நல்லடக்கம் தொடர்பான பிரதமரின் உறுதிமொழியை வரவேற்கிறோம்
குருந்தூர் மலை அகழ்வாராய்ச்சியில் சிவலிங்க வடிவ இடிபாடு மீட்பு
நீதிமன்ற தடையுத்தரவை மீறிய எம்.பிக்கள் உள்ளிட்ட 7 பேருக்கு அழைப்பாணை
மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினராக யோகேஸ்வரி பற்குணராஜா
குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட சிதைவு பல்லவர் காலத்தை ஒத்துள்ளது
ஜனாதிபதி ஆணைக்குழு செயலாளராக சிவஞானசோதி
முரளியிடம் முக்கிய பொறுப்பு ஒப்படைப்பு
நல்லடக்கம் தொடர்பான பிரதமரின் உறுதிமொழியை வரவேற்கிறோம்
- இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு
கொவிட்-19 தொடர்பில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்குவது தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய உறுதிமொழியை வரவேற்பதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இதனை அறிவித்துள்ளார்.
கொவிட்-19 நீர் மூலம் பரவாது என, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே நேற்றையதினம் (09) தெரிவித்த கருத்தின் அடிப்படையில், கொவிட்-19 சடலங்களை அடக்க ஏன் அனுமதி வழங்கக் கூடாது? என, இன்றையதினம் (10) பராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம், எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், அதற்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு மீதான மனித உரிமை குற்றச்சாட்டு தொடர்பிலான ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னெடுக்கவுள்ள யோசனைக்கு பாகிஸ்தான் ஆதராவு வழங்கும் எனத் தெரிவித்துள்ளதோடு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதி இலங்கை வரவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கை பாராளுமன்றில் விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குருந்தூர் மலை அகழ்வாராய்ச்சியில் சிவலிங்க வடிவ இடிபாடு மீட்பு
Thursday, February 11, 2021 - 11:44am
முல்லைத்தீவு குருந்தூர் மலைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் சிவலிங்கம் வடிவிலான கட்டடப் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் இத் தடயப் பொருள் உண்மையில் இந்து சமய வழிபாட்டுக்கான ஆதாரம் தானா என்பதாக உறுதிப்படுத்திய தகவல்கள் எதுவும் தொல்பொருட் திணைக்களத்தினால் வெளியிடப்படவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புராதன சின்னமாக காணப்படும் குருந்தூர்மலை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் கடந்த 18.01.21 தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தொல்பொருள் திணைக்கள இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்கவினால் தொடங்கி வைத்த அகழ்வு பணிகள் இன்றுரை தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த அகழ்வுப் பணி தொடக்க நடவடிக்கையின் முன்னர் தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் என பலர் சென்று பார்வையிட்டுள்ளதுடன் அகழ்வுப் பணியில் தமிழ் பல்கலைக்கழக மாணவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்துள்ளார்கள்.
தற்போது அகழ்வாராய்ச்சியின் போது சிவலிங்க வடிவம் கொண்ட தொல்பொருட்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் மேலும் பல தொல்லியல் தடையங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் தொல்பொருள் திணைக்களத்தின் காலபகுப்பாய்வு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன் மேலும் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் தொடர்சியாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாங்குளம் குறூப், புதுக்குடியிருப்பு விசேட நிருபர்கள்
நன்றி தினகரன்
நீதிமன்ற தடையுத்தரவை மீறிய எம்.பிக்கள் உள்ளிட்ட 7 பேருக்கு அழைப்பாணை
பாராளுமன்ற உறுப்பினர்களான இராஜமாணிக்கம் சாணக்கியன், கோ. கருணாகரம், த. கலையரசன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 03 ஆம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொள்வதற்கு எதிராக, கல்முனை பொலிஸ் நிலையத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு கல்முனை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.
எனினும் இடம்பெற்ற குறித்த பேரணியில் நீதிமன்ற தடைஉத்தரவினை மீறி கலந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றில் கல்முனை பொலிஸாரினால் கடந்த வாரம் (05) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை கல்முனை நீதவான் ஐ.ஏன். றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், கோ. கருணாகரம், த. கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேந்திரன், சீ. யோகேஸ்வரன், மாணவர் மீட்பு பேரவை தலைவர் செ. கணேசானந்தன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ. நிதான்சன் ஆகியோரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு கல்முனை நீதவான் அழைப்பாணை பிறப்பித்திருந்தார்.
பாறுக் ஷிஹான் - நன்றி தினகரன்
மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினராக யோகேஸ்வரி பற்குணராஜா
- ஜனாதிபதியினால் நியமித்து அதி விசேட வர்த்தமானி
மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக யாழ். மாநகர முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஓய்வு பெற்ற பொலிஸ் மாஅதிபர் சந்திரா பெனாண்டோ, ஓய்வு பெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி ஆகிய மூவர் கொண்ட மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த ஜனவரி 20ஆம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை மேலும் விரைவாகவும், வினைத்திறனாகவும் நிறைவேற்றும் பொருட்டும், இலங்கையின் பன்மைத்துவம் மற்றும் பாலின அடையாளத்தைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியத்தைக் கவனத்திற்கொண்டு யோகேஸ்வரி பற்குணராசாவை நியமிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த வர்த்தமானியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான யோகேஸ்வரி பற்குணராஜாவின் குறித்த நியமனம், பெப்ரவரி 11ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட சிதைவு பல்லவர் காலத்தை ஒத்துள்ளது
- டுவிட்டரில் சிறிதரன் எம்.பி பதிவு
குருந்தூர் மலைப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள சிவலிங்கத்தை ஒத்த சிதைவுகள், பல்லவர் காலத்தைச் சேர்ந்த அஷ்டதார லிங்கத்தை ஒத்திருப்பதாக இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுவரும் முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலைப் பகுதியில் நேற்று முன்தினம் சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.
இது குறித்து எஸ்.சிறிதரன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர்கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தார லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார். அது பல்லவர்கால கட்டட வடிவமைப்புக்களின் சாட்சியாக இந்த அஷ்டதார லிங்கம் விளங்குகின்றது. ஈழத்தின் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் கோவிலில் தற்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் அஷ்டதார லிங்கத்தை ஒத்த லிங்கம், தமிழ்நாட்டின் கும்பகோணத்தைச் சேர்ந்த கூந்தூர் முருகன் ஆலயத்திலும் உள்ளது. நன்றி தினகரன்
ஜனாதிபதி ஆணைக்குழு செயலாளராக சிவஞானசோதி
சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னர் அமைக்கப்பட்ட மனித உரிமை தொடர்பான ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து அரசாங்க கொள்கைக்கு அமைவாக அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளை மேற்கொள்ளுதல் இந்த ஆணைக்குழுவின் நோக்கமாகும். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பல்வேறுபட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் செயலாளராக கடமையாற்றிய வே. சிவஞானசோதி இந்த ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் கடமையாற்றி வருகின்றார்.
இந்த ஆணைக்குழுவில் உயர் நீதிமன்ற நீதியரசர் உள்ளடங்கலாக 3 உறுப்பினர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
முரளியிடம் முக்கிய பொறுப்பு ஒப்படைப்பு
ஆகஸ்டில் மீண்டும் எல்.பி.எல்
பாராளுமன்றில் நாமல் தெரிவிப்பு
பாடசாலை கிரிக்கெட் பயிற்சியாளர்களை பயிற்றுவிப்பதும் மேற்பார்வை செய்வதும், அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதுவதற்கான வேலைத்திட்டமொன்றை உருவாக்குவதற்குமான மிக முக்கிய பொறுப்பு முத்தையா முரளிதரனிடம் வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்த்தில் தெரிவித்தார்.
பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அரவிந்த டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட குழு இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் அடிப்படை வசதிகளை விடவும் பயிற்றுவிப்பாளர்கள் இல்லாமையே பாரிய பிரச்சினையாக உள்ளது. எனவே பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை முதலில் முன்னெடுக்க வேண்டும்.
இதில் முத்தையா முரளிதரனிடம் மிக முக்கிய பொறுப்பொன்றை வழங்கியுள்ளோம்.
அதேபோல் இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் எல்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது, அதற்கான நிர்வாகக் குழுவொன்று இம்மாதம் இறுதிக்குள் நியமிக்கப்படும், சகல உரிமைத்துவ லீக் போட்டிகள் தொடர்பில் முதலீட்டாளர்களை உள்ளீர்க்கும் மேற்பார்வை குழுவொன்றை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கரப்பந்தாட்டம், கபடி, கூடைப்பந்து போன்ற போட்டிகளையும் எல்.பி.எல் போட்டிகளை போன்று நடத்தவும் தீர்மானித்துள்ளதாகவும் கூறினார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment