இயற்கை --- 3


 பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்

 


காலைக் கதிரவன் நீலத்திரையிற் – செங்


கதிர்கள் பரப்பி உதிக்கையிலே

கோல நிலவைப் பொழிந்தநிலா - எங்கோ

கூனிக் குறுகி மறைந்திடுமே!

 

சோலைக் குயில்களும் கூவிடுமே – பேடை

சொக்கிட ஆண்மயில் ஆடிடுமே

பாலைப் பொழிந்த பசுக்களுமே – கூடிப்

பசும்புல் மேய்ந்திடச் சென்றிடுமே!

 


விட்டுவி லகிடும் காரிருளே - பூவின்

மொட்டு விரிந்து மலர்ந்திடுமே

சிட்டுக ளோடுதே னீக்களுமே – தேடித்

தேனினை மாந்தி மயங்கிடுமே!

 

'கா!கா!' வெனக்கரிக் காகங்களும் - சும்மா

கரைந்தே கூட்டமும் கூட்டிடுமே  

தாத்தா வுடன்பாட்டி முதலாக – வீட்டிற்

சகலரை யுந்துயில் எழுப்பிடுமே!

 

உந்தியே கிளையெலாம் பற்றிநின்றே  - தாவும்

மந்திகள்  கூட்டமாய்க் கனியுண்ணுமே  

விந்தையாய்த் தனிமையிற் கூவிவருங் - குயில்

சொந்தமாயக் கீதம் இசைத்திடுமே!

 

சேவலும் 'கொக்கரக் கூ'வென்றே – வண்ணச்

சிறகினை விரித்துக் கூவிடுமே

ஆவலாய்க் கோழியும் கொக்கரித்தே - குஞ்சை

அணைத்த படிஇரை தேடிடுமே!   

 

கிளிகளும் துணையொடு கொஞ்;சிநின்றே – அன்பாய்க்

கிள்ளை மொழிதனிற் பேசிடுமே!

களிகொளும் மான்களும் மிரண்டபடி – துள்ளிக்

காவினில் தளையுணச் சென்றிடுமே!

    

No comments: