“தங்கத்தாத்தா” நவாலியூர் சோமசுந்தரப்புலவர் திருவுருவ ஓவியம் திறப்பு விழா நவாலி அட்டகிரி கோயிலிலே அரங்கேறியது.


 ……………
... பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்


 

நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியது!


தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் திருவுருவ ஓவியம் ஒன்றை நீண்ட நாள் நிலைத்திருக்க கூடியவகையில் பெரிதாக வரைய வேண்டும் என்ற விருப்பம் இன்று நிறைவேறியது.

சிங்கைத் தமிழார்வலர் திரு. கோபால் மோகன்ராசு அவர்களின் முழுநிதிப்பங்களிப்பில ஓவியர் சு.ராஜன்அவர்களால பதினையாயிரம் செய்யுள்களுக்கு மேல் பாடிய ஒப்பற்ற இந்த மண்ணின் புலவருக்கு வரையப்பெற்ற ஓவியத்தை வலி. தென் மேற்கின் பிரதேச செயலாளர் அவர்களும் இருபத்துமூன்று ஆண்டுகளாக நவாலிவடக்கின் கிராம அலுவலராக கடமையாற்றி ஓய்வுபெற்ற திரு. அ.தனபாலரத்தினம் அவர்களும் இணைந்து

புலவர் பிறந்த போது

எந்த ஆலயத்தின் மணிகள் தானாகவே ஒலித்தனவோ அந்த ஆலயமாகிய அட்டகிரிமுருகன் ஆலயத்தில் திறந்து வைத்தனர்.

எனது பிரிவில் உள்ள புலவரின் வீடும் வளாகமும் அவரது நினைவாலயமாக மாற்றப்பட வேண்டும் என்பதும் அவரது பாடல்களும் எழுத்துக்களும் அதைத்தளமாக வைத்து அடுத்த தலைமுறைக்குகையளிக்கப்படவேண்டும் என்பதுமே அனைவரது பெருங்கனவாகவும் உள்ளதுஇப்படி நவாலி கிராம அதிகாரியாகக் கடமையாற்றும் திரு சஜீவன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

 

 

புலவரின் திருவுருவச் சிலை

 

புலவரின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு எதிரே ஆசுப்பத்திரி வீதியிலே ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலில் நிறுவப்பெற்றது. பின்பு நவாலி மகா வித்தியாலத்திலும் வவுனியாவிலும் வேறு வேறு காலங்களில் நிறுவப்பெற்றிருப்பது யாவரும் அறிந்ததே!.

 

 தங்கத் தாத்தா அவர்க “நாவலர் காட்டிய நல்வழியிலேயே நன்னகர் நவாலியிலே பிறந்து ஆயிரமாயிரம் செந்தமிழ்ப் பாக்களை இயற்றி ஈழமணித் திருநாட்டில் புலவர் பரம்பரையை இலங்கச் செய்து புகழாரஞ் சூட்டிய தனிப்பெருமை ‘தங்கத் தாத்தா’ என்று தமிழறிஞர்களால் அழைக்கப்பட்டுவரும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரையே சாரும்…….இயற்கையிலேயே இன்றமிழ்க் கவி புனையும் கொடையைக் கைவரப்பெற்ற புலவர் பன்நூற் பயிற்சியும் பழுத்த தமிழ்ப் புலமையும் பரந்த உலகியல் அறிவும் நிறைந்த பண்பும் கொண்டவராகத் திகழ்ந்தவர். தனது 15ஆம் வயதிலிருந்தே சொல்நயம் பொருள் நயம் சந்த இன்பம் ஓசைநயம் உவமையணி கற்பனை வளம் போன்ற சிறப்பு அம்சங்கள் விஞ்சும் வண்ணம் செந்தமிழ்ப் பாக்களை யாத்து அறிவுக் கதிர்மணி ஆரமாக்கித் தமிழ் அன்னைக்கு அணிசெய்து அழகு பார்த்தவர் புலவர். ……. சுருங்கச் சொல்லின் அவர் கல்வியோ எழுமையும் பயன்தரும் பழுதறு கல்வி.! அவர் ஈட்டிய செல்வமோ இருமையும் உதவிடும் பெருநிதிச் செல்வம்! அவர் சிந்தனைத் தேடலோ விழுமிய சிவநெறி மெய்ப்பொருள் உணர்வு! அவரின் அமைதி உள்ளமோ அரனின் விரைமலர்ச் சேவடி கருதிடும் உள்ளம்! ……….. செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்பொருள் கூட்டிச் சீரிய கூரிய செழுந்தமிழ்ச் சொற்களால்  வல்லென்ற பண்டிதரும் வாய்ஊறி மதுரிக்க யாக்கப் பெற்றவை அவரின் படைப்புகள்………….  “சொல்லென்ற மலரிலே பொருளென்ற புது மது சொட்டிச் சுரக்கும்  அமுத சுரபியாய் ஒலிக்கின்ற சோமசுந்தர நாம சுகிர்தனைத் துதி செய்வோமே!’ என்று மனமுருகிப் பாடித் துதிசெய்து  மகிழ்ந்தவர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள். புலவரின் சிறந்த மாணாக்கரான அமரர் வித்துவான் வேந்தனார் அவர்களோ

மூன்று குறியும் பொட்டும் மூக்கிற்கண்ணாடியும் பால் போன்ற மைந்த தாடிப் பொலிவழகும் - தோன்றுகலை அன்புசொரி கண்ணும் அருட்சோம சுந்தரனை

இன்பநினைவு ஊட்டும் எமக்குஎன்று பாடி மகிழ்ந்தவர்.

 

 தங்கத் தாத்தா’   அருளிய கந்தவனநாதர் நான்மணிமாலை மற்றும் கந்தவனநாதர் பதிகம் ஆகியவற்றை அரங்கேற்றி மகிழ்ந்த  தவத்திரு யோகர்சுவாமி அவர்கள்.  

 

கந்தவனக் கடவை பதியமர்ந்த அருள்மிகு முருகன் மேலே சோமசுந்தரப் புலவர் அருளிய கந்தவனநாதர் நான்மணிமாலை மற்றும் கந்தவனநாதர் பதிகம் ஆகிய நூல்களைத் தமிழறிஞர் மயில்வாகனம் (விபுலானந்தஅடிகளார்) - சங்கரசுப்பையர் (சச்சிதானந்த ராஜயோகி) --- திக்கம் செல்லையாபிள்ளை போன்ற சான்றோர் அலங்கரித்த  சபையிலே சிவயோக சுவாமிகள் அரங்கேற்றி வைத்த நிகழ்வு  இறையருளாலே நல்லபடி நடந்தேறியது..

சங்கீதம் கற்ற திரு இராமநாதன் என்;பவர் இந்தப் பதிகங்களை அருமையாகத் தனது இனிமையான குரலிலே இசைத்தார். எல்லோரையும் புலவரின் பாடல்கள் மிகவும் கவர்ந்து மெய்மறக்கச் செய்துவிட்டது. தெய்வமணம் கமழும் பாடல்களைப் பாடி முடித்ததும் அங்கே ஒருவரும் எதிர்பாராத விதமாக ஒரு வண்ணமயில் எங்கிருந்தோ பறந்து வந்து தனது தோகையை விரித்து ஆடியது எல்லோரையும் பிரமிக்கச் செய்தது. தமிழ் மாந்தி மகிழும் முருகப்பெருமானின் ஊர்தியான மயில் அங்கு வந்து ஆடியது ஒரு அற்புதமே. தெய்வீகப் புலவர் பாடிய பாட்டைப் பாடும்பொழுது மயில் வந்து ஆடும்தானேஎன்று சொல்லிப் பாடலின் தரத்தை மிகவும் மெச்சிய யோகர்சுவாமிகள் புலவரைப் பாராட்டினார்கள். விபுலானந்த அடிகளார் இந்த நிகழ்ச்சியைத் தனது நூல் ஒன்றிலே பதிவு செய்துள்ளார்.  

 


No comments: