சின்னத்திரை நடிகை சித்ரா மரணம்; தற்கொலை?

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம்; தற்கொலை?-VJ Chitra Found Dead In a Hotel Room

2018ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடரில், முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த, சின்னத்திரை நடிகை சித்ரா (VJ Chithra) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தொலைக் காட்சஇந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், பலரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை என்றே அவரை அழைத்து வந்தனர். இவருக்கென்று சமூக வலைதளத்தில் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.

சமூக வலைதளத்தில் சித்ரா ஆர்மி, முல்லை ஆர்மி என்று பல ரசிகர் பக்கங்கள் இவருக்கு உள்ளன.

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம்; தற்கொலை?-VJ Chitra Found Dead In a Hotel Room28 வயதான சித்ரா, இன்று (09) அதிகாலை சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இது சின்னத்திரை உலகை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏதோ தவறு நடந்திருப்பதாக, சித்ரா தற்கொலை குறித்து வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் பதிவுத் திருமணமும் செய்து கொண்டனர். விரைவில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், சித்ரா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவருடைய உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?
நேற்று (08) 'பாண்டியன் ஸ்டோர்' படப்பிடிப்பில் சித்ரா கலந்து கொண்டார். திருவான்மியூரிலிருந்து தினமும் படப்பிடிப்புக்குச் சென்றுவர முடியாத காரணத்தால், பெங்களூரு பைபாஸ் சாலையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார். அவருடன் கணவர் ஹேமநாத்தும் தங்கியிருந்தார். அதிகாலை 2:30 மணிக்குப் படப்பிடிப்பு முடித்து ஹோட்டல் அறைக்குத் திரும்பினார் சித்ரா.

அப்போது கணவர் ஹேமநாத்திடம் குளிக்கச் செல்வதாகக் கூறி வெளியே செல்லச் சொல்லியிருக்கிறார் சித்ரா. சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டியிருக்கிறார் ஹேமநாத். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் அறையின் இன்னொரு சாவியை வாங்கி கதவைத் திறந்தனர். அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கு மாட்டி, சித்ரா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

உடனடியாக ஹோட்டல் ஊழியர்களுடன் சேர்ந்து சித்ராவின் உடலைக் கீழே இறக்கி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு விரைந்த நசரத்பேட்டை காவல்துறையினர் சித்ராவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சித்ராவின் தந்தை புகார்
சித்ராவின் கணவர் ஹேமநாத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், நேற்று படப்பிடிப்பில் சித்ராவுடன் நடித்தவர்களுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, சித்ராவின் தந்தையும் நசரத்பேட்டை காவல்துறையினரிடம் தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகப் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மேலும், ஹேமநாத் - சித்ரா இருவருமே பதிவுத் திருமணம் செய்துள்ளனர். இதனால் ஆர்.டி.ஓ விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

தற்கொலையை தடுப்போம், நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்
தேசிய மனநல உதவி இலக்கம் 1926
இலங்கை சுமித்ரயோ 011 2696666

CCC line 1333

நன்றி தினகரன் 

 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' பரபரப்புத் தொடர் கதாநாயகியின் மரணத்தின் பின்னால் மர்மம்!

தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகி வந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற பிரபலமான தொடரில் நடித்து வந்த பிரதான கதாபாத்திரமான நடிகை சித்ராவின் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லையெனவும், அம்மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சடலத்தை புகைப்படைத்தின் அடிப்படையில் பார்த்தால், அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் அது கொலை என்றும் பெங்களூரைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் தினேஷ் ராவ் தெரிவித்துள்ளார்.

நடிகை சித்ரா சென்னை, நசரத் பேட்டையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்றுமுன்தினம் அதிகாலை தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. சேலையில் தூக்குப் போட்டதாக கூறப்பட்டது. கட்டிலில் படுக்க வைத்த பிறகு எடுத்த படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இந்தப் படத்தில் சித்ராவின் கன்னத்தில் நகக்கீறல்கள் இருந்தது தெரியவந்தது. முகத்தின் இடதுபக்கத்தில் நகக்கீறல் இருந்தது. தூக்குப் போட்டு தற்கொலை செய்தார் என்றால் கழுத்தில் அடையாளம் இல்லையே? யாருடனாவது ஏற்பட்ட தகராறில் முகத்தில் கீறல் ஏற்பட்டதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும், வழக்கத்துக்கு மாறாக செல்போனில் அன்று இரவு அதிக நேரம் சித்ரா பேசியது ஏன்? குளிக்கச் செல்லும் முன்னர் கணவர் அறையை விட்டு வெளியேறியது ஏன்? கணவர் அறையில் இருந்தாலும் உடைமாற்ற குளியலறையை பயன்படுத்தி இருக்கலாமே? இது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் சித்ரா விவகாரத்தில் எழுந்தன.

தொடர்ச்சியான படப்பிடிப்பு காரணமாக மனஅழுத்தத்தில் இருந்தாரா, கணவருக்கும் தாயாருக்கும் இடையே நிலவிய மனக்கசப்பால் மனமுடைந்து இருந்தாரா போன்ற கேள்விகளும் எழுந்தன. இந்த நிலையில்தான், நடிகை சித்ரா மீட்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்த பெங்களூரைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் தினேஷ் ராவ் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

“முகத்தில் பதிவான காயங்கள்தான் எந்த ஒரு வழக்கின் விசாரணையிலும் அடிப்படை. சித்ராவின் புகைப்படங்களை பார்த்த போது, முகத்தின் மீது காயங்கள் இருப்பதை கவனிக்க முடிந்தது. இதை வைத்துப் பார்த்தால் கொலையாக இருக்கக் கூடும் என்று தெரிகிறது. தற்கொலைக்கு வாய்ப்பு கிடையாது. வேறு யாராவது ஒருவர் தாக்குதல் நடத்த முற்பட்ட போது, அதை இவர் தடுக்கும் போதுதான் இது போன்ற காயங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு”. இவ்வாறு தினேஷ் ராவ் தெரிவித்துள்ளார்.

தடயவியல் நிபுணர்கள்தான் எந்த ஒரு குற்றவழக்கின் விசாரணையிலும் முக்கிய பங்கு வகிப்பவர்கள். அப்படியான ஒரு தடயவியல் நிபுணரான தினேஷ் ராவ் இவ்வாறு ஒரு கருத்தை கூறியுள்ள நிலையில், சென்னை பொலிசாரும் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே சித்ரா மரண வழக்கு பல திருப்பங்களை சந்திக்க உள்ளது.

நடிகை சித்ராவின் மரணத்துக்குப் பின்னால் மர்மம் இருப்பதாக நடிகரும் இயக்குநருமான மனோ பாலாவும் தெரிவித்துள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. சித்ராவின் மரணம் சின்னத்திரை மற்றும் சினிமா நட்சத்திரங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சித்ரா தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல என கூறி வருகின்றனர்.

சித்ராவின் மறைவுக்கு சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சித்ராவின் இழப்பை தாங்க முடியாமல் ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியல் நட்சத்திரங்கள் மற்றும் அவரது நண்பர்கள் தங்களின் உருக்கமான பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய மனோபாலா “சகோதரி சித்ராவின் இழப்பு சின்னத்திரைக்கு மிகப் பெரிய இழப்பு. ஏன் இவ்வளவு அவசரப்பட வேண்டும் எனத் தெரியவில்லை. சித்ரா மாதிரி தைரியமான பெண்ணைப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு அனைவருக்கும் முன்னுதாரணமாக இருந்தவர் இந்த திடீர் முடிவு எடுத்தது எதற்காக?” என்று மனோபாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

“சின்னத்திரையில் நிறைய இழப்புகள் நடக்கின்றன. சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். வேலைப்பளுவை ஏற்றிக் கொள்ளாதீர்கள். வேலைப்பளுதான் உங்களுக்கு மனச்சுமையையும், வேதனையையும் கொடுக்கிறது.

தயவு செய்து யாரிடமாவது பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி எத்தனை நண்பர்கள் இருக்கிறோம். 1500க்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்கிறோம். அனைவருமே உதவுவதற்குத் தயாராக இருக்கிறோம்” என்றார் அவர். “சித்ராவின் மரணத்துக்கு பின்னால் ஒரு மர்மம் இருக்கிறது” என்று கண்ணீர் மல்க மனோபாலா கூறினார்.

இதேவேளை நடிகை சித்ராவின் மரணத்திற்கான காரணம் குறித்து கண்டுபிடித்து கூறுமாறு அவரது தந்தை பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

28 வயதாகும் சித்ராவுக்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஹேம்நாத் ரவி என்பவருடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சித்ராவுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ஹேம்நாத்திடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கடந்த ஒக்டோபர் மாதம் 19-ம் திகதி இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட நடிகை சித்ராவின் தாடையில் இருக்கும் காயம் தூக்கு மாட்டிக் கொண்ட போது புடவையால் ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் அவரது முகத்தில் நகக்கீறல் எப்படி வந்தது என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சித்ராவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் சித்ராவின் தந்தை மட்டுமன்றி உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.

சித்ரா கடந்த 4ஆம் திகதி முதல் ஹேம்நாத்துடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததாக வெளியான தகவலை தந்தை மறுத்துள்ளார். சித்ரா தனது திருமணத்தை நிறுத்தும் முடிவில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவரது கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் பொலிசார், சித்ராவின் செல்போனையும் கைப்பற்றி தொலைபேசி உரையாடல்கள், குறுந்தகவல்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே சித்திராவின் நெருங்கிய நண்பர்கள் சில பரபரப்பான தகவல்களை கூறியுள்ளனர். அதாவது சித்ரா நிச்சயதார்த்ததுடன் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற மனநிலையில் இருந்தார். சீரியலில் நடித்த சில காட்சிகளுக்கு ஹேம்நாத் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் திருமண திகதி குறித்ததிலும் சித்ரா தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளனர். சித்ரா தற்கொலை செய்யும் அளவிற்கு கோழை அல்ல என்றும் அவரது முகத்தில் காயங்கள் இருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் நண்பர்கள் கூறியுள்ளனர். சித்ரா மரணம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளி வரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சித்ராவின் மரணம் குறித்து பேசியுள்ள அவரது தாய், தனது மகள் தைரியமானவள். அவளது மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவள் தற்கொலை செய்திருக்க மாட்டாள் எனக் கூறி கதறியுள்ளார்.    நன்றி தினகரன் 

 
No comments: