டோக்யோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கியின் 41 ஆண்டு கால பதக்க தாகம் தணிந்தது எப்படி? முன்னாள் கேப்டன் பாஸ்கரன் பேட்டி

 

  • விஷ்ணுப்ரியா ராஜசேகர்
  • பிபிசி தமிழ்
இந்திய ஹாக்கி அணி

பட மூலாதாரம்,

ALEXANDER HASSENSTEIN/GETTY IMAGES)

டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வரலாற்றை மீண்டும் மாற்றி எழுதியுள்ளது. ஆம் 41 வருடங்கள் கழித்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி.

"ஒரு விளையாட்டு வீரராகவும், ஒரு பயிற்சியாளராகவும் இது ஒரு நீண்ட காத்திருப்பு என்றுதான் சொல்லுவேன்." என்கிறார் இதற்கு முன் கடைசியாக பதக்கம் வென்ற ஹாக்கி அணியின் கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன்.

இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம், தற்போதைய பதக்கம் தவிர்த்து, மேலும் இரு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி.

ஹாக்கி ஜாம்பவானான இந்திய அணி

இந்த பதக்கங்கள் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாய் பெற்றதில்லை, 1928ஆம் ஆண்டிலிருந்து 1956ஆம் ஆண்டு வரை தொடச்சியாக ஆறு பதக்கங்களை வென்றது இந்திய அணி.

அதன்பின்னும் பதக்கங்களை பெறுவதை நிறுத்தவில்லை. ஆனால் கடைசியாக 1980ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் வென்ற தங்கப் பதக்கத்துடன் ஹாக்கி அணியின் பதக்க வேட்டை நின்று போனது.

பதக்க வரலாற்றை தற்போது டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் நிகழ்த்தி காட்டியிருக்கிறது மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணி.

1980-ல் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி

பட மூலாதாரம்,

VASUDEVAN BASKARAN

படக்குறிப்பு,

1980-ல் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி

இந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் வீரர்களின் மன உறுதிதான் என்கிறார் முன்னாள் ஹாக்கி கேப்டனும் பயிற்சியாளருமான பாஸ்கரன்.

"2012 மற்றும் 2016ஆம் ஆண்டின் ஒலிம்பிக் அணிகள் சிறப்பாகவே இருந்தன. இருப்பினும் தற்போதைய அணி ஒரு வித்தியாசமான அணிதான். ஏனென்றால் இந்த அணியில் நிறைய பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். எந்த ஒரு அணியும் ஒரு வருடம் பபுளில் இல்லை." என்கிறார் வாசுதேவன் பாஸ்கரன்

இந்திய ஹாக்கி அணி

பட மூலாதாரம்,

ALEXANDER HASSENSTEIN/GETTY IMAGES

10க்கும் மேற்பட்ட ஜூனியர் வீரர்கள்

"இந்திய அணி இந்த ஒலிம்பிக்கில் எல்லா போட்டிகளிலும் சிறப்பாகவே விளையாடியது. இன்றைக்கும் ஜெர்மனியுடனான ஆட்டத்தை பார்த்தால் முதல் பாதியில் 1-3 என்ற கணக்கில் ஆட்டம் இருந்தது. இருப்பினும் மிக விரைவில் இந்திய அணி இரு கோல்களை அடித்துவிட்டது. ஹாக்கியை பொருத்தவரை அதுதான் பெரிய திருப்பம். முதல் பாதியில் ஜெர்மனி அணி இந்திய அணிக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்தது ஆனால் இந்திய அணி அந்த அழுத்தத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளது."

"இந்திய அணியைப் பொருத்தவரை கிட்டதட்ட அனைவரும் சிறப்பாக விளையாடினர். அது தற்காப்பாக இருந்தாலும் சரி, கோல் கீப்பிங்காக இருந்தாலும் சரி இந்த அணியை பொறுத்தவரை 10 ஜூனியர் வீரர்கள் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடுகின்றனர். அவர்கள் அனைவருமே 100 சதவீதம் தங்கள் உழைப்பை கொடுத்து நன்றாக விளையாடினர். எனவேதான் இந்த வெற்றி சாத்தியமானது" என்கிறார் பாஸ்கரன்.

பின்னடைவுக்கு என்ன காரணம்?

தியான் சந்த் காலத்தில் தொடங்கி 1980 வரை அசைக்க முடியாத அணியாக இருந்த இந்திய ஹாக்கி அணி 2008 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பைகூட இழந்துவிட்டிருந்தது.

1980-ல் பதக்கம் வென்ற அணியின் கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன்

பட மூலாதாரம்,

VASUDEVAN BASKARAN

படக்குறிப்பு,

1980-ல் பதக்கம் வென்ற அணியின் கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன்

"ஒலிம்பிக் போட்டிகள் போன்ற பெரிய விளையாட்டு போட்டிகளில் வாய்ப்பு என்பது அடிக்கடி வருவதில்லை. உங்களுக்கு வாய்ப்பு வரும்போது அதை நீங்கள் கோலாக மாற்ற வேண்டும். ஏனென்றால் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் மற்றொரு வாய்ப்பு என்பது அடுத்த நான்கு வருடங்களுக்கு பிறகுதான் கிடைக்கும்."

"2016 அணி தற்போதைய அணியை காட்டிலும் வலுவான ஒரு அணியாக இருந்தது ஆனால் காலிறுதி போட்டியில் கடைசி நிமிடங்களில் ஜெர்மனி அணிக்கு எதிராக நாம் சிறப்பாக விளையாட முடியவில்லை. இருப்பினும் இந்த 2016 போட்டியை பொறுத்தவரை, 2012ஆம் ஆண்டு தொடங்கி பயிற்சியாளர்கள் அடிக்கடி மாற்றப்பட்டது அணியின் பின்னடைவுக்கு ஒரு காரணமாக அமைந்தது." என்கிறார் பாஸ்கரன்.

கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்

பட மூலாதாரம்,

ALEXANDER HASSENSTEIN/GETTY IMAGES

படக்குறிப்பு,

கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்

அதேபோன்று ஒரு வீரர் தோல்வியடைந்தால் அவரை உடனடியாக மாற்றுவது சரியான அணுகுமுறை இல்லை என்கிறார் அவர்.

ஒரு வீரரின் தவறை கண்டறிந்து அந்த வீரரை எவ்வாறு நாம் சாம்பியனாக்கலாம் என்பதைதான் பார்க்க வேண்டும். அவ்வாறுதான் இப்போதைய பயிற்சியாளர் கிரஹாம் ரெய்ட் செய்திருக்கிறார் என்கிறார் அவர்.

மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய வெற்றி

இந்திய ஹாக்கி அணியின் வெற்றி இரண்டு நாள் கொண்டாட்டமாக மட்டும் அமையாமல், எதிர்காலத்தில் ஹாக்கி விளையாட்டுக்கு தொடர்ந்து ஆதரவு கிடைக்க, ஹாக்கியில் சிறப்பாக செயலாற்ற இந்த வெற்றியை மாணவர்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் பாஸ்கரன்.

"இந்த வெற்றியை நாம் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் எடுத்து செல்ல வேண்டும். ஹாக்கி மட்டுமல்ல இந்தியாவின் பி.வி. சிந்து, சானு போன்றோரின் ஒலிம்பிக் சாதனைகள் அனைத்தையும் டிஜிட்டல் வீடியோக்களாக செய்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்ப வேண்டும். இந்த முறையில் ஒலிம்பிக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி நீங்களும் விளையாட்டில் சாதிக்கலாம் என மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கு பின்னேயும் ஒரு உத்வேகம் அளிக்க கூடிய கதை உண்டு. எனவே இந்த வெற்றியை ஒரிரு நாட்களுக்கு மட்டும் பேசி விட்டுவிடக் கூடாது. இது கல்லூரி மற்றும் பள்ளிகளில் வார நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். இவ்வாறுதான் ஹாக்கி உட்பட அனைத்து விளையாட்டுமே பிரபலமடையும்.

1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகுதான் கிரிக்கெட் அதிக பிரபலமடைந்தது. அதேபோன்று ஹாக்கியை கொண்டு செல்ல வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு போட்டியில் தோற்றால் உடனே நிறைய விமர்சனங்கள் எழுந்துவிடும். அதற்கே ஒரு நான்கு வருடங்கள் சென்று விடும். பிற ஐரோப்பிய நாடுகளை போன்று நாம் முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கி சென்றுவிடுவோம். விளையாட்டைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி என்பதை கடந்து அடுத்து என்ன என்பதை யோசிக்க வேண்டும். ஒரு போட்டியில் தோற்றுவிட்டால் உடனே ஒரு வீரரை குறை சொல்வது, விமர்சிப்பதை தவிர்த்துவிட்டு அடுத்தகட்ட திட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்கிறார் பாஸ்கரன்.

பிபிசி தமிழ்

No comments: