எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 53 உயிர் காத்த உத்தமர்கள் இருவர் ! “ இலக்கியத்தோடு நின்றுகொள் “ எனச்சொன்ன ஒருவர் ! ! முருகபூபதி


வீரகேசரி வாரவெளியீட்டிலும் மித்திரன் வாரமலரிலும் எனது ஆக்கங்களை தொடர்ந்து படித்துக்கொண்டிருந்த ஆசிரியர் ஸி. மாணிக்கவாசகர் ஒரு நாள்  பம்பலப்பிட்டியில்  நடந்த எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கூட்டத்தில் எனக்கு புத்திமதிகள் சொன்னார். 

1983 கலவர காலத்தின் பின்னர் அப்போதுதான் 1984 ஆம் ஆண்டு,    மீண்டும்  நாம் கொழும்பில் சந்திக்கின்றோம். 

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீரா உட்பட பலர் தலைமறைவாகியிருந்தனர்.    அன்றைய அதிபர் ஜே. ஆர். ஜெயவர்தனா   அந்தக்கலவரத்திற்கான  பழியை எமது இயக்கத்தின் மீது சுமத்திவிட்டு உலகத்தின் கண்களை மூடுவதற்கு முயற்சித்தார்.

அவரது நண்பரான கொல்வின் ஆர். டீ. சில்வாவின் சமசமாஜக்கட்சி, மற்றும் பீட்டர் கெனமனின் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியனவற்றின்


மீதான தடை படிப்படியாக நீக்கப்பட்டது.  எனினும் மக்கள் விடுதலை முன்னணி மீதான தடை நீடித்தது.

எமது இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் லயனல் போப்பகே கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருந்தார். 

விஜேவீராவின் மனைவியின் அண்ணன் தோழர் எச். என். பெர்ணான்டோ தலைவராக இருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பணிகளில் என்னை  இழுத்துவிட்டவர்தான் இந்தப்பதிவின் தொடக்கத்தில் நான் குறிப்பிடும் ஸி. மாணிக்கவாசகர்.  அவர் கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

அதன் அதிபர் மகேசன், துணை அதிபர்  எஸ். பி. நடராஜா, பிற்பகலில் தொடங்கும் பாடசாலையின் அதிபர் சிவராசா ஆகியோரும் மாணிக்கவாசகரும் கொழும்பில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தவர்கள். பீட்டர் கெனமனுக்கும்  நெருக்கமானவர்கள்.  மாணிக்கவாசகர் , கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் துறை மற்றும் மத்திய குழு உறுப்பினர் ஸி. குமாரசாமியின் தம்பி.

 “ மாணிக்ஸ் “   இலக்கிய ஆர்வலருமாவார். அச்சமயம் அவர் தமது குடும்பத்தினருடன் பம்பலப்பிட்டி தொடர் மாடிக்குடியிருப்பில் வசித்துவந்தார்.

அவரது வீட்டிலும் எமது சங்கத்தின் கூட்டங்கள் நடக்கும்.

எனது இலக்கிய எழுத்துக்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து வந்தவர்.  பிரச்சினைகள் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எச். என். பெர்ணான்டோவும் தலைமறைவாகி யாழ்ப்பாணம் சென்றுவிட்டார்.

இந்த ஆசிரியர் சங்கம் இலங்கையில் பலம்பொருந்திய தொழிற்சங்கம்.  சமகாலத்தில் கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கும் அமைப்பு.  அரசுக்கு சவாலாக இருப்பவர்தான் இச்சங்கத்தின் தற்போதைய தலைவர் ஜோசப் ஸ்டாலின். இவர் தற்போது நாடாளுமன்றிலும் பேசுபொருள். இச்சங்கத்தில் அன்றே மூவினத்தவர்களும் இணைந்திருந்தனர்.

இச்சங்கத்தின் வெளியீடுகளான ஆசிரியர் குரல்  பத்திரிகையின் ஆசிரிய பீடத்திலும் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலைசெய்யக்கோரும்  போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தேன்.


இச்சங்கத்தின் மகாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்திலும் 1977 பொதுத் தேர்தலுக்கு முன்னர் நடந்தது.  அதிலும் கலந்துகொண்டேன்.

அரசியல் கைதிகள் விடுதலையானதும் மக்கள்  விடுதலை முன்னணி ஃபீனிக்ஸ் பறவைபோன்று உயிர்த்தெழுந்து நாடெங்கும் கூட்டங்களை நடத்தியது.  அதன் தீவிர வளர்ச்சியை அவதானித்த அன்றைய ஜே.ஆரின் அரசு தருணம் பார்த்து 1983 கலவரத்துடன் அதற்கு தடைவிதித்தது.

எனது இலக்கிய நண்பரும்  கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ ஏடான தேசாபிமானி, புதுயுகம் ஆகிய பத்திரிகைகளில்  எழுதி வந்தவருமான சிவா சுப்பிரமணியம் கைதாகி கொழும்பு புறநகர பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இவரிடமும் பிறிதோர் இடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தோழர் லயனல்போப்பகேயிடமும் புலனாய்வுப்பிரிவினர் என்னைப்பற்றியும் தனித்தனியாக விசாரித்துள்ளனர்.

எனினும் இவர்கள் என்னைப்பற்றிச்சொல்லாமல் காப்பாற்றினர்.  இன்று இதனை நான் எழுதிக்கொண்டிருப்பதற்கு அவர்கள் தந்த உயிர்ப்பிச்சைதான் என்று நன்றியோடு குறிப்பிடுகின்றேன்.

தேடுதல் தொடர்ந்தமையால், இறுதியில் நானாகவே சரணடைந்து சிங்களத்திலேயே தெளிவான வாக்குமூலம் வழங்கி என்னை விடுவித்துக்கொண்டேன்.

இந்தச்சம்பவம் யாவும் தோழர் மாணிக்ஸுக்கு நன்கு தெரியும்.  மீண்டும் அன்று அவர் என்னைச்சந்தித்தபோது,                  உம்மை


இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு அறிமுகப்படுத்தினேன்.  உமது வேகம்  முன்பே தெரிந்திருந்தால்,  அந்தச்செயலை செய்திருக்கமாட்டேன்.  எங்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளனாக இருந்துகொண்டு 1977 இல் நடந்த பொதுத்தேர்தலில் எங்கள் இடதுசாரி ஐக்கிய முன்னணி கூட்டங்களில் பேசினீர்.  இறுதியில்  நீர் சென்ற இடம் தீவிரமானது.  உமக்கு அரசியல் சரிவராது.  உம்மால் நல்ல இலக்கிய படைப்புகள் எழுதமுடியும். இலக்கியம்தான் உமக்கு மிஞ்சும் – எஞ்சும். “  என்று சொன்னார்.

அவரது வாக்கு அப்போது எனக்கு தேவ வாக்காகவே தெரிந்தது.  நான் மக்கள் விடுதலை முன்னணியுடன் நெருக்கமானதை  எனது இலக்கிய நண்பர்கள் மல்லிகை ஜீவா, பிரேம்ஜி ஞானசுந்தரன், மு. கனகராஜன், ராஜஶ்ரீகாந்தன் , சேமாகாந்தன் ஆகியோர் விரும்பியிருக்கவில்லை. இவர்கள் அனைவரும் மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள்.

அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால், நாம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்திருந்தோம்.

இலங்கையில் முதலாவது ஜனாதிபதித்தேர்தல்  1978 இல் நடந்தபோது ஜே.ஆரை எதிர்த்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்   சார்பில் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவவை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் விஜயகுமாரணதுங்கவும் எங்கள் மல்லிகைஜீவாவும் ஒரே மேடையில் தோன்றி பேசிக்கொண்டிருந்தபோது, நான் கம்பகா மாவட்டத்தில் ரோகண விஜேவீராவை ஆதரித்து மேடைகளில் பேசிக்கொண்டிருந்தேன்.


இவ்வாறு அரசியலில் எதிரெதிராக நின்றாலும்,  எமது மல்லிகை ஜீவா உட்பட அனைத்து மாஸ்கோ சார்பு  கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு நிலைப்பாடு எடுத்த முற்போக்கு எழுத்தாளர்கள் அனைவரும் என்னுடன் நேசமாகவே உறவாடினர்.

எங்கள் அனைவருக்கும் பொது எதிரி பச்சைக்கட்சிதான்.

களனி நதிக்கரையோரமாக கொகிலவத்தை என்ற  ஊரில் இயங்கிய எமது மக்கள் விடுதலை முன்னணியின் அச்சுக்கூடம் செயல் இழந்தது. அங்கிருந்துதான்  இயக்கத்தின் மும்மொழிப்பத்திரிகைகளும் வெளிவந்தன.

அங்கிருந்துதான்  இயக்கத்தின் விடுதலைக்கீத பாடல்களை மொழிபெயர்த்துக்கொடுத்தேன்.  1977 முதல்  1983 கலவரம் வரையில்  நான் அடிக்கடி சென்றுவந்த இயக்கத்தின் தலைமைக்காரியாலயம் மூடப்பட்டிருந்தது.

தொடர்ந்தும் வீரகேசரிக்கு பணிக்கு சென்று வந்துகொண்டிருந்தேன்.  வெளியே எனக்கிருந்த  நெருக்கடிகளை நான் மனம் திறந்து பேசியது நண்பர் தனபாலசிங்கத்திடம் மாத்திரமே.

அவரது ஒரு சில கட்டுரைகளையும் செஞ்சக்தியில்


வெளிவரச்செய்திருக்கின்றேன். அத்துடன் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் சில கவிதைகளையும் அதில் பதிவேற்றினேன்.

ஒருநாள்  காலை வீரகேசரி பொது முகாமையாளர் எஸ். பாலச்சந்திரன்  தனது காரை வீரகேசரி வளாகத்தின் பின்புறம்  தரித்துவிட்டு, எமது ஒப்புநோக்காளர் பிரிவை கடந்து தனது அலுவலக அறைக்குச்செல்லும்போது, எமது அறையின் கண்ணாடிக்கதவை தள்ளித்திறந்து என்னை வெளியே அழைத்தார்.

 “ என்ன சேர்..?  “ எனக்கேட்டேன்.

இன்னும் பத்து நிமிடத்தில் தனது அறைக்கு வரச்சொல்லிவிட்டு விருட்டெனச்சென்றுவிட்டார். 

எமது அறையிலிருந்த சக ஊழியர்கள் எனது முகத்தை விநோதமாகப்பார்த்தனர்.  நான் ஏதோ தவறு செய்து பிடிபட்டிருக்கவேண்டும். விசாரணைக்குத்தான் முகாமையாளர் அழைக்கிறார் என்ற கற்பனையில்  அவர்கள் மூழ்கியது புலப்பட்டது.

எனக்கும் மனதில் கலக்கம். எனது வெளியுலக அரசியல் நடவடிக்கைகள் அவருக்கும் தெரிந்துதான் அதுபற்றி பேசுவதற்கு அழைக்கிறாரோ என நம்பிக்கொண்டு அவரது அறைக்கு தயங்கி தயங்கிச்  சென்றேன்.

அவர் என்னை வரவேற்று தனக்கு முன்னாலிருந்த ஆசனத்தில் அமரச்செய்தார்.

அவரது மேசையில் எனது தனிப்பட்ட விபரங்கள் அடங்கிய  மஞ்சள்


நிற கோவை இருந்தது. அதனையே பார்த்துக்கொண்டு,  “ இன்னும் எத்தனை நாட்களுக்கு Proof Reading Department இல் இருக்கப்போகிறீர்.  ஆசிரிய பீடத்திற்கு வரும் எண்ணம் இல்லையா..?  “ எனக்கேட்டார்.

எனக்கு அவரது கேள்வி இன்ப அதிர்ச்சியைத்தந்தது.

 “ நாளையே ஒரு விண்ணப்பம் எழுதிக்கொண்டு வந்து தாரும்  “ என்றார்.

  சரி சேர் “  என்றேன்.

 “ வீரகேசரியில் நீர் எழுதிய தமிழக பயணக்கட்டுரைகள் படித்தேன். நன்றாக இருந்தது “  என்றார். 

மீண்டும் ஒப்புநோக்காளர் அறைக்கு நான் திரும்பியதும், அங்கிருந்த சக நண்பர்களிடம் பொதுமுகாமையாளர் அழைத்ததன் காரணத்தைச்சொன்னேன்.

அதற்கு முன்னரும் சில மாதங்கள்  அவரும் விளம்பர – விநியோக முகாமையாளர் ரி. சிவப்பிரகாசமும் என்னை அழைத்து விளம்பரப்பிரிவில் வேலை செய்யுமாறு பணித்திருந்தனர்.

அச்சமயம் எனது இலக்கிய நண்பரும் எழுத்தாளருமான க.  சட்டநாதனும் அங்கே பணியாற்றினார். அவரும் நான் இணைந்திருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அங்கத்தவரான  கல்லூரி ஆசிரியர்தான். அச்சங்கம் நடத்திய பொதுவேலை நிறுத்தத்தினால் வேலை இழந்திருந்தார்.  மீண்டும் அவருக்கு ஆசிரியப்பணி கிடைக்கும் வரையில் வீரகேசரி விளம்பரப் பிரிவில் சிறிதுகாலம் பணியாற்றினார். 

விளம்பரப்பிரிவிலும் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்தன. ஒரு


விளம்பரம் எழுத்துப்பிழையினால் விபரீதமானது.  அந்த சிக்கலுக்கு காரணமான நண்பர்தான் இந்தத்  தொடர் அங்கத்தில் இதற்கு முன்னர் எழுதப்பட்ட பகுதியில் வந்த தில்லைநாதன் என்ற அச்சுக்கோப்பாளர்.

பிரமாண்டமான தயாரிப்பு என வரவேண்டிய விளம்பரம் படுமோசமான வார்த்தையுடன் அச்சாகிவிட்டது.

வீட்டு வேலைக்கு ஆள் தேவை என்ற விளம்பரம் பிழையான அர்த்தம் பொதிந்து வெளிவரப்பார்த்து,  இறுதி நேரத்தில் நானும் சட்டநாதனும் கண்டுபிடித்தோம்.

வீரகேசரியில் அச்சுப்பிசாசு செய்த திருவிளையாடல்கள் பற்றி ஏற்கனவே எனது சொல்லத்தவறிய கதைகள் நூலில் ஒரு அங்கம் எழுதியிருக்கின்றேன்.

ஒரு எழுத்து தவறான அர்த்தம் தந்தமையால் ஆயிரக்கணக்கான வீரகேசரி பிரதிகள் எரிக்கப்பட்டன.  பெரும் தலைவர் பிறந்த இடம் எனக்கூறப்படும் வீரகேசரி கட்டிடத்திலிருந்தே அவருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக்கூடிய ஒரு எழுத்துப்பிழை.

விளம்பரப்பிரிவில் பணியாற்றியபோது மற்றும் ஒரு  சுவாரசியமான சம்பவம்  நடந்தது.

ஒரு  காதலன், தனது காதலி தன்னை மறந்து மற்றும் ஒருவரை குடும்பத்தின் நிர்ப்பந்தத்தினால் மணம் முடித்தபோது, அந்தத் திருமணம் நடந்தன்றே வெளிவரத்தக்கதாக ஒரு மரண அறிவித்தல் விளம்பரத்தை வெளிவரச்செய்துவிட்டான்.

அந்த மரண அறிவித்தலில் இடம்பெற்ற  இறந்தவரின் பெயருக்குரியவர் அந்த மணமகள்.  பழிவாங்குதலுக்கும் ஊடகத்தை பயன்படுத்திய  காதல் வயப்பட்ட  இளைஞர்கள் அந்தக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள் என்றால், இந்த முகநூல் கலாசாரத்தில் மூழ்கியிருக்கும் இளவட்டங்கள் என்னவெல்லாம் செய்யும்..? ! அதனால்தானே Love is blind எனச்சொல்கிறார்கள்.   காதல் இப்படி எல்லாம் கண்களை மறைக்குமா..?

அதன்பிறகு மரண அறிவித்தல் விளம்பரங்கள்,   மரணச் சான்றிதழுடன் வந்தால் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த நடைமுறை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திலும் பின்பற்றப்பட்டது.

வரும் விளம்பரங்களை அடிமட்டம் வைத்து அளந்து பார்த்து – அங்குலம் – சென்றி மீட்டர் கணக்கு பார்த்து கட்டணம் சொல்லும் அந்தவேலை எனக்கு விரைவில் சலிப்பையே தந்தது.

கெஞ்சி மன்றாடி மீண்டும் ஒப்புநோக்காளர் பிரிவுக்குச்சென்ற என்னை பொதுமுகாமையாளர் அன்று அழைத்து ஆசிரிய பீடத்துக்கு வருமாறு சொன்னதும் இன்ப அதிர்ச்சிதானே வரும்.

அவர் கேட்டவாறே  மறுநாள் ஒரு விண்ணப்பம் எழுதி அவரிடம் சேர்ப்பித்தேன். முடிவுக்காக காத்திருந்தேன்.

இந்த செய்தி எப்படியோ ஆசிரியபீடத்திற்குள்  கசிந்துவிட்டது.  அங்கிருந்த சிலரால் அதனை ஜீரணிக்க முடியவில்லை.   அவர்களில் சிலரது எழுத்துப்பிழைகளை, வாக்கியப்பிழைகளை பல தடவை கண்டுபிடித்தவர்கள் ஒப்புநோக்காளர்கள்.

மூலப்பிரதியில் ஏதும் தவறிருந்தால், அதனை அச்சுக்கோப்பாளர்கள் தெரிந்தும் தெரியாமலும் அச்சுக்கோர்த்துவிடுவார்கள்.  பிழைகளை திருத்தும் ஒப்புநோக்காளர்கள்,  மூலப்பிரதியிலிருக்கும் தவறை, ஆசிரிய பீடத்திலிருக்கும் பிரதம செய்தி ஆசிரியர் டேவிட் ராஜுவுக்கு அல்லது அவருக்கு இருமருங்கும் அமர்ந்திருக்கும் சிரேஷ்ட துணை செய்தி ஆசிரியர்களான நடராஜா – கார்மேகம் ஆகியோரிடம்தான் காண்பித்து, அவர்கள் அதனைத்திருத்தியபின்னர் அதன்பிரகாரம் நாம் ஒப்புநோக்கவேண்டும்.

உதாரணத்திற்கு ஒன்றைச்  சொல்கின்றேன்.

இலங்கை அரசில் நீல் டீ அல்விஸ் – என்றும் ஆனந்த திஸ்ஸ டீ அல்விஸ் என்றும் இரண்டுபேர் முக்கிய  அமைச்சுப்பொறுப்புகளில் இருந்தனர்.  பத்திரிகையாளர் தான் எழுதிய செய்தியில் இந்த பெயர் மயக்கத்தை தவறவிட்டிருப்பார்.

அதனை கண்டு பிடிக்கும் எமக்கு சன்மானம் எதுவும் கிடைக்காது. ஆனால்,  தவறாக எழுதிய பத்திரிகையாளரினதும் அதனை சரியாக திருத்தி எழுதி அச்சுக்கோப்பாளர் பிரிவுக்கு அனுப்பாத துணை ஆசிரியருக்கும் எம்மீது கடுப்பிருக்கும்.

இன்னும் ஒரு சம்பவத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும். வீரகேசரி அலுவலம்  அமைந்த கிராண்ட்பாஸ் வீதியில்  இருக்கும் பவர் அன் கம்பனியில் பணியாற்றிய இலக்கிய நண்பர் வேல் அமுதனும் அந்தக்கம்பனியின் குடியிருப்பில்தான் குடும்பத்தினருடன் வசித்தார்.

அவர் எழுதிய மாரீசம் கதைத் தொகுதியின் வெளியீட்டு அரங்கு விவேகானந்த சபை மண்டபத்தில் நடந்தது. அதில் அவரது நட்பின் நிமித்தம் வீரகேசரி செய்தி ஆசிரியர் டேவிட் ராஜுவும் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார்.  அவர் செய்திகள்தான் எழுதிவந்தவரேயன்றி சிறுகதை இலக்கியம் பற்றி எதுவும் அறியாதவர்.

ஆனால்,  எதனையும் பற்றி விரிவுரைப்பாணியில் பேசும் ஆற்றல் மிக்கவர். அந்த நூல்வெளியீட்டுக்கு நானும் போயிருந்தேன்.  ஆசிரிய பீடத்திலிருந்தும் சிலர் டேவிட் ராஜுவுக்காகவே வந்திருந்தனர். அவர்களில் எழுத்தாளர் அன்னலட்சுமி இராஜதுரையைத்தவிர வேறு எவருமே  என்றைக்குமே நாம் கொழும்பில் நடத்தும் நூல்வெளியீட்டு நிகழ்வுகளுக்கோ, இலக்கியக்  கூட்டங்களுக்கோ வருவதுமில்லை. அக்கூட்ட செய்திகளையும் நான்தான்  ஒப்பு நோக்காளர் பிரிவிலிருந்துகொண்டே எழுதிக்கொடுத்து வெளிவரச்செய்வதுண்டு.

அன்று வேல்  அமுதனின் நூல் வெளியீட்டில் எமது செய்தி ஆசிரியர் டேவிட் ராஜு  பேசும்போது,   “ கதை எழுதும் படைப்பாளிகள்,  கெமராமேன்  காட்சிகளை தத்ரூபமாக  படம் எடுப்பதுபோன்று  உள்வாங்கிக்கொண்டு எழுதவேண்டும். அவ்வாறு எழுதினால்தான் கதைகள் யதார்த்தப்பண்புடன் வெளிவரும்   என்ற தொனியில் பேசினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் சபையினருக்கும் கருத்துச்சொல்வதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது.  நண்பரும் இலக்கிய விமர்சகருமான கே. எஸ். சிவகுமாரனும் நானும் எமது கருத்துக்களை அடுத்தடுத்துச் சொன்னோம்.

நான் பேசும்போது,  “ சிறுகதைகள் வாசகனின் சிந்தனையில் ஊடுறுவும் வகையில் எழுதப்படல் வேண்டும்.  ஒரு நல்ல சிறுகதையை படிக்கும் வாசகனின் மனதில் சில மணிநேரங்களாவது அது தங்கியிருத்தல்வேண்டும்  “ என்ற தொனியில் பேசினேன்.

எனது அந்த சிற்றுரை டேவிட்ராஜு  அவர்களின் கருத்துக்கு எதிர்வினையானது என்ற கருத்து ஆசிரிய பீடத்தில் விதைக்கப்பட்டிருந்தது,

இந்தப்பின்னணியில் இலக்கியமும் எழுதும்  - பேசும் என்னைப்போன்றவர்களுக்கு அங்கே வரவேற்பு கிட்டாது என்பதும் தெரியும்.

ஏற்கனவே எமது ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்து சென்ற சி. எஸ். காந்தி என்பவர் ஒரு கவிஞர். அத்துடன் மலையக மூத்த எழுத்தாளர் சி. வி. வேலுப்பிள்ளையின் இரத்த உறவினர்.   எனதும் நண்பர். 

பாரதியாரின் ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே பாடல்வரிகளை வேறு வேறு அர்த்தத்தில் மாற்றி மாற்றிப்பாடி எம்மை சிரிக்கவைப்பவர். 

அவர் ஒருநாள் தாகசாந்தி செய்துவிட்டு வந்து, என்னிடம் இலக்கியம் தெரியாதவங்களிட்டையெல்லாம் எதுக்கு  ஐசே இலக்கியம் பேசுகிறீர் என்று சில விடயங்களை பூடகமாகச் சொன்னார்.

எனது விண்ணப்பம்  பல வாரங்கள் பொதுமுகாமையாளரின் அறையிலேயே கிடந்தது.

மீண்டும் அவரிடமிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை.

ஆசிரியபீடத்தில் ஒருநாள் அரசல் புரசலாக ஒரு கதை அடிபட்டது.   “ யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புதிய ஆசிரியர் வரவிருக்கிறார். அவர் யாழ். பல்கலைக் கழகத்தில் பணியாற்றியவராம்.  உமக்குத் தெரியுமா..? அவரது பெயர் சிவநேசச் செல்வன்..? 

நான் தலையை மாத்திரம் ஆட்டினேன்.

( தொடரும் )

letchumananm@gmail.com

 

 

No comments: