உலகச் செய்திகள்

மியன்மாரில் 7ஆவது நாளாகவும் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டம் 

தடைகளை நீக்க ஈரானுக்கு அமெரிக்கா புது நிபந்தனை

சீனா தலைவருடன் பைடன் முதல் முறையாக உரையாடல்

உளவுக் குற்றச்சாட்டு: ஆஸி. செய்தியாளர் சீனாவில் கைது

மனித உரிமை பேரவையில் அமெரிக்கா மீண்டும் இணைவு

 

மியன்மாரில் 7ஆவது நாளாகவும் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டம் 

மியன்மாரில் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்ட இராணுவத் தலைவர்கள் மீது அமெரிக்கா தடை விதித்திருக்கும் நிலையில் அந்நாட்டில் ஏழாவது நாளாகவும் நேற்று ஆர்ப்பட்டாங்கள் இடம்பெற்றன.

இராணுவ ஜெனரல்களை அதிகாரத்தை கைவிடும்படி கோரி நாடெங்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் அமைதியாக இடம்பெற்றபோதும் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்தும் தண்ணீர் பீச்சியடித்தும் இரப்பர் தோட்டக்களால் துப்பாக்கிச் சூடு நடத்தியும் பலப்பிரயோகத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

ஆசிரியர்கள், அதிகாரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வான் கட்டுப்பாட்டாளர்கள் உட்பட அரச ஊழியர்களும் இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும்படி கோரி வீதிக்கு இறங்கியுள்ளனர்.

எனினும் இந்த ஊழியர்களை பணிக்குத் திரும்பும்படி இராணுவத் தளபதி மின் அவுங் ஹங் அழைப்பு விடுத்துள்ளார்.

“உணர்வுகளை முன்னிறுத்தாது பணிகளில் இருந்து வெளியேறி இருப்பவர்கள் நாடு மற்றும் மக்களின் நலனுக்காக தமது பணிகளுக்கு உடன் திரும்பும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் அழைப்பு விடுத்ததாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய தடையில் மின் அவுங் ஹங் மற்றும் முன்னிலை ஜெனரல்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். மியன்மாரின் 1 பில்லியன் டொலர் நிதியை இராணுவம் பெறுவதை தடுக்கும்படியும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் வன்முறையை அதிகாரித்தால் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஜெனட் யெல்லன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்றது தொடக்கம் இதுவரை 260க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆளும் கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி மற்றும் ஏனைய மூத்த தலைவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  நன்றி தினகரன் 

தடைகளை நீக்க ஈரானுக்கு அமெரிக்கா புது நிபந்தனை

2015 அணு சக்தி உடன்படிக்கையில் இணங்கிய விதிகளை கடைப்பிடிக்கும் வரை ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகளை நீக்கப்போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ் தொலைக்காட்சி செய்திக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அளித்த போட்டியிலேயே பைடன் இதனைத் தெரிவித்தார்.

ஆனால் அமெரிக்கா முதலில் அனைத்துத் தடைகளையும் நீக்கனாலேயே அந்தக் கடப்பாட்டுக்கு திரும்புவதாக ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லா அலி கமனெய் கூறியுள்ளார்.

ஈரான் அணு செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையிலேயே 2015 ஆம் ஆண்டு உலக வல்லரசு நாடுகளுடன் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டது. இதற்கு பகரமாகவே ஈரான் மீதான தடைகளை நீக்க இணக்கம் ஏற்பட்டது.

எனினும் இந்த உடன்படிக்கையில் இருந்து அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2018 ஆம் ஆண்டு விலகிக்கொண்டதோடு ஈரான் மீது மீண்டும் தடைகளை கொண்டுவந்தார்.

எனினும் அமைதியான நோக்கத்திற்காகவே தமது அணுத் திட்டத்தை மேற்கொள்வதாக ஈரான் கூறி வருகிறது.  நன்றி தினகரன் 


சீனா தலைவருடன் பைடன் முதல் முறையாக உரையாடல்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உடன் முதல் முறை தொலைபேசியில் உரையாடி இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சின்ஜியாங் பிராந்தியத்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை தெரிவித்ததாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

இதன்போது இரு நாட்டு வர்த்தகம், ஹொங்கொங்கில் இடம்பெறும் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் தாய்வானில் நிலவும் தற்போதைய பதற்றம் பற்றியும் பைடன் அழுத்தத்தை வெளியிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் இரு நாட்டு உறவுகளும் மோசமடையும் என்ற எச்சரிக்கையை பைடனிடம் ஜின்பிங் விடுத்ததாக சீன அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. வர்த்தகம், உளவு விவகாரம் மற்றும் பெருந்தொற்று போன்ற விடயங்களில் அண்மைக் காலத்தில் சீனா மற்றும் அமெரிக்கா இடையில் முறுகல் அதிகரித்துள்ளது. இந்த தொலைபேசி உரையாடலுக்குப் பின் பைடன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அமெரிக்க மக்களுக்கு நன்மை பயக்கும்போது நான் சீனாவுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நான் அவரிடம் கூறினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.    நன்றி தினகரன் 


உளவுக் குற்றச்சாட்டு: ஆஸி. செய்தியாளர் சீனாவில் கைது

சீனாவில் கடந்த சில மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் செங் லீ, நாட்டு இரகசியங்களை வெளிநாட்டுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் உத்தியோகபூர்வமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவில் பிறந்த அவுஸ்திரேலியரான அவர் சீன அரச தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதை சீன நிர்வாகம் நேற்று உறுதி செய்ததோடு, அவரது சட்ட உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தது.

கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்ட செங் மீது கடந்த வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர். சீனா கையாளும் இந்த வழக்கில் அவுஸ்திரேலியா தலையிடாது என்று எதிர்பார்ப்பதாக சீன அமைச்சரவை பேச்சாளர் வாங் வென்பின் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

எனினும் செங் கைது செய்யப்பட்டது தொடர்பில் அவுஸ்திரேலியா கவலையை வெளியிட்டுள்ளது.

அவர் ஏன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது பற்றி எதுவும் தெரியாதுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  நன்றி தினகரன் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா மீண்டும் இணைவு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக பக்கச் சார்பாக நடந்துகொள்வதாகவும் போதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறி முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மனித உரிமை பேரவையில் இருந்து வெளியேறி மூன்று ஆண்டுகளின் பின்னரே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதன்படி ஒரு கண்காணிப்பாளராக ஜெனீவாவை தளமாகக் கொண்ட பேரவைக்கு அமெரிக்கா திரும்பவுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டோனி பிளின்கன் நேற்று அறிவித்தார். “பேரவையை சீர்திருத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் கொள்கை ரீதியாக ஈடுபடுவதே சிறந்த வழி என்பதை அறிந்து செயற்பட நாம் உத்தேசித்துள்ளோம்” என்று இராஜாங்க திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா பொதுச் சபையினால் பேரவையின் புதிய உறுப்பு நாடுகள் இந்த ஆண்டு இறுதியில் தேர்வு செய்யப்படவுள்ளன.

மூன்று ஆண்டு தவணைக்காகவே உறுப்பு நாடுகள் தேர்வு செய்யப்படவுள்ளதோடு தொடர்ச்சியாக இரண்டு தவணைக்கு மேல் அதன் அங்கத்துவத்தை பெற முடியாது.

அனைத்து பிராந்தியங்களின் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்யும் வகையில் பூகோள குழுக்களாக பிரிக்கப்பட்டே இரகசிய வாக்கெடுப்பு மூலம் உறுப்பு நாடுகள் தேர்வு செய்யப்படும்.

47 உறுப்பு நாடுகளைக் கொண்ட மனித உரிமை பேரவையின் அடுத்த அமர்வு இந்த மாத பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 
No comments: