பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - புன்னகை - ச. சுந்தரதாஸ் - பகுதி 8

 .

வீட்டுப் பணிப்பெண்களாக பணியமர்த்தப்படும் இளம்பெண்கள் செல்வமும் செல்வாக்கும் படைத்த வீட்டு எஜமானர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது பற்றி அண்மைக் காலமாக செய்திகள் வருகின்றன. இத்தகைய ஒரு சம்பவத்தை கதையின் முக்கிய கருவாக கொண்டு 1971ஆம் ஆண்டு ஒரு படம் வெளிவந்தது படத்தின் பெயர் புன்னகை, படத்தை இயக்கியவர் கே பாலச்சந்தர்.

பாதிக்கப்பட்ட பணிப்பெண் காஞ்சனாவாக நடித்தவர பிரபல நடிகை ஜெயந்தி. சில தினங்களுக்கு முன் பெங்களூரில் தனது 76 ஆவது வயதில் காலமான ஜெயந்தி கே பாலச்சந்தரின் ஆஸ்தான நடிகையாக திகழ்ந்தவர. பாலச்சந்தர் இயக்கிய பாமா விஜயம் , எதிர்நீச்சல், இரு கோடுகள், வெள்ளி விழா , கண்ணா நலமா போன்ற படங்களில் கதாநாயகியாக ஜெயந்தி நடித்திருந்தார். இப்படங்களில் அவர் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. பிற்காலத்தில் திரையுலகில் இருந்து ஒதுங்கி பெக்கட்டி சிவராம் என்ற ஒரு இயக்குனரை மணந்து கொண்டார் ஜெயந்தி. புன்னகை படத்தில் பாலசந்தரும் ஓர் அழுத்தமான இடத்தை அவருக்கு வழங்கியிருந்தார்.


அவரின் குடிகார தந்தையாக வி எஸ் ராகவன் நடித்திருந்தார் . செல்வமும் செல்வாக்கும் உள்ள காமுகன் ஒருவனிடம் பணிப்பெண்ணாக அமர்த்தப்படும் காஞ்சனா அவனால் வல்லுறவிற்கு ஆளாகி ஒரு குழந்தைக்கும் தாயாகிறாள் தற்கொலை செய்ய துணியும் அவளை சத்தியம் என்ற இன்ஜினியர் தடுத்து அடைக்கலம் கொடுக்கிறான். இருவரும் லிவிங் டுகெதர் என்ற முறையில் வாழ்கிறார்கள். ஆனால் ஊரார் அவர்களை பழிக்கிறார்கள். மகாத்மா காந்தியின் உன்னத நெறியான சத்தியத்தை தன் இலட்சியமாக கொண்ட சத்தியன் பல இன்னல்களை சந்தித்த போதும் இலட்சியத்தில் மாறாமல் இருக்கிறான்.

இப்படி அமைக்கப்பட்ட புன்னகை படத்தின் கதையை நாராயணன் கன்யால் எழுதியிருந்தார். அதற்கு திரைக்கதை வசனத்தை எழுதி இயக்கினார் பாலசந்தர். சாத்தியனாக ஜெமினி கணேசன் நடித்தார். இவர்களுடன் முத்துராமன் நாகேஷ் சகுந்தலா எஸ்பி சஹஸ்ரநாமம் ஆகியோரும் நடித்தனர். அழுத்தமான இப்படத்தின் கதைக்கு பாலச்சந்தரின் வசனங்கள் சிறப்பு சேர்த்தன. கண்ணதாசனின் ஆணையிட்டேன் நெருங்காதே அன்நை இனம் பொறுக்காதே ,என்ற பாடல் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டது. எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்த போதும் பாடல்கள் பெரிதும் பிரபலமடையவில்லை. பிரபல நடிகர்கள் நடித்திருந்த போதும் பாலச்சந்தருக்கு தான் இயக்கிய படங்களுள் தனக்கு பிடித்த படம் என்ற போதும் புன்னகை வெற்றிபெறவில்லை. ஆனால் சில ஆண்டுகள் கழித்து ரஜினி நடிப்பில் இதே சாயலில் வெளிவந்த புவனா ஒரு கேள்விக்குறி படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.




No comments: