இலங்கைச் செய்திகள்

 பொலிஸ் சேவை ஆணைக் குழு உறுப்பினராக பரமேஸ்வரன் நியமனம்

ஜூன் மாதத்தின் பின் தரையிறங்கிய முதல் விமானம்

இலங்கையின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் திறப்பு

வடமராட்சியில் பொலிஸாரின் அட்டகாசம்- நபர் ஒருவரை துப்பாக்கி முனையில் வைத்து சுட்டுக்கொன்றுவிடுவேன் என மிரட்டல்!

கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வது தொடர்பில் சாதக சூழல்

முன்னாள் DIG வாஸ் குணவர்தனவுக்கும் கொரோனா தொற்று

விமான நிலையங்களை 26 முதல் திறக்க ஏற்பாடு


பொலிஸ் சேவை ஆணைக் குழு உறுப்பினராக பரமேஸ்வரன் நியமனம்

தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழு உறுப்பினராக கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரும் சட்டத்தரணியுமான த.ப. பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அவருக்கு இந்நியமனத்தை வழங்கியுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் யாப்பின் 41(ஏ) மற்றும் 155 (ஏ) (1) சட்டப்பிரிவுக்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் நயினாதீவை பிறப்பிடமாகவும் யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவராகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டமாணி பட்டத்தையும் அத்துடன் சட்டத்தரணியுமாவார்.

கொழும்பு விவேகானந்தா கல்லூரி, கொழும்பு டி.எஸ். சேனநாயக்கா கல்லூரியின் உப அதிபராகவும் கடமையாற்றி கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் அதிபராகவும் கடமையாற்றி ஓய்வுபெற்றவராவார்.   நன்றி தினகரன் 
ஜூன் மாதத்தின் பின் தரையிறங்கிய முதல் விமானம்

- ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு பெருமை

ஜூன் மாதத்தின் பின்னர் மெல்பேர்னில் தரையிறங்கிய முதல் சர்வதேச விமானம் என்ற பெருமையை ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல்-604 என்ற விமானம் பெற்றுள்ளது.

அதன்படி இந்த விமானமானது நேற்று முன்தினம் மாலை 04.45 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, நேற்று காலை 07.53 மணியளவில் மெல்பேர்னின் துல்லாமரைன் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளது.

மெல்பேர்னில் தொடர்ச்சியாக 38 நாட்களில் எதுவித கொரோனா நோயாளர்களும் பதிவாகாத நிலையில் எட்டு சர்வதேச விமானங்களினூடாக 258 பயணிகளை முதற் கட்டமாக கொண்டு வருவதற்கு மெல்பேர்ன் நடவடிக்கை எடுத்திருந்தது.

அந்த எட்டு விமானங்களில் மெல்பேர்னில் தரையிறங்கிய முதல் விமானம் என்ற பெருமையை ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல்-604 என்ற விமானம் பெற்றுள்ளது.

இந் நிலையில் துல்லாமரைன் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ள பயணிகளை தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக விக்டோரியாவில் மறுசீரமைக்கப்பட்டுள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. துல்லாமரைன் விமான நிலையத்தில் தரையிறங்கும் அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு 170 க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலிய படை வீரர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.    நன்றி தினகரன் 

இலங்கையின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் திறப்பு

இலங்கையின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் திறப்பு-Windmill-Power-Plant-Thambapavani-Declared-to-Open-by-PM-Mahinda-Rajapaksa

- 103.5MW மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைப்பு
- 141 மில்லியன் டொலர் கடனுதவி திட்டம்
- மணித்தியாலத்திற்கு ஒரு கிலோ வாற்று உற்பத்தி செய்ய 0.05 டொலர் செலவு
- வருடாந்தம் 285,000 மெற்ரிக் தொன் CO2 விடுவிக்கப்படுவது தடுக்கப்படும்

இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான, முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையமான, 'தம்பபவனீ' மின்னுற்பத்தி பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வுத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (08) முற்பகல் மன்னாரில் இடம்பெற்றதோடு, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் இம்மின்னுற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி பூங்கா திறப்பு-Windmill-Power-Plant-Thambapavani-Declared-to-Open-by-PM-Mahinda-Rajapaksa

அதற்கமைய, தேசிய மின்கட்டமைப்பில் 103.5 மெகா வாற்று (103.5MW) மின்வலு இணைக்கப்படுகின்றது.

மன்னாரின் தெற்கு கரையோரப் பகுதியில் அமைக்கப்பட்ட குறித்த காற்றாலை மின்னுற்பத்தி பூங்காவில், 30 காற்றாலை கட்டமைப்புகள் நிர்மாணிகக்ப்பட்டுள்ளதாக, மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி பூங்கா திறப்பு-Windmill-Power-Plant-Thambapavani-Declared-to-Open-by-PM-Mahinda-Rajapaksa

ஒவ்வொரு காற்றாலை கட்டமைப்பும், 3.45MW மின்சாரத்தை வழங்கும் என்பதோடு, 30 கட்டமைப்பைக் கொண்ட முழு மின்னுற்பத்தி நிலையத்தினாலும், 103.5MW மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மின்னுற்பத்தி நிலையமானது, வருடாந்தம் , 380 மில்லியன் அலகிற்கும் அதிகமான மின்சாரத்தை தேசிய கட்டமைப்புக்கு வழங்கக் கூடியது.

முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி பூங்கா திறப்பு-Windmill-Power-Plant-Thambapavani-Declared-to-Open-by-PM-Mahinda-Rajapaksa

இதன் மூலம் மணித்தியாத்திற்கு ஒரு கிலோ வாற்று மின்சார உற்பத்திக்க்கு 5 சத டொலரிலும் (5.0 US Cents/0.05 USD) குறைவான செலவே (5.0 US Cents per kw/hr) செல்கிறது என மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேயளவான எரிபொருள் மூலமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும்போது வருடாந்தம் விடுவிக்கப்படும் 285,000 மெற்ரிக் தொன் காபனீரொட்சைட்டு சூழலுக்கு விடுவிக்கப்படுவது தடுக்கப்படுவதோடு, அதற்கு செலவாகும் எரிபொருளும் மீதப்படுத்தப்படுகின்றது.

முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி பூங்கா திறப்பு-Windmill-Power-Plant-Thambapavani-Declared-to-Open-by-PM-Mahinda-Rajapaksa

இலங்கை மின்சார சபையிடம் வழங்கப்பட்ட மன்னார் காற்றாலை மின்சக்தி (Mannar Wind Power Project (MWPP)) திட்டமானது, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட சுமார் 141 மில்லியன் டொலர் கடனுதவி மூலம் அமைக்கப்பட்டதாகும்.

இது நீண்ட கால, நிலைபேறான திட்டமென்பதோடு, இலங்கையின் பருவப் பெயர்ச்சி காற்று பாங்கினை அடிப்படையாகக் கொண்டு, அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் வகையில், சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி பூங்கா திறப்பு-Windmill-Power-Plant-Thambapavani-Declared-to-Open-by-PM-Mahinda-Rajapaksa

வடமராட்சியில் பொலிஸாரின் அட்டகாசம்- நபர் ஒருவரை துப்பாக்கி முனையில் வைத்து சுட்டுக்கொன்றுவிடுவேன் என மிரட்டல்!

வடமராட்சி பகுதியில், தமது கட்டளையை மீறிச் சென்றார் என பொதுமகன் ஒருவரை துரத்தி வந்து வீதியில் இடைமறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் துப்பாக்கியை நீட்டி சுட்டுப்படுகொலை செய்வேன் என மிரட்டி தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரினால், மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் பாண் வாங்குவதற்காக கடைக்கு சென்று, பாண் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை, அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர், வழிமறித்து, நாம் மோட்டார் சைக்கிளை மறித்த போது நிறுத்தாமல் ஏன் ஓடினாய் என தகாத வார்த்தைகளால் பேசி அவரது மோட்டார் சைக்கிளையும் உதைத்துள்ளார்.

இந்த சம்பவம் வடமராட்சி , உடுப்பிட்டி சந்திக்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தின் போது, பொலிஸாரால் வழிமறிக்கப்பட்ட நபர், தான் சந்திக்கு வரவில்லை எனவும், தான் பக்கத்து கடையில் பாண் வாங்கிக்கொண்டு வீடு நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் , பதிலளித்துள்ளார்.

அதன் போது பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது துப்பாக்கியை அவருக்கு முன்னால் நீட்டி "நான் நினைத்தால் இதிலையே உன்னை சுட்டுப்படுகொலை செய்வேன்" என மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

பின்னர் துப்பாக்கி முனையில் அவரை சந்திக்கு அழைத்து சென்ற போது , சந்தியில் நின்ற மற்றைய பொலிஸ் உத்தியோகஸ்தர் இவரை தடுக்கவில்லை, தப்பி சென்றவர் இவர் இல்லை என கூறியுள்ளார்.

அதன் போது பொலிஸ் உத்தியோகஸ்தர் துப்பாக்கி முனையில் அழைத்து சென்ற நபரை ஓடு என மீண்டும் தகாத வார்த்தைகளால் பேசி துரத்தி உள்ளார்.

தனி நபர் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில் பொது இடத்தில் வைத்து பொலிஸ் உத்யோகத்தர் இவ்வாறு தகாத முறையில் நடந்து கொண்டதுடன், துப்பாக்கியைக் காட்டி "சுட்டுப்படுகொலை செய்வேன் " என மிரட்டியமையைப் பார்த்து அங்கு கூடியிருந்த மக்கள் அச்சமடைந்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரினால், மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்பு பொலிஸ் பிரிவை சேர்ந்தவர்கள் எனவும், பொதுமக்களுடன் அவர்கள் அவ்வாறு அநாகரிகமாக பல தடவைகள் நடந்து கொண்டுள்ளார்கள் எனவும், அண்மையில் துன்னாலை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் அடித்து உடைத்து சேதபடுத்தினார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை இவர்கள் மாலை வேளையில் கைகளில் விக்கெட் உடன் வீதிகளில் நடமாடி திரிந்து மக்களை அச்சுறுத்தும் விதமாகவும் நடந்து கொள்பவர்கள் எனவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்பு பொலிஸ் பிரிவை சேர்ந்தவர்களே இவ்வாறு பொதுமக்களுடன் அநாகரிகமாக நடந்து கொள்வது தொடர்பில் மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளார்கள்.    

நன்றி   

கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வது தொடர்பில் சாதக சூழல்

பிரதமர் மற்றும் பசிலுடனான முஸ்லிம் எம்.பிக்களின் பேச்சில் திருப்தி

கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களின் சடலங்களை புதைப்பது தொடர்பில் அரசாங்கத்திலுள்ள முக்கிய தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமைந்துள்ளதாக ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தெரிவித்தனர்.

ஏற்கெனவே ஆளும் தரப்பு எம்.பிகள், நிபுணர்குழு உட்பட பலருடன் பேச்சு நடந்த நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பு நம்பிக்கை தரும் வகையில் சாதகமான நடந்ததாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இஷாக் ரஹ்மான்,எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் தினகரனுக்கு தெரிவித்தனர்.நிலத்தடி நீர் அற்ற வரண்ட பகுதியை அடையாளங் காண்பது குறித்தும் தொழில்நுட்ப குழுவிற்கு துறைசார் நிபுணர்களை புதிதாக நியமிப்பது தொடர்பிலும் இந்த சந்திப்பில் சாதகமான முடிவு எட்டப்பட்டதாகவும் அறிய வருகிறது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இஷாக் ரஹ்மான் எம்.பி,

பிரதமருடனும் மேலும் முக்கிய தலைவர்களுடனும் கடந்த இரு தினங்களில் நடத்திய பேச்சுக்கள் சாதகமாக அமைந்தன.

இன்னும் சந்திப்புகள் இடம்பெற இருப்பதோடு முஸ்லிம்களுக்கு நிம்மதி அளிக்கும் தீர்வு விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.

அண்மைய முன்னெடுப்புகள் சாதகமாக நம்பிக்கை தரும்வகையில் அமைந்ததாக முஷாரப் எம்.பி தெரிவித்தார்.

தமிழ் சமூகம் முகங்கொடுத்தது போன்ற பிரச்சினையை தான் இன்று முஸ்லிம்கள் எதிர் கொண்டுள்ளனர்.இது பேசி காலங்கடத்தும் விடயமல்ல.பாராளும்னறத்தில் சகல கட்சியை சேர்ந்தவர்களும் கோரிக்கை முன்வைத்தார்கள்.அதிகாரிகளில் இனவாதிகள் உள்ளனர்.

இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள தேசிய காங்கிரஸ் தலைவர் எம்.எல்.ஏ.எம்.அதாவுல்லா எம்.பி,

எமது தொடர் முயற்சிகளுக்கும் நமது உம்மத்துக்களின் நியாயமான பிராத்தனைகளுக்கும்,பலன் கிடைக்க சமிக்ஞைகள் கிடைத்துள்ளது.உணர்சிகளுக்கு அடிமையாகி காரியம் கைகூடாமல் போன கடந்த கால அனுபவங்களை கற்றுத்தந்த பாடங்களாக மனதில் நிறுத்துவது அவசர தேவையுமாக உள்ளது.குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ள ​வேண்டும்.எம் எல்லோரின் எண்ணங்களையும் நிறைவேற்ற தொடர்ந்தும் பிரார்த்திக்குமாறும் அவர் கோரியுள்ளார்.முஸ்லிம் எம்.பிகள் குழு நேற்று பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷவை நேற்று சந்தித்ததாகவும் அறிய வருகிறது.(பா)

ஷம்ஸ் பாஹிம் - நன்றி தினகரன் 


முன்னாள் DIG வாஸ் குணவர்தனவுக்கும் கொரோனா தொற்று

முன்னாள் DIG வாஸ் குணவர்தனவுக்கும் கொரோனா தொற்று-Ex DIG Vaas Gunawardena Tested Positive for COVID19-Welikada Prison

மரண தண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜென் பரிசோதனைகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் (11) வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 14 பேரும், மஹர சிறைச்சாலையில் மேலும் 75 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.     நன்றி தினகரன் 


விமான நிலையங்களை 26 முதல் திறக்க ஏற்பாடு

சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவிப்பு

இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களை எதிர்வரும் 26ம் திகதி முதல் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவிக்கின்றது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கட்டுநாயக்க, மத்தள, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய விமான  நிலையங்களை திறக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வணிக விமானங்கள் மற்றும் நிரந்தர நேர அட்டவணையின்றி பயணிக்கும் விமானங்களுக்கான சேவைகள் வழமை போன்று வழக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கையில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பிலான அறிவிப்பு பின்னர் விடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சர்வதேச விமான நிலையங்களை திறப்பதற்கான உறுதியான திகதி எதிர்வரும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.    நன்றி தினகரன் 

No comments: