உலகச் செய்திகள்

 இங்கிலாந்தில் ஐம்பது பில்லியன் பவுண்ட் பணத்தை காணவில்லை

சவூதி, இஸ்ரேல் பிரதிநிதிகள் பிராந்திய மாநாட்டில் முறுகல்

குறுங்கோளில் பாறை மாதிரியை பெற்ற ஜப்பான் விண்கலம் பூமிக்கு திரும்பியது

வெனிசுவேல பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மடுரோ கூட்டணிக்கு வெற்றி

பெண் ஊடகவியலாளர் ஆப்கானில் படுகொலை

ஜோ பைடன், ஹாரிஸ் ஆண்டின் சிறந்தவர்களாக ‘டைம்’ தேர்வு

மொரோக்கோ - இஸ்ரேல் இடையே இராஜதந்திர உறவுக்கு உடன்படிக்கை


இங்கிலாந்தில் ஐம்பது பில்லியன் பவுண்ட் பணத்தை காணவில்லை

இங்கிலாந்தில் 50 பில்லியன் பவுண்ட் மதிப்புமிக்க நாணயத்தாள்கள் காணாமல்போயுள்ளன.அது குறித்து ஒரு விளக்கமும் இல்லாத நிலையில் நாணயத்தாள்களின் இருப்பிடம் மர்மமாகவே உள்ளது. இது குறித்து கார்டியன் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

பிரிட்டனின் மத்திய வங்கியான இங்கிலாந்து வங்கி, ரொக்கப் பயன்பாட்டின் மீது போதிய கண்காணிப்புச் செலுத்தவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.தனது பெட்டகங்களில் உள்ள பல பில்லியன் பவுண்ட் மதிப்புமிக்க தங்கக் கட்டிகளை தீவிரமாக பாதுகாத்து வருவதற்கு வங்கி பெயர் பெற்றிருந்தாலும், வங்கி காணாமல் போன ரொக்க இருப்பைப் பற்றி அவ்வளவாக அக்கறை காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

நாணயத்தாள்கள் அதிகாரத்துவமற்ற வழிகளில் செலவு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்காலம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.

இருப்பினும் நாணயத்தாள்களின் பயன்பாட்டைக் கண்காணிப்பது உண்மையிலேயே மிகவும் சிரமமான ஒன்று. காணாமல்போன நாணயத்தாள்களின் இருப்பிடத்தைக் கண்டறிவது சவாலான ஒன்றாகும்.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று சூழலில் நாணயத்தாள்களின் புழக்கம் கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டது. மக்கள் பீதியடைந்து ரொக்கத்தை மறைத்து வைத்திருக்கலாம் என்று கார்டியன் குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 

  



சவூதி, இஸ்ரேல் பிரதிநிதிகள் பிராந்திய மாநாட்டில் முறுகல்

சவூதி அரேபியாவின் செல்வாக்கு மிக்க இளவரசர் துர்கி அல் பைசால் பிராந்திய மாநாடு ஒன்றில் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ளார். அதற்கு மாநாட்டில் இஸ்ரேல் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக நீடிக்கும் அரபு நாடுகளின் புறக்கணிப்பை தளர்த்தி ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தி ஒருசில மாதங்களிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த இராஜதந்திர உறவை பலஸ்தீனர்கள் ‘முதுகில் குத்தும் செயல்’ என கூறி வருகின்றனர்.

சவூதியின் முன்னாள் உளவுப் பிரிவுத் தலைவராக துர்கி அல் பைசால், வீடியோ கொன்பிரன்ஸ் முறையில் நடைபெறும் மாநாட்டிலேயே உரையாற்றி இருந்தார்.

அதில் அவர் வழக்கத்திற்கு மாறான அப்பாட்டமான சொற்பிரயோகங்களை பயன்படுத்தி இருந்தார். இஸ்ரேலை மேற்குலகின் காலனித்துவ சக்தி என்றும் பலஸ்தீனர்கள் மற்றும் அவர்களின் கிராமங்களை அழித்த வரலாற்றை கொண்டிருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.

இஸ்ரேலிய நிர்வாகம் தமது விருப்பத்திற்கு ஏற்ப வீடுகளை தகர்ப்பதாகவும் விரும்பும்படி படுகொலைகளில் ஈடுபடுவதாகவும் கடுமையாக சாடினார்.

தொடர்ந்து இந்த மாநாட்டில் உரையாற்றிய இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கெபி அஷ்கெனாசி, இந்தக் கருத்துகளுக்கு வருத்தத்தை தெரிவித்தார். ‘மனாமா மாநாட்டில் சவூதி பிரதிநிதியின் தவறான குற்றச்சாட்டுகள் பிராந்தியத்தில் தற்போது இடம்பெறும் மாற்றங்களின் உண்மையான நிலை அல்லது உற்சாகச் சூழலை பிரதிபலிக்கவில்லை’ என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.    நன்றி தினகரன் 





குறுங்கோளில் பாறை மாதிரியை பெற்ற ஜப்பான் விண்கலம் பூமிக்கு திரும்பியது

குறுங்கோளில் இருந்து முதல் முறையாக கணிசமான அளவு பாறை மாதிரிகளை எடுத்துவந்த விண்கலம் அவுஸ்திரேலியாவில் தரையிறங்கிய நிலையில் அது மீட்கப்பட்டுள்ளது.

ரியுகு என்ற குருங்கோளின் மாதிரிகளை கொண்ட இந்த விண்கலம் தெற்கு அவுஸ்திரேலியாவில் வூமேரா பகுதிக்கு அருகில் பரசூட்டில் தரையிறங்கியது.

ஓர் ஆண்டுக்கு மோலாக விண் பொருளை ஆராய்ந்த ஜப்பானில் ஹயபுசா–2 என்ற விண்கலமே இந்த மாதிரிகளை சேகரித்துள்ளது. ஹயபுசா–2 இல் இணைக்கப்பட்ட கொள்கலனே பின்னர் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது.

இதனைத் தொடர்ந்த அந்தக் கொள்கலன் மீட்கப்பட்டிருப்பதாக ஹயபுசா–2 அதிகாரிகள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

சூரிய மண்டலத்தின் தொடக்கம், பூமியில் உயிர்களின் தொடக்கம் ஆகியவற்றுக்கான தடயங்கள் அந்த மாதிரிகளில் இருக்கக்கூடும் என்று நிறுவனம் கூறியது. அவை பெறப்பட்ட ரியுகு குறுங்கோள் பூமியிலிருந்து சுமார் 300 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது.

நேற்றுக் காலை பூமியை நோக்கி வருகையில், அந்த விண்கலம் நெருப்புப் பந்தாக உருமாறியது. தரையிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் உயரத்தில் அதன் வான்குடை திறந்தது.

அந்தக் காட்சிக்காக 6 ஆண்டுகள் காத்திருந்ததாக அந்தத் திட்டத்தின் முகாமையாளர் குறிப்பிட்டார்.

குறுங்கோள்கள், சூரிய மண்டலத்தின் மிகப் பழமையானவை. உயிர்களின் தோற்றம் குறித்து அறியும் சாத்தியம் அவற்றில் இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் ஹயபுசா–2 க்கான பணிகள் முடிவடையவில்லை. அது இப்போது இரண்டு புதிய குறுங்கோள்களைக் குறிவைத்து விரிவாக்கப்பட்ட பணியைத் ஆரம்பிக்கும்.

ஜூலை 2026 இல் 2001 சிசி 21 என பெயரிடப்பட்ட அதன் இலக்கு குறுங்கோள்களில் முதலாவதை அணுகுவதற்கு முன்னர் சூரியனைச் சுற்றியுள்ள ஆறு சுற்றுப்பாதைகளை அது முடிக்கும்.

தொடர்ந்து ஹயபுசா–2 அதன் முக்கிய இலக்கான 1998 கே.வை.26 ஐ நோக்கி செல்லும், இது வெறும் 30 மீற்றர் விட்டம் கொண்ட பந்து வடிவ குறுங்கோளாகும். எனினும் ஹயபுசா–2 தரையிறங்குவதற்கும் சேகரிப்பதற்கும் சாத்தியமில்லை, ஏனெனில் அவற்றை பூமிக்கு திருப்பித் தர போதுமான எரிபொருள் இருக்காது.   நன்றி தினகரன் 





வெனிசுவேல பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மடுரோ கூட்டணிக்கு வெற்றி

எதிர்க்கட்சிகள் புறக்கணித்த

பிரதான எதிர்கட்சிகள் புறக்கணித்த வெனிசுவேல பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி நிகொலஸ் மடுரோவின் கட்சி மற்றும் அவரது கூட்டணி வெற்றியீட்டி இருப்பதாக ஆரம்ப முடிவுகள் தெரிவித்துள்ளன.

இதன்மூலம் நாட்டின் அரசியல் கட்டமைப்பு முழுவதும் மடுரோவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

80 வீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் மடுரோ கூட்டணி 67.6 வீத வாக்குகளை வென்றிருப்பதாக தேசிய தேர்தல் கௌன்சில் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரப் போட்டியில் இருந்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோ இந்தத் தேர்தலை புறக்கணித்தார்.

குவைடோவை வெனிசுவேலாவின் சட்டபூர்வத் தலைவராக அமெரிக்கா உட்பட 50க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்தன.

புறக்கணிப்பை மீறி தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சியின் ஒரு தரப்பினர் 18 வீத வாக்குகளை வென்றுள்ளனர்.

எனினும் இந்தத் தேர்தலில் 31 வீத வாக்குப்பதிவே இடம்பெற்றிருப்பதாக தேசிய தேர்தல் கௌன்சில் தலைவர் இன்டிரா அல்பொன்சோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்தலை ‘மோசடியானது மற்றும் வெட்ககரமானது’ என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

‘சட்டவிரோதமான மடுரோ அரசு வெளியிட்டிருக்கும் தேர்தல் முடிவுகள் வெனிசுவேல மக்களின் விருப்பை பிரதிபலிக்கவில்லை’ என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

277 ஆசனங்கள் கொண்ட வெனிசுவேல பாராளுமன்றம் 2015 தொடக்கம் எதிர்க்கட்சி கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. சட்டம் நிறைவேற்றல் மற்றும் அரசின் வரவுசெலவு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் செயற்பாடுகளை பாராளுமன்றம் மேற்கொண்டபோதும் 2017 இல் அதன் அதிகாரத்தை குறைக்கும் வகையில் ஜனாதிபதி மடுரோ தேசிய சட்டவாக்க சபை ஒன்றை அமைத்தார்.

மடுரோ அரசில் வெனிசுவேல பொருளாதாரம் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதோடு உணவு மற்றும் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது.

வெனிசுவேலாவின் 4.5 குடியேறிகள் மற்றும் அகதிகள் உலகெங்கும் தஞ்சம் அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.    நன்றி தினகரன் 





பெண் ஊடகவியலாளர் ஆப்கானில் படுகொலை

கிழக்கு ஆப்கானிஸ்தானில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானில் அண்மைக் காலமாகத் தொடரும் படுகொலைகளின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று ஜலாலாபாத்திற்கு பணிக்குச் செல்லும் வழியில் மலாலா மைவான்த் என்ற அந்த ஊடகவியலாளரின் வாகனத்தின் மீது ஆயுததாரிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அவரது ஓட்டுநரான முஹமது தாஹிரும் கொல்லப்பட்டுள்ளார்.

தாக்குதல்தாரிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றிருப்பதாக மாகாண ஆளுநரின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலை நடத்தியது குறித்து எந்தத் தரப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானின் எனிகாஸ் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் மைவான்த் பணியாற்றியுள்ளார். சமூக செயற்பாட்டாளரான அவர் பெண் ஊடகவியலாளராக தாம் எதிர்கொள்ளம் சவால்கள் பேசி வந்தார்.

ஆப்கானிஸ்தானில் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்களில் ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் புள்ளிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 




ஜோ பைடன், ஹாரிஸ் ஆண்டின் சிறந்தவர்களாக ‘டைம்’ தேர்வு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் இந்த ஆண்டின் சிறந்த நபராக டைம் இதழில் இடம்பெற்றுள்ளனர்.

அட்டைப் படத்தில் அவர்களது புகைப்படத்தை வெளியிட்ட டைம் இதழ், ‘அமெரிக்காவின் கதையை மாற்றியவர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அமெரிக்கத் தேர்தலை ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் எவ்வாறு கையாண்டார்கள் என்பது குறித்து டைம் இதழ் பாராட்டி எழுதியுள்ளது.

காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், டைம் இதழின் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1927 ஆம் ஆண்டு தொடக்கம் செய்திகளில் அதிகம் பேசப்படுவோரை தேர்வு செய்து டைம் இதழ் ஆண்டின் சிறந்தவர்களாக கௌரவித்து வருகிறது.

கடந்த நவம்பர் 3 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பதவியில் இருக்கும் டொனால்ட் டிரம்பை தோற்கடித்த ஜோ பைடன் வரும் ஜனவரி 20 ஆம் திகதி பதவி ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன்     




மொரோக்கோ - இஸ்ரேல் இடையே இராஜதந்திர உறவுக்கு உடன்படிக்கை

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மற்றொரு அரபு நாடாக இஸ்ரோலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்த மொரோக்கோ இணங்கியுள்ளது.

இந்த உடன்படிக்கையின் ஓர் அங்கமாக, மேற்கு சகாரா பிராந்தியத்தில் மொரோக்கோ உரிமை கோரும் பகுதியை அங்கீகரிப்பதற்கு அமெரிக்கா இணங்கியுள்ளது.

இந்த பிராந்தியம் தொடர்பில் மொரோக்கோ மற்றும் அல்ஜீரிய ஆதரவு பொலிசாரியோ முன்னணிக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த முன்னணி அங்கு தனி நாடு ஒன்றை அமைக்க போராடி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் தொடக்கம் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுதும் நான்காவது அரபு நாடாக மொரோக்கொ இடம்பெறுகிறது.

முன்னதாக ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் சூடான் நாடுகள் இஸ்ரேலுடன் உடன்படிக்கை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தவிர எகிப்து மற்றும் ஜோர்தானுடன் சேர்த்து இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் ஆறாவது அரபு லீக் நாடாகவும் மொரோக்கோ இடம்பெறுகிறது. இந்த உன்படிக்கை பற்றிய அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வியாழக்கிழமை ட்விட்டரில் வெளியிட்டார்.

‘இன்று மற்றொரு வரலாற்று நிகழ்வு இடம்பெறுகிறது. எமது இரு சிறந்த நண்பர்களான இஸ்ரேல் மற்றும் மொரோக்கோ இராச்சியம் இராஜதந்திர உறவை ஏற்படுத்த இணங்கியுள்ளன. மத்திய கிழக்கு அமைதிக்கான பெரும் திருப்பமாக இது உள்ளது’ என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

‘மொரோக்கோ இஸ்ரேலுக்கு இடையிலான இராஜதந்திர உறவை ஆரம்பிப்பதற்கும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் மொரோக்கோ மன்னர் ஆறாவது முஹமது மற்றும் டிரம்ப் இடையே இணக்கம் ஏற்பட்டது’ என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி பலஸ்தீன எழுச்சிப் போராட்டத்தை அடுத்து 2000 ஆம் ஆண்டு மூடப்பட்ட டெல் அவிவ் மற்றும் ராபாட்டில் உள்ள தொடர்பு அலுவலகங்களை மீண்டும் திறப்பதற்கும் தூதரகத்தை அமைப்பதற்கும் இஸ்ரேல் மற்றும் மொரோக்கோ உடன்பட்டுள்ளன.

இதனை ஒரு வரலாற்று உடன்படிக்கை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றுள்ளார்.

எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் இதனை வரவேற்றுள்ளன.

இதனை கண்டித்திருக்கும் பலஸ்தீனர்கள், இஸ்ரேல் எமது உரிமையை மறுப்பதற்கு ஊக்குவிப்பதாக இது உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையே அண்மைக் காலத்தில் எட்டப்பட்டு வரும் அனைத்து உடன்படிக்கைகளையும் பலஸ்தீனர்கள் எதிர்த்து வருகின்றனர். இந்த நகர்வு பலஸ்தீன நாடு உருவாகும் வரை இஸ்ரேலுடனான உறவை ஏற்படுத்துவதில்லை என்ற அரபு நாடுகளின் வாக்குறுதியை மீறுவதாக உள்ளது என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த உடன்படிக்கை, பலஸ்தீனர்கள் மீதான அபிலாசைகள் தொடர்பில் மொரோக்கோவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று மொரோக்கோ மன்னர் உறுதி அளித்துள்ளார்.   நன்றி தினகரன்     

      








No comments: