இலங்கை தமிழ் இதழியலில் பேராசிரியர் கைலாசபதியின் வகிபாகம் -- அங்கம் -01

இலங்கை சேனையூர் அனாமிகா களரி பண்பாட்டு மையம், தமிழ்நாடு திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை , சென்னை டிஸ்கவரி புக்பெலஸ் ஆகியன இணைந்து டிசம்பர் 06 முதல் நடத்திய  தொடர் காணொளி அரங்கு !

08-12 -2020   அரங்கில்         முருகபூபதி சமர்ப்பித்த உரை 

பேராசிரியர் க. கைலாசபதி இலக்கியத் துறை, இதழியல் துறை


மற்றும் கல்வித் துறையில்  ஆற்றிய  பங்கு அளப்பரியது. கைலாசபதி அவர்கள் மறைந்து முப்பத்தி எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது வாழ்வையும் பணிகளைப் பற்றியும்  தொடர்ச்சியாக உலகில் எங்காவது ஒரு திசையிலிருந்து  யாராவது ஒருவர் அல்லது ஏதேனும் ஒரு அமைப்பு பல தளங்களில் ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடுகின்றன.  கருத்தரங்குகள் நடத்துகின்றன.

 

அந்த ரீதியில் எமது நண்பர் பேராசிரியர் பாலசுகுமார்  கைலாஸ் அவர்களுக்காக  அவரது  நினைக்காலத்தில் இந்த


தொடர்கருத்தரங்கை  ஒருங்கிணைத்துள்ளார்.

 

இதிலும் பாருங்கள்…. கைலாஸின் ஆத்மாதான்  இதனையும்  ஆக்கபூர்வமான வடிவத்தில் ஒழுங்கமைக்க தூண்டியிருக்கிறது என்ற நம்பிக்கையுடன் நானும் இதில் கலந்துகொள்கின்றேன்.

 

கைலாஸ் சிறந்த கல்விமான், இலக்கிய சமூக அரசியல்  ஆய்வாளர். இலக்கிய திறனாய்விலும் ஒப்பியல் இலக்கிய விமர்சனத்துறையிலும் சிறந்த  ஆளுமை என்பதில் எமக்கிடையே   கருத்து பேதம் இருக்காது.  அந்த பண்புகளுக்கெல்லாம் அப்பால், அவர் மிகச்சிறந்த நிருவாகி.

 

அவரிடமிருந்த குறிப்பிட்ட நிருவாகப்பண்பு,  தனக்குப்பின்னரும் வரும் தலைமுறையிடத்தில் கடத்துகின்ற, அல்லது பாய்ச்சுகின்ற இயல்பு இருக்கிறது பாருங்கள், அதுதான் நாம் அவரிடம் கற்றுக்கொண்ட முன்மாதிரி.

 

அவரைக்கொண்டுபோய்   எங்கோ ஒரு முன்பின் தெரியாத தேசத்தில்  விட்டிருந்தாலும், அவர் தனது நிருவாகப்பண்பினை வெளிப்படுத்திக்கொண்டே இருந்திருப்பார்.  அவரது அந்தப்பண்பில் தன்முனைப்பு இருக்காது,  மற்றவர்களை இனம்கண்டு,  உற்சாகப்படுத்தும், ஊக்குவிக்கும்,  ஆலோசனை சொல்லும் இயல்புகளே மேலோங்கியிருக்கும்.

இந்தப்பின்னணிகளிலிருந்துதான் இலங்கை தமிழ் இதழியல் துறையில் கைலாசபதியின் வகிபாகத்தை பற்றி இந்த அரங்கில் பேசுவதற்கு முன்வந்துள்ளேன்.

 


எனக்குத்தந்திருக்கும் இந்த வாய்ப்புக்கு முதலில் நன்றி தெரிவிக்கின்றேன்.   இந்த அரங்கில் கலந்துகொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் தற்போதைய பொழுது,  ஒன்றில் காலை நேரமாகவோ அல்லது மதியமாகவோ, அல்லது மாலை வேளையாகவோ இருக்கலாம்.

 

நான் புலம்பெயர்ந்து வசிக்கும்  கடல்சூழ்ந்த கண்டம் கங்காரு தேசத்தில் தற்போது  நடு இரவும் கடந்த அதிகாலை  ------------ உறக்கம் மறந்து,  நித்திரை விழித்து உங்களுடன் இவ்வாறு நான் பேசுவது இதுதான் எனது வாழ்வில் முதல் தடவை.  அந்தளவுக்கு  கைலாஸ் என்னையும் பாதித்துள்ளார். அதற்கும் அவர்தான் எனக்கு முன்மாதிரி என்பேன்.

 

1976 ஆம் ஆண்டு  யாழ். பல்கலைக்கழகத்தில் அவர்  நடத்திய நாவல் நூற்றாண்டு  ஆய்வரங்கில் நானும் கலந்துகொண்டேன். அது பற்றி ஏற்கனவே எழுதியுமிருக்கின்றேன்.  அச்சமயம் அவர் எனக்குச்சொன்ன புத்திமதியை  இன்றளவும் பின்பற்றிவருகின்றேன்.

 

தமிழகத்திலிருந்து அந்த ஆய்வரங்கில் கலந்கொண்ட தமிழக


எழுத்தாளர் அசோகமித்திரனுக்கும்  எமது இலக்கிய நண்பர்களுக்கும் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் கே. டானியல் தமது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த இராப்போசன விருந்தில்தான்  அவர் இவ்வாறு சொன்னார்:

அப்போது,  நண்பர் மௌனகுரு பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களுடன் இணைந்து  ஏதோ ஒரு கூத்துப்பாடலை மேசையில் தட்டிப்பாடிக்கொண்டிருந்ததாக பசுமையான நினைவு.

 

கைலாஸ் சொன்னார்:

 

“  முதலில்   ஒரு   மனிதன்   தன்னைத்தான்   நிருவகித்துக்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும் . உமக்கு   ஒரு  சிறு  உதாரணம்  சொல்கின்றேன். எனக்கு   தொழில்   நிமித்தம்   ஏதும்   பயணம்  இருந்தால்  அதற்கு ஒரு  வாரத்திற்கு   முன்பே   தயாராகிவிடுவேன்.   தேவைப்படும்   ஆவணங்களை தயார்படுத்திக்கொண்டு   பயணத்தை    எதிர்நோக்குவேன்.   அவ்வாறு   செய்து பழகினால்  


சென்ற   இடத்தில்   அதனை   விட்டு  விட்டேன்    இதனை மறந்துவிட்டேன்   என்று   எம்மை   நாமே   நொந்துகொள்ள வேண்டிய அவசியம்   இருக்காது    அல்லவா?

ஒரு   இதழுக்கு   இந்தத்திகதியில்   கட்டுரை   தருவதாக   ஒப்புக்கொண்டால்   அதே   திகதியில்   அந்த   இதழுக்கு   சேர்ப்பித்துவிடுவேன்.   அதற்காக   இரவு நீண்ட   நேரம்   விழித்திருந்தும்   எழுதுவேன்.   எதனையும் நாளைக்குச்செய்யலாம்   என்று   ஒத்திப்போடுதல்தான்   மிகப்பெரிய    தவறு    “   என்றார்.

இதில் பாருங்கள் ஒரு வரி வருகிறது:  “ இரவு நீண்ட   நேரம்   விழித்திருந்தும்   எழுதுவேன்.   “ இதுதான் கைலாஸ் ! 

எனவே கைலாஸின் இரவுகளை அவர் விழித்திருந்த இரவுகள் எனவும் சொல்லாம்.

 

கைலாசபதியின் தந்தையார்  இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். கைலாசபதி மலேசியாவில்


கோலாலம்பூரில் 05.04.1933 பிறந்து, அங்கே தனது   ஆரம்பக் கல்வியை தொடர்ந்து  இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் இலங்கை வந்திருக்கிறார்.

 

அப்பொழுது நான் பிறந்திருக்கவில்லை.  நான் பிறந்தது 1951 ஆம் ஆண்டில்.  கைலாசபதியினதும்  புதுமைப்பித்தனதும் நண்பரான தொ. மு.சி ரகுநாதன்  எனது தந்தை வழியில் எனது பாட்டனார்.   1956 ஆம் ஆண்டு இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாடாளாவிய ரீதியில் பாரதி விழாக்களையும் ஆய்வரங்குகளையும் நடத்தியபோது  ரகுநாதன் முதல் தடவையாக வருகைதந்தபோது எனக்கு ஐந்து வயது.  ஆரம்பப்  பள்ளி மாணவனாக இருந்தேன்.  ரகுநாதனின் அண்ணன்  தமிழ் அறிஞர்  தொ.மு.சி. பாஸ்கரத்தொண்டமான்  இலங்கைக்கு  1960 களில்  வரும்போதும் நான் மாணவன்தான்.

 

மீண்டும்  ரகுநாதன் 1983 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில்


பாரதி நூற்றாண்டு கால கட்டத்தில் வரும்போது,  நானும்  எழுத்தாளன் என்ற அடையாளத்துடனும் பத்திரிகையாளனாக  வீரகேசரி பத்திரிகையில்   இயங்கிக்கொண்டிருந்தேன்.

 

1971 ஆம் ஆண்டு,  டொமினிக்ஜீவாவின் மல்லிகை இதழின் ஊடாக  நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் அதே  ஆண்டு நவம்பர் மாதம் வெளியான மல்லிகை இதழில் அட்டைப்பட அதிதியாக கைலாசபதியின்   உருவத்தையும் அவர் பற்றிய பதிவையும் பார்க்கின்றேன்.

 

அதுவே கைலாஸ் பற்றி நான் அறிந்துகொண்ட  முதலாவது கட்டுரை.   கைலாசபதி   எனது மாணவப்பருவத்தில் அதாவது 1959 முதல் 1961 வரையில்  தினகரன் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார் என்ற செய்தியையும் அறிந்துகொண்டேன்.

 

கைலாசபதி தினகரன் ஆசிரியராக இருந்த காலத்தில் பாடசாலை மாணவனாக இருந்த நான், அவர் பற்றிய அறிமுகம் மல்லிகை ஊடாக 1971 இல் கிடைத்தபோது அவரது வாசகனாக இலக்கிய மாணவனாகிவிட்டிருந்தேன்.

 

1974 ஆம் ஆண்டு எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய  தேசிய ஒருமைப்பாட்டு  மாநாட்டுக்கான ஆலோசனைக்கூட்டம்   பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில்  நடந்தபோதுதான்  அவரை முதல்


முதலில் சந்தித்தேன்.  அப்பொழுது  அவராகத்தான் தன்னை என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு என்னைப்போன்ற இளம்தலைமுறை இலக்கியப்பிரவேசம் செய்திருப்பதை அறிந்து தோளில் தட்டி வாழ்த்தினார்.

 

அடுத்தவாரமே எனது அழைப்பினை ஏற்று அவர் எங்கள் நீர்கொழும்பூருக்கு வந்து தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டிற்கான பிரசாரக்கூட்டத்திலும்பேசினார்.

அந்தக்கூட்டத்திற்கும் யாரோ கல்லெறிந்தார்கள்.

இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா…,?

 

அவர் அங்கே அந்த இரவு பேசிக்கொண்டிருக்கும்போது, கொழும்பில் தினகரன், வீரகேசரி பத்திரிகைகளில்  தலைப்புச்செய்தியாக  கைலாசபதி யாழ். பல்கலைக்கழக வளாகத்தின் தலைவராக நியமனம் என்ற செய்தி அச்சாகிக்கொண்டிருக்கிறது. அவை மறுநாள் காலையில் வெளிவரவேண்டிய பத்திரிகைகள்.

 

கைலாஸ் எமது ஊருக்கு காரில் வந்து பேசவில்லை.  சாதாரண இலங்கை போக்குவரத்துச்சபையின் பேரூந்தில்தான் வந்தார்.  அதிலேயே திரும்பிச்சென்றார். 

 

அவர் யாழ். பல்கலைக்கழகத்தின் தலைவரானதும் அவரும் குடும்பத்தினரும் தங்கியிருந்த வீட்டுக்கு யாரோ கைக்குண்டும் எறிந்தார்கள்.

 

அந்த யாரோக்கள்  தற்போது எங்கே என்பது தெரியாது. ஆனால்,  கைலாஸ் தொடர்ந்தும் எம்மோடு வாழ்ந்து எம்மை இயங்கவைத்துக்கொண்டிருக்கிறார்.

 

அன்றைய  செய்திதான் இன்றைய வரலாறு!   இதனைத்தான் நாம் மக்களுக்கு செய்தியாகச்சொல்கின்றோம்.  கைலாஸ் அவர்களும்  தனது இதழியல் வாழ்வில் இதனைத்தான் இந்த உண்மைகளைத்தான்   தினகரனிலும் பின்னர் இலக்கிய சிற்றேடுகளிலும் சொல்லி வந்தவர்.

 

நான் வீரகேசரி பத்திரிகையின் நீர்கொழும்பு பிரதேச நிருபராகவும்  பின்னர் அங்கே துணை ஆசிரியராகவும்  இருந்துவிட்டு  33 ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியா வந்துவிட்டேன்.

 

அந்தவகையில்  அவருடைய இதழியல் பணியும் என்னைப்போன்ற  இளம் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியிருக்கிறது.

 

 

ஏரிக்கரை பத்திரிகை (Lake House) என வர்ணிக்கப்படும் தினகரன் 1932 ஆம் ஆண்டு முதல் நாளிதழாக வெளியாகிறது. 23- 05 -1948 ஆம் திகதியன்று தனது முதலாவது தினகரன் வாரமஞ்சரியை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. ஆங்கில, சிங்கள ஏடுகளையும் சஞ்சிகைகளையும் வெளியிட்டு வரும் ஏரிக்கரையிலிருந்து இயங்கும் Lake House என்ற பெரிய நிறுவனத்தின் ஒரே ஒரு தமிழ்த் தினசரி தினகரன்.

அது வெளிவரத் தொடங்கிய காலகட்டத்தில் மற்றும் ஒரு இந்திய ஊடகம் என்ற மாயைதான் இலங்கை வாசகர்களிடம் உருவாகியிருந்தது. தினகரனை இலங்கையின் தமிழ்த் தேசியப் பத்திரிகையாக்கிய பெருமை பேராசிரியர் கைலாசபதியையே சாரும். அப்பொழுது அவர் பேராசிரியர் அல்ல.

அவருக்கு முன்னர் கே.கே. பி.  நாதன் தினகரன் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னாளில் அவர் கொழும்பில் தினபதி, சிந்தாமணி, வெளியிட்ட சுயாதீன பத்திரிகை சமாஜத்தின் 'தந்தி' மாலைத் தினசரியின் ஆசிரியரானார்.

இலக்கியத்திறனாய்வாளராகவும் ஒப்பியல் இலக்கிய முன்னோடியாகவும்  பாரதி ஆய்வாளராகவும் அறியப்பட்ட  கைலாசபதியின் தினகரன் ஆசிரியப்பணி குறித்தும் இருவேறு கருத்தியல்கள் இலக்கிய உலகில் நிலவியதை அறிவோம்.

"பல்கலைக்கழகத்திலிருந்து தமிழ்ச் சிறப்பு பட்டதாரியாக அவர் முதல் வகுப்பில் சித்தியெய்திய பின்னர், அன்று உயர்வாக மதிக்கப்பட்ட அரச நிர்வாகப் பதவியொன்றைத் தேடியிருக்கவோ அல்லது உயர் கல்வி ஆராய்ச்சித்துறையில் இந்நாட்டிலோ வெளிநாடு சென்றோ ஆரம்பத்திலேயே உயரத்துக்கு வந்திருக்க கூடும். ஆனால், கைலாஸ் அவ்வாறு செய்யாது பத்திரிகையுள் புகுந்தார். அதனை வருவாய்க்கு வழியாக அன்றி, அதன் வாய்ப்புகளை உகந்தவாறு பயன்படுத்துவதில் கைலாஸ் குறியாயிருந்தமை தெளிவாகும்.

கைலாஸ் பத்திரிகைத்துறையுள் புகுந்த காலம் மேலைத்தேய நாகரிகமும் ஆங்கில மொழியும் தம் ஆதிக்கத்தை இழக்கத் தொடங்கிய காலம். பொருளாதார அரசியல் துறைகளில் மட்டுமின்றிப் பண்பாட்டுத் துறையிலும் அந்நிய ஆதிக்கம் தளரத் தொடங்கிய காலம். சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக்கப்பட்டதன் விளைவாகத் தமிழ் பேசும் மக்கள், இந்நாட்டில் தங்கள் இருப்பு, வரலாறு, வருங்காலம், தனித்துவம் முதலானவை குறித்து உத்வேகத்துடன் உணர, சிந்திக்கத் தலைப்பட்ட காலம்.

தமிழ்மொழி உபயோகச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை, சுதேச மொழி முக்கியத்துவம் பெறத் தொடங்கியமை, புதிதாக உருவான கலாசார அமைச்சு தமிழ்க்கலை வளர்ச்சிக்கு ஊக்கமளித்தமை, அதுவரை ஆங்கிலப் பத்திரிகைகளே பெற்றிருந்த அரசியல் செல்வாக்கையும் முக்கியத்துவத்தையும் பொதுமக்களைப் பரவலாகச் சென்றடைந்த சிங்கள, தமிழ்ப்பத்திரிகைகளும் பெறத்தக்க வாய்ப்புத் தோன்றியமை, வெளிநாட்டுச் செலாவணிக் கட்டுப்பாடு காரணமாக இந்திய எழுத்தாளர்களுக்குப் பணம் அனுப்பும் வசதி கட்டுப்படுத்தப்பட்டமை... இவை யாவும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவை" என்று விரிவாக கைலாசபதியின் தினகரன் பிரவேசம் பற்றி பேராசிரியர் சி. தில்லைநாதன்  ஏற்கனவே பதிவு செய்துள்ளார் (  ஆதாரம்: நூல்: பன்முக ஆய்வில் கைலாசபதி)

சுதந்திரத்திற்கு முன்னர் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து  வெளியான தமிழ்ப்பத்திரிகைகளுக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். பாரதியாரின் அருமை நண்பர் வ. ராமசாமி அவர்களுக்கு முன்பே, 1920 ஆம் ஆண்டளவில் வந்த கோதண்டராம அய்யர் நடேசய்யர் ( 1887 – 1947 )  தஞ்சாவூரிலிருந்து வந்தவர்.

1971 இல் தேச நேசன் என்ற பத்திரிகையை அங்கே வெளியிடுகிறார். அவர் 1924 முதல் இலங்கை சட்டசபையிலும் பின்னர் அரசாங்க சபையிலும் உறுப்பினராக இருந்தவர்.

1926 ஆம் ஆண்டு வட இலங்கையில் சுன்னாகத்தில், 1926 ஆம் ஆண்டு தனலக்குமி புத்தகசாலையை தொடங்கிய நா. பொன்னையா அவர்கள்,  1930 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஈழகேசரி என்ற பத்திரிகையை வெளியிடுகிறார்.

இங்குதான் சோ. சிவபாதசுந்தரம், இராஜ அரியரத்தினம் ஆகியோர் ஆசிரியர்களாக பணியாற்றினார்கள்.

சோ. சிவபாதசுந்தரம் அவர்கள்தான் இன்றும் நாம் செவிமடுக்கும் லண்டன் பி.பி. சி தமிழ் ஒலிபரப்பிற்கு தமிழோசை என்ற பெயரைச்சூட்டியவர்.

பாரதியின் தேமதுரத்தமிழோசை உலகெங்கும் பரவச்செய்வோம் என்ற தாரக மந்திரத்திலிருந்து பிறந்த தமிழோசை அது.

இலங்கையின் வடபுலத்தில் கே.சி. தங்கராசா, கே.சி. சண்முகரத்தினம் ஆகிய இரண்டு சகோதரர்களின் உள்ளத்தில் முகிழ்த்த பிராந்திய பத்திரிகை ஒன்றின் உருவாக்கத்திற்கான சிந்தனை 1958 இல் யாழ்ப்பாணத்தில் கலாநிலையம் என்ற பதிப்பகமாக வித்தூன்றப்பட்டு, 1959 பெப்பரவரி மாதம் அங்கிருந்து தோற்றம் பெறுகிறது ஈழநாடு பத்திரிகை.

ராமனின் சீதை இலங்கைக்கு வந்தமையால் தீக்குளித்தாள்.  எங்கள் தேசத்தின் ஈழநாடு ஒரு முறையல்ல சில முறை தீக்குளித்தது. மீண்டும் யாழ்ப்பாணத்திலிருந்து இப்பொழுதும் இந்த டிஜிட்டல் யுகத்தில் இணையத்திலும் வெளிவருகிறது. 

1930 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்த ஒரு அச்சகத்திலிருந்து வெளிவந்தது வீரகேசரி நாளிதழ். அதற்கு தற்போது 90 வயது நிறைவடைந்துவிட்டது. 

வீரகேசரியைத் தொடர்ந்து 1932 ஆம் ஆண்டுமுதல் வெளிவரத்தொடங்கிய தினகரன் நாளிதழில்தான் 1959 ஆம் ஆண்டிற்குப்பின்னர் எங்கள் கைலாசபதி இணைகிறார்.

அதற்கு முன்னர் இலங்கை 1958 இல் ஒரு கலவரத்தை கண்டுவிடுகிறது.

அதற்கு முன்னர் கைலாசபதி பிறப்பதற்கு முன்பே 1915 இல் இலங்கை மத்தியமாகாணத்தில் ஒரு கலவரம் நடந்து அதன் வழக்கு லண்டன் பிரிவுகவுன்ஸில் வரையும் சென்றது.  அதற்கு வாதாடிவிட்டு  கப்பலில் திரும்பி வந்த வந்த சேர். பொன். இராமநாதனை சிங்களமக்கள்  துறைமுகத்திலிருந்து பல்லக்கில் வைத்து சுமந்து வந்தனர்.

அதே  சேர். பொன் இராமநாதன்  ஸ்தாபித்த யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரியில் 1974 ஆம் ஆண்டு அமைந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவராக கைலாசபதி நியமனமாகிறார்.

அதற்கு முன்னர் அவர் முதலில் வாரமஞ்சரிக்குப்பொறுப்பாசிரியராகவும் , பின்னர் தினகரன் நாளேட்டுக்கு பிரதம ஆசிரியராகவும் நியமனம் பெறும் கைலாசபதி அவர்களின் தமிழ் இதழியல் பங்களிப்பு வகிபாகம் பற்றி சொல்லவரும்போது இந்த வரலாற்றையும் தெரிவிக்கவேண்டியதாகியிருக்கிறது.

( தொடரும் )

 

No comments: