கப்புசீனோ காதல்- குறும்படம் (சில குறிப்புகள்)


கன்பரா யோகன்


ஒரு கதையொன்றை திரைப்படமாக தயாரிப்பதிலும்,  குறும்


படமாக எடுப்பதிலும்  உள்ள பல சவால்களைத் தாண்டி சில  முயற்சிகள் அவுஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளன. இந்தப் பின்னணியில் அண்மையில் வெளிவந்த சோபனம் ட்ராமா கிரீயேஷன்ஸ் சார்பாக டொக்டர் ஜெயமோகன் அவர்கள் எழுதி தயாரித்த  குறும்படமான 'கப்புச்சீனோ காதல்' என்ற குறும்படத்தைப் பற்றி சில எண்ணங்களைப் பகிரலாம் என நினைத்தேன்.  (இதைப்பற்றிய ஒரு தகவல் முன்னரும் தமிழ் முரசில் வெளியாகியிருந்தது.)

 

இந்தக் குறும்பட கதையின் கருவைத் தேர்ந்தெடுத்ததின் மூலம் அவர் அநேகமான திருமண வயது பிள்ளைகளின்  பெற்றோரின்(தமிழ்) அங்கலாய்ப்புகளை பிரதிபலிக்க விரும்பி இதை தயாரித்திருக்கிறார் என்பது  தெரிகிறது. உண்மையில் இது பல பெற்றோருக்கு நடுக்கடலில் தத்தளித்து நிற்பது போன்ற நிலையை புலம் பெயர்ந்த பல நாடுகளில் ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மைதான்.  ஒரு வேளை  அவர்களுக்கு இந்த  குறும்படம் ஆறுதலை கொடுக்கலாம், அல்லது நம்பிக்கையைக் கொடுக்கலாம்.

 


இது புலம் பெயர் நாடுகளில் மட்டுமுள்ள பிரச்சினையா அல்லது உலகெங்கிலுமுள்ள இன்றைய தலைமுறையின் பிரச்சினையா என்பதும் கேள்விக்குரியதாகவேயுள்ளது.  திருமணத்தை பின் போடுதல் அல்லது தனித்து வாழுதல். அதிக பட்ச  எதிர்பார்ப்பு பிள்ளைகளில் மட்டுமல்ல பெற்றோர்களிலும் உள்ளதால் ஏற்படும் சிக்கல்கள். காதலில் ஏற்படும் மன முறிவு, அதனால் மீண்டும் திருமண வாழ்வுக்கு தயக்கம்  ஏற்படுத்தும் தாமதம் என்பன இந்தக் குறும்படத்தில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன.  இது போன்றே திருமணத்துக்குப் பின்னரான மண முறிவு என்பதுவும் அதிகரிக்கும் பிரச்சினைகளில் ஒன்றுதான். 

 

இந்த குறும் படத்தின் தயாரிப்பை பற்றிப் பார்த்தால் குறிப்பாக உரையாடல் யதார்த்தமான மொழி நடையிலும், தேவைக்கேற்ப ஆங்கிலமும் கலந்து எழுதப்பட்டிருக்கிறது. நடிகர்கள் யாவரும் இயல்பாகவே நடித்திருக்கிறார்கள். நான்கு பிரதான பாத்திரங்களும், சில துணைப் பாத்திரங்களும் வருகின்றனர். ஒரு சிலர் முதன் முதலாக நடித்திருக்கவும் கூடும். சிலர் குறிப்பாக பையனின் தாயாக நடித்த ஷாமினி ஸ்டோரர் போன்றவர்கள் ஏற்கனவே நடிப்பு அனுபவம் கொண்டவர்கள். 

ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்திருந்தது. பொருத்தமான காட்சிக் களங்களே காட்டப்பட்டன. பின்னணி  இசையும்,  ஒரு பாடலும் இடையில் பொருத்தமாகவே அமைந்திருந்தன.

சற்று ஆச்சரியமாகவிருந்த ஒரு விடயம் இந்த தலைமுறை இளைஞனொருவன் கம்பராமாயணத்தில் ஆர்வம் வைத்திருப்பதாக காட்டப்பட்டதுதான்.

 

ஜெயமோகன் அவர்கள் ஏற்கனவே பல நகைச்சுவை நாடகங்களை அவுஸ்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் எழுதி மேடையேற்றியவர். அவற்றுள் பல தமிழர்களின் சின்னத்தனங்களை நையாண்டி செய்யும் நகைச்சுவை நாடகங்களாக இருந்தன. அந்நாடகங்களின் மூலம் திரட்டிய நிதியை கொண்டு அவர் ஈழத்தில் பல நற்பணிகளை செய்து வருவதும் பலர் அறிந்திருப்பர்.

இந்த கோவிட்-19 கட்டுப்பாட்டுக் காலத்தில் நாடகங்களை மேடையேற்றுவதில் உள்ள சிரமங்களைத் தவிர்த்து இப்பபடி குறும்படங்களைத் தயாரிப்பது நடை முறைக்கு சாத்தியமான புத்திசாலித்தனமான முயற்சி.

 

இதை விட இந்த குறும்பட முயற்சி மூலம் ஒரு முக்கியமான கருத்தை வெளிக்கொணர ஜெயமோகன் விளைந்திருப்பது உண்மையில் பாராட்டுக்குரிய விடயம்.  தொடர்ந்து அவர் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துவோம்.

 

 

குறும்பட இணைப்பு கீழே உள்ளது.

 

https://www.youtube.com/watch?v=43NRnqdZjqc&feature=emb_logo

No comments: