திரையிசை தந்த பாரதி பாட்டு - கானா பிரபா

                                                                    
“காற்று வெளியிடைக் கண்ணம்மா, நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்” (கப்பலோட்டிய தமிழன்)

“சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம் (கை கொடுத்த தெய்வம்)
என்றெல்லாம் அசரீரியாகக் கேட்கும் பாட்டுகள் மகாகவி சுப்ரமணிய பாரதியாரை நினைத்து விட்டால்.
தமிழன்னை ஈன்றெடுத்த எங்கள் ஒப்பற்ற கவி மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாள் நினைவில் இன்று அவரின் பாடல்களைத் தாங்கி வந்த படங்கள் குறித்த ஒரு சிறு அலசலைக் கொடுக்கலாம் என்று முனந்ததன் வெளிப்பாடு இது.

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்கள் திரைப்படங்களில் இடம்பெற முன்பே மேடை நாடகங்களில் பாடிப் புகழ் பூத்தவை. குறிப்பாக எஸ்.ஜி.கிட்டப்பா போன்றோர் தம் நாடகங்களில் பாரதி பாடல்களைப் பாடிப் போற்றினர்.

1931ஆம் ஆண்டு பாரதியாரின் பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் உரிமையை திரு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நானூறு ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டார்.

1944ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் மாநாடு கோவையில் நடந்தது. அதில் அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் தனி நபரிடமிருந்து பாரதி பாடல்களை “மீட்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன் வைத்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகியது.



அவ்வை டி.கே சண்முகம், எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் இதற்குத் தங்கள் ஆதரவை நல்கினர்.
பாரதி விடுதலைக் கழகத்தார் முதல்வர் ஓமந்தூர் ரெட்டியாரைச் சந்தித்து பாரதி பாடல்களை நாட்டுடமையாக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை அளித்தார்கள். அப்படிச் செய்வதற்கு முன் பாரதியின் வாரிசுகளிடமிருந்து இதற்கான ஒப்புதல் கடிதத்தைப் பெறவேண்டும் என்று சொன்னார் ஓமந்தூரார். இந்தச் செய்தி டி. எஸ். சொக்கலிங்கம் அவர்கள் மூலமாக நாரண. துரைக்கண்ணனை அடைந்தது. பாரதி குடும்பத்தாரை நன்கறிந்த பேராசிரியர் அ. சீனிவாச ராகவனுக்கு உடனே தந்தி கொடுத்து வரவழைத்தார்கள். கலைஞர் டி. கே. சண்முகம், வல்லிக்கண்ணன், திருச்சி வானொலி நிலையத்தைச் சேர்ந்த மு. கணபதி, அசீரா, நாரண. துரைக்கண்ணன் ஆகிய ஐவர் அடங்கிய குழு செல்லம்மாவைப் பார்ப்பதற்காகச் சென்றது. செல்லம்மாவிடம் விளக்கிச் சொன்னார்கள். மகிழ்ச்சியோடு சம்மதித்தார்கள். ஒப்புதல் கடிதத்தையும் எழுதிக் கொடுத்தார் . 

பாரதியாரின் பாடல்களைத் திரையில் பயன்படுத்தும் உரிமம் பெற்ற ஏவிஎம் நிறுவனர் மெய்யப்பச் செட்டியார் பின்னர் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவற்றை நாட்டுடமை ஆக்கினார். இதனால் பல்வேறு தயாரிப்பாளர்களும் பாரதி பாடல்களைப் பயன்படுத்த முடிந்தது. மேற்கண்ட வரலாற்றுக் குறிப்பை எழுத்தாளர் ஹரிகிருஷ்ணன் அவர்கள் தம் வலைத் தளத்தில் பதிந்திருக்கின்றார்.

சுதந்திர இந்தியா மலர்ந்தபோது 1947,ஆகஸ்ட் 15 - அன்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்று அகில இந்திய வானொலியில் ஆனந்த சுதந்திரம் அடைந்ததைத் தனது கம்பீரக் குரலால் இசைத்து அனைவரையும் சிலிர்க்க வைத்தவர் பாடகி டி.கே.பட்டம்மாள் அவர்கள்.

சுப்ரமணிய பாரதியாரின் பாடல்கள் திரையிசையில் பயன்பட்ட விதத்தில் 1947 ஆம் ஆண்டு ஏவிஎம் இன் “நாம் இருவர்: படத்தில் தொடங்கி 2015 ஆம் ஆண்டு வெளி வந்த குற்றம் கடிதல் படம் உள்ளடலங்கலாக இடம் பிடித்திருக்கின்றன.

தேசிய விருது கண்ட குற்றம் கடிதல் படத்தில் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே”
மழலைகளின் கூட்டுக் குரலாகவும், ராகேஷ் ரகுநந்தன் குழுவின் கூட்டுக் குரலிலும் https://www.youtube.com/watch?v=3inzCBqAVmU இசைக்கப்பட்டிருக்கின்றது. கல்விச் சமூகத்தில் எழும் முறைகேடுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் முண்டாசுக்கவி பாரதியை இன்றைய இளம் படைப்பாளிகள் உலகமும் பயன்படுத்திய பாங்கில் அவரின் சிந்தனைகள் காலம் தாண்டியவை, நூற்றாண்டு கடந்தவை என்பதை மெய்ப்பின்றன.

இவை திரைப்படக் கணக்கு மட்டுமே தவிர தனிப்பாடல்களாக பாம்பே ஜெயஶ்ரீ உட்பட சாஸ்திரிய சங்கீத விற்பன்னர்களும், இளம் பாடகர்களுமாகப் பாடிச் சிறப்பித்தது தனிக் கணக்கு.
அவ்விதம் வந்த 
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
பாடலை பாடகி சுசித்ரா பாடி, இன்றைய இளையோர் கணக்கில் அதிகம் வரவு வைத்த பாடல்களில் ஒன்றாகக் கொள்ளலாம்.

இத்தோடு இன்னொரு சிறப்பு, மோகன்லால் நடித்த புகழ்பூத்த மலையாள மொழித் திரைப்படமான “தன்மத்ரா”வில் “ மோகன் சித்தாரா இசையில் மகாகவி சுப்ரமணியபாரதியாரின்
“காற்று வெளியிடைக் கண்ணம்மா” 
இடம் பிடித்தது தனியே சொல்லி வைக்க வேண்டியது.

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் வாழ்வியலைப் படமாக்கும் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக அமைந்தது “கொட்டு முரசே” திரைப்படம். இதில் அன்புக்குரிய சக்ரவர்த்தி Chakravarthy Veluchamy அவர்கள் பாரதியாராகத் தோன்றி நடித்திருக்கிறார். மிடுக்கான தோற்றமும், கம்பீரக் குரலும், ஆற்றொழுக்கான தமிழில் பேச வல்ல அவரின் “கொட்டு முரசே” பட அனுபவத்தை முன்னர் ஒரு வானொலிப் பேட்டி வழி செய்திருக்கிறேன். அந்தப் படம் வெளிவருவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. இன்று அதை நினைவு கூரவாவது காணொளிகள் இல்லாத துர்பாக்கியம்.
“கொட்டு முரசே” படத்துக்கு வீரமணி – சோமு ஆகியோர் இசையமைக்க, மகாகவி சுப்ரமணிய பாரதியார் எழுதிய “வெடிபடு மண்டபத்திடி (மலேசியா வாசுதேவன்), “தகத் தகத் (கே.வீரமணி, உமா ரமணன் குழுவினர்), திருவே நினைக்காதல் (மலேசியா வாசுதேவன், பி.சுசீலா), “என் நேரமும் ( என்.சுரேந்தர், எஸ்.பி.சைலஜா) என்று மொத்தம் நான்கு பாடல்கள். இவை முன்பும் பின்பும் எந்தவொரு படங்களிலும் பயன்படுத்தாத பாரதியார் பாடல்கள் என்ற தனிச்சிறப்பும் கொண்டிருக்கின்றன.

பாரதியின் "மங்கியதோர் நிலவினிலே" பாடலின் நான்கு வடிவங்கள், நான்கு வித மெட்டுகளில், நான்கு இசையமைப்பாளர்களால் இசையமைக்கப்பட்டிருப்பதை இங்கே பகிர்கின்றேன்.
எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் எழுதிய "ஒரு மனிதனின் கதை" மதுப்பழக்கத்தினால் எழும் சீரழிவை மையப்படுத்திய நாவல். இது நடிகர் ரகுவரன் முக்கிய பாத்திரமேற்று நடிக்க "ஒரு மனிதனின் கதை" என்ற பெயரிலேயே தொலைக்காட்சித் தொடராக ஏவிஎம் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. பின்னர் இதை "தியாகு" என்ற பெயரிலேயே ஏவிஎம் நிறுவனம் திரைப்படமாகவும் மாற்றியது. இதிகாசம் தவிர்ந்த சமூக நாவல் தொலைக்காட்சித் தொடராகவும் பின்னர் சினிமாவாகவும் மாற்றம் கண்டது தமிழில் இதுவே முதன்முறையாகும்.

"ஒரு மனிதனின் கதை" தொலைக்காட்சித் தொடரில் மகாகவி சுப்ரமணியபாரதியாரின் பாடல்கள் பயன்பட்டிருக்கின்றன. இசை வழங்கியவர்கள் சங்கர் - கணேஷ் இரட்டையர்கள். இதில் மிகவும் அழகாகப் பயன்பட்டிருக்கிறது பாரதியார் எழுதிய "மங்கியதோர் நிலவினிலே" பாடல். 
இந்தப் பாடலைப் பத்து வருடங்களுக்கு முன்னர் என்னுடைய இசைக் களஞ்சியத்தில் திரட்டி வைத்திருந்தது என் பிரத்தியோக ஒலித்தொகுப்பில் இருந்து பகிர்கின்றேன்.
யூடியூபில் இதைக் கேட்க

"மங்கியதோர் நிலவினிலே" பாடலின் மேலும் மூன்று வடிவங்கள் இதோ. இங்கே சிறப்பு என்னவென்றால் சிவசங்கரி (ஒரு மனிதனின் கதை), அகிலன் (பாவை விளக்கு) ஆகிய இரு பெரும் எழுத்தாளரது படைப்புகளில் ஒரே பாடல் பயன்பட்டிருக்கும் தன்மை தான்.
திருமணம் படத்தில் ஜி.ராமநாதன் இசையில் T.M.செளந்தரராஜன்
பாவை விளக்கு படத்தில்  சி.எஸ்.ஜெயராமன் பாடியது. இசை : கே.வி.மகாதேவன்
தேவநாராயணன் குரலில்

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்கள் தமிழ்த் திரையிசையில் பயன்பட்ட பாங்கை விக்கிப்பீடியா தளம் இங்கே
பெரும்பாலும் பதிவு செய்தாலும் முழுமையாக்கப்படவில்லை. இன்னும் சொல்ல வேண்டியவை விடுபட்டிருக்கின்றன.

ஏழாவது மனிதன் படத்தில் எல்.வைத்தியநாதன் இசையில் பாரதியாரின் பாடல்கள் பயன்படுத்தப்பட்ட பாங்கு அதன் இன்னொரு பரிமாணத்தை விளக்கும், பாரதி கண்ட சமூக விடுதலையின் பால் அமைந்த ஒரு தொழிற் சங்கப் போராட்டக் களப் பின்னணியில் அமைந்த ஏழாவது மனிதன் படத்தில் மலையாளத்தின் முன்னணி இயக்குநர் ஹரிஹரன் பாரதி பாடல்களைப் பயன்படுத்திய பாங்கைப் போற்றிக் கொண்டே ஒவ்வொரு பாட்டாக மெச்சலாம். “உச்சி மீது வானிடிந்து” பாடலை ஒரு கலகக்காரன் குரலாக மட்டுமன்றி ஒரு கலகலக் குரலில் எஸ்பி பாடிய புதுமையை நோக்கிக் கொண்டே, ஒவ்வொரு பாரதி தினத்துக்கும் மறவாமல் வந்து நினைப்பூட்டும் “காக்கைச் சிறகினிலே நந்தலாலா” பாடலையும் காலம் தாண்டி பாரதியின் கவிவரிகள் நம் மனதில் சம்மணம் இட்டு உட்காரும் அளவுக்குப் பரிச்சயமாகி விட்டது. மொத்தம் 11 பாடல்கள், அனைத்தும் பாரதி பாடல்கள் என்ற புதுமை படைத்தது ஏழாவது மனிதன்.

“நெஞ்சில் உரமுமின்று நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை செய்வாரடி கிளியே” என்றும் “நல்லதோர் வீணை செய்தே” என்றும் ஏழாவது மனிதனில் பாடிய பாரதியாரின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதி, பின் தன் முப்பாட்டன் பாரதியின் வாழ்க்கைச் சரிதம் கூறும் “பாரதி” படத்திலும் “கேளடா மானிடா” என்று பாடிச் சிறப்பித்தார்.
பாரதி படத்தில் இளையராஜா இசையிலும் பாரதி பாடல்கள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. 

சினிமா உலகில் பாரதியின் காதலனாக கே.பாலசந்தரைச் சொல்லுமளவுக்கு அவரின் பெரும்பாலான படங்களில் பாரதியின் அடையாளம் எங்கேனும் நேரடியான பாத்திரம், பாடல், கதைக்கரு என்று ஒட்டிக் கொண்டிருக்கும். இரு கோடுகள் படத்தில் பாரதியின் வேடத்தில் நாகேஷ் பாடி நடித்த “பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே” 
பாடலின் வழியாக பாரதி கண்ட சுதந்திரம் எப்படித் தவறாக மொழி பெயர்க்கப்படுகின்றது என்ற விமர்சன ரீதியான பார்வையாக அமைந்திருந்தது.
வேலையில்லாத் திண்டாட்டத்தின் கொடுமையைப் பின்னணியாகக் கொண்டு எடுத்த “வறுமையின் நிறம் சிகப்பு” படத்தில்
“நல்லதோர் வீணை செய்தே அதை நலங் கெடப் புழுதியில் எறிவதுண்டோ”
“தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே”
என்று காட்சிகளினூடு அந்தக் களத்தில் அமையும் பாடல்களாகவும்,
தமிழிசைப் பாடல் வேண்டும் என்ற போது பாரதியைத் துணைக்கழைத்து 
“மனதில் உறுதி வேண்டும் 
வாக்கினிலே இனிமை வேண்டும்”
என்று பாடுவதிலாகட்டும், 
“மோகம் என்னும் தீயில் என் மனம் வந்து வந்து உருகும்”
என்று “சிந்து பைரவி” நாயகன் ஜே.கே,பிக்காக பாரதியாரே எழுதி வைத்தது போலச் சாமர்த்தியமாகக் கையாண்டார் கே.பாலசந்தர்.

அவரின் சீடர் கமல்ஹாசன் மட்டும் விடுவாரா என்ன?
மகாநதி என்றதொரு உன்னதத்தை எடுத்தத் தன் குரு நாதரை நெகிழ வைத்தவர். மகா நதியின்முக்கிய திருப்பத்தில் வெகுண்டெழும் சாதுவின் குரலாய் பாரதி பிறக்கிறான் இப்படி.

பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - 
நரை கூடி கிழப்பருவமெய்தி - 
கொடும் கூற்றுக் கிரையென பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

கானா பிரபா

🙏 டிசெம்பர் 11, 1882 மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாள் நினைவில் 🙏
Attachments area
Preview YouTube video Chinnanchiru Kiliye - Kutram Kadithal (2015)Preview YouTube video Chinnanchiru Kiliyae Male - Kuttram Kadithal | Official Lyric Video | Shankar RangarajanPreview YouTube video Aasai mugam marandhu poche-suchitra, Music-Sai MadhukarPreview YouTube video Katru Veliyadi Kannamma |Thanmatra | Video Song | Mohan Sithara | Mohanlal | BlessyPreview YouTube video Mangiyathor NilavinileyPreview YouTube video TAMIL (G)OLD--Mangiyathor nilavinile kanavilithu kanden--THIRUMANAMPreview YouTube video Paavai Vilakku | Mangiyathor Nilavinile songPreview YouTube video Subramaniya Bharathiyar ~ மங்கியதோர் நிலவினிலேPreview YouTube video Pappa Pattu Padiya Bharathi - Iru Kodugal Tamil Song - NageshPreview YouTube video Nallathor Veenai Seithu SPB Varumaiyin Niram Sivappu Songs Sridevi Kamal MSVPreview YouTube video Theertha Karaiyinile Song Varumaiyin Niram Sivappu Kamal Sridevi Spb MSVPreview YouTube video Manadhil Urudhi Vendum Song HD | Sindhu BhairaviPreview YouTube video Moham Ennum Theeyil HD SongPreview YouTube video Pirar vada





No comments: