மல்லிகை ஜீவாவுக்கு கலை, இலக்கியம், மற்றும் பல்வேறு துறைகளையும் சார்ந்தவர்களுடன் தோழமை நீடித்திருந்தது.
சாதாரண பாமர மக்கள் முதல் படித்த வர்க்கம் வரையில் அவரது நட்பு வட்டம் பெரியது.
ஜீவா மது அருந்தமாட்டார். ஆனால், மதுப்பிரியர்களான
எழுத்தாளர்களுடன் அமர்ந்து அவர்கள் மது அருந்துவதை வேடிக்கை பார்த்தவாறு பேசிக்கொண்டிருப்பார்.
யாழ்ப்பாணம் முற்றவெளிக்கு அருகாமையிலிருந்த பிரீமியர் கஃபேயில் பெரும்பாலும் மாலைவேளைகளில் அவர்கள் கூடுவது வழக்கம். உள்நாட்டு அரசியல் உலக அரசியல் இலக்கியம் சமூகம் என்ற ரீதியில் அவர்களின் கலந்துரையாடல் நீளும். எஸ். பொன்னுத்துரை, அழகு சுப்பிரமணியம், ஏ.ஜே. கனகரட்ணா ஆகியோரும் அதில் அடக்கம்.
ஜீவா தனக்கு ஏதும் குளிர்பானம் அல்லது பிளேயின் சோடா வரவழைத்து அருந்துவார். மற்றவர்கள் மதுவில் இரண்டறக்கலப்பார்கள்.
அவர்களில் ஒருவர் வேண்டுமென்றே ஜீவாவுக்கு முன்பாக ஒரு கிளாஸில் சாராயத்தை வார்த்து வைப்பார். யாராவது அந்தக்காட்சியை பார்த்துவிட்டால், ஜீவாவும் இந்தக்கூட்டத்துடன் சேர்ந்து “ தண்ணி “ அடிக்கிறார் என்று எண்ணிக்கொண்டு வெளியேபோய்ச்சொல்லட்டும் என்ற உள்நோக்கம்தான் அந்த நண்பருக்கு !
( இக்காலம் என்றால் அதனை கைத்தொலைபேசியில் படம்
எடுத்து முகநூலில் பதிவேற்றி, கும்மியடித்திருப்பார்கள் )
நல்லகாலம் அன்று முகநூல் இல்லை!
ஜீவாவும் சிரித்துக்கொண்டே, “ செய்யிறதை செய்யுங்கோ. என்னை நீங்கள் உங்கள் வழிக்கு இழுக்கவே முடியாது “ என்பார்.
ஒருதடவை அவரும் அவரது நண்பர்களும் கீரிமலைக்கு தத்தம் சைக்கிள்களில் சுற்றுலா சென்றார்கள். அவர்களில் சில எழுத்தாளர்களும் இடம்பெற்றிருந்தனர்.
கீரிமலைக்குச்சென்றபோது, அங்கும் அந்த மதுப்பிரியர்கள் தம்வசம் மதுப்புட்டிகளும் எடுத்து வருவார்கள் என்பது ஜீவாவுக்குத் தெரியாது.
மாலை முதல் இரவுவரையில் அவர்களுடன் ஜீவாவும் இருந்தார். படிப்படியாக மதுவெறி ஏறிய நண்பர்கள் படிப்படியாக தரையில் துண்டை விரித்து சுருண்டுவிட்டார்கள்.
அவர்களை அந்தக்கோலத்தில் விட்டுச்செல்லவிரும்பாத ஜீவா,
தானும் ஒரு மரத்தின் கீழே துண்டைவிரித்து படுத்துவிட்டார். ஜீவா, சரிந்து படுத்தவுடன் உறங்கிவிடும் இயல்புள்ளவர்.
நடுஇரவாகிவிட்டது. ஜீவா ஆழ்ந்த உறக்கம். வெறி தெளிந்த நண்பர்கள் சிலர் எழுந்து, உறக்கத்திலிருந்த ஜீவாவை அலாக்காகத் தூக்கி வந்து கீரிமலை கேணிக்குள் வீசிவிட்டார்கள்.
ஜீவா அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு துடிதுடித்து கேணியிலிருந்து எழுந்து வந்து திட்டத்தொடங்கிவிட்டார். நண்பர்களோ சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
“ இனிமேல் உங்கள் சகவாசமும் வேண்டாம். எதுவும்
வேண்டாம். நான் புறப்படுகிறேன் “ எனச்சொல்லியவாறு தனது சைக்கிளை ஜீவா எடுத்தார்.
அப்போதுதான் மற்றும் ஒரு நண்பர் மதுவெறியில் புலம்பிக்கொண்டு ஒரு தெரு நாயை அணைத்துப்படுத்திருக்கும் அற்புதக்காட்சியை பார்க்கிறார்.
“ அந்தா பாருங்கள்… உங்கட சாராயம் என்னவெல்லாம் செய்கிறது “ எனச்சொல்லிக்கொண்டு தனது ஈர உடையுடனே சைக்கிளில் ஏறி யாழ்ப்பாணம் புறப்பட்டார்.
தெருநாயை தழுவிக்கொண்டு உறங்கிய எழுத்தாளர் யார்…? என்பதை ஜீவா இறுதிவரையில் வெளியே சொல்லவில்லை. !
பாதுகை எழுதியவர் பாதுகையும் ஏந்தினார் !!
ஜீவா 1960 களில் எழுதிய இலக்கியப்படைப்புகளில் பாதுகை சிறுகதை குறிப்பிடத்தகுந்தது. இச்சிறுகதை குறித்து எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தன.
எனினும், இச்சிறுகதை பல தடவை மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அக்கதையின் நாயகன் ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளி. கஸ்தூரியார் வீதியில்தான் அவரது தொழிலகமும் அமைந்திருந்தது. அவரது பெயர் முத்து முகம்மது. அத்துடன் சிறந்த இலக்கிய வாசகர். அவரே பாதுகை சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரையும் எழுதினார்.
பாதுகை கதை எழுதிய ஜீவா ஒரு சந்தர்ப்பத்தில் மற்றும்
ஒருவரின் பாதுகையை ஏந்திச்சென்று, பாதுகாத்து வைத்துக்கொடுத்த செய்தி ஜீவாவின் மறைவுக்குப்பின்னர்தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் செங்கொடி ஏந்திய இரண்டு கட்சிகள் அக்காலத்தில் பிரபலமாக விளங்கின. இரண்டும் ஒரு காலகட்டத்தில் இணைந்திருந்தன. பின்னாளில் அந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மாஸ்கோ அணி – பீக்கிங் அணி என்று பிளவு கண்டது.
மாஸ்கோ அணியில் தோழர்கள் அ. வயித்திலிங்கம், வி. பொன்னம்பலம், பொன். குமாரசாமி, ஸி. குமாரசாமி, ஆர். ஆர். பூபாலசிங்கம், ஐ.ஆர். அரியரத்தினம், விஜயானந்தன் , எம். சி. சுப்பிரமணியம், ஜீவா ஆகியோர் உட்பட பலர் அங்கம் வகித்தனர்.
பீக்கிங் அணியில் தோழர்கள் என். சண்முகதாசன், கே. ஏ. சுப்பிரமணியம், செந்திவேல், கந்தசாமி, கே. டானியல் உட்பட பல தோழர்கள் அங்கம் வகித்தனர்.
இரண்டு அணிகளும் கருத்துப்போராட்டம்
நடத்திக்கொண்டிருந்த காலப்பகுதியில் மாஸ்கோ
அணியைச்சேர்ந்தவரும் கொழும்பு மத்தியிலிருந்து நாடாளுமன்றம் தெரிவாகும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் எழுத்தாளரும் சிறந்த பேச்சாளருமான தோழர் பீட்டர் கெனமன் , யாழ்ப்பாணத்திற்கு அவரது அணி சார்ந்தவர்களால் அழைக்கப்பட்டார். அந்தக்கூட்டம் யாழ். மாநகர சபை மண்டபத்தில் நடக்கிறது.
அதனைக்குழப்பவேண்டும் என்ற எண்ணம் பீக்கிங் அணிக்கு தோன்றியதும், அதன் இளைஞர் பிரிவிலிருந்த தோழர் செந்திவேலும்
மற்றும் சில இளம் தோழர்களும் அந்தக்கூட்டத்திற்குச் சென்று சபையில் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். பீட்டர்கெனமன் பேசிக்கொண்டிருந்தபோது இடையில் குறுக்கிட்ட செந்திவேல், “ நீங்கள் பேசுவது தவறு “ என்று உரத்த குரல் எடுத்துப்பேசியதும், அவரது அணியைச்சேர்ந்தவர்களும் ஆளுக்காள் எழுந்து கூக்குரலிட்டனர். நிலைமை மோசமடைந்து, கதிரைகளும் தூக்கப்பட்டு, அடிதடியாகிவிட்டது.
மாஸ்கோ அணியைச்சேர்ந்த ஒருவர் செந்திவேலை மடக்கிப்பிடித்து அவரது கழுத்தை கெட்டியாக அழுத்திக்கொண்டார். அதனை கண்ணுற்ற அதே மாஸ்கோ அணியைச்சேர்ந்த ஜீவா ஓடிவந்து “ விடு, விடு… அவரை விடு நாமெல்லோரும் ஒரு இரத்தம். எதனையும் பேசித்தீர்க்கலாம் “ எனச்சொல்லி செந்திவேலை அந்த நபரிடமிருந்து விடுவித்துள்ளார்.
அங்கு நடந்த களேபரத்தில் செந்திவேல் தனது பாதணியையும் விட்டுவிட்டு போய்விட்டார். ஜீவா அதனை பத்திரமாக எடுத்துச்சென்று தனது கஸ்தூரியார் வீதி ஜோசப் சிகையலங்கார நிலையத்தில் வைத்திருந்து, மறுநாள் அந்த வீதியில் நடந்து வந்துகொண்டிருந்த தோழர் செந்திவேலிடம் தனது கையாலேயே எடுத்துவந்து கொடுத்தாராம்.
இதுதான் ஜீவா !
இந்தத் தகவலை கடந்த 06 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தேசிய கலை இலக்கியப்பேரவை எழுத்தாளர் ஐ. சாந்தன் தலைமையில் நடத்திய ஜீவா நினைவஞ்சலிக்கூட்டத்தில் பேசும்போது தோழர் செந்திவேல் குறிப்பிட்டார்.
மாற்றுக்கருத்துக்கொண்டிருந்தவர்களிடத்திலும் ஜீவா காண்பித்த மனிதாபிமானப்பண்பை அக்கூட்டத்தில் மேலும் சிலரும் எடுத்துரைத்தனர்.
வேட்டியை மடித்து சண்டிக்கட்டு கட்டினார் !!!
மல்லிகை ஜீவாவுக்கு அந்திம காலத்தில் நினைவாற்றல் மங்கியிருந்தாலும், அவர் தீவிரமாக இயங்கிய காலத்தில் நல்ல நினைவாற்றலுடன் வாழ்ந்தவர்.
ஒருதடவை அவருடன் கொழும்பு புறக்கோட்டையிலிருந்து இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டியில் வெள்ளவத்தைக்கு சென்றுகொண்டிருந்தேன். அக்காலப்பகுதியில் அந்த பஸ் வண்டிகளில் சாரதியின் ஆசனத்திற்கு இடப்பக்கமாக இருக்கும் வாயிலால் இறங்குவதற்குரிய அரைக்கதவு சாரதியாலேயே இயக்கப்பட்டது.
இறங்கவேண்டிய இடம் வருவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்னர் பயணிகள் மணியடித்ததும், சாரதி தரிப்பிடத்திற்கு அருகில் பஸ்ஸை செலுத்தி, பிரேக்போட்டு நிறுத்தியதும், அவரே தனது ஆசனத்திலிருந்தவாறு நீண்ட இணைப்பின் மூலம் அந்த அரைக்கதவை திறந்துவிடுவார்.
ஜீவா, இறங்குவதற்கு அவசரப்பட்டு, அந்த அரைக்கதவை காலால் உதைந்தார்.
அவர் அவ்வாறு செய்ததும் சாரதி கோபமுற்று, “ மொனவத… பொட்டாக் இன்னவாக்கோ… “ என்று சத்தமிட்டார்.
அதன் அர்த்தம், “ என்னது… கொஞ்சம் பொறு “ என்பதாகும்.
ஜீவாவுக்கு சிங்களம் தெரியாது, கையால் அந்த அரைக்கதவை காண்பித்தார். சாரதி மீண்டும் கோபத்தில் முதலில் சொன்னதையே மீண்டும் கடும்கோபத்துடன் சொல்லிவிட்டு அந்த அரைக்கதவைத் திறந்தார்.
நானும் ஜீவாவை தொடர்ந்து வெளியே இறங்கினேன். வீதியின் நடைபாதையில் நடக்கும்போது, ஜீவா “ அந்த சாரதி என்னசொன்னான்…? ஏதோ கோபத்தில் சொன்னதுபோன்று இருந்தது, சொல்லும் அவன் என்ன சொன்னான்…? “ எனக்கேட்டார்.
நான் “ சிங்களத்தில் மொனவத என்பது என்ன…? என்னவாம்..? என்று பொருள்படும் “ என்று விளக்கம் அளித்தேன். ஆனால் அவன் கோபத்துடன்தான் சொன்னான் என்றும் மேலும் விளக்கினேன்.
அவ்வளவுதான். அதற்குப்பிறகு அந்தச் சம்பவம் பற்றி ஜீவா பேசவேயில்லை.
சுமார் நான்கு மாதங்கள் கழித்து ஜீவா அம்மாதத்திற்குரிய மல்லிகை இதழ் அச்சுவேலைகளை முடித்துக்கொண்டு பிரதிகளுடன் மதியம் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் ரயிலேறி கொழும்பு கோட்டைக்கு வருகிறார். இரண்டாம் குறுக்குத் தெருவில் பாங்ஷால் வீதி சந்தி வரும் இடத்தில் அமைந்துள்ள ஓரியண்டல் சலூனில்தான் அவர் கொழும்பு வரும்போது தங்குவது வழக்கம்.
அன்று இரவு அவர் கோட்டைக்கு ரயில் நிலையத்தில் வந்து இறங்கியதும் குறிப்பிட்ட வீதியால் நடந்து வந்துகொண்டிருந்தார்.
அவரது கையில் அவர் வழக்கமாக எடுத்துவரும் பேக். அதில் அவரது சில மாற்றுடைகளும் மல்லிகை பிரதிகளும்தான் இருக்கும்.
ஜீவாவை வெள்ளை வேட்டி, நேஷனல் தோற்றத்தில் கொழும்பில் பார்த்தால் தென்னிலங்கை சிங்களவர் என்ற பார்வையும் எவருக்கும் தோன்றலாம்.
ஜீவா மாத்தறை பக்கமிருந்து வரும் வர்த்தகராக இருக்கவேண்டும். அவரது பேக்கில் நிறைய பணம் இருக்கலாம் என நம்பிக்கொண்டு இரண்டு கேடிகள் அவரை பின்தொடர்ந்தனர்.
மழையும் தூறிக்கொண்டிருந்தது. ஜீவாவுக்கு குலை நடுக்கம். ஜீவா, பின்தொடருபவர்கள் தன்னிடமிருக்கும் பேக்கை பறிப்பதற்குத்தான் வருகிறார்கள் என எண்ணிக்கொண்டு தனது நடையை தாமதிப்பதும் துரிதப்படுத்துவதுமாக பயத்துடன் வருகிறார்.
பேக்கில் பணம் இல்லை. ஆனால், கத்தியை காட்டி குத்திவிடுவார்களோ என்ற பயம் சூழ்ந்தது. பொறுத்துப்பொறுத்து நடந்தார்.
அப்பொழுது அவருக்கு மின்னலென பழைய பஸ் பயண சம்பவம் நினைவுக்கு வருகிறது.
வேகமாக திரும்புகிறார். கையிலிருந்து பேக்கை தரையில் வைக்கிறார். தனது நேஷனல் கைபகுதியை மேற்புறமாக மடிக்கிறார். குனிந்து வேட்டியை மடித்து சண்டிக்கட்டு கட்டுகிறார்.
ஆக்ரோஷத்துடன், “ மொனவத..? “ எனக்கேட்கிறார்.
அவரை பின்தொடர்ந்த அந்தக் கேடிகள் மௌனமாக திரும்பிச்சென்றார்கள்.
தாமதிக்காமல் வேட்டியையும் உயிர்த்திப்பிடித்தவாறு பேக்கையும் தூக்கிக்கொண்டு வியர்க்க விறுவிறுக்க விரைந்து நடந்து ஓரியண்டல் சலூன் படிகளில் ஜீவா ஏறினார்.
( தொடரும் )
No comments:
Post a Comment