பிள்ளை வளர்ப்பு - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணே சர்.

.இன்று பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வளர்ப்பது பற்றியும் அதன் பலாபலன் பற்றியும் அதிகமாகப் பேசப்படுகிறது. இன்றய பெற்றோர் பலரும் இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். இதனால் முன்பில்லாத மாதிரி இவர்களிடம் பணப்புழக்கம் அதிகம். இதனால்  தங்கள் வாரிசுகளான பிள்ளைகளுக்கு தம்மால் முடிந்த அத்தனை வசதிகளையும் கொடுக்கவேண்டும் என்ற சிந்தனை இவர்களிடம் வளர்ந்துள்ளது.

அதனால், பிள்ளைகள் பாடசாலைப் படிப்பின் பின் பல்வேறு விதமான பொழுது போக்குக் கலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இசை, நாட்டியம், நீச்சல், கால்பந்து, கிறிகெற்... இப்படியாக வகை வகையாக எத்தனையோ பயிற்சிகளுக்குப் போகிறார்கள். இவற்றைக் கற்றுக் கொடுப்பதால் தமது பிள்ளைகளின் வருங்கால வாழ்க்கை உன்னதமாக அமையும் எனப் பெற்றோர் எண்ணுகிறார்கள்.

இவர்கள் இவ்வாறு பல்வேறு பயிற்சிகளிலும் ஈடுபடுவதால் வீட்டில் வேறு எதையும் கவனிப்பதற்கு அவர்களுக்கு நேரம் வருவதில்லை. பல பெற்றோர் தமது குழந்தைகளுக்காகச் செலவு செய்யும் இந்தப் பணம் இவர்களின் கடும் உழைப்பால் தேடப்பட்டவையே. இருந்தாலும் இந்தச் செலவு பலராலும் அத்தியாவசியம் என்றே கருத்தப் படுகிறது.

பெற்றோர் இந்த பிரச்சினைகள் எதையும் பிள்ளைகளுடன் பகிர்வது கிடையாது. குழந்தையின் வெற்றியே தமது வெற்றி எனக் கருதும் பெற்ரோர்கள் இவர்கள். இதனையே எனது நண்பர் ஒருவர், ‘They live through their children' என்றார்.இதை அனுபவிக்கும் பிள்ளைகள் இவை அத்தனையும் பெற்றோர் கஸ்டப்பட்டுத் தமக்காகச் செய்வதாகக் கருதுவது கிடையாது. மாறாக, அத்தனையும் தமது பிறப்புரிமை என எண்ணவே தலைப்படுகிறார்கள். ஒரு தாயார், முழு நேரமும் வேலை பார்ப்பவர், தனது மகளை ஆறாம் வகுப்பு விஷேச தேர்வுக்கு விஷேச பயிற்சி அளிப்பதற்காக ஞாயிற்றுக் கிழமைகளிலே Homebush இல் இருக்கும் தனியார் நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு Minto வில் இருந்து அழைத்து வருவார். இவர், மகளிடம் ஒரு நாள், ‘இப்படியெல்லாம் உன்னை நான் கஸ்ரப்பட்டு படிப்பிக்கிறேன்; நீ பெரியவளானதும் என்னை வைத்துக் காப்பாற்றுவாய் அல்லவாஎனக் கேட்க, மகள் சட்டென, ’ஏனம்மா அரசாங்கம் இருக்கிறது தானே, உங்களைப் பார்க்கஎன பதில் தந்தாளாம்.

வேறு ஒரு தாயார் பெண்ணிடம், கோவித்துக்கொண்டு, ’இதுகளை ஏன் தான் பெத்தேனோஎனப் புலம்பினாராம். மகள் அதற்கு, ‘ It is for your pleasure' என்றாளாம். தாயாருக்கு மதிப்புக் கொடுக்கத் தெரியாத பெண்ணாக அவள் வளர்ந்து விட்டதற்கு யார் பொறுப்பு?

ஆம், இன்று வளர்ந்து வரும் சமுதாயம் தமக்கென சில பொறுப்புகள் இருப்பதை உணர்வதில்லை. இது நமது சமுதாயத்திற்கு மட்டும் உரிய பிரச்சினை இல்லை. இது பற்றி இன்று மனோஇயல்நிபுணர்கள் சிந்திக்கத் தொடங்கி உள்ளார்கள். இவர்கள் குறை கூறுவது எல்லாம் பெற்றோரையே. பிள்ளைகள் வாழ்க்கையில் அவர்கள் மற்றவர்களைப் பற்றியும் சிந்திக்க, மற்றவர்களுக்கு  உதவக் கூடிய பிள்ளைகளாக அவர்களை வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.

மற்றவர்களைச் சிறிதும் சிந்திக்காத பிள்ளைகள் மிகுந்த தன்னலக் காரராக வளர்வதை அவதானிக்க முடிகிறது. இவர்களிடம் சகலவிதமான உல்லாச செயல்களையும் செய்ய வேண்டும் என்ற அவா வளர்வதாகக் கூறப்படுகிறது. The Greedy Generation.  தாம் மட்டும் மற்றவர்களிடம் உதவி பெற வேண்டும்; ஆனால், பதிலுக்கு தாம் அதைத் திருப்பிச் செய்யவேண்டும் என்ற கடமை இருப்பதாக அவர்கள் கருதுவது கிடையாது.

இதற்கு நிவாரணம் தேட வேண்டியது பெற்றோர்களிடமே. பிள்ளைகளிடமல்ல. பெற்றோர் பிள்ளைகளுடன் பேசும் போது நல்ல விஷயங்களை; மனதுக்கும்; வாழ்வுக்கும், போஷாக்கு அளிக்கும் விஷயத்தைப் பேசுவதை விடுத்து பிள்ளைகளின் மனதிலே விஷத்தை விதைப்பவர்கள் சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள்.

பிள்ளைகள் பெற்றோரின் வாரிசுகள். உடல் ரீதியில் மட்டுமல்ல; சிந்தனை ரீதியிலும் தான். வீட்டில் எது நடக்கிறதோ எது பேசப்படுகிறதோ அவை தான் வளர்ந்து வரும் பிள்ளையின் மனதில் பதிகிறது. இதற்கு அமைவாகவே செயல்களும் நடைமுறையும் அமையும்.

இன்றய பிள்ளைகளின் மனதில் இருப்பது 4 Wheel Car. இது இன்று நாட்டில் விஸ்வரூபம் எடுத்த பிரச்சினையாக இருக்கிறது. இதனை வைத்திருக்கும் ஒருவரைக் கேட்டால், உடனே, ‘பிள்ளைகள் ஆசைப்பட்டார்கள்; வாங்கினோம்’. என்று கூறுவார்கள்ஒரு வெள்ளையர் ஒருவர் அத்தகைய வாகனம் ஒன்றை வாங்கினார் எனில் அதைப் பயன் படுத்தி அவுஸ்திரேலியாவின் பல பாகங்களையும் அதில் போய் பார்ப்பார்; பாதி நாட்கள் அவர்கள் Out back இல் களிக்கப் போய் விடுவார்கள். அத்தகைய பயணங்களுக்கு இத்தகைய வாகனங்கள் மிக்க வசதியானவை. ஆனால் எம்மவரோ நேர் எதிர். இவர்களுக்கோ எனில் அது  ஒரு அந்தஸ்தின் சின்னம்.
அதனால் அதை ஓட வேண்டும். ஓடுபவர் பெற்றோர்; அதில் அமர்ந்திருப்பவர் தான் பிள்ளைகள். இத்தகைய சிந்தனைகள் இவ்வாறு தான் பிள்ளைகளின் மனங்களைச் சென்றடைகிறது. இவர்கள் வீட்டில்; பேச்சில் அடிபடுவதெல்லாம் மற்றவர்களிடம் தமது அந்தஸ்தை எப்படிக் காட்டுவது என்பதே!

அண்மையில் என் மாணவி ஒருவரிடம்,’ மேற்கத்திய நாடுகள் நாகரிகம் அடைவதற்கு முன்பே கீழைத்தேய நாடுகள் நன்கு வளர்ச்சியுற்ற நாடுகளாக இருந்தனஎனக் கூறினேன். ’என்ன! வெள்ளைக்காரர்கள் நம்மை விட நாகரிகம் படைத்தவர்கள் அல்லவா?’ என்று கேட்டாள். ஆம். அவர்கள் நாகரிகம் அடைந்தவர்கள் தாம். ஆனால் அவை எமக்கு பிந்தியவை; எல்லாம் Industrial revolution க்குப் பின் வந்தவை தான் அவை என்றேன். மேலும், கணிதம், கட்டிடக் கலை முதலானவைகளில் நாம் முன்னோடிகளாக இருந்தோம் என்றேன். அவள் அதனை நம்பத் தயாராக இல்லை.


எங்கள் பிள்ளைகள் இங்கு ஒரு வித தாழ்வு மனப்பாண்மையுடன் வளர்வதை இப்போதெல்லாம் உணர முடிகிறது. எல்லாவற்றிலும் வெள்ளையர் நாகரிகமானவர் ; நாம் எந்தப்பின்னணியும் அற்றவர்கள் என்ற மனநிலை அவர்களிடம் வேரூன்றுகிறது.


இந்தச் சிந்தனை அவர்களைக் கோழைகள் ஆக்கக் கூடும். சீன இனத்தவர் எப்பொழுதுமே தாம் ஓர் உயர்ந்த இனம் என எண்ணுவதை பலர் உனரக்கூடியதாக இருக்கிறதுஏன் எமது நாகரிகம்; வளர்ச்சி, சிந்தனைகள் என்பன சரியாகப் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறப்படவில்லை? இவற்றை அறிவதும் உனர்வதுமே நாளை இந்த Multi Cultural Country யில் அவர்களை நிமிர்ந்து நிற்கச் செய்பவை.தமது நாகரிகம் எது என அறியாத நிலை அவர்களை மேலும் அவல நிலைக்கே தள்ளும்.

(
இக்கட்டுரை ATBC வானொலியில் 18.6.2005 அன்றுபண்பாட்டுக் கோலங்கள்என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது.)

 

No comments: