முருகபூபதி என்ற நதி ! வற்றாத ஜீவநதி அதன் கரைகளை நனைத்து ஈரலிப்பாக்கி பயிர்களை வளர்க்கும் !! சட்டத்தரணி செ. ரவீந்திரன்


அரசியல் தலைவர்களைப்பற்றியோ அல்லது சில வரலாறுகளையோ எழுதலாமா? என்று அண்மைக் காலமாக நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, நான் வதியும் அவுஸ்திரேலியாவில் எம்மத்தியில் வாழ்ந்துகொண்டு தமிழ் மக்களின் நன்மைக்கு குறிப்பாகவும் சமுதாயத்திற்கு பொதுவாகவும் தங்கள் வாழ்நாளை செலவிட்டுக்கொண்டிருப்பவர்கள் பற்றியும்  முதலில் எழுதினால் பிரயோசனப்படும் என்று  யோசித்தேன்.

அத்தகையவர்களைப்பற்றி சிந்தித்தபோது பலர் மனத்திரையில்


வந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும் முந்திக்கொண்டு எழுத்தாளரும் ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான லெட்சுமணன் முருகபூபதி நின்றார்.

கடந்த மாதம் ( ஜூலை ) 13 ஆம் திகதி, முருகபூபதிக்கு 70 வயது பிறந்தது. அதனை நினைவுபடுத்தி எனது மனப்பதிவுகளை எழுதவேண்டும் என்று விரும்பினேன்.

அவரது  இந்த பிறந்ததின காலமும் முக்கியத்துவமாக இருந்தமையால் அவரையே எனது பதிவில் முன்னெடுப்பதற்கு திடமானேன்.

அவருக்காக அண்மையில் அவரது நண்பர்கள் மெல்பன் நடேசன் மற்றும் கன்பரா பிரம்மேந்திரன் ஆகியோர் இணைந்து நடத்திய நம்மவர் பேசுகிறார் என்ற இணையவழி மெய்நிகர் கலந்துரையாடல் அரங்கில்,  முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் பற்றியும்  இங்கு வதியும் எழுத்தாளரும் கலைஞரும் பாரதி பள்ளி என்ற  கல்விச்சாலையை பல வருடங்களாக இயக்கி வருபவருமான மாவை நித்தியானந்தன் உரையாற்றுகையில்,  “ முருகபூபதி மனிதாபிமானம் மிக்க மனிதன். அதற்கும் மேல் தனது உற்ற நண்பன்    என்று குறிப்பிட்டார்.

அவரது அக்கூற்றைக்கேட்டதுமே நானும் எனக்குள் ஒரு உள்நோட்டம் விட்டேன்.

முருகபூபதி,  என்னைப்பொறுத்தவரையில்,  எனக்கு யார்..?

எனது சக சமூகசேவையாளனா..? 

நான் பலசந்தர்ப்பங்களில் ஆலோசனை கேட்கும் ஒருவரா..?

நல்ல நண்பனா..? அல்லது குடும்பத்தில் ஒருவரா..?

அன்றில் ஒரு உடன்பிறவாத சகோதரனா..?


எங்களது கடவுளர்கள், தேவர்கள், அசுரர்கள் எல்லோரும்  பல அவதார உருவங்கள் எடுக்கிறார்கள். அப்படியான பல அவதார உருவ      ங்களில்   ஒன்றுசேர்ந்த ஆக்கத்திலேயே எங்களுக்கிடையிலான பிணைப்பு இருந்தது என்பதை அவதானிக்க முடிந்தது.

கடந்த சில வருடங்களாக முருகபூபதி தனது மனைவி மாலதியுடன் மெல்பனில் ஒரு புறநகரத்தில் வசித்துவருகிறார்.  அவரது வீட்டுக்கு நான் செல்வதாயின் சுமார் மூன்று மணிநேரம்  தேவைப்படும்.

அதனால் முன்னரைப்போன்று அவரை அடிக்கடி நேரில் சந்திக்கமுடியாதுபோனாலும் தொலைபேசி – மின்னஞ்சல் தொடர்புகளின் ஊடாக பேசிக்கொண்டிருக்கின்றோம்.

அவ்வப்போது சமூக நிகழ்வுகளில் காணமுடியும். நேருக்கு நேர் பேசமுடியும்.

எமது குடும்பத்தில் அருண். விஜயராணி ( இவள்தான் எங்களிடையே


இளையவள் ) எழுத்தாளராகவும் பெண்ணிய செயற்பாடுகளில் ஈடுபாடுள்ளவளாகவும்  சமூக சேவகியாகவும்  நன்கு அறியப்பட்டவள்.

எதிர்பாராதவகையில் அவள் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்கழி மாதம் மறைந்தபோதுதான் முருகபூபதி தொலைதூரத்திலிருக்கும் வலியை உணர்ந்தேன்.

பூபதி எமது தங்கையின் எழுத்துப்பணிகளுக்கும் இதர சமூகசேவைகளுக்கும் உற்றதுணையாக விளங்கியவர். அவளது முதலாவது கதைத் தொகுதி கன்னிகா தானங்கள் 1990 இல் மெல்பனில் வெளியாகியபோது அதன் வெளியீட்டு அரங்கையும் முன்னின்று நடத்தியவர்.


இவர்களிருவருக்குமிடையே சகோதர வாஞ்சையிருந்தது. அவளது இறுதிக்கணங்கள் என அறிந்தவுடன் பதை பதைத்துக்கொண்டு தனது மனைவி, மகள் சகிதம் ஓடிவந்து பார்த்தார்.  அப்போது தங்கை இறுதிமூச்சை விடும் தருணத்திலிருந்தாள்.

அவள் எங்கள் எல்லோரையும் விட்டு விடைபெற்ற பின்னர் அவளுக்காக நடந்த அனைத்து நிகழ்வுகளிலும் பூபதி பங்கேற்றதுடன், எமது குடும்பம் வெளியிட்ட விஜயதாரகை நினைவு மலர் வெளியீட்டிலும் முன்னின்று உழைத்தார்.

அத்துடன் சொந்த பந்தங்களுக்கும் மேற்பட்டு  அப்பால், அவளது நினைவுகளை உலகெங்கும் எடுத்துச்சென்று பரப்பினார்.

அதேபோன்று நாம் நன்கு அறிந்திருந்தும்,  அக்கறைப்படாதிருந்த எமது அருமைத்தந்தையார் ஓவியரும் ஒளிப்படக்கலைஞருமான கே.ரி. செல்லத்துரை அவர்களின் புகழையும்  பலவாறு எடுத்துச்சென்று பரப்பினார்.

1997 ஆம் ஆண்டில் தனது இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாக்காலத்தில் எமது தந்தையார்  மற்றும் எழுத்தாளர்  எஸ். பொன்னுத்துரை, கவிஞர் அம்பி, அண்ணாவியார் இளைய பத்மநாதன் ஆகியோரின் ஆளுமைப்பண்புகளை வௌிப்படுத்தி  ஒரு  நிகழ்வையும்    பேராசிரியர் ஆசி கந்தராஜா தலைமையில் மெல்பன் வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் நடத்தி அவர்களை வாழும்போதே கௌரவித்தார்..

அத்துடன் மெல்பனில்  தமிழ் சமூகப்பணிகளில் ஈடுபடும் பலரையும் ஒன்றிணைத்து  அவர்களை பாராட்டி கௌரவிக்கவும் பூபதி  தவறியதில்லை.

எமது தந்தையாரின் ஓவிய ஆற்றல்களை புகலிடத்திலும் அறிமுகப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் தான் முன்னின்று ஒழுங்கு செய்த எழுத்தாளர் விழாக்களில் அன்னாரின் ஓவியங்களை காட்சிப்படுத்தி, 2001 இல் மெல்பனில்  நடந்த விழாவிலும்  கன்பராவில் நடந்த நான்காவது விழாவிலும் மாணவர்களிடையே ஓவியப் போட்டிகளை நடத்தி தந்தையாரின் ஞாபகார்த்தமாக பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

அதற்கு எமது குடும்பத்தின் அனுசரணையும்  எப்போதும் அவருக்கு இருந்தது.

தந்தையாரின் அரங்க நிர்மாண ஆற்றலையும் தெரிந்துவைத்துக்கொண்டு,  இங்குள்ள இளம் கலைஞர்கள் நடத்திய


நாடகங்களிலும் அவரது  பங்களிப்பினை பெற்றுக்கொடுத்தார்.

இறுதியில் அவர் மறைந்தபோது ஒரு மகனாக நின்று அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்றார்.

எமது தந்தையாரைத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அவருடன் முரண்பாடுகள் இருந்தாலும் அவரது மறைவுக்கு மரியாதை செலுத்திய பல நல்ல பண்பாளர்களை அறிவேன்.

ஆனால், பூபதி அப்படி அல்ல, அவர் பற்றிய அரிய செய்திகளை வெளிக்கொணர்ந்து போற்றவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். ஆதலால் எமது தந்தையாரை மாத்திரமல்ல அவுஸ்திரேலியாவிலும் தமிழர் புகலிட தேசங்களிலும்  இன்னும் எத்தனையோ பேரைப்பற்றியும்  தொடர்ந்து எழுதினார். புலம்பெயர் சமூகத்தின் மத்தியில் புதையுண்டு கிடந்த ஆற்றல் மிக்கவர்கள் பலரை புடமிட்டு வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.


அண்மையில், பூபதி தனது பிள்ளைகளின் குடும்பங்களை சந்திக்க மெல்பனுக்கு வருகை தந்தபோது, எமது வீட்டுக்கும் வரவிரும்பியிருந்தார்.

வந்தவர், தனக்கு 70 வயதாகப்போகிறது. என்னை ஆசீர்வதியுங்கள் என்று என்னையும் எனது மனைவியையும் கேட்டபோது நெகிழ்ந்துவிட்டோம்.

அவரை எமது வீட்டின் பூசை அறைக்கு அழைத்துச்சென்று ஆசிர்வதித்தோம்.

அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இணையவழி மெய்நிகர்  அரங்கில்,  டான் தொலைக்காட்சி மற்றும் யாழ். ஈழநாடு குழுமங்களின் இயக்குநர் எஸ். எஸ். குகநாதன் பேசும்போது, ஒரு கணிப்பைச் சொன்னார்.

                              “ ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும். பூபதி இருக்கும் வரையில் எந்தவொரு தமிழ்ப்படைப்பாளியும் உலகின் எந்த  மூலையிலிருந்து மறைந்துவிட்டாலும் உடனடியாக பூபதியிடமிருந்து ஒரு அஞ்சலிக்குறிப்பு ஆக்கம் ஊடகங்களில் வெளிவந்துவிடும். மறைந்தவரை மறந்துவிடாமல் அவர் குறித்த


நினைவுகளை விரிவாக எழுதி பதியவைத்துவிடுவார். 

இவ்வாறு குகநாதன் பேசக்கூடும் என்று நான் என்னளவில் அறிந்திருக்கவில்லை.

ஏனெனில் பூபதிக்கு அந்த நிகழ்வுக்கு முன்னர் எமது வீட்டில் ஆசீர்வாதம் வழங்கும்போது,  “ பூபதி மேலும் நிறைய பல வருடங்கள் வாழவேண்டும்,  எமது தந்தையார் மற்றும் தங்கை மற்றும்  பலரின் நினைவை நிறுத்தியது போன்று  எங்களையும் கூட    நினைவுபடுத்தவேண்டும் என்ற நப்பாசையையும்  மனதிற்குள்  விதைத்துக்கொண்டேன்.

கீரை விதைக்கும் ஆலமரத்தின் விதைக்கும் அளவில் உருவத்தில் அதிகம் வித்தியாசம் இல்லை. அவை முளைத்து வளரும்போதுதான் அவற்றின்  பரிமாணங்கள் தெரியவரும்.


பூபதியை இலங்கையில் நான் தெரிந்திருந்த அளவு நன்கு அறிந்திருக்கவில்லை. நான் கொழும்பில் சட்டத்தரணியாக பணியாற்றிய அக்காலப்பகுதியில் தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களில் ஈடுபட்ட பல  தமிழ் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் நடக்கும். அவற்றோடு சம்பந்தப்பட்டவற்றைப்பற்றியும் அவற்றின் பின்னணிகள் பற்றியும் செய்தி சேகரிக்கும் நோக்குடன் வரும்போது அளவளாவியிருக்கின்றேன்.

நீர்கொழும்பில் தீவிர இலக்கிய வாசகனாகவும் அங்கு இயங்கிய இந்து இளைஞர் மன்றத்துடன் இணைந்து இயங்கியவராக  அதேசமயம் இடதுசாரி அரசியல் கருத்தாக்கம் கொண்டவராக மக்கள் விடுதலை முன்னணி என்ற அரசியல் இயக்கத்தில் இணைந்திருந்தவராக 1971 ஏப்ரில் கிளர்ச்சியில் கதிர்காமத்தில்


கொல்லப்பட்ட அழகி பிரேமாவதி மனம்பேரியின் கல்லறையைத் தேடிச்சென்றவராக இவரைப்பற்றி நான் அறிந்திருக்கவில்லை.

அங்கு ஒரு பத்திரிகையாளராக மாத்திரம் அறியப்பட்ட  அவர் இங்கு வந்த பின்னரே மேற்சொன்ன விடயங்கள் உட்பட பூபதியின் பல் பரிமாணங்களையும் அவரது எழுத்தாக்கங்களிலிருந்து  அறிந்துகொள்ள முடிந்தது.

சமூக நீதிக்காக என்னையும் பூபதியையும் மெல்பனில் இணைத்த முதலாவது ஆரம்பம் என்பதும் அவர் இங்கு தொடங்கிய சமூகப்பணி என்பதும் அவரைப்போல் அகதிகளாக வந்த பலரையும் இணைத்து முன்வந்து இங்கு ஏற்கனவே குடியிருந்த புலம்பெயர் சமூகத்தினரிடம் தங்களது விண்ணப்பங்களுக்கு ஆதரவு தேடிய நிலைப்பாடுதான் !

தமிழ் அகதிகள் கழகம் என்ற அமைப்பினை அப்படியான


விண்ணப்பதாரிகளுக்காகவே அதற்கு இசைவுள்ள சிலருடன் சேர்ந்து உருவாக்கியதில் அவருக்கு எதிராக விமர்சனங்களும் காழ்ப்புணர்வுகளும் எழுந்தன.

அதனால் வெகுண்டு அவர் வரைந்த எழுத்துக்கள் இவை:

1987 ஆம் ஆண்டளவில் நான் மெல்பன் வந்த சமயம் இங்கு 300 இற்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் விண்ணப்பித்துவிட்டு, முடிவுகளுக்காக காத்திருந்தார்கள். இதேசமயம் இங்கு நிரந்தர வதிவிட உரிமை பெற்ற பலர்  சங்கம்   அமைத்து  “ தமிழ்  “ வளர்த்துக்கொண்டிருந்தார்கள். இவர்களின் கண்களுக்கு                  “ ஈழப்போர்  “ மாத்திரம்தான்  தெரிந்தது. ஆனால், அருகாமையில் உதவிக்காக நின்ற அகதிகள் இவர்களின் கண்களுக்குத் தென்படவில்லை. அதற்குச்சொல்லப்பட்ட  சமாதானம்  “ நாம்  “தனிப்பட்டவர்களின் விண்ணப்பங்களுக்கு சான்று தரமுடியாது. பொதுவாக தமிழருக்குரிய பிரச்சினைகளையும் கஷ்ட நஷ்டங்களையும் எடுத்துக்கூறுவோம்  “ என்பதாகவே இருந்தது.

 “ துணைக்குப்போனாலும் பிணைக்குப்போகாதே  “ என்றும் அகதிகள்


எனச்சொல்லிக்கொண்டு வந்திருப்போர் இலங்கையில் ஏதும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் சங்கம் எப்படி அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பரிந்துரை செய்யும். அவர்களை சங்கத்தில் எப்படி சேர்த்துக்கொள்ள முடியும்.  “ என்று வந்த அகதிகள் மீதே பாரத்தையும் போட்டு நடந்துகொண்டது இந்தச்சங்கம்

பூபதியின் முன்னெடுப்பினால்  உருவாக்கப்பட்ட தமிழ் அகதிகள் கழகம் 1988 இல் அமைக்கப்பட்டு பலருக்கும் உதவியையும் வழங்கி, ஈழத்தமிழரின் அவலங்களையும் அரசாங்கத்திற்கு எடுத்துரைத்துக்கொண்டிருந்தது.


இவைகளில் வளர்ந்த பயவுணர்வுகளினாலும், அரசியல் ஆட்டங்களாலும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கும் ஒரு நீதியான சமூகம் நடத்தவேண்டும் என பூபதி சிலருடன் இணைந்து இயங்கிய வடிகாலாகவும் மக்கள் குரல் என்ற கையெழுத்து இதழை நண்பர்களுடன் இணைத்து நடத்தினார்.  அத்துடன் அவரது பால்ய கால நண்பர் இராஜரட்ணம் சிவநாதனுடன் இணைந்து 1988 இல் மெல்பனில் பார்க்வில் பல்கலைக்கழக கல்லூரியில் கலைமகள் விழா நடப்பதற்கும் முன்னின்று உழைத்தார்.

பின்னாளில்  பல நண்பர்களுடன் இணைந்து அவுஸ்திரேலியத் தமிழர்  ஒன்றியம் என்ற அமைப்பும் உருவாவதற்கு காரணமாகவிருந்தார். இந்த அமைப்பு கலைமகள் விழா,  பாரதி விழா, முத்தமிழ் விழா, நாடக – நடன கருத்தரங்குகளையும் கண்காட்சிகளையும் இளையோருக்கான நாவன்மைப்போட்டிகளையும் நடத்தியது.  அத்துடன் கலைமகள் விழாக்களில் தமிழ்க்குழந்தைகளுக்கு ஏடு துவக்கி வித்தியாரம்பமும் செய்துவைக்கப்பட்டது.

இவற்றின் தொடர்ச்சியாக 2001 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில்


வதியும்  தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து மெல்பனில் இரண்டு நாட்கள் தமிழ் எழுத்தாளர் விழாவையும் ஒருங்கிணைத்து நடத்தினார். இந்த வருடாந்த விழா அடுத்தடுத்து மெல்பன், சிட்னி, கன்பரா  எங்கும் வருடந்தோறும் நடந்தது.

அந்த இயக்கமும் பின்னாளில் நான்கு வருடங்களில் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கமாக உருவாகியது. தற்பொழுது 20 ஆண்டுகளையும் கடந்து இயங்கிவருகிறது.

இவைகளினால்,  பூபதி இல்லாத ஒரு  கலை, இலக்கிய சமூக அரங்கு முக்கியமாக மெல்பனில் இருக்காது என்ற நிலையே உருவானது.

அவரது ஆலமர நிழலில் எத்தனையோபேர் உருவானார்கள்.

நான் இலக்கியப்படைப்புகளை ரசித்தவனே தவிர  புனைந்து எழுதத்தெரியாதவன். எனக்கு எழுத்தாற்றலே மிகக் குறைவு. ஆனால், பூபதியோ என்னை விடுவதில்லை. என்னைச் சந்திக்கும் நேரமெல்லாம்,  “ அண்ணை நீங்கள் எத்தனைபேருக்கு அகதிக்கதைகள் எழுதினீர்கள் அதுபோன்று புனையவேண்டாம். அறிந்தவற்றை, உங்களுக்குத் தெரிந்த வரலாற்றை எழுதுங்கள்  “ என்று வற்புறுத்துவார்.

அவரது தூண்டுதலினால்தான் அண்மைக்காலமாக சில கட்டுரைகளை எழுதிவருகின்றேன் என்றால்  அதற்கு பூபதி தந்த ஊக்கமும்  ,  நான் எழுதியவற்றை படித்து திருத்தி,  ஒப்புநோக்கி அனுப்புவதற்கு அவருக்கு இருந்த பொறுமையும்தான்  காரணம்.

இவைகளையெல்லாம் விட எனது நெஞ்சில் ஆழமாக நிறைந்திருப்பது எமது ஒன்றியம் எல்லாம் உருவாவதற்கு முன்னர், எனது ஆதரவைத் தேடி அவர் தொடங்கிய ஒரு நற்பணிதான். அந்நாட்களில் – 1987 – 1988 களில் நான் மெல்பனில் Brunswick என்ற இடத்தில்  சட்டத்தரணியாக  அலுவலகத்தை நடத்திக்கொண்டிருந்தேன். அப்போது அவர் எனக்கு  சமீபமாக ஒரு தொடர் மாடிக்குடியிருப்பில் ஒரு சில அகதியாக வந்த இளைஞர்களுடன் வாடகைக்கு குடியிருந்தார்.

அக்காலப்பகுதியில் அவ்வப்போது எனது அலுவலகம் வந்து பொதுவாக இலங்கை அரசியல் நிலைவரங்கள் பற்றி பேசுவது வழக்கம். அதில் ஈழப்போரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ்ச்சிறார்கள் பற்றிய செய்திகளும் உள்ளடங்கியிருக்கும்.

ஒரு நவராத்திரி காலத்தில், தான் வசித்த அந்தக்  குடியிருப்பு வீட்டுக்கு சரஸ்வதி பூசைக்கு  என்னை அழைத்திருந்தார். வந்திருந்தவர்கள் அனைவரும் பூபதி மெல்பன் வந்ததும் தேடிக்கொண்ட நண்பர்கள். அவர்களில் பலரை எனக்கும் நன்கு தெரியும்.

அந்த நிகழ்ச்சியில் எனது நினைவுக்குத் தெரிந்தவரையில் தருமகுலராஜா,  சிவநாதன், கொர்ணேலியஸ், சாம்பசிவம், முருகேசு, சின்ன ரவி என்ற ரவீந்திரன்,  ‘ சாம்  ‘ஆறுமுகசாமி, சிவகுமாரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

அப்போது, பூபதி  இலங்கையிலிருந்து பெற்றிருந்த போரில் பாதிக்கப்பட்ட சில ஏழைத்தமிழ் மாணவர்களின் விபரங்கள் அடங்கிய கோவைகளை சரஸ்வதி படத்திற்கு முன்னால் வைத்து,  அவர்களுக்கு உதவி செய்ய  எண்ணியிருப்பதாகவும் குத்துவிளக்கை  ஏற்றுமாறும்  என்னை அழைத்தார்.

அவ்வாறு தொடங்கப்பட்டதுதான்  இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு.

அதன் முதல் ஆண்டு காலப்பகுதியில் பூபதி என்னையே அந்த நிதியத்திற்கு தலைவராக்கிவிட்டு,  சில நண்பர்களையும் அதில் இணைத்துக்கொண்டார்.  அந்த அமைப்பு தோன்றியவேளையிலும் அவருக்கு அவுஸ்திரேலியாவில் வதிவிட உரிமை கிடைக்கவில்லை. அவரது விண்ணப்பம் பரிசீலனையில் தாமதமானது.  அதற்கு அவர் போர் உக்கிரமாக நடந்த பிரதேசத்திலிருந்து வராதமையும் ஒரு காரணமாக விளங்கியது.

சிலவேளை தான் திருப்பியனுப்பப்பட்டால், தொடங்கப்பட்ட தன்னார்வத் தொண்டு அமைப்பான கல்வி நிதியத்திற்கு பாதிப்பு வந்துவிடலாம் எனத்தயங்கிய பூபதி, அந்த  அமைப்பிற்குரிய அமைப்பு விதிகளை தயாரித்து தரும் பொறுப்பினையும் என்னிடம் விட்டார்.

அதனையடுத்து,  அமைப்பு விதிமுறைகள் ( Constitution ) எழுதப்பட்டு விக்ரோரியா மாநிலத்தில் Consumer affairs இல் பதிவுசெய்யப்பட்டது.

பூபதி, 1989 ஆம் ஆண்டு மெல்பனில் தனது புதிய கதைத்தொகுதி சமாந்தரங்கள் நூலுக்கு வெளியீட்டுவிழா நடத்தி, இங்குள்ள தமிழ்ச்சங்கம்,  தமிழ்ச்சங்க சம்மேளனம், மற்றும் இந்து சங்கம் முதலானவற்றின் தலைவர்களையும் அழைத்து பேசவைத்தார். அந்த நிகழ்ச்சியில் நானும் பேசினேன். அக்காலப்பகுதியில் வடக்கில் காணாமலாக்கப்பட்ட தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் ஸ்தாபகரும் எனது அருமை நண்பருமான  சட்டத்தரணி கே. கந்தசாமியின் உருவப்படமும் திறந்துவைக்கப்பட்டது.

பூபதி தனது நூல் விற்பனையில் கிடைத்த பணம் யாவற்றையும் கல்வி நிதியத்திற்கே வழங்கி, மேலும் உதவும் அன்பர்களை அந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டினார்.

பின்னர் சிட்னியில் வதியும் எனது நண்பர்,  கணக்காளர் துரைசிங்கம் அவர்களையும் பூபதிக்கு அறிமுகப்படுத்தினேன். அவரது தொடர்புகளினால், பூபதி அங்கிருந்தும் பல உதவும் அன்பர்களை திரட்டினார்.

சிட்னியில்  தனது பேரனார்  அடங்காத்தமிழர் சுந்தரலிங்கம் அவர்களின் பெயரில் லிங்காலயா  நாட்டியப்பள்ளி நடத்திவந்த நடன நர்த்தகி ஆனந்தவல்லி சச்சிதானந்தன், தனது மாணவர்களின் மூலம் சகுந்தலம் நாட்டிய நாடகத்தை அரங்கேற்றி அதன் மூலம் பெற்ற நிதியுதவியையும் கல்வி நிதியத்திற்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கும் பூபதியுடன்  நானும் எனது மனைவியும் சென்றிருந்தோம்.  அந்த நிகழ்சியிலும் நான்  உரையாற்றினேன்.

இவ்வாறு நல்லெண்ணம் படைத்தவர்களின் ஆதரவுடனும் கருணை உள்ளம் கொண்ட அன்பர்களின் ஒத்துழைப்புடனும் சிறிது சிறிதாக வளர்ந்த இலங்கை மாணவர் கல்வி நிதியம் தற்போது பெருவிருட்சமாக நிழல் பரப்பி இலங்கையில் எமது மாணவர்களுக்கு முடிந்தவரையில் உதவி வருகிறது.

இந்த தன்னார்வத்தொண்டு அமைப்பினை ஒரு தனிமனிதனாக நின்று அதனை தளரவிடாமல் விருட்சமாக்கியதை அன்று  பூபதிக்காக நடத்தப்பட்ட நம்மவர் பேசுகிறார் நிகழ்ச்சியில் பேசிய நிதியத்தின் முன்னாள் தலைவரும் சமகாலத்தில் துணை நிதிச்செயலாளராகவிருப்பவருமான திரு. விமல். அரவிந்தன் உணர்வுபூர்வமாக சொல்லியிருந்தார்.

விமல் . அரவிந்தனும் பூபதியுடன், இந்த நிதியம் தொடங்கப்பட்ட காலம் முதல் இணைந்து பயணிப்பவர்.

உலகில் எத்தனையோ பெரும் விருட்சங்கள் காடுகளில் வீடுகளில் அலையும் அணில்கள், முயல்கள் தேடிப்பொறுக்கி பிறவேளை உணவுக்காக புதைத்து வைத்து மறந்துவிட்ட  விதைகளிலிருந்துதான் முளைத்திருக்கின்றன. பூபதியும் அவ்வாறு  முயல் , அணில்  போன்று தேடித் தேடி புதைத்த விதைகள்தான் இன்று எத்தனையோ விருட்சங்களை அந்தப்பிள்ளைகளில்  உருவாக்கியிருக்கிறது.

என்னையும் பூபதியையும் பிணைத்தது எவை என்று பல நேரங்களில் நான் அசைபோடுவது உண்டு. அவர் பழகுவதற்கு இனியவர். மென்மையான சுபாவமுள்ளவர். கபடம், சூது அறியாதவர். எதிர்பார்ப்புகளுடன் அவர் எவருடனும்  உறவாடுவதில்லை.  

குசேலர் போன்று அன்பு என்னும் அவலை பொட்டலமாக கொண்டுவருவார். இதனால் பலருடனும் இணங்கி நடந்தார். ஆயினும் இலட்சியத்தில் மாறாத பிணைப்புக்கொண்டு அதன்வழியில் பிசகாது நடப்பவர்.

இலங்கை அரசியலில் ,  நான் ஈழத்து நிலையில் தமிழர்களின் அபிலாசைகளிலிருந்து இலங்கையை பார்த்தவன். ஆனால், பூபதி இலங்கை என்ற தீவு, நாடு என்ற நிலையில் நின்று தமிழரும் எல்லா இனத்தவரும் சமமாக நடத்தப்படவேண்டும் என்ற சிரத்தை கொண்டவர்.

அவரை காந்தீய தத்துவங்கள் கவர்ந்ததில்லை. அதேசமயம் ஜே. வி. பி. என்ற மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளராக இருந்தாலும்,  அதன் தொடக்க கால ஆயுதக்கிளர்ச்சியில் நம்பிக்கை வைக்கவில்லை. 

எங்களது பார்வைகள் வெவ்வேறு கோணங்களிலிருந்தாலும் அவை, எங்கள் உறவுகளை பிரித்ததில்லை.

பூபதி, மனிதாபிமானத்திலும் தனது பேனாவின் வலிமையிலும் நம்பிக்கை வைத்தவர். அதனால் மாற்றங்கள் வரும் என்று நம்பியவர்.  நாம் செய்வதை மனிதாபிமானத்துடன் செய்துவிடுவோம். மற்றவை தாங்களாகவே நடக்கும் என்ற அறத்தை வலியுறுத்தியவர்.

அவரது நம்பிக்கை உண்மையோ, சாகாவரம் பெற்றதோ நான் அறியேன். ஆனால், சில சம்பவங்கள் அந்த தர்மங்களுக்கு நம்பிக்கையூட்டுவனவாக நடக்கின்றன.

நானும் பூபதியும் பல விடயங்களில் ஒத்த பார்வைகளில் இல்லாதிருந்தாலும்,  எங்கள் இணக்கத்தால் தங்களது கோஷங்களுக்கு இணங்காதவர்கள் என கண்டனத்திற்கும்   பாதிப்புக்கும் உள்ளாகியிருக்கின்றோம். அவற்றில் கிடைத்த அனுபவங்கள் பல்வகை.

எனது பார்வை தமிழ்த்தேசியத்துக்கானாலும், ஏனோ இங்கு விடுதலைப்புலிகளுக்காக கொடி பிடித்தவர்களால் நான் அவர்களுக்கு எதிரானவர் என்ற  அதே பூச்சு , பூபதிக்கும் பூசப்பட்டது.

பூபதிக்கு இருந்தது இலக்கியவாதி என்ற முகவரியும் அடையாளமும்தான். எனினும் அவருக்கு அந்த மேடைகளில் இடம் இருந்ததில்லை. அந்த வட்டத்திலிருந்தவர்கள், பூபதி அழைக்கும் இலக்கிய விழாக்களில் பங்குபற்றியதுமில்லை. ஏதோ ஓரிருவர் தங்களது ஆளுமைகளால், தனிப்பட்ட நட்புறவினால் அத்தகைய இலக்கிய விழாக்களில் பங்குபற்றினார்கள்.

2009 இல் யுத்தம் முடிந்து புலிகள் அழிக்கப்பட்டதின் பின்னர் நான் ஒரு பிரார்த்தனை கூட்டத்திற்குப்போயிருந்தேன். அதில் நல்லிணக்கங்கள் பற்றியும்  பேசுவதற்கு பேச்சாளர்கள் இருந்ததால்  பங்குபற்றினேன். 

அங்கே  ஒரு பேச்சாளர் ,  நல்லிணக்கத்திற்கு நல்ல உறவுகளும் வேண்டும் . ஆகவே ஒருவருக்கொருவர் முதலில் கைகொடுத்து நல்லுறவை முதலில் ஏற்படுத்துவோம் என்று சொன்னார். அப்போது அங்கிருந்த  மற்றும் ஒருவர் -  நான் நன்கறிந்தவர். எனக்கு கைதரமுடியாதென மறுத்தார்.  பேச்சாளர் ஏன்..? என்று கேட்க, அவர்,  “ போரில் தனது சகோதரியும் உறவினர்களும் கொல்லப்படுவதற்கு இவரும் காரணம் .  இவர்கள் துரோகிகள் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு துணைபோனவர்கள் என்று சொன்னதுடன், அதற்கு மேலும் சென்று,  “ இவர், நடேசன், பூபதி போன்றோரெல்லாம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக எழுதியவர்கள் . இவர்கள் எல்லோரும் அகால மரணங்களால் இறந்துபோகவேண்டும் என்று கரம்டவுண்ஸ் சிவா – விஷ்ணு ஆலயத்தில் தெய்வங்களுக்கு பூசை கட்டியிருக்கிறேன்  “ என்றார்.

அந்த அன்பர் அப்போது அவ்வாறு சொன்னபோது, எனக்கு வந்த மனவேதனையிலும் பார்க்க, மனிதர்கள்  ஏன் இப்படி இருக்கிறார்கள்? என்ற ஆதங்கமே மேலோங்கியது.

சுமார் ஒருவருடம் ஓடியிருக்கும். அதே ஆலய திருமண மண்டபத்தில் நடந்த திருமண வைபவமொன்றிற்கு  அழைப்பில் சென்றிருந்தேன். அப்போது,  மணமகளின் கூறைச் சேலை , தாலிக்கொடி  சகிதம் ஆசீர்வாதம் பெறும் தட்டத்தை ஏந்திக்கொண்டு, அந்த அன்பர் நான் இருந்த மேசையருகிலும் வந்து தட்டத்தை நீட்டி ஆசிர்வதிக்கும்படி வேண்டினார்.

ஒருகணம் நிலைகுலைந்து செய்வதறியாது அவரது கண்களை கூர்ந்து பார்த்தேன். இருவரதும்  பார்வைகளில் இருந்த மௌனத்தில் கேள்வியும் பதிலும் பரிமாறப்பட்டன. மனப்பூர்வமாக ஆசிர்வாதம் செய்தேன்.

அந்த அன்பர்  நன்றியும் நிம்மதியும் கலந்த பார்வை ஒன்றைத் தந்துவிட்டுப்போனார். நான் ஆண்டவனை நினைத்துக்கொண்டேன்.

பூபதி, தனது எழுத்தாற்றலை  மெல்பனில் மேலும் தடம்பதித்த காலம், விடுதலைப்புலிகள் அரசியல் ரீதியாக புலம்பெயர் நாடுகளில் மெல்பன் உட்பட கோலோச்சிக்கொண்டிருந்த நாட்கள். அவர்களோடு பின்னர் அவர்களின் அமைப்பாளராக, பேச்சாளராக உயர்ந்த சண்முகம் சபேசனும் பொதுவெளியில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

அவரும் எழுத்தாளர். அரசியல் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். அத்துடன் இலக்கிய ஆர்வம் மிக்கவர். அத்துடன் எனது மனைவி வழியில் இரத்த உறவினர்.     ( ஆனாலும் அரசியலால் தூரங்கள் நீண்டிருந்தன. )  அவர்களின் சங்கங்களில் சங்கநாதங்கள் முழங்கினாலும் அங்கே எனக்கும் பூபதிக்கும் இலக்கிய வழியில்தன்னும் இடம்கிடைப்பதில்லை.  ஏதும் நடந்தாலும் நட்பு ரீதியில் திரை மறைவுகளில்தான் நடந்தன.

ஆனால், சபேசன் கடந்த 2020 ஆம் ஆண்டு நோயுற்று இறந்தபோது, அன்னாரின் இறுதி நிகழ்ச்சிகளிலும் நானும் எனது மனைவி மற்றும் மகன் சகிதம் கலந்துகொண்டேன். பின்னர் அவருக்காக பூபதியும் அவரது நண்பர்களும் இணைந்து நடத்திய இணையவழி மெய்நிகர் அரங்கில் ,  யாருக்காக சபேசன் ஓடி ஓடி ஓடாய் உழைத்தாரோ அதற்காகவே தனது தனிப்பட்ட வாழ்வையும் தொலைத்தாரோ அந்த அமைப்புகளைச்சேர்ந்தவர்கள் அவருக்கான அந்த நினைவேந்தல் அரங்கினையும் கண்டுகொள்ளவில்லை.

சபேசனின் பூதவுடலுக்கு புலிக்கொடி போர்த்தியதுடன் விட்டுவிட்டார்கள்.

அந்தச்சலனங்கள் ஓய்ந்த காலத்தில்  பூபதி , சபேசனின் அரசியல், இலக்கிய கட்டுரைகளை சேகரித்து தொகுத்து ஒப்புநோக்கி நண்பர்களின் உதவியோடு பதிப்பித்து வெளியிடுவதற்கு அச்சாணியாக விளங்குகிறார்.

சபேசன் வாழ்ந்த காலங்களிலே  இந்த பரந்தநோக்கு அமைந்திருந்தால், எங்கள் இனத்திடையே எப்படியான செறிவுகள் இருந்திருக்கும் என எண்ணுகிறன்.

பூபதி, தாகத்துக்கு நீர் அருந்த முடியாத உப்பு நிறைந்த கடல் அல்ல. குளம், குட்டை அல்ல .  மழைபொழிந்தால் நீர் நிறைந்து கோடை வந்தால் காய்ந்து வற்றிவிடுவதற்கு.

நீர் அருந்தவல்ல சிற்றாறு என அவரைப்பற்றிச்சொன்னாலும், அவர் ஒரு நதி.  கங்கைகள், நைல் நதிபோன்று சலனமில்லாது ஓடும் ஒரு நதி.

 வற்றாத  நதி ஓரிடத்தில் தங்காது. ஓடிக்கொண்டிருக்கும்.  அந்த நதி அதன் கரைகளை நனைத்து ஈரலிப்பாக்கும்.  அருகேயிருக்கும்  பயிர்களையெல்லாம் பசுமைப்படுத்திக்கொண்டு சலனமில்லாமல் நகர்ந்துகொண்டிருக்கும்.

  அகவை நூற்றாண்டுகள் கடந்தும் இந்த நதி செழுமை தரவேண்டும் என்பது எனது ஆசை.

---0----

raveendran50@yahoo.com.au

 

 

 

No comments: