டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி முக்கியமான தினம். இன்றுதான் சர்வதே மனித உரிமைகள் தினம்.
அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம், ஆண்கள் தினம், அகதிகள் தினம், காதலர் தினம் என்று ஏதாவது ஒன்று வருடம் ஒருமுறை வந்துவிட்டு, கடந்துசென்றுவிடும்.
அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் வந்தால், அதற்காக பரிசுப்பொருட்கள் வாங்குவதற்கு ஆர்வம் காண்பிப்பார்கள். பரஸ்பரம் வாழ்த்துக்களை கூறுவார்கள். மலர்கள், மலர்க்கொத்துக்கள் விற்பனையாகும் கடைகளில் ஆட்கள் வந்து செல்வார்கள்.
ஊடகங்களும் இதுபற்றி ஓரிரு பக்கங்களில் கட்டுரைகளை வெளியிட்டு, தனது ஊடகதர்மத்தை நிலைநாட்டிவிடும்.
காதலர்கள் கவிஞர்களாயின் காதலர் தின கவிதை எழுதுவார்கள்.
அன்னை, தந்தை பாசம் மிக்க கவிஞர்களும் ஏதாவது கிறுக்குவார்கள்.
குறிப்பிட்ட இந்தத் தினங்கள் பற்றிய அடிப்படை அறிவோ பிரக்ஞையோ எனக்கில்லாதிருந்த ஒரு காலத்தில் இலங்கையில் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதியன்று வெளியிடவேண்டிய மனித உரிமைகள் தொடர்பான பிரசுரத்தை நான் எழுதநேர்ந்தது.
அந்தப்பிரசுரம் அவ்வேளையில் சிறைகளில் அடைபட்டுக்கிடந்த அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் எனக்கோரும் பிரசுரம்.
எமது இலங்கையில் காலம் காலமாக அரசியல் கைதிகள் சிறைகளில் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
தமக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க அனைவரும் ஓரணியில் திரளுங்கள் என்று இலங்கை சிறைகளிலிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் இன்றைய நாளில், இந்தப்பதிவை எழுதுகின்றேன்.
அத்துடன் நாடாளுமன்ற ஆசனங்களில் அமர்ந்திருக்கும் தமிழ்த்தலைவர்கள் சிலர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி தமது கையொப்பங்களுடன் வழங்கிய கோரிக்கை மனுவை தற்போதைய பிரதமர் மகிந்தராஜபக்க்ஷ முன்னிலையில் சில தலைவர்கள், முகக்கவசம் அணிந்தவாறு இடைவெளி பேணி, பவ்வியமாக வழங்குவதையும் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.
அண்மையில் மகசின் சிறைச்சாலையில் நிகழ்ந்த அனர்த்தங்கள் ஒரு
புறம், சிறைச்சாலைகளுக்குள் வேகமாக பரவிவரும் கொரோனோ வைரஸின் தொற்று மறுபுறம் இருக்கையில் அதற்கு மத்தியில் இந்தக்காட்சியை நாம் பார்க்கின்றோம்.
இற்றைக்கு 43 வருடங்களுக்கு முன்னர், நானும் சில சிங்கள , முஸ்லிம் தோழர்களும் இணைந்து எழுதிய அரசியல் கைதிகளை நிபந்தனைகளெதுவும் இன்றி விடுதலை செய்யவேண்டும் எனக்கோரும் மனுவை அச்சிட வழங்கி அதன் மூலப்பிரதியை பெற்று ஒப்புநோக்கினேன்.
எனது கையெழுத்தை தமிழில் அச்சுக்கோர்த்தவர் ஒரு தமிழ்ச்சகோதரி. அந்த அச்சகம் கொழும்பு கொம்பனித்தெருவில் மலே வீதியில் அமைந்த ஒரு சிங்கள தோழருக்குச் சொந்தமானது.
அங்குதான் நான் இன்றைய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனாவையும் முதல் முதலில் சந்தித்தேன். அச்சமயம் அவர், அவரது தந்தை பிலிப்குணவர்தனாவின் மக்கள் ஐக்கிய முன்னணியின் செயலாளராக இருந்தார்.
அவரது தம்பி இந்திகா குணவர்தனா இலங்கை கம்யூனிஸ்ட் ( மாஸ்கோ சார்பு ) கட்சியிலிருந்தார்.
வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராக எனது தொழில்
வாழ்க்கையை ஆரம்பித்திருந்த காலப்பகுதியிலேயே சிறுகதை எழுத்தாளனாகவும் அறிமுகமாகியிருந்த நான் எதிர்பாராமல் அரசியல் பக்கம் திரும்பியதும் குறிப்பிட்ட 1976 – 1977 காலப்பகுதியில்தான்.
அதற்கு முன்னர் 1975 ஆம் ஆண்டில் ஒரு மாதம் வெளியான மல்லிகை
இதழில் ஆசிரியத் தலையங்கத்தின் அடுத்த பக்கத்தில் அதன் ஆசிரியர் மல்லிகை ஜீவா வழக்கமாக எழுதும் மல்லிகைப்பந்தலின் கொடிக்கால்கள் என்ற பத்தியில் எனது படத்துடன் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
அதனை நான் எதிர்பார்க்கவில்லை. எனது படம் ஒன்றுகேட்டு ஜீவா பல மாதங்களாக அலுப்புத்தந்துகொண்டிருந்தார்.
ஸ்ரூடியோவுக்குச்சென்று படம் எடுத்துக்கொடுக்கவும் கையில் பணம் இருக்கவில்லை. எனது சுமையின் பங்காளிகள் முதல் கதைத்தொகுதியின் பின்புற அட்டைக்காக ஒரு படத்தை அவசியம் எடுக்கவேண்டியிருந்தது.
எனக்கு பாடசாலையில் சித்திரப்பாடத்தில் ஓவிய ஆசிரியராக இருந்த ரஸாக் மாஸ்டர் தமது வீட்டில் டொலர் ஸ்ரூடியோவை சிறியளவில் நடத்திக்கொண்டு, வீடுகளில் இடம்பெறும் பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும், கோயில்களில் நடைபெறும் திருமண
வைபவங்களிலும் படம் எடுத்துக்கொண்டிருந்தார்.
அவரிடம் எனது நிலைமையை சொன்னதும் ஒரு கறுப்புவெள்ளைப்படம் எடுத்துத்தந்தார். அதில் ஒன்று எனது புத்தகம் அச்சாகிய சாந்தி அச்சகத்திற்கும், மற்றொன்று மல்லிகை ஜீவாவிடமும் சென்றது.
ஜீவா அதனைப்பயன்படுத்தி இவ்வாறு எழுதியிருந்தார்.
“ ஒரு சுறுசுறுப்புள்ள இளைஞன். பொது வேலைகளில் தன் பகுதி மக்களை ஒருங்கு திரட்டி, இயக்கம் நடத்தும்போராளி. பின்தங்கியிருந்த பிரதேசப்பரப்பில் தனது வருகையாலும் இலக்கிய இயக்கத்தில் தன்னையும் ஓர் உறுப்பாக இணைத்துக்கொண்டதினால், ஏற்பட்ட பரந்த பொறுப்புணர்ச்சியை பெற்றுக்கொண்டு வளர்ந்துவரும் எழுத்தாளன். நல்ல நண்பர்களுக்கு நல்ல இதயசுத்தியான நண்பன். முற்போக்கு இயக்கத்தின் வெகுஜனக்கடமைகளைப் புரிந்துகொண்டு பணியாற்றும் தோழன், இவை அத்தனையையும் தன்னுள் அடக்கிக்கொண்டு இயங்கிவருபவர்தான் திரு. லெ. முருகபூபதி அவர்கள்.
நீர்கொழும்பை பிறப்பிடமாகக் கொண்டு அங்கேயே வாழ்ந்துவரும் முருகபூபதி, மல்லிகை கண்டெடுத்த நல்ல எதிர்காலத் தகைமையுள்ள எழுத்தாளர்.
அதிகம்பேசித் தம்பட்டம் அடிக்காமல் – இன்றைய இளம் எழுத்தாளர்
பலரிடமுள்ள பலவீனங்கள் ஒன்றுமில்லாமல் மௌனமாக இருந்து தனது பகுதிக்கும் பொதுவாக ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றி வருபவர்.
இவர் பிரபல தமிழக எழுத்தாளர் ரகுநாதன் அவர்களின் மிக நெருங்கிய உறவினர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கொழும்பிலும் நீர்கொழும்பிலும் மாதத்துக்கு ஒரு தடவையேனும் இவரைச்சந்திப்பதில் தவறமாட்டேன். நல்ல உழைப்பாளி. மல்லிகையின் வளர்ச்சியில் பம்பரம் போலச் சுழன்று இயங்கிவருபவர்.
சமீபத்தில் இவர் எழுதி வெளிவந்த “ சுமையின் பங்காளிகள் “ சிறுகதைத் தொகுதி முன்னுரையில் “ தன்னை இலக்கிய உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதே மல்லிகைதான் “ என நன்றியுணர்வுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வார்த்தைகள் அவரைப்பொறுத்தவரை தேவையற்றவை என்றே நான் கருதுகிறேன்.
யாரும் நம்பிச் சிநேகம் வைத்துக்கொள்ளத்தக்க சகல சிறப்புப்பண்புகளும் இவரிடம் குடிகொண்டுள்ளன. சமீபகாலத்தில் நமது நாட்டில் மிக வேகமாக எழுத்துத்துறையில் முன்னுக்கு வந்துள்ள இவர், நீர்கொழும்பின் பெயரையே இலக்கிய வட்டாரத்தில் முழுக்கப் பதித்துவிட்டார்.
மல்லிகைப்பந்தலின் கீழ் யாழ்ப்பாணத்தில் அறிமுகமான முதன் முதல் நூலே இவரது சிறுகதைத் தொகுதிதான் என்பதையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். “
இவ்வாறு மல்லிகை ஆசிரியர் என்னை பப்பா மரத்தில் ஏற்றிவிட்டதை பல ஈழத்து எழுத்தாளர்களும் பார்த்துவிட்டனர்.
அவர்களில் பலரும் மல்லிகை வாசகர்கள், மல்லிகையில் எழுதுபவர்கள். கொழும்பைச்சேர்ந்த பல மல்லிகை வாசகர்கள், எழுத்தாளர்களின் நண்பராக விளங்கிய மாணிக்ஸ் என நாம் அன்போடு அழைக்கும் ஆசிரியர் மாணிக்கவாசகர் அப்போது கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
நான், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தில் முழுநேர ஊழியனாக பணியாற்றிக்கொண்டிருந்தேன். அதில் அங்கம் வகித்த எழுத்தாளர்கள் பிரேம்ஜியும் சோமகாந்தனும் அந்த ஊழியத்திற்காக மாதம் 150 ரூபா அலவன்ஸ் தந்தார்கள். நானும் நீர்கொழும்பு – கொழும்பு என தினசரி பஸ்ஸுக்கு செலவழித்து தினமும் பயணித்துக்கொண்டிருந்தேன்.
இந்தப்பயணங்களில்தான் இலக்கிய ஆர்வலர்கள் ஆசிரியர்கள் மாணிக்கவாசகரும் சிவராசாவும் எனக்கு அறிமுகமானார்கள். இருவருமே கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள்.
ஒருநாள் திடீரென்று மாணிக்ஸ், “ பூபதி… கொழும்பில் கல்வி அமைச்சு அமைந்திருக்கும் மலே வீதியில் எங்களது தொழிற்சங்கமான இலங்கை ஆசிரியர் சங்கம் இயங்குகிறது. மாலையில் அங்கே வாரும் . உமக்கு மற்றும் ஒரு வேலை காத்திருக்கிறது.” என்றார்.
சங்கம் மாதாந்தம் தரும் 150 ரூபாவை வைத்துக்கொண்டு என்ன செய்வது, மேலதிக வேலையொன்று கிடக்கவேண்டும் என யோசித்துக்கொண்டிருக்கையில், மாணிக்ஸ் அவர்களின் அழைப்பு பாலைவனத்தில் கண்ட மற்றும் ஒரு தண்ணீர் ஊற்றுப் போன்றிருந்தது.
இலக்கிய எழுத்து, பத்திரிகை எழுத்து என்றிருந்த நான் அரசியல் எழுத்தாளனாக என்னை அறியாமலே மாறநேர்ந்தது அப்போதுதான். விதி சும்மா இருக்காது, திட்டமிட்டு அழைத்துச்செல்லும், இழுத்துவிட்டு விபரீத விளையாட்டுக்களும் விளையாடும். கவிழ்த்தும் விடும். எஞ்சுவது புத்திக்கொள்முதல் மாத்திரம்தான்.
மாணிக்ஸ் சொன்னவாறு அங்கே சென்றேன். ஆசிரியர் சங்கத்தின் அப்போதைய தலைவர் எச். என். பெர்னாண்டோ, செயலாளர் சித்ரால் ஆகியோரை மாணிக்ஸ் எனக்கு அறிமுகப்படுத்தினார். எனக்கு மொழிபெயர்ப்பு வேலைகளும் ஆசிரியர் சங்கத்தின் உத்தியோகபூர்வ வெளியீடான ஆசிரியர் குரல் இதழை ஒப்புநோக்கி ( Proof ) பார்த்து செம்மைப்படுத்தும் ( Edit ) வேலையும் தரப்பட்டது. அங்கும் மாதாந்தம் 150 ரூபா அலவன்ஸ் தருவதாகச்சொன்னார்கள்.
மாணிக்கவாசகரின் அண்ணன் குமாரசாமி கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவில் இருந்தவர். இன்னுமொரு குமாரசாமியும் இருந்தார். அவர் பொன். குமாரசாமி. மாணிக்ஸின் அண்ணன் ஸி.குமாரசாமி. அதனால் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் முற்போக்கு முகாமில் அவர்கள் ஸி.கும், என்றும் பி.கும் எனவும் அழைக்கப்பட்டார்கள்.
1970 இல் பதவிக்கு வந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் அமைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, சமசமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி கூட்டரசாங்கத்தின் தேன்நிலவுகாலம் 1976 இல் அஸ்தமித்துக்கொண்டிருந்தது. அதற்குப்பல காரணங்கள் இருந்தன. தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஆசிரியர் சங்கமும் குதித்தது. அத்துடன் 1971 இல் நடந்த ஏப்ரில் கிளர்ச்சியில் பங்கேற்று குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் தீர்ப்பின்பிரகாரம் சிறைகளில் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த ரோகண விஜேவீரா, லயனல்போப்பகே உட்பட நூற்றுக்கணக்கான இளைஞர்களை விடுதலை செய்யக் கோரும் ஆர்ப்பாட்டங்களும் கையொப்பங்கள் திரட்டும் இயக்கமும் தொடங்கியது.
இலங்கை ஆசிரியர் சங்கம் இந்தப்போராட்டத்தில் தீவிரமாக இறங்கியதனால் நானும் அதில் உள்வாங்கப்பட்டேன். அதற்காகத்தான் இந்த அங்கத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்ட பிரசுரத்தை எழுதி அச்சகத்திற்கு கொடுத்துப்பெற்றேன்.
அதற்கு சில தினங்களுக்கு முன்னர் ஆசிரியர் சங்கம் அமைந்த வீதியில் இருந்த மற்றும் ஒரு இடதுசாரி தொழிற்சங்கத்தின் பணிமனையில் அந்த பிரசுரத்தில் கையொப்பம் இட்டவர்களின் கூட்டம் நடந்தது.
அந்த ஆண்டு ( 1977 ) ஏப்ரில் மாதம் 27 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு கொழும்பு ஹயிற்பார்க்கில் மாபெரும் கூட்டம் ஏற்பாடு செய்வதற்கான ஆலோசனைக்கூட்டம் அது.
அதில் கலந்துகொண்டவர்கள்:
குமாரி ஜயவர்தனா, என். சண்முகதாசன், பிரின்ஸ் குணசேகரா, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தனா, இந்திகா குணவர்தனா, நந்தா எல்லாவல, மகிந்த விஜேசேகர, விக்கிரமபாகு கருணாரத்ன, ரெஜி ஶ்ரீவர்தன, கார்லோ பொன்சேக்கா, டீ. ஐ. ஜி. தர்மசேகர, சுனிலா அபேசேகர, உட்பட பலர். அதில் கலந்துகொண்டு நானும் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் கையொப்பம் இட்டேன்.
அவர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அப்போது அங்கம் வகித்திருந்தனர்.
கொழும்பு ஹயிற்பார்க் கூட்டத்தை தொடர்ந்து தென்னிலங்கையெங்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் கூட்டங்கள் நடத்தினோம். கையொப்பம் சேகரித்தோம்.
எமது நீர்கொழும்பு கூட்டத்திற்கு தோழர்கள் சண்முகதாசன், லெஸ்லி குணவர்தனா, வாசுதேவ நாணயக்கார ஆகியோரையும் அழைத்தோம்.
ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அன் றைய அரசில் அங்கம் வகித்த சமசமாஜக்கட்சியிலிருந்து வாசுதேவ நாணயக்காரவும் விக்கிரமபாகு கருணாரத்தினவும் வெளியேறி நவசமமாஜக்கட்சியை தொடங்கிவிட்டனர். .
“ சீவியத்துக்கு தொழில்தேடி வந்த எனது வாழ்வை அரசியல் பக்கம் இழுத்துவிட்டீர்களே…” என்று ஒருநாள் மாணிக்ஸிடம் சொன்னேன்.
நாடாளுமன்றத்தில் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவை கலாநிதி என். எம். பெரேரா ‘சாத்தான்’ என்று விமர்சிக்கும் அளவுக்கு முரண்பாடுகள் முற்றியதன் எதிரொலியே கூட்டரசாங்கத்தின் வீழ்ச்சி. 1977 பொதுத்தேர்தலில் இடதுசாரிகள் ஐக்கிய முன்னணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்கினார்கள்.
தொண்டமானின் இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பு மத்தியிலிருந்த தமிழ்வாக்காளர்களை கவனத்தில் எடுத்து செல்லச்சாமியை களமிறக்கியது. பீட்டர் கெனமனுக்கு கிடைக்கவிருந்த தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்பட்டன. தேர்தலில் இருவருமே தோல்வி கண்டனர். கொழும்பு மத்தி மூன்று அங்கத்தவர் தொகுதி என்பதனால் பிரேமதாஸவும் ஜபீர் ஏ.காதரும் ஐக்கியதேசியக்கட்சியின் சார்பிலும் ஹலீம் இஷாக் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பிலும் வெற்றிபெற்றனர்.
மாணிக்கவாசகரிடம் நாடாளுமன்றப்பாதையின் போலித்தனங்கள் பற்றி விவாதிக்க நேர்ந்தது. அந்த இளம்பருவத்திலேயே இலங்கையின் எதிர்காலம் குறித்த கவலைகள் மனதில் எழுந்தபோதிலெல்லாம் மாணிக்ஸுடன் விவாதிப்பேன். அவர் என்னை பிரேம்ஜியிடம் அனுப்புவார். எனினும் ஒரு தெளிவும் கிடைக்கவில்லை. ஆசிரியர் சங்கத்தினதும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினதும் வேலைகளில் தொடர்ந்தேன்.
ஜே. ஆர். ஜயவர்தனா தலைமையில் அறுதிப்பெரும்பான்மை பெற்ற ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி அமைத்தது. இடதுசாரிகள் தோற்றனர். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவர் ஆனார். 1977 இல் பதவிக்கு வந்ததும் முதல் வேலையாக குற்றவியல் நீதி ஆணைக்குழுவை ( Criminal Justice Commission ) இரத்துச்செய்த ஜே.ஆர் சிறையிலிருந்த அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தார்.
ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனா, தன்னிடமிருந்த நிறைவேற்று அதிகாரத்தை பிரயோகித்து அன்று அதனைச்செய்தார்.
அன்று 1977 இல் சிறையிலிருந்த சிங்கள அரசியல் கைதிகளை விடுதலைசெய்யக்கோரும் மனுவில் தமது கையொப்பங்களை இட்ட சிலர், இன்றைய ராஜபக்ஷ சகோதரர்களின் அரசில் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் தரப்பைச்சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது சிறைகளில் அரசியல் கைதிகளே இல்லை எனச்சொல்கிறார்கள். ராஜபக்ஷ சகோதரர்களிடம் நிறைவேற்று அதிகாரம் இருக்கிறது.
ஆனால், தமிழ் அரசியல் கைதிகளின் எதிர்காலம் தொடர்ந்தும் கேள்விக்குறியாக இருக்கிறது.
1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தம் வந்தபோது, பூசா முகாம் உட்பட பல தடுப்புமுகாம்களிலிருந்த ஆயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனைகள் எதுவுமின்றி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலைசெய்யப்பட்டனர்.
அதே ஜே.ஆரின் ஆட்சியில் 1983 நடுப்பகுதியில் வெலிக்கடை சிறையிலிருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
வெலிக்கடை சிறையிலிருந்து மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றவர்களில் ஒருவரான டக்ளஸ் தேவானந்தா இன்றைய ராஜபக்ஷக்களின் ஆட்சியில் அமைச்சராக பதவி வகிக்கிறார்.
சர்வதேச மனித உரிமைகள் பற்றி ஊடகங்களும் உலக நாடுகளும் அரசியல் அவதானிகளும் இன்றும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
letchumananm@gmail.com
No comments:
Post a Comment