அருண். விஜயராணி நினைவாக

.



 நினைவு நாள் 13 டிசம்பர் (2015)

அவரின் நினைவு நாளை ஒட்டி 2016 Feb 21 அன்று தமிழ்முரசு அவுஸ்திரேலியாவில் வெளிவந்த கட்டுரையை மீள் பதிவு செய்கிறோம் 

நினைவுகளின் நீட்சியில் அருண். விஜயராணி - தெய்வீகன் - ஆஸ்திரேலியா

.                 


நான்,  என்னுடைய  சந்தோசம்  என்ற  குறுகிய  அளவில் திருப்திப்பட்டுக்கொள்ள முடியாத  என்   ஆத்மாவின்  ஓலம்தான்  என் எழுத்தின்   பிறப்புக்கான  மூல  காரணம்
1991 ஆம் ஆண்டு படைப்பாளி  அருண் விஜயராணி   அவர்கள்  தனது கன்னிகாதானங்கள் நூல்   வெளியீட்டுவிழாவில் நிகழ்த்திய முன்னுரையில்  முன்வைத்த ஒப்புதல் வாக்குமூலம் இதுவாகும்.
எழுபதுகளில்  இலங்கை  படைப்புலக  பரப்பில்  தனது  இலக்கிய பயணத்தை  ஆரம்பித்து  கடந்த  நான்கு  தசாப்த காலங்களாக பெண்ணிய சிந்தனைகளுடனுடம் அளவுகடந்த மொழித்தாகத்துடனும் வீச்சுடன் வலம் வந்த அருண் விஜயராணி அவர்கள் கடந்து டிசெம்பர் 13 ஆம் திகதி ஆஸ்திரேலியாவில் காலமானார்.
அருண் விஜயராணியின் எழுத்துக்கள்  குறித்து கடந்த காலங்களில் பல மட்டங்களில்  பலரும் பேசியிருக்கிறார்கள்ஆனால், இவரது படைப்புக்களின்  வெற்றியின்  பின்னாலுள்ள  சூட்சுமம்  என்னஅவரது எழுத்துக்களில்  அப்படி  என்னதான்  இருக்கிறது  என்று  இப்படி கம்பளம்   விரிக்கிறார்கள்   என்பதை  அறிய  பலரும்  ஆர்வப்படலாம்.
அருண் விஜயராணி அவர்கள் பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை மாத்திரம் முன்வைத்து சமரசம் இல்லாத எழுத்துப்பயணத்தை மேற்கொண்டது மட்டும்தான் அவரை ஒரு படைப்பாளியாக தொடர்ந்தும் தரமுயர்த்தி வைத்திருந்ததா?  இடைவிடாது எழுதிவரும் ஒரு படைப்பாளிக்கு  இந்த  ஒற்றை தகுதி  மட்டும் போதுமானதாபுலம்பெயர்ந்து வாழும் எத்தனையோ பெண் படைப்பாளிகள் மத்தியில் இவர் ஏன் தனித்துவமாக தெரிகிறார்?


இங்குதான் அருண் விஜயராணி அவர்கள் தன்னை சுற்றி மிகவும் கன கச்சிதமாக கட்டியெழுப்பிய இலக்கிய பேரரணை புரிந்துகொள்வது அவசியமாகிறது.




புலம்பெயர்ந்த படைப்பாளிகளின் இலக்கியம் என்பது எப்போதும் நனைவிடை தோய்தல் என்ற புனைவின் ஊடாக அதிகம் வீச்சுப்பெறுவது வழக்கம்.  80 களில் இடம்பெயர்ந்த அநேக இலக்கியவாதிகள் தங்கள்  ஆஸ்தான பாதையாக இதையே தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள்அக்காலப்பகுதியில் எமது மக்கள் தங்கள் தாயகத்தை இழந்த பிரிவும் துக்கமும் ஏக்கமும் இந்த இலக்கிய வழிமுறையினால் பதிவுசெய்யப்பட்டபோது அது புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் உணர்வுரீதியாக மிகுந்த வரவேற்பை பெற்றதுதாயகத்தில் உள்ள உறவுகளுடன் உரையாடும் ஆதங்க மொழியாக அது அறியப்பட்டதுஇவ்வகை இலக்கியங்கள் புலம்பெயர்ந்ததால் இழந்த செழிப்புக்களையும் பரவசம் மிக்க பழைய நினைவுகளையும் கதைகளாக கட்டுரைகளாக கவிதைகளாக இன்னும் பல காத்திரமான மொழிகளிலும் உரையாடின.

கலகக்குரலோன் எஸ்.பொமுதல்கொண்டு அங்கதக்கதையாசான் முத்துலிங்கம் வரை ஏன் அடுத்த தலைமுறையினரும்கூட தங்களது படைப்புக்களால் வெவ்வேறு களங்களில் பரிசோதனைகளை நிகழ்த்தினாலும் நனவிடைதோய்தலே அவர்களின் புலம்பெயர் இலக்கியங்களுக்கு கிரீடங்களாக விளங்கியிருக்கின்றன.


ஆனால் - படைப்பாளி அருண் விஜயராணி இவ்வாறான படைப்புலகத்தை தரிசித்திருந்தாலும் புலம்பெயர்வாழ்வையும் அதனை அடியொற்றிய இயல்புநிலைகளையும் வாழ்வின் கட்டாயங்களையும் அதில் இடம்பெற்ற கறுப்பு நிகழ்வுகளையும் துரிதமாகவும் துணிச்சலாகவும் தனது எழுத்துக்களில் உள்வாங்கி உயிர்ப்பான படைப்பாளியாக மாறிக்கொண்ட வேகம்தான் அவரை பெருவீச்சுடைய ஒரு எழுத்துப்போராளியாக தமிழ் இலக்கிய உலகில் முன்னிறுத்தியது.

படைப்பாளி என்பவன் முதலில் தான் சார்ந்த சமூகத்தையும் அதன் அதிர்வுகளையும் பிரதிபலிக்கும் பிரதிநிதியாக பிரசவம் கொள்ளவேண்டும்அந்த பொறுப்புக்களை தரிசித்த பின்னர்இ அதனை கடந்து செல்லும்போதுதான் அவனது படைப்புக்களில் நேர்மை இருக்கும்இந்த கருத்துருவாக்கம்தான் படைப்புக்களிலும் உயிர்ப்பை ஏற்படுத்துவது வழமை.
இந்த உண்மையை தனது படைப்புலக வாழ்வில் அழகியல் செழிப்புடன் வாழ்ந்து காண்பித்தவர் அருண் விஜயராணி.

அவரது “கன்னிகாதானங்கள்” நூலில் இடம்பெறுகின்ற 12 கதைகளில் 11 கதைகளும் புலம்பெயர்ந்த வாழ்வை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை ஆகும்புலம்பெயர்வாழ்வில் பெண்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள்இ கலாச்சார இடப்பெயர்வின் விளைவுகளினால் தடம்புரளும் தனிமனித வாழ்க்கை முறைகளிலிருந்து பெண்கள் எவ்வாறு தற்துணிவுள்ள முடிவுகளை மேற்கொள்ளவேண்டும். சமுதாய இடுக்குகளில் உணர்வுகளுக்கு மட்டும் இடமளிப்பதன் மூலம் நடைமுறை நீதிகளிடம் தோற்றுப்போவதை எவ்வாறு தவிர்ப்பது போன்ற பல விடயங்களை தனது கதைகளின் ஊடாக நெத்திப்பொட்டில் அடித்தது போல முன்வைத்தவர் அருண் விஜயராணி.
கன்னிகாதானங்கள் நூலில் இடம்பெற்ற கன்னிகாதானங்கள் என்ற கதையில் - லண்டனில் குடியேறிய பெண் ஒருத்தி திருமணமாகும் முன்னரே தான் விரும்பியவருடன் சேர்ந்துவாழுவதை பொறுக்க முடியாமல் அவளோடு போராடும் பாரம்பரியங்களை கட்டிக்காக்கும் அவளது பெற்றோரின் மனப்போராட்டத்தை 25 வருடங்களுக்கும் முன்னரே கதையாக எழுதியவர் அருண் விஜயராணிஆனால் - அந்த வாழ்க்கை முறை குறித்த விவாதப்பொருளை 2015 இல்தான் “ காதல் கண்மணி” என்ற திரைப்படத்தின் மூலம் மணிரத்னம் தனது திரைமொழி விதானத்தில் வைத்;து மக்களுடன் பேசமுனைகிறார்.



இதேபோல “ஒரு நிரந்தர நிழலை தேடி- “சிலரது வாழ்க்கையில் இரண்டு பக்கங்கள்- “ஏணி- “மனித விம்பங்கள்- “வாழாவெட்டி” போன்ற கதைகளும் பெண்களின் போராட்டம் மிக்க வாழ்க்கையின் மர்மமான முடிச்சுக்களுடன் துணிச்சலுடன் உரையாடும் கதைகளாக அமைந்தன்.
அவசரம் எனக்கொரு மனைவி வேண்டும்” என்ற கதையில் அருண் விஜயராணி அவர்கள் கையாண்டிருக்கும் உணர்ச்சி மிக்க கதைக்களம் புலம்பெயர்வாழ்வையும் தனிமனித உணர்வையும் புதிய களத்தில் விசாரணை செய்திருந்ததுஅதாவது - லண்டனில் விஸாவை நீடித்து தங்கவேண்டும்  என்ற  ஒரே காரணத்திற்காக வேறு வழியில்லாமல் தன்னுடன்  ஒப்பந்த அடிப்படையில் கணவனாக குடித்தனம் நடத்தும் இலங்கையை  சேர்ந்த  புலம்பெயர்ந்த  ஆணுடன்  ஒரு  வெள்ளைக்கார பெண்மணி  உண்மையிலேயே காதலில் வீழ்ந்து திருமணம் செய்வதற்கு ஏக்கம் கொள்ளும் கதை அருண் விஜயராணியின் படைப்புக்களிலேயே பெயர் சொல்லும் சித்திரம் எனலாம்.

இந்த கதையை அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் வாரவெளியீட்டில் விமர்சனம் செய்து எழுதிய விமர்சகர் ஒருவர் வெகுவாக புகழ்ந்ததுடன் புலம்பெயர்ந்த வாழ்வின் அவலமான நுண்கூறுகளை ஒரு கதையில் அருண் விஜயராணி அவர்கள் வெளிக்கொணர்ந்திருந்தார் என்றும் கூறியிருந்தார். (இந்த கதைதான் நளதமயந்தி படத்திற்காக திருடப்பட்டது  என்ற சர்ச்சை 2003 காலப்பகுதியில் அருண் விஜயராணியால் முன்வைக்கப்பட்டிருந்தபோதும் அது கிறீன் கார்ட் என்ற படத்தின் தழுவல்தான் என்று  பின்னர் கூறப்பட்டது)

புலம்பெயர்ந்த  நாடுகளில் சிலவேளைகளில் நல்ல பழக்கங்களை எம்மவர் மிகுந்த பணச்செலவுடன்தான் பழகுவது வழக்கம்உதாரணமாக  வாகனங்களை வேகமாக   ஓட்டக்கூடாது - கண்ட இடத்தில் அவற்றை தரித்துவிட்டு செல்லக்கூடாது போன்ற பழக்கங்களை சுளையாக அரசாங்கத்துக்கு தண்டப்பணம் செலுத்தித்தான் பழகிக்கொள்வர்ஆனால்-  இப்படியான தண்டனைகளை சாதுரியமாக வெட்டி ஓடி எல்லோரையும் உச்சிக்கொண்டு ‘ஊடான்ஸ்’ வேலை செய்பவர்களும் உளர்.
இப்படியான ஒரு உண்மை கதையை தனது படைப்பாக அருண் விஜயராணி துணிச்சலாக எழுதியிருந்தார்அதாவதுஇ மனம் பொருந்தாத கணவனும் மனைவியும் பிரிந்துகொள்கிறார்கள்அவர்களுக்கு இடையில் எந்த உறவும் கிடையாதுஆனால் -சென்டர் லிங்’ பணம் எனப்படுகின்ற அரசு கொடுப்பனவை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக மட்டும் கணவன்-மனைவி இருவரும் ஒரே வீட்டில் எந்த உறவுமின்றி – வேண்டா வெறுப்பாக – ஒரு கூரையின் கீழ் வாழ்ந்துவந்த சம்பவம் ஒன்றை தனது கதையாக எழுதியிருந்தார்.

பெண் எழுத்தாளர்கள் என்றால் வெறுமனே இயற்கை காட்சிகள் பற்றிய கவிதைகளையும் சமயங்கள் - தெய்வங்கள் பற்றிய கட்டுரைகளையும் சமையல் குறிப்புக்களையும் எழுதி பாராட்டு பெற்றுவிடலாம் என்று காணப்பட்ட வழமையான புலம்பெயர் சம்பிரதாயங்களை உடைத்தெறிந்துவிட்டு பதுங்கி – ஒதுங்கிக்கிடந்த பல ஆண் எழுத்தாளர்களையும்கூட தன் பேனைவின் பின்னால் அணிதிரள வைத்தவர் அருண் விஜயராணி.

அதேவேளை தனியே சர்ச்சைகளை உருவாக்கும் கலகக்காரியாக இருந்துவிடாமல் புலம்பெயர்ந்த வாழ்க்கை எனும் பணத்தை கலைத்துக்கொண்டு பாய்கின்ற எலியோட்ட பந்தயத்தில் உறவுகளுக்கு நாம் வழங்கவேண்டிய மதிப்பு மரியாதைகள் குறித்தும் அதன் அவசியங்கள் குறித்தும் கரிசனை கொண்டார்.

மொழியும் சுவாத்தியமும் காலாச்சாரமும் பண்பாடும் அந்நியமான புலம்பெயர் வாழ்வில் முதியவர்கள் தங்கள் அந்திம காலத்தில் அனுபவிக்கும் பிரச்சினைகளையும் அவர்களை பீடிக்கும் பெரிய நோய் தனிமைதான் என்பதையும் அந்த வாழும் தெய்வங்களை அடுத்த தலைமுறையினர் எவ்வாறு நேரமொதுக்கி பராமரிக்கவேண்டும் என்பதையும் மிக்கரிசனையுடன் பேசினார்எழுதினார்.
எல்லா திருப்திகளையும் பணத்தினால் வாங்கிக்கொள்ளலாம் என்ற பொது விதியை புலம்பெயர்ந்த மண் காலகாலமாக எழுதிவந்தாலும் அதனையும் தாண்டி ஆன்மாவுக்கு நெருக்கமாக உள்ள எமது பண்பாட்டு விழுமியங்களில் மிகமுக்கிய கூறான தலைமுறை நெருக்கங்கள்தான் எமது வாழ்வியல் கோலத்தின் விலைமதிக்க முடியாத சொத்துக்கள் என்பதை இறுக்கமாக நம்பியவர்.

இவற்றையெல்லாம் தனக்கு நம்பிக்கையான வீச்சுமிக்க எழுத்துக்களினால் எல்லா படைப்பு ஊடகங்களிலும் தர்க்கித்தார்.
முன்னர் குறிப்பிட்டது போல தான் சார்ந்த களமும் அதன் அதிர்வுகளும்தான் தனது எழுத்துக்களுக்கான உற்பத்தி பொருட்கள் என்பதையும் தனது எழுத்தூழியம் எனப்படுவது தனது நிகழ்கால இருப்பினை ஆழ வருடுகின்றபோதுதான் அது உயிர்ப்புடன் வலியெழுப்பும் என்பதையும் அருண் விஜயராணி திடமாக நம்பினார்.
எஸ்.பொ. அவர்கள் கூறியதுபோல –
வளம்  மலிந்த சுகம் பொலிந்த வாழ்க்கை இருப்பினும் திருப்தியை மீறிய சினம்சமூகத்தின் அவதிகள் அவலங்கள் அணாப்புதல்கள் அவரோகணங்கள்  சோகங்கள் சோரங்கள்  பண்புப்பலிகள்  பாச சிதைவுகள்  ஆகிய சிறுமைகள் உள்ளத்தை பிராண்டுகின்ற போதெல்லாம்  எழுத்தாளன் என்பவன் அதர்மங்களுக்கு எதிராக போராடும்  உணர்வுக்குள்  மசிகின்றான்.

இது சிலருக்கே கிடைக்கின்ற ஞான யோகம்புகழை போற்றாது பணத்தை ஆராதிக்காது எழுத்து ஊழியத்தில் ஈடுபடுதல் கர்மயோகம்.
அந்த வகையில் அனுபவ உண்மைகள் கிளறிய சலனங்களினால் மட்டுமல்ல தனது அறச்சீற்றங்கள் அனைத்தையும் எதிர்ப்பு அக்கினியில் சுத்திகரித்து தனது எழுத்தூழியத்தை யாகமாக வளர்த்து - அதில் தவப்பயனும் பெற்றுக்கொள்ளும் பயணத்தில் இறங்கி - வெற்றிகண்டவர்  அருண் விஜயராணி
புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் பலர்,   இன்று தங்கள் தாயக தரிசனங்களை புலம்பெயர்ந்த மண்ணிற்கு அறிமுகம் செய்வதில் மட்டும் முனைப்புடன் நின்றுவிடுகிறார்கள்இல்லையேல்  மறுமுனைக்கு ஓடிப்போய் நின்றுகொண்டு சர்வதேச இலக்கியங்கள் என்ற உயர் கூரைகளில் ஏறிநின்று எமது மக்களுடன் ஒட்டாத படைப்புக்களை அதிகம் பேசி – அவ்வாறான புரியாத வெளிகளில் சஞ்சரித்துக்கொள்ளுதலே  பிரபலங்களுக்கான   தகுதி  என்று – தொலைதூரம் சென்றுவிடுகிறார்கள்.
அந்த வகையில்,  அருண் விஜயராணி அவர்கள் தான் வாழ்ந்த மக்களுடன்  நெருக்கமான நின்றார்தனது எழுத்துக்களால் அவர்களுடன் பேசினார்அழுதார், சிரித்தார், வழிபட்டார்,  எல்லாவற்றுக்கும் மேலாக  வாழ்ந்தார்தன்னை சுற்றிக்கொட்டிக்கிடக்கும் இலக்கியங்களை படைப்பதே தன்கடன் என உழைத்தார்.   அவரையும்  அவர்  எழுத்துக்களுக்கும் தமிழ்  படைப்புலகம்  அதே  மதிப்பை  வழங்கும்  என்று  நம்புவோம்.
----0----

No comments: