட்ரோ நிலையங்களில் முதியவர்கள் மற்றும் குழந்தைள் உட்பட குடியிருப்பாளர்கள் மற்றும் குடும்பங்கள் இரவை கழிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. பலரும் பைகள் மற்றும் தமது உடைமைகளை வைத்துக்கொண்டு போர்வையால் போர்த்தியபடி உறங்குவதை காணமுடிகிறது.

உக்ரைனில் இரவில் ஊரடங்கு அமுலில் இருந்தபோதும் குண்டு தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் இடமாக மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன.

ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு தேடி அண்டை நாடுகளில் அடைக்கலம் பெற்றிருப்பதாக அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு வெளியேறியோறின் எண்ணிக்கை 100,000க்கும் அதிகம் என கூறப்பட்டுள்ளது.

உக்ரைனின் மேற்குப் பக்கமாக இருக்கும் போலந்தில் அகதிகளின் வருகைக்காக எல்லையில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.   நன்றி தினகரன் 
உக்ரைன் தலைநகரில் இருந்து வெளியேற மக்கள் முண்டியடிப்பு

போர் வெடித்த செய்தி பரவியதை அடுத்து உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள மக்கள் அந்த நகரை விட்டு வெளியேறுவதில் முண்டியடித்து வருகின்றனர்.

உக்ரைனின் பெலாரஸ் எல்லையில் ரஷ்ய டாங்கிகள் முன்னேற ஆரம்பித்த நிலையில் கீவில் இருக்கும் மக்கள் வாகனங்கள் மற்றும் ரயில்களில் வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

உக்ரைன் தலைநகர் மற்றும் பல நகரங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் எங்கும் சைரன் ஒலி எழுப்பப்படும் நிலையில் நேற்று வியாழக்கிழமை காலையில் மக்கள் நகரை விட்டு வெளியேறும் காட்சிகள் கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் ஏ.டீ.எம் இயந்திரங்கள் முன் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

தலைநகரில் இருக்கும் மேலும் பலர் பாதுகாப்பான இடங்களில் அடைக்கலம் பெற்று வருகின்றனர். பீதி அடைந்திருக்கும் மக்கள் வெடிகுண்டு முகாம்கள் மற்றும் நிலவறைகளில் அடைக்கலம் பெற்று வருவதாக சமூக ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது.    நன்றி தினகரன் 
நாட்டிலேயே தங்கி இருக்க உக்ரைன் ஜனாதிபதி முடிவு

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தொடர்ந்து நாட்டிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளார். 

அவரும் அவரது குடும்பத்தினரும் ரஷ்யப் படையினரின் முதன்மையான இலக்காக இருக்கும்போதும் செலென்ஸ்கி அவ்வாறு கூறியுள்ளார். 

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் வெளிநாட்டுத் தலைவர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் நேட்டோவின் செயல்பாடு ஏமாற்றமளிப்பதாகத் செலென்ஸ்கி கூபாதுகாப்புக் கூட்டணியினர் உக்ரைனுக்குள் வந்து உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் எவரும் அவ்வாறு உதவ முன்வருவதைப் பார்க்க முடியவில்லை என்று செலென்ஸ்கி கூறினார்.

சண்டையிடுவதற்காக உக்ரைனுக்குப் படையினரை அனுப்பப் போவதில்லை என்று நேட்டோ திரும்பத் திரும்பக் கூறிவந்தது. கூட்டணி வசமுள்ள கிழக்குப் பகுதிக்குக் கூடுதல் படையினரை அனுப்பிவைக்கப் போவதாக மட்டும் அமெரிக்கா கூறியிருந்தது.    நன்றி தினகரன் 
உக்ரைன் அகதிகளை ஏற்க அண்டைய நாடுகள் தயார்

ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகளை எதிர்கொள்ள உக்ரைனின் அண்டை நாடுகள் தயாராகியுள்ளன.

ரஷ்யாவின் வான் தாக்குதல்கள் தொடரும் நிலையில் தலைநகர் கீவ்வில் இருக்கும் மக்கள் கிராமப்பகுதி அல்லது ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளை நோக்கி வெளியேறி வருகின்றனர்.

சில நகரங்களில் வாகன நெரிசல் காணப்படுவதோடு சிலர் கால்நடையாக போலந்து மற்றும் ஹங்கேரி நாட்டு எல்லைகளை நோக்கு செல்கின்றனர்.

மனிதாபிமான நெருக்கடி மோசமானதாக மாற வாய்ப்பு இருப்பதாக ஐ.நா அகதிகள் நிறுவனத்தின் தலைவர் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார். ‘இடம்பெயர்வுகள் பற்றி குறிப்பாக நாம் கவலை அடைந்துள்ளோம்’ என்று கிரண்டி தெரிவித்தார்.

‘நாட்டின் ஏனைய பகுதிகளில் அடைக்கலம் பெறுவதற்காக 100,000க்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே தமது வீடுகளை விட்டு வெளியேற ஆரம்பித்திருப்பதாக நாம் கணித்துள்ளோம்’ என்று ஜெனீவாவில் இருந்து பேசிய அவர் குறிப்பிட்டார்.

உக்ரைனில் இருக்கும் மக்களுக்கு உதவி வழங்குவதற்காக உதவிகள் சேர்க்கப்படுவதாகவும் தற்போது இராணுவ நடவடிக்கை இடம்பெற்று வருவதால் அதனை செயற்படுத்த முடியாதிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றான உக்ரைனில் இருந்து வரும் அகதிகளை வரவேற்க தயாராக இருப்பதாக உக்ரைனின் ஐரோப்பிய அண்டை நாடுகள் குறிப்பிட்டுள்ளன.

காயமடைந்த நிலையில் நாட்டுக்குள் வரும் உக்ரைனியர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் போலந்து எல்லையில் அகதிகளை ஏற்கும் முகாம்களையும் அமைத்துள்ளது.

ஏற்கனவே ஆயிரக்கணக்கானவர் எல்லையை நோக்கி வருவதை பார்க்க முடிவதாக உக்ரைனின் தெற்கு எல்லை நாடான மோல்டோவா தெரிவித்துள்ளது.

அதிகளின் படையெடுப்பை கையாள்வதற்காக சுலோவாக்கியா மற்றும் ஹங்கேரி எல்லைக்கு படைகளை அனுப்பியுள்ளன.   நன்றி தினகரன் No comments: