. .
தமிழில் ஏராளமான படங்கள் வந்துள்ள போதிலும் முஸ்லிம் கதாபாத்திரத்தை முன்னிலைப் படுத்தி வெளிவந்துள்ள படங்கள் குறைவே. அவ்வாறு வெளிவந்த படங்களும் பெரும்பாலும் சரித்திரப் படங்களாகவே இருக்கும். ஆனால் 1961 ஆம் ஆண்டு முஸ்லிம் கதாநாயகனை முன்னிறுத்தி சமூக படம் ஒன்று உருவாகி மாபெரும் வெற்றி கண்டது. அந்தப் படம் தான் புத்தா பிக்சர்ஸ் இன் பாவமன்னிப்பு .
இந்துக் குடும்பத்தில் பிறக்கும் குழந்தை சந்தர்ப்ப சூழலால் ஒரு முஸ்லீம் பெரியவரால் வளர்க்கப்படுகிறது. முஸ்லிமாக வளரும் அந்த இளைஞனை கிறிஸ்தவ பெண் ஒருத்தி காதலிக்கிறாள். இந்தக் கதையை எழுதியவர் ஜே பி சந்திரபாபு. தான் எழுதிய கதையை இயக்குனர் பீம்சிங் கிடம் சொல்லி அவரின் இயக்கத்தில் சந்திரபாபு முஸ்லிமாக நடித்தார். படத் தயாரிப்பு தொடர்பாக ஏவிஎம் அவர்களை அணுகிய பீம்சிங் அவரிடம் படத்தின் கதையை சொன்னார். ஏவிஎம்மை கதை கவர்ந்துவிட்டது. இந்தக் கதையை நல்ல முறையில் படம் ஆக்குவோம் ஆனால் இதற்கு சந்திரபாபு சரி வர மாட்டார் சிவாஜியை நடிக்க வைப்போம் என்று கூறினார்.
பீம்சிங் மூலம் சந்திரபாபுவுக்கு தகவல் தரப்பட்டது. சந்திரபாபுவும் படத்திலிருந்து ஒதுங்கிக்கொள்ள முஸ்லிம் இளைஞன் வேடத்தை சிவாஜி ஏற்றார். அவரின் இந்து தந்தையாக எம் ஆர் ராதாவும் தாயாக எம் வி ராஜம்மாவும், கிறிஸ்துவ காதலியாக தேவிகாவும் நடித்தனர். அவரின் கிறிஸ்துவ தந்தையாக பரோபகாரியாக எஸ் வி சுப்பையாவும் நடித்தார்.
இவர்களுடன் ஜெமினி, சாவித்திரி, டி எஸ் பாலையா, வீ நாகையா , கொத்தமங்கலம் சுப்பு என்று பலரும் நடித்தார்கள். படத்தின் திரைக் கதையுடன் டைரக்சனையும் பீம்சிங் ஏற்றுக்கொண்டார். படத்திற்கான வசனங்களை குணச்சித்திர படங்களுக்கு வசனம் எழுதுவதில் புகழ்பெற்ற எம்எஸ் சோலைமலை எழுதியிருந்தார்.
சிவாஜி ஏற்ற ரகீம் என்ற கதாபாத்திரம் அற்புதமாக செதுக்கப்பட்டிருந்தது. கண்ணியம் கடமை, பொறுப்பு என்று அனைத்தும் கலந்த பாத்திரமாக ரகீம் பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்த வேடத்தை சிவாஜி சிறப்பாக ஏற்று நடித்தார். படம் முழுவதும் தலையில் குல்லா சாரம், சேட் என்றறே வருகின்றார். சாவித்திரி தேவிகா இருவரும் தங்கள் பங்குக்கு குறை வைக்கவில்லை. தாயாக வரும் ராஜம்மா உணர்ச்சிகரமாக நடித்திருந்தார். படத்தில் ஜெமினிக்கு வேலை குறைவு.
படத்தின் முக்கிய கதாபாத்திரம் பக்திமானாகவும் வைர வியாபாரியாகவும் வரும் எம் ஆர் ராதா படத்தின் மையப் புள்ளியாக திகழ்ந்தார். ஆனால் பல இடங்களில் அவரின் மிகை நடிப்பு தலைதூக்கி இருந்தது. அதனை சமாளிக்கும் வண்ணம் பாலையா நாகையா சுப்பையா ஆகியோர் இயல்பாக நடித்திருந்தனர்.
படத்தின் வெற்றிக்கு பாடல்கள் மிகவும் உதவின. கண்ணதாசனின் எல்லோரும் கொண்டாடுவோம், பாலிருக்கும் பழமிருக்கும், சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் , வந்த நாள் முதல் ஆகிய பாடல்கள் வந்த நாள் முதல் இன்றுவரை ஒலிக்கின்றன.. பி பி ஸ்ரீனிவாஸ் பாடிய காலங்களில் அவள் வசந்தம் பாடல் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை ரசிகர்களை கட்டிப்போட்டது.
படம் மாபெரும் வெற்றி பெற்ற போதும் படத்தில் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் நல்லவர்களாக காட்டிவிட்டு வில்லனாக இந்துவை காட்டியது சிலருக்கு அதிருப்தியை கொடுத்தது.
No comments:
Post a Comment