எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 28 வட்டிக்குப்பணம் பெற்று குடும்ப செலவுகளை சமாளித்த காலம் ! சம்பள உயர்வுகோரி நடந்த சுவரொட்டி போராட்டம் ! ! நடுநிசியில் நடுவழியில் அந்தச் சம்பவம் !!! முருகபூபதி


சந்தர்ப்பங்கள் மனிதர்களை உருவாக்கும் என்பார்கள். மனித வாழ்வையும் சந்தர்ப்பங்கள் திசை திருப்பிவிடும்.

மெளனியாக வாழ்ந்தால்,  சுற்றியிருப்பவர்கள் எச்சரிக்கையோடு அவதானிப்பார்கள்.  மனம்விட்டுப்பேசினால், நெருங்கிவருவார்கள்.

இதில் நான் இரண்டாவது ரகம்.

அதனால் தொல்லைகளும் அதிகம்.  அந்தத் தொல்லைகளையும் அனுபவமாக ஏற்றுக்கொண்டு கடந்து செல்வதும் எனது இயல்பு.

வீரகேசரியில் என்னை நன்கு இனம்கண்டுகொண்ட துணை


ஆசிரியர் கார்மேகம்,  தான்  முக்கிய பொறுப்பிலிருந்த வீரகேசரி நலன்புரிச்சங்கத்தின் செயற்குழுவில்  இணைத்துவிட்டார்.

அச்சங்கத்தின் தலைவராக  பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம்  இயங்கினார்.   ஊழியர்கள் அனைவரும்  அச்சங்கத்தில் அங்கத்துவம் பெற்றிருந்தனர்.  அதில் இணைந்திருக்க மாதாந்த சந்தாப்பணமும் எமது மாத சம்பளத்திலிருந்து கழிக்கப்படும்.

அச்சங்கத்தினால் ஊழியர்கள் பல நன்மைகளையும் பெற்றனர்.  அவர்களின் குடும்ப உறவு ( தாய் – தந்தை ) இறந்தால்,  மரண சகாய நிதியிலிருந்து மரணச்சடங்கிற்கான செலவுக்கும் உதவி கிடைக்கும்.

சைக்கிள்  வாங்குவதற்கும் கடனுதவி பெறலாம். அவ்வாறு கடனுதவி பெற்று நானும் ஒரு சைக்கிள் வாங்கினேன்.

அதனைப்பெற்றுக்கொண்டு இரண்டு மணிநேரத்தில் கொழும்பிலிருந்து  நீர்கொழும்புக்கு வந்தேன். அவ்வாறு நீண்ட தூரம் சைக்கிள் சவாரி சென்றது அதுதான் முதலும் இறுதியுமாகும் !

அந்தச் சைக்கிளுக்கு வாய் இருந்தால், அதுவும் என்னைப்போன்று  பல கதைகளை பேசியிருக்கும். 


வீரகேசரியின்  அனைத்து பிரிவிலிருக்கும் ஊழியர்களுடனும்  நட்புறவை பேணியதனாலும் சிங்களமும் சரளமாக பேசத்தெரிந்திருந்தமையாலும், வீரகேசரி ஊழியர் தொழிற்சங்கத்திலும் இணைந்தேன்.   எமது ஆக்கத்துறை மேலாளர்கள்  ( Production Manager ) விடைபெற்றுச்செல்லும் வேளைகளில்  என்னையே உரையாற்றச்சொல்வார்கள்.   நானும் தமிழிலும் சிங்களத்திலும் வெளுத்து வாங்கிவிடுவேன். பின்னாளில்  பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம்  1983 கலவரத்துடன் விடைபெற்று,  அமெரிக்கா சென்றவேளையிலும்  நடந்த பிரிவுபசாரக்கூட்டத்தில் இரண்டு

மொழிகளிலும் பேசநேர்ந்தது.

தொழிற்சங்கம் சார்ந்த கூட்டங்களில் நான் பேசும்போது,  என்ன பேசுகிறேன்…?  என்பதை மேலிடத்திற்கு சொல்வதற்கும் சில ஒற்றர்கள் எம்மத்தியிலேயே நடமாடியதும் எனக்குத் தெரியும்.

ஒரு சமயம் கருப்பு பட்டி அணிந்த இயக்கமும் நடந்தது.

இன்னும் ஒரு சிலர்  சம்பள உயர்வு கேட்டு சுவரொட்டி ஒட்டிய சுவாரசியங்களும் நிகழ்ந்தன. அதற்கு வீரகேசரி அச்சிடும் காகிதாதிகளையும் அச்சிடும் மையையும் பாவித்தார்கள்.


அந்த நிலைமைக்கு  அவர்கள் தள்ளப்பட்டமைக்கு அவ்வேளையில்  மேலிடத்தின் பாரபட்சமும் பிரதான காரணம்.

 “ சம்பள உயர்வு வேண்டுமா..?  சாரி அணிந்து வாருங்கள். அல்லது மினிஸ்கேர்ட் அணிந்துவாருங்கள்  “ என்றெல்லாம் எழுதப்பட்ட  சுவரொட்டிகள்  நிருவாகத் தலைவர் -  இயக்குநர்களின் வீடுகளுக்கு முன்னாலும் இரவுவேளையில்  ஒட்டப்பட்டன.

அதன் எதிரொலியாக ஒருவர் நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கப்பட்டார். மற்றும் ஒருவர் யாழ்ப்பாணம் வீரகேசரி கிளை அலுவலகத்திற்கு  ( Punishment Transfer ) மாற்றப்பட்டார். மற்றும் ஒருவர் எச்சரிக்கப்பட்டார்.

வீரகேசரி  ஒரு காலத்தில் சில வேலை


நிறுத்தப்போராட்டங்களையும் சந்தித்திருக்கிறது.

வீரகேசரியின் வரலாற்றை மூத்த பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் எழுதிய  ஒரு நாளிதழின் நெடும் பயணம்                     ( A LONG JOURNEY OF A DAILY ) என்ற நூலிலும் பத்திரிகையாளர் அன்னலட்சுமி இராஜதுரை எழுதியிருக்கும் நினைவுப் பெருவெளி  நூலிலும் தெரிந்துகொள்ளலாம்.

 

வீரகேசரியில் ஒப்புநோக்காளராக இணைந்திருந்த காலப்பகுதியிலும்   இலக்கியப்பிரதிகளை  மல்லிகை இதழ்களில் எழுதினேன். வீரகேசரியிலும் அவ்வப்போது எழுதினேன்.

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் தமிழகப்பயணம் பற்றிய நேர்காணலை வாரவெளியீட்டில் எழுதியதும்,  அதன் பொறுப்பாசிரியர் பொன். இராஜகோபால் என்னை அழைத்து,  ஒவ்வொரு வாரமும்  இலக்கியப்புதினங்களை எழுதுமாறு கேட்டதையடுத்து,  உள்நாட்டு, தமிழக இலக்கிய செய்திகளை தொகுத்து எழுதத்தொடங்கினேன். அந்தப்பத்தி எழுத்துக்கு முதலில் இலக்கியச்செய்திகள் என்றும் சில  மாதங்களில் இலக்கியப்பலகணி என்றும் அவரே பெயரும் சூட்டினார்.

அந்தப்பத்தியை எழுதுவதற்குத்தான் ரஸஞானி என்ற பெயரும் வைத்தார். 

ஒரு வார  பத்தி எழுத்திற்கு 20 ரூபா சன்மானம் கிடைக்கும்.


சராசரி மாதம் ஒன்றுக்கு எண்பது ரூபா கிடைக்கும்.   எனது குழந்தைக்கு பால் மாவு வாங்குவதற்கு உதவும். மாதச்சம்பளம் வீட்டு வாடகைக்கும் பஸ் பயணத்திற்கும் அரிசி , மாவு, சீனி, தேயிலை மரக்கறி வாங்கவும் செலவாகிவிடும்.  சிக்கனமாக சீவித்தால்தான், அன்று வீரகேசரி வழங்கிய மாதச்சம்பளத்தில் சமாளிக்கமுடியும்.

உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கமும்  ஒரு கால கட்டத்தில் வீரகேசரியில் துணை ஆசிரியராக இருந்தவர்தான். பின்னாளில் அவர் கொழும்பில் பிரிட்டிஷ் கவுன்ஸிலுக்குச் சென்று, அங்கிருந்து லண்டன் சென்றவர்.  அவரது அக்காலத்தைய  பெயர் ஸ்ரெனிஸ்லஸ்.

நான் அவரை என்றைக்குமே பார்த்திருக்கவில்லை. எனினும் விடுதலைப்புலிகள் உச்சத்திலிருந்த காலப்பகுதியில்  அவரது பேச்சை காணொளிகளில் கேட்டிருக்கின்றேன்.    அவரது எழுத்துக்களை அவர் எழுதியிருக்கும் நூல்களிலும் படித்திருக்கின்றேன்.

அவருக்கு மருமகன் முறையான இரண்டு சகோதரர்கள் வீரகேசரியில் அச்சுக்கோப்பாளர்களாக பணியாற்றினார்கள். மூத்தவர் விக்ரர். அவர் மித்திரனிலும் இளையவர் தர்மா, வீரகேசரியிலும் அச்சுக்கோர்த்தார்கள்.

இருவரும் எனதும் நல்ல நண்பர்கள். தர்மா,  அச்சமயம் எங்களுக்கு பேருதவியாக இருந்தார்.

அவர் வட்டிக்குப்பணம் கொடுப்பார்.

நூறு ரூபாவுக்கு மாதம் ஒன்றுக்கு பத்து ரூபா வட்டி.  அவரிடம் வட்டிக்குப்பணம் வாங்கியும் அங்கிருந்த பல ஊழியர்கள் குடும்ப செலவுகளை சமாளித்தனர். அவர்களில் நானும் ஒருவன்.

இரவில் பத்து மணிக்கு மேல் வேலை செய்தால்,  தொழிற்சங்க விதிமுறையின் பிரகாரம்  இரண்டு ரூபா ஐம்பது சதம் வேதனம்  மேலதிகமாக  கிடைக்கும்.  போக்குவரத்து சிரமத்தை பாராமல்,  இரவு வேலைக்கும் சென்றேன்.

எங்கள் ஊருக்கு  இறுதி பஸ் இரவு பன்னிரண்டரை மணிக்கு.  அதனை தவறவிட்டால்,  அதிகாலை நான்கு மணிவரையில்  புறக்கோட்டை பஸ் நிலையத்தில் தவமிருக்கவேண்டும்.   அதனால்,  நாடாளுமன்றத்தில்   முன்னிரவு கடந்தும்  எமது எம்.பி.க்கள் வெட்டி முழங்கும் செய்திகளுக்காக பத்திரிகை ஊழியர்களும் கண்விழித்திருக்கவேண்டும்.

வீரகேசரி ஆசிரிய பீடத்தின் மேசைகள்  எமக்கு அந்த இரவில் படுக்கையாக மாறிவிடும்.   வீரகேசரி அச்சிடும் காகிதம் படுக்கை விரிப்பாகவும்,  பத்திரிகை பிரதிகள் தொகுத்து வைக்கப்பட்டுள்ள கோவைகள் தலையணைகளாகிவிடும்.

மேலே சுற்றும் காற்றாடி, எம்மைத்தழுவி இரத்தம் உறிஞ்சவரும் நுளம்புகளை கலைத்துவிடும்.

ஒருநாள்  நடந்த சம்பவத்தை இன்றளவும் என்னால் மறக்கவே முடியாது,

அன்று இரவுக்கடமை.  நாடாளுமன்ற நாள்.  செய்திகள் வந்து ஆசிரியபீடத்தில் செம்மைப்படுத்தப்பட்டு, அச்சுக்கோர்க்கப்பட்டு ஒப்பு நோக்கி பக்கங்களும் வடிவமைக்கப்பட்டு, இறுதிக்கட்டமாக ஒப்புநோக்கி முடிக்கும்போது இரவு 12 மணி இருபது நிமிடம்.  இன்னும்  பத்து நிமிடத்தில் எங்கள் ஊருக்குச்செல்லும் இ.போ. ச. பஸ் புறக்கோட்டையிலிருந்து புறப்பட்டுவிடும்.

நான் கையொப்பம் வைத்துவிட்டு, ஓட்டமும்  நடையுமாக ஆமர்வீதிச்சந்தியில் திரும்பி,  நீர்கொழும்பு செல்லும் வீதியில் பஸ்தரிப்பிடம் வருகின்றேன். 

அந்த பஸ் என்னை முந்திக்கொண்டு கடந்து சென்றுகொண்டிருந்தது.

இனி என்ன செய்வது…?  மீண்டும் வீரகேசரிக்கே சென்று  உறங்கவேண்டியதுதான் என நினைத்துக்கொண்டு  திரும்புவதற்கு தயாரானபோது,  ஒரு மோட்டார் சைக்கிள் என்னருகே வந்து நின்றது.

அதிலிருந்து,  “ சகோதரயா  “ என்ற குரல் வந்தது.  அந்த நேர மங்கல் வெளிச்சத்தில் பார்க்கின்றேன்.  அவர் எனக்கு நன்கு தெரிந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் வாஸ் திலகரத்ன.  சிறந்த பேச்சாளர்.

 “ இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறீர்..?  “ எனக்கேட்டார். 

பஸ்ஸை தவறவிட்டதை கவலையோடு சொல்கிறேன்.

 “ பஸ்… இப்போதுதானே போயிருக்கும். ஏறும் விட்டுக்கலைப்போம்.  “  என்றார்.

ஏறினேன். அவரது மோட்டார் சைக்கிள் விரைந்தது.

வத்தளையில் அந்த பஸ்ஸை மறித்து, என்னை அதில் ஏற்றிவிட்டார் அந்தத்  தோழர்.

அந்தத் தோழரையும்  1989 இல்  சுட்டுக்கொன்றுவிட்டார்கள் என்ற  செய்தியை அவுஸ்திரேலியாவிலிருந்து கேட்டு வருந்தினேன்.

அன்று  அந்த பஸ்ஸில் சென்று,  எங்கள் ஊர்  பஸ் நிலையத்தில்   இறங்கி கடற்கரை வீதியில் நான் எனது சைக்கிளை தரித்துவைக்கும் வீட்டின் முற்றத்திற்கு வந்து சேரும்போது,  நடு இரவும் கடந்து இரண்டு மணியாகிவிட்டது.

சைக்கிளை எடுத்தால், அதன் பின்புற சக்கரத்தில் காற்றுப்போயிருந்தது.  விதியை நொந்துகொண்டு,  அதனைத்தள்ளிக்கொண்டு  வீடு நோக்கி நடக்கிறேன்.

இரவில் கடற்றொழிலுக்குச்செல்பவர்கள் எதிர்ப்பட்டு நேரம் கேட்பதும் வழக்கம்.

எனது வாடகை வீட்டுக்கு மேலும்  ஒன்றைரை மைல் தூரம். நடக்கின்றேன்.  மூன்று ஆலயங்கள்,  மூன்று பாடசாலைகள்,  இரண்டு  கத்தோலிக்க தேவாலயங்கள்,  இடையில் சில கத்தோலிக்க தேவமாதா சிலைகள், ஒரு முச்சந்தியில்  புனித செபஸ்தியார்  குதிரையில் ஏறி அமர்ந்திருக்கும் திருச்சொரூபம்.

வீதியில் ஒரு சில கடற்றொழிளார்கள்  நடுஇரவு தொழிலுக்கு செல்வதைத்தவிர, அங்கே  அந்த நடுநிசியில்  தெருநாய்களைத்தான்  காணமுடியும். 

புனித செபஸ்தியார் திருச்சொரூபம் அமைந்துள்ள முச்சந்தியில்தான்  கத்தோலிக்க மக்களின் மயானமும் இருக்கிறது.  வழியில் வரும் ஆலயங்கள்,  தேவாலயத்தை  ஒரு கணம் நின்று வணங்கிவிட்டு, அந்த மயானத்தையும் நின்று வணங்கிவிட்டு நகருகின்றேன்.

மயானங்களை வணங்குவதும் எனது இயல்பு.  ஒரு நாளைக்கு நாம் செல்லவிருக்கும் இடமல்லவா..? எம்முன்னோர்கள் சென்ற இடமல்லவா…?

குளிர்காற்று வீசத்தொடங்கியது.  எனது மேனியில் சில மழைத்துளிகள்.  மழைக்காற்றின் அறிகுறி தெரிந்ததும், வேகமாக நடக்கின்றேன்.  காற்றில்லாத  சைக்கிளின் சக்கரம் தடங் தடங் என ஒலி எழுப்புகிறது.

செபஸ்தியார் அமர்ந்திருக்கும்  குதிரை திருச்சொரூபத்திற்கு முன்பாக ஒரு இளம் கர்பிணித்தாய்  குனிந்து நின்றவாறு இடுப்பை பிடித்துக்கொண்டு  குரலெடுத்து அழுதுகொண்டிருக்கிறாள். அவளுக்கருகே, அவளது தாய்,                  “  அழவேணா…. அழவேணா….. மெதுவா போவோம்.  என்ர சோமல மாதவே…  “   என்கிறாள்.

அந்த மக்கள் எதற்கும் சோமல மாதாவைத்தான் அழைப்பார்கள்.

அந்தத்தாய் என்னைக்கண்டதும்,   “  தம்பி…  ஆஸ்பத்திரிக்குப்போகோணும்.  ஒரு கார் பிடிச்சுத்தர ஏலுமா… “ எனக்கெஞ்சுகிறாள்.

மழைவேறு தூறத்தொடங்கிவிட்டது. வீதியில்  வேறு எவருமில்லை.  ஒரு சில வீடுகளின் முற்றத்தில் கார் நிற்பதை கண்டுவிட்டு,  அந்த வீடுகளின்  மூடியிருந்த கேட்டுகளில் தட்டி உரத்து குரல் கொடுக்கிறேன்.

அந்த நடுச்சாமத்தில் யார்தான் கதவு திறப்பார்கள்.

அந்த இளம் கர்ப்பிணி யுவதி துடித்துக்கொண்டிருக்கிறாள்.

அவளது நல்லநேரம்போலும் , ஒரு கார் எதிர்ப்புறமிருந்து வந்துகொண்டிருந்தது.  அக்கார்  உல்லாசப்பயணிகள் விடுதிகள் பக்கமிருந்து வந்து கொண்டிருந்தது.

வீதியின் குறுக்கே நின்று அதனை நிறுத்தினேன்.  சாரதி மாத்திரம் இருந்தார்.  நிலைமையை சொன்னேன். அந்தச்சாரதி மனம் இரங்கி,   அந்த இளம்  கர்ப்பிணி யுவதியையும் தாயையும் ஏற்றிக்கொண்டார்.

அவர்களிடம் பணம் வாங்கவேண்டாம்.  அவர்கள் ஏழைகள்.  தாமதிக்காமல் பெரியாஸ்பத்திரியில் சேர்ப்பிக்கச் சொன்னேன்.

 “ சரி… மாத்தையா  “ என்று அவர்சொல்லிவிட்டு, காரை இயக்கினார்.  என்ன கஷ்ட காலம்…!?   கார் இயங்கவில்லை.

காரின் பட்டரி பலவீனமடைந்திருக்கவேண்டும்.

காரை தள்ளினால், மீண்டும் இயங்கும் என்றார் சாரதி.

தன்னந்தனியனாக மூச்சுப்பிடித்து அக்காரை தள்ளினேன்.  காருக்குள் ஆசனத்தில் மூன்று உயிர்கள் என்றால்,  கண்ணுக்குத் தெரியாத ஒரு உயிரும் குழந்தை வடிவத்தில் கருவறையில் துடித்துக்கொண்டிருக்கிறது.

 “ கடவுளே… அந்த கர்ப்பிணித்  தாய்க்கு  துன்பம் ஏதும் நேர்ந்துவிடக்கூடாது.  “ மனதுக்குள் பிரார்த்திக்கொண்டே மீண்டும் மூச்சுப்பிடித்து காரைத்  தள்ளினேன்.

கார் ஸ்டார்ட் ஆகியது.

சாரதி,   “  ஸ்தூத்தி  மாத்தையா  “ என்று சிங்களத்தில் நன்றி சொன்னார்.  அந்தத்  தாயும் கர்ப்பிணி மகளான அந்தச்  சேயும் கையெடுத்து கும்பிட்டார்கள்.

அவள் வயிற்றிலிருக்கும்  சேயும் சுகமாக வெளியே வந்து இந்த உலகை பார்க்கவேண்டும் என்று எனது மனம் மீண்டும் பிரார்த்தித்தது.

கார் விரைந்து சென்றது.

வீதியோரத்தில் சாத்தியிருந்த எனது சைக்கிளை எடுத்துக்கொண்டு மீண்டும் நடக்கிறேன். மழை சோவெனப்பொழிகிறது.

தெப்பமாக நனைந்து சென்று எனது வீட்டை தட்டும்போது அதிகாலை மூன்று மணியும் கடந்திருக்கும்.

எனது அரவம் கேட்டு துயில் எழுந்த எனது சகதர்மினியிடம்  தாமதத்திற்கான காரணம் சொன்னபோது,   “  அந்தப்பெண்  தொடர்ந்தும் நடந்தே சென்று ஆஸ்பத்திரியை அடைந்திருந்தால் சுகப்பிரசவமாக பிள்ளையை பெற்றெடுத்திருப்பாள். நீங்கள் இவ்வாறு மழையில் நனைந்து ஹீரோவாகியிருக்கத் தேவையில்லை  “  என்று சலிப்போடு சொல்லிவிட்டு,  தலை துவட்டுவதற்கு துவாய் எடுத்து தந்துவிட்டு, எமது குழந்தையை அணைத்துக்கொண்டு உறங்கிவிட்டாள்.

எனக்காக அன்று இரவு அவள் சமைத்துவைத்திருந்த புட்டும்  கறியும்  உலர்ந்து  குளிர்ந்திருந்தன.

சாப்பிட்டு உறங்கி, மீண்டும் மறுநாள் காலை எழுந்து கடமைக்குச்சென்றேன். செல்லும் வழியில் எனது சைக்கிளுக்கு காற்றும் அடித்துக்கொண்டேன்.

இச்சம்பவம் நடந்து பல வருடங்கள் கழிந்துவிட்டன. நானும் மறந்துவிட்டேன்.

1983  இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி தடைசெய்யப்பட்டதையடுத்து,  கண்காணிப்புகளும்  நெருக்கடிகளும்  தொடர்ந்தமையால்,  நானும்  வெளியேற நேர்ந்தது.

இரண்டு பெண்குழந்தைகள்.  மற்றும் ஒரு குழந்தை பிறக்கவிருந்த காலப்பகுதி.  குடும்பத்திற்காகவாவது நான் உயிர்வாழவேண்டும்.

சந்தர்ப்பங்கள் மனிதர்களை உருவாக்கும் .  மனித வாழ்வையும் சந்தர்ப்பங்கள் திசை திருப்பிவிடும். என்று இந்தப்பத்தியின் தொடக்கத்தில் சொல்லியிருக்கின்றேன்.

அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் எனது வாழ்வை 1987 தொடக்கத்தில் திசை திருப்பியது.

அந்த ஆண்டு எனது மூன்றாவது குழந்தையாக மகன் பிறந்தபோது நான் அருகில் இல்லை.  தாய்க்கு இடுப்புவலி வந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது,  குழந்தையையும் தாயையும் சத்திர சிகிச்சையின் மூலம்தான் பிரிக்கமுடியும் என்று சொல்லிவிட்டார்கள்.

தனியார் மருத்துவமனையிலிருந்து  பெரியாஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றுவிட்டார்கள் என்ற தகவலை அறிந்தேன்.

அன்று 1987 ஜூன் 24 ஆம் திகதி.

அவுஸ்திரேலியா நேரம் மாலைவேளையில் எமக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கும் செய்தி என்னை வந்தடைந்தது.  சத்திரசிகிச்சையின்றி சுகப்பிரசவம் என்று எனது அம்மா தொலைபேசி ஊடாக சொன்னார்கள்.

தாயும் சேயும் வீடு திரும்பியபின்பு, பத்து நாட்கள் கழித்து எனக்கு  வந்த  கடிதத்தில்,     “ அன்று ஒரு நாள்  நடு இரவு யாரோ ஒரு முன்பின் தெரியாத கர்ப்பிணிப்பெண்ணுக்கு நீங்கள் உதவிசெய்துவிட்டு வந்தபோது,  நான் ஏதேதோ சொன்னேன்.  அன்று நீங்கள் செய்த அந்தப்புண்ணியம்தான், இன்று என்னையும் உங்கள் குழந்தையையும் காப்பாற்றியிருக்கிறது  “  என்ற வரிகள் இருந்தன.

( தொடரும் )

No comments: