பெகாசஸ் பிசாசின் வருகையால் ஒரு விவாதம்- மனிதர்களுக்கும் கணினிகளுக்கும் போர் மூளுமா? அ. குமரேசன்

.



 காலங்காலமாக மனிதர்களைக் கவர்ந்து வந்திருப்பது - இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி நம்மை இயக்குகிறது என்ற கருத்து. அதற்குக் கடவுளென்று பெயர் சூட்டி நம்பிக்கையோடு வழிபடுகிறவர்களும் இருக்கிறார்கள், அதுவோர் ஊகம்தான் என்ற முடிவோடு கடவுள் கதைகளின் கற்பனை வளத்தை ரசிக்கிறவர்களும் இருக்கிறார்கள். இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றல் பற்றிய மற்றொரு கருத்து ஆவி, பேய், தீயசக்தி, சைத்தான் வகையறாக்கள் பற்றியதாகும். அது நேரடியாகவும் தாக்கும் அல்லது தொழில், படிப்பு, குடும்பம், உடல்நலம் என மறைமுகமாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நம்புகிறவர்கள் அச்சப்படுகிறார்கள், அதுவும் ஓர் அனுமானம்தான் என்ற முடிவுக்கு வந்தவர்கள் அந்தக் கற்பனைக் கதைகளையும் ரசிக்கிறார்கள். இதயத்தை உறையச் செய்யும் ஆவிக் கதைகளை எழுதுகிற பலருக்கு, ஏன் ஆவி விரட்டுப் பூசை செய்கிறவர்களுக்குக் கூட, இட்லிச் சட்டியிலிருந்து கிளம்புவதைத் தவிர வேறெந்த ஆவியும் கிடையாது என்று தெரியும்!

இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி இருக்கிறதா இல்லையா என்கிற விவாதம் இப்போதைக்கு முடியப் போவதில்லை. ஆனால், உண்மையாகவே ஒரு சக்தி இன்று உருவாகியிருக்கிறது, அது நாளை மனித வல்லமைக்கு அப்பாற்பட்டதாகி, இயற்கையையே ஆளக்கூடிய நிலைக்கு வந்து விடுமோ என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால், மனிதர்களைப் படைத்ததே வேறொரு சக்திதான் என்று நம்பப்படுகிற உலகில், மேற்படி புதிய சக்தியைப் படைத்தது மனிதர்கள்தான்! அதன் பெயர் செயற்கை


"ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ்" (ஏஐ) என்ற ஆங்கிலப் பதத்திற்கு "செயற்கை நுண்ணறிவு" என்ற மொழிபெயர்ப்பு முழுமையான பொருள் தருவதாகக் கூறிவிட முடியாதுதான். இன்டெலிஜென்ஸ் என்பது பல்வேறு திறன்களை உள்ளடக்கியது. மாதிரிகளை வகைப்படுத்துதல், சிக்கல் தீர்த்தல், தகவல் தேடல், செயலுக்குத் திட்டமிடல், விளையாடிப் பார்ப்பது போல சோதித்தல், தருக்கவியலோடு பகுத்து அறிதல், இதிலிருந்தெல்லாம் கற்றுக்கொள்ளுதல்... இவையெல்லாம் இணைந்த அறிவுச் செயல்பாடுதான் இன்டெலிஜென்ஸ். தகவலறிவாகிய நாலெட்ஜ், பகுத்தறிந்து கற்றலாகிய இன்டெலிஜென்ஸ் இரண்டிற்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது,

இன்டெலிஜென்ஸ் என்றால் நுண்மதி, கூர்மதி, நுண்ணறிவு என்ற தமிழ்ச்சொற்களும் அகராதியில் தரப்பட்டுள்ளன. கச்சிதமாகப் பொருந்துகிற தமிழ்ச்சொல் ஏற்கெனவே இருக்குமானால் அதைக் கண்டுபிடிக்கிற வரையில், அல்லது புதிய சொல்லை உருவாக்குகிற வரையில் இப்போதைக்கு, அறிவியல் சிந்தனையாளர்கள் பயன்படுத்துகிற நுண்ணறிவு என்ற சொல்லையே நாமும் எடுத்துக்கொள்ளலாம். உளவு அல்லது வேவு பார்த்தல் என்பதற்கும் அதே இன்டெலிஜென்ஸ் என்ற சொல்தான் ஆங்கிலத்தில் கையாளப்படுகிறது -உளவு வேலைக்கு நுண்ணறிவு தேவையென்பதாலோ!

இங்கே நாம் விவாதிக்கப்போவது முதலில் பார்த்த 6 வகைத் தன்மைகள் கொண்ட நுண்ணறிவு பற்றித்தான். நமது கைப்பேசியில் தகவலனுப்புவது முதல், விண்வெளியில் செயற்கைக்கோள் நிறுவுவதற்கான உந்துவாகனத்தை அனுப்புவது வரையில் இந்த ஏஐ வினைபுரிகிறது. உட்கார்ந்த இடத்திலிருந்தே தொலைக்காட்சி அலைவரிசைகளைத் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவியால் மாற்றுவது, இப்போது சும்மா வாய்ச்சொல்லாக உச்சரித்தே அதை மாற்ற முடிவது, துல்லியமாக இதயத்தை முப்பரிமாணத்தில் கண்டு சிகிச்சையளிப்பது... எதிலே இல்லை இந்த ஏஐ?

கதைகளும் எச்சரிக்கைகளும்

இயற்கையான தேடல்களால் வளர்த்துக்கொள்ளும் நுண்ணறிவுக்கு எதிரானதாக, செயற்கையாக வடிவமைக்கப்படும் நுண்ணறிவு உலகத்தையே கட்டியாளப்போகிறது என்று பேசப்படுவது பற்றியே பேசப்போகிறோம். ரோபோ போன்ற நுண்ணறிவு எந்திரங்கள், மனிதர்களோடு மோதுகிற கற்பனைகளை மையமாகக்கொண்டு கதைகளும் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் கிட்டத்தட்ட கால்நூற்றாண்டுக்கு முன் வரத்தொடங்கிவிட்டன. தமிழில் வந்த 'எந்திரன்' அந்த வகைக் கற்பனைதான். சூப்பர் ஸ்டாரை மீறி செயற்கை நுண்ணறிவு பற்றிப் பேச வைத்த படம் அது. ஒரு நாட்டில் தயாரிக்கப்பட்டு, அனைத்து மொழிகளிலும் கொண்டுவரப்படுகிற எந்திர மனித சாகசப் படங்கள் குழந்தைகளை வெகுவாகக் கவர்கின்றன.

இத்தகைய கதையாக்கங்களில் உலகத்தை அடிமைப்படுத்தத் துடிக்கும் எந்திரங்கள் என்னதான் சூழ்ச்சிகள் செய்தாலும், எவ்வளவு வலிமையோடு இருந்தாலும் இறுதி வெற்றி மனிதர்களுக்கே என்றுதான் முடிவுகள் இருக்கும். ஆனால், நடைமுறையில் அவை மனிதர்களை அடிமைப்படுத்தக்கூடும் என்ற ஐயம் பரவலாகவும் வலுவாகவும் முன்வைக்கப்படுகிறது. ஏஐ எந்திரங்களால் முதலில் பல்வேறு துறைகளில் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. வணிக வளாகங்களில் ஏற்கெனவே கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்ட இடங்களில் இருந்தபடி நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. இனி, ஏஐ மூளை பொருத்தப்பட்ட எந்திர ஊழியர்கள் சுற்றி வருவார்கள். வாடிக்கையாளர் எடுக்கும் பொருள்களுக்கு பில் போடுகிற, பணத்தை வாங்கிப் பெட்டியில் போடுகிற வேலைகள் ஊதியம் கேட்காத ஏஐ தொழிலாளர்களிடம் போய்விடும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, கைப்பேசி வழி க்யூஆர் குறியீடு போன்றவை ஏற்கெனவே காசாளரிடம் பணத்தாள்களாகக் கொடுத்து மீதிச் சில்லறைக்காக நிற்க வேண்டியதில்லை என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றன.

நடைமேடையில் இளநீர் விற்பவர், தெருவோரம் இட்லிக்கடை போட்டிருப்பவர் தங்கள் தள்ளுவண்டிகளில் க்யூஆர் கோட் அட்டையை வைத்திருக்கிறார்கள். "அடடா, வீட்டிலிருந்து பர்ஸ் எடுத்துவர மறந்துவிட்டேனே" என்று சலித்துக்கொள்ளாமல், கைப்பேசியால் அந்த க்யூஆர் கோட் மூலம் பணம் செலுத்துகிறவர்கள் "இன்டெலிஜென்ட்" ஆகிறார்கள் இல்லையா! அடுத்த ஐம்பது ஆண்டுகளில் நாம் மற்றவர்களோடு வாய்ச்சொற்களால் அல்லாமல், எண்ணங்களாலேயே பேசிக்கொள்கிற வளர்ச்சி ஏற்பட்டுவிடும் என்று ஒரு கட்டுரை சொல்கிறது. "கண்ணோடு கண் இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல" என்ற காதல் மொழி பற்றிய வள்ளுவக் குறள் இப்படியாகவும் அனுபவமாகப் போகிறது!

பிசாசு என்பது போல ஒலிக்கிற பெகாசஸ் மென்பொருள் கிருமி அனுமதியின்றிக் கைப்பேசிக்குள் புகுந்து நம் தொடர்புகளை வேவு பார்க்கிற காலக்கட்டத்தில், ஏஐ பற்றிய அறிவும் தெளிவும் அனைவருக்கும் இன்று தேவைப்படுகின்றன. அதற்கான உரையரங்கம் ஒன்று ஜூலை 31 அன்று, ஒரு வகை ஏஐ தொழில்நுட்பமாகிய இணையவழிக் காணொளித் தளத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தி வருகிற 'வெகுமக்கள் அறிவியல் சொற்பொழிவு' தொடரின் 37வது நிகழ்வில், சென்னை கணித அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் முனைவர் ஆர். ராமானுஜம் வழங்கிய உரையும், பங்கேற்பாளர்களின் வினாக்களுக்குக் கூறிய விடைகளும் ஒரு நுட்பமான பொருள் குறித்து எப்படி எளிமையாகவும் சுவையாகவும் விளக்கமளிக்க முடியும் என்பதற்குச் சான்றாக அமைந்தன. இயற்பியல் பேராசிரியர் டி.ஆர். கோவிந்தராஜன் தலைமையில், தொடரின் பொறுப்பாளர் விஜயன் ஒருங்கிணைத்தார்.

தேடலின் வரலாற்றிலிருந்து

இங்கிலாந்தின் கணினி அறிவியலாளரும், இரண்டாம் உலகப்போரின்போது நுட்பக் குறீயிடுகளை உடைத்து ரகசியங்களைக் கண்டுபிடிக்க உதவியவருமான ஆலன் டூரிங் 1947ம் ஆண்டிலேயே இது பற்றிய உரையாடல்களுக்கு முன்னுரை எழுதினார். "அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்கிற ஒரு எந்திரத்தை நாம் எதிர்பார்க்கிறோம். அந்த எந்திரம் தனது ஆணைகளைத் தானே மாற்றிக்கொள்ளச் செய்வதற்கான சாத்தியங்கள் இதற்கான எந்திரவியலை வழங்குகின்றன," என்று கூறினார் டூரிங். "போலச் செய்தல் என்கிற ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்படக்கூடிய, தானே கற்பனை செய்கிற எண்மவியல் கணினிகள் உள்ளனவா," என்ற வினாவையும் அவர் 1950ல் முன்வைத்தார்.

அவரைத் தொடர்ந்து இத்துறையில் முக்கியமான வெற்றிகளோடும், மோசமான தோல்விகளோடும் இடையறாத ஆராய்ச்சிகளும் சோதனைகளும் நடந்துகொண்டே இருக்கின்றன - இன்று வரையில். பல முக்கியமான வெற்றிகள் கிடைத்துள்ளன என்றபோதிலும் டூரிங்கின் வினாவும் தொடர்கிறது - இன்று வரையில்.

1950களில் கணினிகளுக்கு என்ன செய்வது என்று கற்பிக்க முடிந்தது, 1956ல் நடைபெற்ற இதற்கான உரையாடல் கூட்டத்தில் இந்த செயற்கை நுண்ணறிவு என்ற பெயர் புழக்கத்திற்கு வருகிறது. ஆலன் நியுவெல், ஹெர்பர்ட் சைமன், கிளிஃப் ஷா ஆகியோர் "லாஜிக் தியரிஸ்ட்" என்ற கணினிச் செயல்பாட்டை உருவாக்குகிறார்கள். உலகின் முதல் செயற்கை நுண்ணறிவுத் திட்டம் என்று அது அடையாளம் பெறுகிறது. 1964ல் வடிவயியல் தொடர்பாக தர்க்கம் நிகழ்த்துகிற மென்பொருள் தயாராகிறது. எலிஸா என்ற மென்பொருள் உளவியல் வல்லுநர்களுக்கு உதவுவதாக வருகிறது. இத்தகைய வளர்ச்சிப் போக்கில், இயக்குகிறவர் அல்லது தகவல்களை உட்செலுத்துகிறவர் இல்லாமல் கணினி தானாகவே ஒன்றைத் தெரிந்துகொண்டு நினைவில் கொள்ளுமா என்பதும், தான், தனது என்ற தன்னுணர்வு கணினிக்கு சாத்தியமா என்பதும் சவால்களாகத் தொடர்கின்றன.

1970களில் விரிவான அளவுக்கு இத்தகைய எந்திரங்களுக்கான தேவை முன்னுக்கு வருகிறது. அத்துடன், மனிதர்களின் இயற்கை நுண்ணறிவுக்கு அடிப்படையான பார்வை, கேட்டல், பேச்சு, மோப்பம், தொடுவுணர்வு ஆகிய திறன்கள் எந்திரத்திற்கு புலணுணர்வுச் சவால்களை விடுக்கின்றன. குறிப்பாக, வாசனைகளைப் பிரித்துணர்கிற முகர்வுத்திறனை எந்திரத்திற்கு ஏற்படுத்துகிற முயற்சிகள் படுதோல்வியடைகின்றன. அந்தத் தோல்விச் சோகத்தை ஆற்றுவது போல், பேச்சை எழுத்தாக மாற்றிப் பதிவு செய்கிற தொழில்நுட்பம் ஒரு முக்கிய வளர்ச்சியாக அமைகிறது.

சாம்பியனை வென்ற கணினி

1980களில் தனித்தனித் துறைகள் சார்ந்த "எக்ஸ்பெர்ட் சிஸ்டம்ஸ்" எனப்படும் வல்லுநத்துவ அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அந்தந்தத் துறை சார்ந்த அறிவைத் தகவலாக்குவது தொடங்குகிறது. மற்றவற்றில் தகவல் தேடல் முயற்சிகள் தொடர்கின்றன. "லேர்னிங் மெஷின்ஸ்" எனப்படும் கற்றல் திறன்கொண்ட எந்திரங்கள் பிறக்கின்றன. உடன்பிறப்பாக, "செர்ச் மெஷின்ஸ்" எனப்படும் தேடல் எந்திரங்கள் இணைகின்றன. 1997ல், வெல்லற்கரியவராக வலம் வந்த உலக சதுரங்கச் சாம்பியன் கேரி காஸ்பரோவ், ஒரு கணினியால் தோற்கடிக்கப்படுகிறார். முன்னணி கணினித் தொழில்நுட்பக் குழுமமான ஐபீஎம் நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உருவாக்கிய கணினி அது. அதே காலக்கட்டத்தில், புற்றுநோயாளி ஒருவருக்குத் தானியங்கி மூலம் மருந்து செலுத்தப்பட்டு வந்ததில் சிக்கல் ஏற்படுகிறது.

இத்தகைய வெற்றிகளும் தோல்விகளும் புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கிக் திருப்புகின்றன. எந்திரத்தைக் கற்றுக்கொள்ள வைப்பதில் பெரிய வெற்றிகள் சாதிக்கப்படுகின்றன. ஆனால் டூரிங் எழுப்பிய வினாவுக்கு விடை கிடைத்துவிடவில்லை. ஆயினும், எந்திரத்தின் கற்றல் நுட்பத்தில் அதிவேக முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன. எதுவொன்றுமே தொடர்ந்து வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைய வேண்டுமானால், அதற்கான தகவல் அறிவு தடையின்றிக் கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இன்றைய சமூக ஊடகங்கள் அப்படிப்பட்ட தகவல்களைக் கொடுக்கின்றன எனத் தெரிவிக்கிறார் ராமானுஜம். "சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க நாமாகவே தகவல்களைத் தந்துகொண்டிருக்கிறோம்," என்கிறார் அவர்.

அதைத்தான் பார்க்கிறோமே! குழந்தைகள் கைப்பேசித் திரைகளில் காண்கிற கதைப்படங்கள், காதலர்கள் பரிமாறிக்கொள்கிற முத்தக் குறிப்புகள், தொழில்-வணிகக் களத்தினரின் போட்டிக் குறியீடுகள், அரசியல் தலைவர்களின் வழிகாட்டல் அல்லது சூழ்ச்சி ஆணைகள், சமூகச் செயல்பாட்டாளர்கள் சேகரிக்கிற மனித உரிமை மீறல் தகவல்கள், மக்களுக்குத் தெரிவிப்பதற்காக ஊடகவியலாளர்கள் விசாரிக்கிற விவகாரங்கள், கலை-இலக்கியப் படைப்பாளிகள் தலைமுறைகளுக்காகப் பதிவு செய்கிற வரலாற்றுப் புனைவுகள்... இவையும் விடுபட்டுப்போன மற்றவையுமாக அத்தனையும் தகவல்களாகப் போய் சேர்ந்துகொண்டே இருக்கின்றன.

ஒரு மனிதர் எவ்வளவு திறமையாக, எவ்வளவு விசுவாசமாகப் பணியாற்றினாலும், அவரது செயல்திறன் பற்றிய மதிப்பீட்டு அளவு சில புள்ளிகள் குறைவாக இருப்பதாகக் கூறி வெளியேற்றப்படலாம். நியாயம் கேட்கிறவர்களிடம், "இதை நான் சொல்லவில்லை, கம்ப்யூட்டர் சொல்கிறது," என்று ஒரு நிறுவன முதலாளியோ, அரசாங்க அதிகாரியோ கணினியின் மீது பழிபோடலாம். இது வெறும் கற்பனையல்ல என்பதற்கு சாட்சியமாக, அமெரிக்காவில் பல ஆசிரியர்கள் இவ்வாறு வெளியேற்றப்பட்ட செய்திகள் வந்திருக்கின்றன. இன்று ஒட்டுமொத்த உலக இயக்கமும் சந்தை நோக்கியே திருப்பப்பட்டிருக்கிறது. இந்தச் சமூக அமைப்பைப் பிரதிபலிப்பதாகத்தான் தற்போது இந்த ஏஐ முனைப்புகள் இருக்கின்றன. இந்த ஆதிக்கக் கட்டமைப்பு இன்றைய நிலையில் பணம் படைத்தோருக்குப் பணிவிடை செய்வதாகவும், ஏழைகளுக்கு எதிரானதாகவும் கையாளப்படுகிறது என்ற, சமுதாய அமைப்போடு தொடர்புடைய சிந்தனையைப் பகிர்ந்துகொண்டார் கணித அறிவியலாளர்.

குழந்தைகள் கைப்பேசி விளையாட்டுகளிலும் படக்காட்சிகளிலும் மூழ்கிக்கிடப்பது பற்றிய உரையாடல் ஒன்று நடந்தது. அதில் ஒரு கல்வியாளர், "கைப்பேசிக்கு அடிமையாக இருக்கும் குழந்தைகளை நல்லதொரு மென்பொருளுக்கு மாற்றுவதே ஆராய்ச்சிகளின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று கூறினார். அதை நினைவுகூர்ந்த முனைவர், "ஒரு அடிமைத்தனத்திலிருந்து வேறொரு அடிமைத்தனத்திற்கு மாற்றிவிடக்கூடாது," என்றார்.

போர் மூளுமா?

மனித அறிவுக்கும் செயற்கை அறிவுக்கும் இடையேயான போர் பற்றிய கற்பனைகள் ஈர்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. உண்மையாகவே நுண்ணறிவுக்கும் செயற்கை நுண்ணறிவுக்குமான போர் மூளுமா? அது வேலையிழப்புச் சேதங்களை ஏற்படுத்துமா? இயற்கையான மானுடச் சுதந்திரத்திற்குப் பகையாகும் ஆதிக்கங்களுக்கு எதிரான போராட்டங்களைச் செயற்கை நுண்ணறிவு மழுங்கடிக்குமா, கூர்மைப்படுத்துமா? இக் கேள்விகளுக்குப் பதிலளித்த ராமானுஜம், "கூகுள் போன்றவற்றின் சேவைகளையே சார்ந்திருக்கும் நிலையில் நமது கணினியோ, கைப்பேசியோ காணாமல் போனால் மின்னஞ்சல் தகவல்கள் உள்பட எவ்வளவோ முக்கியமான விஷயங்களை நாம் இழக்க நேரிடும். அதுவொரு போர் போன்றதுதானே? வேலை வாய்ப்புகள் பல பறிபோகலாம், அதேவேளையில் புதியவகை வேலைவாய்ப்புகள் உருவாகவும் வாய்ப்பிருக்கிறது. நினைவாற்றலைப் பொறுத்தவரையில் மனிதரும் கருவியும் இணைந்துதான் இயங்க முடியும். தனித்து இயங்க முடியாது. ஆகவே இயற்கை நுண்ணறிவுக்கும் செயற்கை நுண்ணறிவுக்குமான போர் வராது. தகவல் வலிமை யாருடைய ஆதிக்கத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்து போராட்டமும் அமையும், இரண்டு பக்கமும் கூர்மையான இந்த வாளை உழைப்பாளிகளும் ஆதிக்கத்திற்கு எதிரான சக்திகளும் கையிலெடுப்பதைப் பொறுத்து போராட்டத்தின் திசை தீர்மானிக்கப்படும்," என்றார் ராமானுஜம்.

அப்படியானால், அறிவியல் இயக்கங்களைத் தாண்டி அரசியல், சமூகம், உழைப்பாளர், மனித உரிமை, கலை, இலக்கியம் என சகல களங்களுக்கும் சென்றாக வேண்டியவை இப்படிப்பட்ட உரையரங்குகள்.


நன்றி https://tamil.oneindia.com/

No comments: