சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன. டோக்யோவில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் இதற்கான நிறைவு விழா நடந்தது. இந்த ஒலிம்பிக் தொடக்க விழா ஜூலை 23ஆம் தேதி நடந்தது.
டோக்யோ நகரின் இரவு வானில் வண்ணமயமான விளக்குகளும், வான வேடிக்கைகளும் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும் வகையில் அமைந்தன. நடனம், இசை, சாகசங்கள் என்று ஜப்பானியர்கள் இந்த விழாவில் அசத்தி இருந்தனர்.
இந்திய அணிவகுப்பை வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசியக் கொடி ஏந்தி வழிநடத்திச் செல்கிறார்.
ஒலிம்பிக் நிறைவு விழாவில் நடந்தவை குறித்த சில நெகிழ்ச்சியான தகவல்கள் இதோ.
1. 'ஒமோதெனாஷி' வழக்கத்தைக் கடைபிடிக்கும் விதத்தில் விளையாட்டு வீரர்கள் தளர்வாக உணர்வதற்காக ஒலிம்பிக் மைதானத்தின் தளம் புல்வெளியாக மாற்றப்பட்டிருந்தது. 'ஒமோதெனாஷி' என்பது 'விருந்தினர்களை முழு மனதுடன் கவனித்துக் கொள்ளும்' ஜப்பானிய பாரம்பரிய வழக்கத்தைக் குறிக்கும்.
Twitter பதிவின் முடிவு, 1
2. கொரோனா காரணமாக இந்த நிறைவு விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் நடந்தாலும் ஒலிம்பிக் நிறைவு விழாவில் தத்தமது நாடுகளில் இருந்தபடியே கலந்துகொள்ளும் உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களின் படங்கள் ஒரு பெரிய திரையில் காட்டப்பட்டது. காணொளிகளை அனுப்புவதற்கான இணைப்பை ஒலிம்பிக் கமிட்டி இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தது.
3. ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் பிறப்பிடமான கிரேக்க நாட்டை (கிரீஸ்) கௌரவிக்கும் வகையில், ஒலிம்பிக் நிறைவு விழாவின்போது, ஒலிம்பிக் கொடி மற்றும் ஜப்பான் தேசியக் கொடியுடன் கிரீஸ் தேசியக் கொடியும் ஒலிம்பிக் மைதானத்தில் ஏற்றப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் கழித்து 2024 ஒலிம்பிக் நடக்கவுள்ள பிரான்ஸ் கொடியும் அருகில் ஏற்றப்பட்டது.
Twitter பதிவின் முடிவு, 2
4. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் போட்டிகளில் வென்றவர்களுக்கான பதக்கங்கள் இந்த நிறைவு விழாவில் வழங்கப்பட்டன. நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வெற்றி நிகழ்ச்சி ஒன்றாக நடத்தப்படுவது, கோடைக்கால ஒலிம்பிக் வரலாற்றில் இதுவே முதல் முறை. மாரத்தான் ஓட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வென்ற இருவருமே கென்யாவைச் சேர்ந்தவர்கள்.
5. ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்த உதவிய தன்னார்வலர்களின் பங்கை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில் அவர்களது படங்கள் ஒலிம்பிக் ஸ்டேடியம் திரையில் காட்டப்பட்டது.
2016க்கு பின் 2020இல் நடந்திருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டன.
எனினும் 'டோக்யோ ஒலிம்பிக் 2020' என்றே இந்த ஒலிம்பிக் அலுவல்பூர்வமாக அழைக்கப்பட்டது.
பிபிசி தமிழ்
No comments:
Post a Comment