போராளிகளுக்கு ஒரு சமர்ப்பணம் ! ( அங்கம் -02 ) ஒருவரலாற்றுக் கண்ணோட்டம் ! உத்தம்சிங்கும் உரும்பராய் சிவகுமாரனும் எடுத்த சபதம் !! சட்டத்தரணி செ. ரவீந்திரன்


ஜாலியன் வாலாபாக்கில்  இந்தச் சம்பவங்கள் நடந்த போது உத்தம்சிங் என்ற இருபது வயது வாலிபனும் அங்கு நின்று காயப்பட்டிருந்தான். அவன் ஒரு சபதம் பூண்டான். அவன் படித்தவனல்லன். வெகுசீக்கிரம் தொழிலாளியாக வேலை பார்ப்பதற்கு ஆபிரிக்க நாட்டிற்கு சென்றான்.

 

அங்கிருந்து அமெரிக்காவை அடைந்தான். அங்கு அவனது சபதம் கனல்விட்டு எரிந்தது. அமெரிக்காவிலிருந்தும் நாட்டின் விடுதலை போராட்ட சக்திகளோடு முக்கியமாக லாலா லாஜ்பட் ராய், பகவத்சிங் போன்றோருடன் தொடர்பில் இருந்தான்.

 

அமெரிக்காவிலிருந்து 1927இல் இந்தியா வந்தபொழுது அனுமதிக்கப்படாத  அரசியல் பிரச்சார ஆவணங்களும் சில துப்பாக்கிகளும் அவன் வசம் இருந்தமையால்  கைதாகி ,  நான்கு


 வருடங்கள்  சிறை வாசம் அனுபவித்து வெளியே வந்தான்.

 

ஆனால்,  பிரிட்டிஷ்  பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட  அடக்கு முறைகளினால் திரும்பவும் வெளியேறி பல ஐரோப்பிய நாடுகளூடாக இங்கிலாந்தை வந்தடைந்தான்.


அங்கு தனது சபதத்தை நிறைவேற்றும் முகமாகவும், தனது மக்களை ஒழித்த டயரை பழிவாங்கும் முயற்சிகளில் செயற்பட்டான். ஆனால்,  ஜாலியன் வாலாவில் நேரடியாக உத்தரவுகளை வழங்கிய டயர்,  உத்தம்  சிங் இங்கிலாந்தை அடைந்த சில மாதங்களில் இறந்து விட்டானென அறிந்து அதற்கு பிரதான  காரணியாக இருந்த மைக்கேல் டயரை பின் தொடர்ந்து சென்று  அவன் ஒரு கூட்டத்தில் (13 மார்ச் 1940) பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொலை செய்தான்.

மரண தண்டனை நிறைவேற்றம்


அவன்  சுட்டுவிட்டு  தப்பி ஓடவில்லை.  அவனை கைது செய்தபொழுது,   “  தான் 21 வருடங்கள் இதற்கான தருணத்திற்கு   காத்திருந்ததாகவும், தன் மக்களின் அபிலாசைகளை ஒடுக்க நினைத்தவனை அழித்ததில் நிம்மதி பெறுகிறேன்  “   என்றும்  பெருமையாகச்  சொன்னான்.


31 ஜூலை 1940 இல் அவனது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு,  அவனது அஸ்தி இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேரு, காந்தி போன்றோர் உத்தம் சிங்கின் செயல் தைரியமானதும் உத்வேகமானதும் என்றாலும் தேவையற்றது என்று கருதினர்.

 


ஆனால்,  கவிஞர் ரவீந்திரநாத் தாகூரோ தனக்கு அரசினால் தரப்பட்ட எல்லா கௌரவங்களையும் உதறியெறிந்து அவற்றைத் திருப்பி அனுப்பினார். ‘‘ நாங்கள் தரிக்கும் பெருமை தரும் சன்மான அடையாளங்கள் பொருத்தமற்றவைகளாக, எங்களது அவமானங்களைப் பெரிதுபடுத்தி காட்டினால் அவற்றை உதற வேண்டிய தருணம் வந்தது என்பது அடையாளம். இது நான் எங்களது மக்களோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள செய்யக் கூடிய ஒரு சிறிய காரியம்’’  என்று அறிவித்தார்.


1952  இல் உத்தமசிங் நேருவாலும் ‘‘சாகிட்’’ என்ற பட்டமளித்து

கௌரவிக்கப்பட்டார். சாகிட் என்பது உருது, பஞ்சாபி மொழிகளில் ’’தன் நாட்டுக்கும் தன் மக்களுக்கும் உன்னத பணி செய்தவன்’’ என்று பொருள்படும். உத்தம் சிங்கின் சமாதியில் நேரு ‘‘நாங்கள் சுதந்திரமாக இருப்பதற்காக சந்தோசமாகத் தூக்கு கயிற்றை முத்தமிட்ட இவனுக்கு பயபக்தியுடன் தலை வணங்குறேன்.’’ எனப் பொறிக்கச் செய்த்தார்.

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைக் கொடூரம்


இது போன்றதோர் சம்பவம்  எங்களுக்கு  அனைத்துலகத்  தமிழராய்ச்சி மகாநாடு 10 ஜனவரி 1974ஆம் ஆண்டு நடந்தபோது  இடம்பெற்றது. கடைசி நாள் மகாநாட்டு வைபவங்களை காண்பதற்கு 50,000  இற்கும் மேற்பட்ட மக்கள்  கூடியிருந்து, பேச்சுக்களில் லயித்து கொண்டிருந்தனர்.

 

இந்தியாவிலிருந்து வந்திருந்த ஜனார்த்தனன் பேசக்கூடாது என்று ஒருங்கிணைப்பாளர்களுக்கு பொலிஸார் சொல்லியிருந்தனர். அதன்படி ஜனார்த்தனன் மேடை ஏறியபொழுது ஒரு சில நிமிடங்களில் அவர் இறக்கப்பட்டு, பார்வையாளராக கீழிருந்து மக்களோடு உரையாடிக் கொண்டிருந்தார்.

 

அந்தச்  சமயம் பொலிஸ் அதிகாரி நாணயக்கார,  கூட்டங்கள் முடிந்ததும்  கொழும்பில் சி.ஐ.டி முன் ஆஜராக வேண்டும் என்ற ஆணையைக் அவருக்கு கொடுத்துச் சென்றார்.

 

ஆனாலும்  சிறிது நேரத்தில் துணை பொலிஸ் அதிகாரி சந்திரசேகரா ஒரு பொலிஸ் படையுடன் கூட்டத்துக்குள் புகுந்து எதிர்பாராத விதத்தில்

தடியடி நடத்தினார். சுற்றி வளைக்கப்பட்ட மக்கள் நாலு பக்கமும் சிதறினர். மின்சார கம்பிகள் அறுந்தன. மின்சாரம் பாய்ந்து ஒன்பது பேருக்கு மேல் அவ்விடத்திலேயே மடிந்தனர். பலபேருக்கு காயம். தப்பி ஒடிய மக்களை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையம் வரை தேடிச் சென்று பொலிஸார் தாக்கினர்.

உத்தம்சிங்கும் சிவகுமாரனும்


உத்தம் சிங்கைப் போல சிவகுமாரனும் ஓர் இளைஞனாக நின்று  அன்று நடந்த காட்சிகளை கண்டான். அவனும் ஒரு சபதம் எடுத்தான். தன் இனத்தின் விடுதலைக்காக அவன் சந்திரசேகராவைப்  பின்தொடர்ந்து  திரிந்தான். குண்டும் வைத்தான். அதில் சந்திரசேகரா தப்பினார். திரும்பவும் தேடினான், பின்னாளில் தன் கழுத்தில் தொங்கிய சயனைட் குப்பியைக் கடித்து தமிழினத்துக்குத் தன்னுயிரை ஈந்தவனானான்.


அன்றிருந்த சிறிமாவோ அரசாங்கம் ஒரு விசாரணை கமிஷன் அமைக்க மறுத்தது. அதனால் பொது ஜனம் தாங்களாகவே  உத்தியோகப் பற்றில்லாத விசாரணைக் கமிஷனை இளைப்பாறிய நீதியரசர்கள் டி கிறஸ்டர், மாணிக்கவாசகர், ஆயர் குலேந்திரன்  ஆகியோர் தலைமையில்  அமைத்தது .  அந்தக்குழு விசாரணை செய்து, பொலிஸாரின் தேவையற்ற உள்ளீட்டினாலும், தடியடி பிரயோகங்களினாலும் சம்பவங்கள் நடந்தன என்று தீர்ப்பளித்தது.

அரசாங்கம் பொலிஸாரை இந்த விசாரணையில் பங்கு பற்ற விடவில்லை.
ஆனால்,  ஜனார்த்தனனை  பொலிஸின் அறிவிப்புக்கு எதிராக மேடைக்கு அழைத்தமை அத்துமீறிய செயல், அதற்காக அவரைக் கைது செய்யப் போனபோது மக்கள் பொலிஸாரை தாக்கியதால் அவர்களை அடக்கத் தடியடிப் பிரயோகம் நடந்தது என்ற பல்லவியை  அரச தரப்பு தென்பகுதியில் கட்டவிழ்த்து விட்டது.


தன்மானம், தனது இனத்தின் மானம் காக்க புறப்படும் போராளிகள் இப்படியான சம்பவங்களால் பிறக்கின்றார்கள். உருவாகின்றார்கள்.


இவற்றையும்   இந்த வரலாறுகளையும்   அறிந்து கொள்ளாதிருக்கும்  சிலர் சம்பந்தப்பட்ட  ஒரு  காணொளியைக்  கண்டு மனம் வருந்தினேன். மாவீரரை நினைவு கூரவேண்டும் என்ற பிரேரணை  வேலணை பிரதேச சபைக்கு வந்தபோது  நடந்த அமளிதுமளிதான் அக்காணொளி.  சம்பந்தா  சம்பந்தமில்லாமல் குறுக்கும் மறுக்கும் பேசியே தீர்த்தனர்.

வியட்நாம் போற்றும்   ராஜராஜ சோழன்


அதனை பார்த்து கொண்டிருந்தபோது இன்னொரு சம்பவமும் எனது மனத்திரையில் ஓடியது.


இருபது  வருட போராட்டத்தின் பின் (1955  1975) வியட்நாம் அமெரிக்காவை வெளியேற்றியது. அதன் முடிவில் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து இது எப்படி சாத்தியமானது…?  இது ஒரு தெற்காசிய நாடு, எப்படி ஒரு வல்லரசை வென்றது..?  என்று கேட்டார்.


’’அது ஒரு கஷ்டமான காரியம்தான். ஆனால்,  ஒரு சரித்திர புகழ் பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன். அது எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது. அவரின் போர் தந்திரங்களை, யுத்திகளை எங்கள் போரில் கடைப்பிடித்தோம் வெற்றியும் கிட்டியது. 

அது வேறு யாருமல்லர். கிழக்காசியவை வென்று ஆண்ட ராஜராஜசோழன்தான். வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு வீரன் பிறந்திருந்தால் உலகம் எங்கள் கையில் இருந்திருக்கும்’’  என்றார்.


அந்த அதிபர் தனது  மறைவின் பின்னர்  தனது கல்லறையில் பொறிக்கச்  சொல்லி விருப்பப்பட்ட வாசகம் ‘‘ ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கின்றார்....’’  என்பதுதான்.

 

 இதை வியட்நாம் செல்லும் எவரும் பாக்கலாம்.


சில வருடங்கள் கழித்து வியட்நாமிலிருந்து அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு சென்றபோது வழமைபோன்று  காந்தி சமாதி, இந்திராகாந்தி சமாதி என்று   அவருக்கு காண்பிக்கப்பட்டதும்,  அவர் தன்னை ராஜராஜசோழனின் சமாதிக்கு அழைத்து செல்லுமாறு வேண்டினார்.

 

அவரை உடனடியாக தஞ்சாவூருக்கு கொண்டு சென்றார்கள்.  அங்கு தஞ்சை பெரியகோவிலில் மன்னனை தரிசித்து அஞ்சலி செலுத்திய பிறகு கையளவு மண்ணை அள்ளி மரியாதையுடனும் வாஞ்சையுடனும் தனது  பையில் சேர்த்துக் கொண்டார்  அந்த வியட்நாமிய அமைச்சர்.

 

 இதைக் கண்டு வியந்த பத்திரிகையாளர்கள்   “ ஏன் அவ்வாறு மண்ணை எடுத்தீர்கள்..?  “  என்று கேட்டதும்,  “   இந்த மண் வீரமும் வெற்றியும் நிறைந்த ராஜராஜன் பிறந்து வளர்ந்த மண். வியட்நாம் சென்றதும் என் தேச மண்ணில் இந்த மண்ணை கலந்து விடுவேன். பல்லாயிரக்கணக்கான ராஜராஜசோழர்கள் பிறக்கட்டுமென்று.”  எனச்சொன்னார்.

 

ஜாலியான் வாலாபாக் படுகொலை அட்டகாசம் நடந்தபோது,  பொதுமக்களை பிரித்தானிய இராணுவம்  தரையில் தவழ்ந்து செல்லுமாறு தண்டனை வழங்கியமை பற்றி, கடந்த அங்கத்தில் பார்த்தோம்.

அம்மக்கள்  தமது தாய் மண்ணை இவ்வாறு  முத்தமிடச்செய்தது பிரித்தானிய இராணுவம்  என்ற பார்வையில் நாம் பார்க்கலாமா..?

 

  இது இவ்விதமிருக்க,

பிரபாகரன் அழிக்கப்பட்டார் என்ற  செய்தியின் பின்னர் நாட்டுக்குத் திரும்பிய  அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ,  கொழும்பு  விமான நிலையத்தின்   தரையில் குனிந்து முத்தமிட்ட காட்சியைப்  பார்த்திருப்போம்.


வீரம் விளைந்த எம் மண்ணையும் ஒவ்வொருவரும் ஒரு கைப்பிடி ஏந்தி மானசீகமாகப் பயபக்தியுடன் நினைவு கூருவோம்.

---0---

( நன்றி:  யாழ். காலைக்கதிர் ) 


No comments: