திரைவிமர்சனம்.. மூக்குத்தி அம்மன்


தமிழ் சினிமாவில் கே.ஆர். விஜயாவில் இருந்து ரம்யா கிருஷ்ணன் வரை பல அம்மன் கதாபாத்திரங்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அம்மனாக நடித்துள்ள படம் தான் மூக்குத்தி அம்மன். திரையில் நயன்தாராவை அம்மனாக பார்க்கவேண்டும் என்று எண்ணிய ரசிகர்களுக்கு ஓடிடி மூலமாக மூக்குத்தி அம்மனாக அருள் தந்துள்ளார். அப்படி ஓடிடியில் வெளியாகியிருந்தாலும் ரசிகர்கள் கேட்ட அணைத்து வரத்தையும் மூக்குத்தி அம்மன் வழங்கினாரா? இல்லையா? என்று பார்ப்போம்.

கதைக்களம்

பத்திரிகையாளராக கடவுள் மீது கோபம் காட்டும் ஆர்.ஜெ. பாலாஜி, நிஜத்தில் தனக்காக கடவுள் எதாவது நல்ல விஷயத்தை செய்து விட மாட்டாரா என்று துடிக்கிறார்.

தன் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க திருப்பதி சென்ற வரவேண்டும் என்று நினைக்கிறார் நடிகை ஊர்வசி. ஆனால் திருப்பதி செல்ல முயற்சிக்கும் ஒவ்வொரு நேரத்திலும் பல நகைச்சுவையான தடைகள் ஏற்ப்படுகிறது .இதனால் முதலில் குலதெய்வத்தின் கோவிலுக்கு சென்று ஒரு நாள் இரவு தங்கினால் அணைத்து பிரச்சைகளும் விலகிவிடும் என்று குடும்பத்துடன் மூக்குத்தி அம்மன் கோவிலுக்கு செல்லுகிறார் ஆர்.ஜெ. பாலாஜி.

குலதெய்வ கோயில்லில் அம்மன் சிலையை பார்த்து, என் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சைகளை தீர்த்துவை தாயே என ஆர்.ஜெ. பாலாஜி அம்மனிடம் கண்கலங்கி மன்றாடி கேட்டுகிறார்.

அன்றிரவே ஆர்.ஜெ. பாலாஜி கேட்டதுபோல் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நேரில் வந்து வரம் தருகிறார். வரத்தை தந்துவிட்டு அதன்பின் தன்னை உலகம் முழுவதும் பிரபலமாக்க வேண்டும் என்று ஆர்.ஜெ. பாலாஜியிடம் உத்தரவு போடுகிறார் மூக்குத்தி அம்மன்.

அதன்படி ஆர். ஜெ. பாலாஜி செய்து முடிக்கும் நேரத்தில் கடவுள்களை வைத்து பணம் சம்பாதிக்கும் வில்லன் சாமியாரின் என்ட்ரி. இதன்பின் வில்லன் சாமியாருக்கும், மூக்குத்தி அம்மனுக்கும் இடையே நடக்கும் அரசியல் கலந்த கடவுள் யுத்தம் தான் மூக்குத்தி அம்மனின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

ஆர்.ஜெ. பாலாஜியின் மிகவும் நகைச்சுவையான எதார்த்தமான நடிப்பு மனதில் நிற்கிறது. மூக்குத்தி அம்மனாக திரையுலகிற்கு காட்சியளித்துள்ள நயன்தாராவின் நடிப்பு பாராட்டுக்குரியது.

மக்கள் கடவுள்களை பக்தியுடன் கும்பிடவில்லை என்றும், தான் செய்யும் தப்பை மறைக்கவும், மன்னிக்கும் இடமாக தான் கோவிலையும், தெய்வத்தையும் பார்க்கிறார்கள் என்றும் கூறுகிறார் மூக்குத்தி அம்மன்.

நயன்தாராவிற்கு போட்டியாக ஆர்.ஜெ. பாலாஜி மற்றும் ஆர்.ஜெ. பாலாஜிக்கு போட்டியாக ஊர்வசி நடிக்கும் காட்சிகள் படத்தை விறுவிறுப்பாக எடுத்து செல்லுகிறது.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் போலி சாமியார்களின் கதாபாத்திரமாக மாறி நடித்துள்ளது, ஒரு பக்கம் நகைச்சுவையாக இருந்தாலும் மறுபக்கம் இவர்களை மக்கள் இனிமேல் நம்பவேண்டாம் என்று எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

ஊர்வசி, ஆர்.ஜெ. பாலாஜியின் 3 தங்கைகள் மற்றும் இயக்குனர் மௌலி என அனைவரின் நிறைவான நடிப்பு அழகான வடிவமைப்பை படத்திற்கு கொடுத்துள்ளது.

ஆர். ஜெ. பாலாஜி மற்றும் என்.ஜெ. சரவணனின் இயக்கம், வசனம், திரைக்கதை மற்றும் இசை என அனைத்திலும் மூக்குத்தி அம்மன் நமக்கு சிறப்பான வரத்தை அளித்துள்ளார்.

இப்படி நகைச்சுவை கலந்த அரசியல் பேசும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அம்மன் வரும் ஓரிரு இடங்கள் ஓவராக இருக்கிறது.

க்ளாப்ஸ்

அம்மனாக நயன்தாராவின் நடிப்பு

நகைச்சுவை கலந்த அரசியல் இயக்கம்

பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு

VFX கிராபிக்ஸ் காட்சிகள்

பல்ப்ஸ்

நகைச்சுவையை இன்னும் கூட்டி இருக்கலாம்

அம்மன் வரும் ஓரிரு காட்சிகள் கொஞ்சம் ஓவராக தெரிகிறது

மொத்தத்தில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய ஒரு சில இடங்களில் மூக்குத்தி அம்மன் தவறினாலும் தீபாவளி அன்று குடும்பதுடன் பார்க்க சிறப்பான படமாக அமைந்துள்ளது.

நன்றி No comments: