'கோடிபெறுந் தாயன்பை நினைக்கச்செய் ததம்மா!'

 

............... பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்பிறந்தநாளைக் கொண்டாடப்; பூக்கடையில் 'மாலை'

    புதுப்பூவிற் கட்டித்தரச் சொல்லிவிட்டுக் கீழே 

இறங்குகையில் படிக்கருகோர் சிறுமிதனைக் கண்டேன்

    ஏங்கும்விழி எனையீர்க்க 'என்னம்மா' என்றேன்!

'உறங்கிடுமென் தாய்க்கொருபூ வாங்கப்பணம் இல்லை

    ஒருவேளை என்பசியைப் பார்த்தறியாத் தெய்வம்!

மறந்துமொரு குறைவைக்கா தன்பினொடு வாழ்ந்த

    மகராசிக்(கு) என்னாலே ஏதுபயன்' என்றாள்,


விழிசிந்தும் நீரோட அவள்விம்மி விம்மி

   வேதனையோ டெனைப்பார்த்தாள்! விழிகசிய நின்றேன்!!

தளிர்மேனி நடுங்குவதைக் கண்டஞ்சி நானோர்

   தாமரைப்பூக் கொத்தொன்றை வாங்கிக்கை யளித்துக்

'குளிர்வேளை நீபோகும்  இடமெங்கே' எனவும்

     'கூறிடுவேன் வழிகாட்டச் சேர்த்திடுவீர்' என்றாள்!   

தெளிவாகப் பலகாத தூரத்திற் கப்பால்

     திகைத்திட்டேன்! மயானமொன்றிற் கழைத்தென்னைச் சேர்த்தாள்.

 

   'இங்கெதற்கு அழைத்துவந்தாய்?' எனநானும் வினவ

      'இருநிமிடம் என்னோடு வாருங்கள்'  என்று

   அங்கொருகல் லறைதனையே காட்டித்தன் கையால்

      அருகிருந்த நீராலே சுத்திசெய்த பின்னர்

   செங்கமலப் பூக்கொத்தை ஏந்தியவள் பலமுறை

       சிந்துமிரு விழிவழியை மறைத்திடவலம் வந்தே

   'தங்கத்தாய் துயில்கின்றாள் இம்மலரைச் சாற்றிச்

       சாந்திபெற வணங்குகிறேன்' எனவிம்மி நின்றாள்.


சிறுமியவள் செய்கையென்றன் சிந்தனையைத் தூண்டச்

     சிறிதுநேரம் மெய்சிலிர்த்துக் கண்பனிப்ப நின்றேன்

பொறுகொஞ்ச நேரத்தில் வந்திடுவேன் என்று

     பொன்மனத்தாள் கரம்பற்றியென் கண்ணிலொற்றி நானும்

விறுவிறென வேகமாய்ப்பூக் கடைக்குள்ளே சென்று

     'வேண்டாமென்  மாலைகளே!  அதற்காக உயர்ந்த

 நறுமணத்து  மலர்வளையம் ஒன்றைத்தா'  வென்று

     நயமாகப் பெற்றுடனே மயானத்தை அடைந்தேன்!.


நெஞ்சினின்றும் நெடுநாள்முன் நீக்கிவிட்ட தாயின்

    நினைவதனை நினைவுகூரா நீசனாமென் நெஞ்சில்

பிஞ்சுமனச்; சிறுமியவள் நினைத்திருந்து கண்ணீர்

    பெருக்கியொரு மலர்கொண்டஞ் சலிசெய்த செய்கை 

நஞ்சுப்பா ணம்போலத் தைத்ததம்மா! நலமாய்

    நல்லவிழிப் புணர்வேற்றி மனிதனாக்கி என்னைக்

கொஞ்சிவளர்த் திட்டதாயின் கல்லறையை வணங்கிக்

    கோடிபெறுந் தாயன்பை நினைக்கச்செய் ததம்மா!  


No comments: