வீட்டுக்கு வெளியே கேட்ட காரின் ஒலியெழுப்பிய சத்தத்தினால், அபிதா, திடுக்கிட்டு வந்து வாயில் கதவைத்திறந்து பார்த்தாள். லண்டன்காரர் முதல் நாள் இரவு அழைப்பெடுத்து குறிப்பிட்டுச்சொன்ன வீடு வாங்கவிருக்கும் பகுதியினர்தான் வந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் வாயில் கதவடியில் நின்று பார்த்தாள். வீட்டின் உட்புறம் திரும்பி, கூடத்தின் இரண்டு மூலைகளிலிருந்தும் வாசம் எழுப்பிக்கொண்டிருக்கும் ஊதுவத்திகளையும் ஒரு கணம் பார்த்துக்கொண்டாள். வீடு பார்க்க ஆட்கள் வருவார்கள். அதனால், வீட்டை துப்புரவாக்கி வைத்திருக்குமாறு முதல் நாள் இரவே ஜீவிகாவின் பெரியப்பா சண்முகநாதன் லண்டனிலிருந்து அழைப்பெடுத்து சொல்லியிருந்தார். அவரது மகள் தர்ஷினிக்காக அல்லாவிடினும், அவருக்காகவாவது அவரது சொல்லை கேட்கவேண்டும். இங்கு வந்து அவர் திரும்பும்வரையில் தன்னோடு பாசமாக இருந்ததை நன்றியோடு அடிக்கடி நினைப்பதனால், அவர் சொல்லும் கட்டளைகளையாவது செய்யவேண்டும் என்ற தீர்மானத்திற்கு அபிதா வந்திருந்தாள். ஜீவிகா, தனக்கு
லீவு இல்லை என்று சாக்குப்போக்குச்சொல்லிவிட்டு வேலைக்குப்போய்விட்டாள். வீடு பார்க்க வருபவர்களுக்கு வீட்டையும் அறைகளையும் பின்காணியையும் காண்பிக்கவேண்டிய பொறுப்பும் அபிதாவின் தலையில் சுமையாக விழுந்துவிட்டது. ஒரு வேலைக்காரிக்குத்தான் எத்தனை வேலைகள். அபிதா மனச்சலிப்புடன்தான், அதிகாலை காலை எழுந்தது முதல் உட்காராமலேயே சுழன்று சுழன்று வீட்டை சுத்தம் செய்தாள். வீட்டுக்கு வெளியே நின்றது ஒரு பொலிஸ் கார். அபிதா அதனைப்பார்த்ததும் நிலைகுலைந்துபோனாள். வீடு பார்க்க பொலிஸ் ஏன் வருகிறது…? வரவிருப்பவர்கள் வீடு விற்பனைப்பிரதிநிதியும் வீடு வாங்கவிருப்பவர்களும் என்றுதானே அந்த மனுஷன் சொன்னது. கிணறுதானே வெட்டப்படுகிறது… பூதம் ஏன் அதிலிருந்து கிளம்பி வரல்வேண்டும். அபிதா ஒருகணம் நெஞ்சைப்பிடித்துக்கொண்டாள்.
வந்திருப்பது பொலிஸ்கார். அவள் தர்ஷினி, என்னைப்பற்றியும், நான் எங்கிருந்து வந்தவள் என்பது
பற்றியும் நிகும்பலையூர் பொலிஸுக்கு வத்தி வைத்துவிட்டாளோ…? பாதகி. ஜீவிகாவும் வீட்டில் இல்லையே…! என்ன செய்வது…? தமயந்திக்கு கோல் எடுத்து அழைப்போமா..? அபிதாவின் உடல் சிலிர்த்து நடுக்கம் கண்டது. “ யாரு வீட்டுல… “ கோர்ட் சூட் அணிந்த ஒரு நடுத்தர வயதுள்ள ஆண் கேட்டை பிடித்துக்கொண்டு கேட்கிறான். அந்தத் தமிழ் உச்சரிப்பில் பெரும்பான்மை இனத்தின் தொனி தெரிந்தது. “ யாரு வேண்டும்..? “ “ நீங்களா இங்கே வேலைக்கு இருக்கிறது..? லண்டனிலிருந்து உங்களுக்குச் சொன்னதுதானே…? “ கேட்டைத்திறந்துகொண்டு அந்த ஆள் உட்பிரவேசித்தான். அபிதா, வாசல் கதவை பிடித்துக்கொண்டு, “ நிற்கவேண்டும். பிளீஸ்… நீங்க யாரு..? “ எனக்கேட்டாள். “ மிஸ்டர் சண்முகநாதன். லண்டன்ல இருக்கிறது. அவர்ட வூடுதானே..? “ வந்திருந்த ஆளின் கையில் ஒரு கோவை இருந்தது. “ ஓம் ஓம்…. “ அபிதாவுக்கு ஓரளவு புரிந்தது. ஆனால், வந்திருப்பவர் எதற்காக பொலிஸ்காரில் வரவேண்டும், வீட்டு வாசல் வரை வந்த அந்த ஆள், தோளை குலுக்கிக்கொண்டு, மீண்டும் கேட்டருகில் சென்றான். “ சேர்… பிளீஸ் கம் “ என்றான். ‘ அவன் யாரை அழைக்கின்றான்..? ‘ அபிதா குதிக்கால் உயர்த்தி எட்டிப்பார்த்தாள். ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டரும் அவர் பின்னால், ஒரு அழகிய இளம்பெண்ணும் ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தையும் வந்தனர். அபிதாவுக்கு அந்த இன்ஸ்பெக்டரை எங்கோ பார்த்ததுபோலிருந்தது. அவருடன் ஒரு பெண்ணும் குழந்தையும் வந்ததைக்கண்டதும்தான் அபிதாவின் பதட்டம் குறைந்தது. “ எப்படி இருக்கிறது…? என்னைத் தெரியுதா…? “ வாசலில் ஏறிய இன்ஸ்பெக்டர் தொப்பியை
கழற்றிக்கொண்டு சிரித்தவாறு கேட்டதும்தான் அபிதாவின் நெஞ்சுக்குழியில் நீர் சுரந்தது. அபிதா அடையாளம் கண்டுகொண்டாள். “ சேர்… சேர்… நீங்கள்… ஒரு நாள்… நீங்கதானே…. “ அபிதாவுக்கு வார்த்தைகள் தடுமாறின. “ யெஸ்… யெஸ்.. நாங்தான். இது என்ர மிஸிஸ். இது எங்கட பேபி. “ அன்று ஒருநாள் அந்த மழைக்காலவேளையில் அபிதா, யாழ்ப்பாணத்திலிருந்து வந்த இரவு பஸ்ஸிலிருந்து நிகும்பலையூரில் கொழும்பு வீதியில் மாரிஸ்டலா கல்லூரிக்கு முன்பாக இறங்கி, சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தபோது, எதிர்புறத்திலிருந்து வந்த பொலிஸ் காரிலிருந்து விசாரித்துவிட்டு ஏற்றிக்கொண்டு வந்து இந்த வீட்டில் விட்டுச்சென்ற அதே இன்ஸ்பெக்டர். இந்த ஆள் எதற்காக இங்கே தனது மனைவி குழந்தையுடன் வரவேண்டும்..? “ வாங்க சேர்… யாரும் வீட்டில் இல்லை. வீட்டுக்கார அம்மா வேலைக்குப்போய்விட்டாங்க…? என்ன விசயம் சேர்… உள்ளே வாங்க… “ அபிதா பவ்வியமாக அழைத்தாள். உடன் வந்திருந்த குழந்தை மிரண்டு பார்த்தது. அதன் தலையை பரிவோடு தடவிவிட்டாள். “ சேர்… உங்கட பேபிக்கு என்ன பெயர்..? “ “ தம்மிகா “ என்றாள் தாய்க்காரி. “ வாங்க… வாங்க… “ என உள்ளே அழைத்தாள். “ என்ர மிஸிஸுக்கு தமிழ் தெரியாது. எனக்கும் கொஞ்சங் கொஞ்சங்தாம் தெரியும்… ஒங்களுக்கு சிங்களம் தெரியுமா..? “ எனக்கேட்ட இன்ஸ்பெக்டரைப்பார்த்து, “ டிக்க டிக்க தன்னவா சேர்… மே எவில்லா டிக்கக் இகனகத்தா சேர். “ என்றாள். அபிதாவின் பெயரைக்கேட்டு விசாரித்த கோர்ட் சூட் அணிந்திருந்த ஆள், சிங்களத்தில், வீட்டை பார்க்கவேண்டும். காண்பிக்கிறீங்களா..? “ எனக்கேட்டான். “ இவங்களா வாங்கப்போகிறார்கள்..? “ என்று அபிதாவும் சிங்களத்திலேயே கேட்டாள். அதனைக்கண்டு இன்ஸ்பெக்டர் மனைவியின் முகம் மலர்ந்தது. இந்தத் தமிழ்ப்பெண்ணுக்கு தனது மொழிபேசத் தெரிந்திருக்கிறதே…. எனக்கு ஏன் தமிழ்பேசமுடியாமல்போனது..? அவள் வீட்டின் சுவரில் மாட்டியிருந்த
சண்முகநாதனின் மறைந்துவிட்ட மனைவியின் படத்தை காண்பித்து, “ இது யார்..? “ எனக்கேட்டாள். அபிதா விளக்கியதும், “ நான் உமது தாயார் என்றுதான் நினைத்தேன் “ என்றாள். “ நோ… நோ… நான் இந்த வீட்டின் வேலைக்காரி “ என்று மீண்டும் சிங்களத்திலேயே அபிதா சொன்னாள். “ மெயா லஸ்ஸனட்ட சிங்கள கதாகரனவா நேத…. “ என்று தனது கணவனைப்பார்த்து அவள் சொன்னதும், “ மெடம்கே நம மொக்கத்த… ? “ என்று அபிதா கேட்டாள். “ சுராங்கணி…. “ “ லஸ்ஸன நம. மட்ட அர சிங்கள சிந்துவ தன்னவா மெடம். சுராங்கணி… சுராங்கணி, சராங்கணிட்ட மாலு கெனவா..: “ என்று அபிதா சொன்னதும் அனைவரும் சிரித்தனர். குழந்தையும் வாய்விட்டுச்சிரித்தது. அன்று அந்தக் காலைவேளையில் தலையில் சேலைத்தலைப்பை போர்த்திக்கொண்டு நடுங்கியவாறு பேசப்பயந்த இந்தப்பெண்ணா, இன்று இப்போது சகஜமாக பேசுகிறாள். இவள் தலையை மூடி போர்த்தியிருந்தமையால்தானே… இவளை அன்றிருந்த சூழ்நிலையினால் வீணாக சந்தேகப்பட்டு, காரில் ஏற்றிவந்து விசாரித்தேன். இன்ஸ்பெக்டருக்கு பழைய நினைவுகள் மனதில் சஞ்சரித்தது. வந்தவர்கள் வீட்டைச் சுற்றிப்பார்த்தார்கள். அபிதா, அவர்களுக்கு அறைகளைத் திறந்து காண்பித்தாள். வீட்டிலிருந்த மற்றவர்களை இன்ஸ்பெக்டர் விசாரித்தார். அபிதா விபரித்த பாங்கினை அவரது மனைவி சுராங்கணி இமைகள் படபடக்க கேட்டுக்கொண்டு நின்றாள். அவளது இமைகள் அபிதாவின் பார்வையில் அழகாக இருந்தன. “ ஒயா… மகநுவரத….? “ எனக்கேட்டாள். கண்டிச்சிங்களப்பெண்கள் அழகானவர்கள் என்று ஒரு தடவை அவளது கணவன் பார்த்திபன் அவளிடம் சொல்லியிருக்கின்றான். சுராங்கணி தலையை ஆட்டினாள். அவ்வாறு பார்த்திபன் சொன்னது ஒரு கொடுமையான காலம். அப்போதுதான் தலதாமாளிகையை இயக்கம் தாக்கியது. அந்தத் தாக்குதல் சம்பவத்தை படம் எடுத்துக்கொண்டு புத்திசாலித்தனமாக தப்பிவந்த கதையை ஒருநாள் அவன் அபிதாவிடம் சொல்லியிருக்கிறான். தான் கடந்து வந்த பாதையையும் தற்போது கடக்கின்ற தருணங்களையும் மனதில் அசைபோட்டவாறு, வீட்டை காண்பித்தாள். விற்பனைப்பிரதிநிதி, இன்ஸ்பெக்டரை அழைத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் சென்றான் . அபிதா, வந்திருப்பவர்களுக்கு அருந்துவதற்கு ஏதும் கொடுக்கத்தயாராகி குளிர்சாதனப்பெட்டியை திறந்தாள். அதனைக்கண்ணுற்ற சுராங்கணி, “ நோ… நோ…. எப்பா… எப்பா…. “ என்றதும், “ கமக்னே மெடம். “ எனச்சொல்லிவிட்டு, முதல் தடவை வந்திருக்கிறீர்கள். எங்களது உபசரிப்பை நீங்கள் ஏற்கத்தான் வேண்டும் “ தொடர்ந்து சிங்களத்திலேயே பேசினாள். வந்திருந்த சுராங்கணிக்கு பலவாறு எண்ணங்கள் ஓடின. இந்த வீடு தாங்கள் எதிர்பார்த்திருக்கும் விலைக்கு வருமென்றால், இந்தப்பெண்ணையே தொடர்ந்து தங்கள் வீட்டு வேலைக்காரியாக வைத்திருக்கலாமே என்ற கற்பனை அவளது மனதில் சுரந்தது. “ வீடு விற்கப்பட்டால்… நீ… எங்கே போவாய்…? “ எனக்கேட்டாள் சுராங்கணி. அபிதா அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் உதட்டைப்பிதுக்கினாள். வீட்டின் முகட்டை நோக்கி வலது கையை நீட்டியவாறு “ தெய்யோதமாய் தன்னவா..? “ என்றாள். சுராங்கணிக்கு சிரிப்பு வந்தது. “ இந்து சமயமா..? “ எனக்கேட்டதும், அபிதா தலையை அசைத்தாள். “ அபி… பௌத்த ஆகம….” என்றாள். அபிதா கண்ணாடி தம்ளர்கள் எடுத்து கழுவி சுத்தப்படுத்தவிட்டு குளிர்பானம் ஊற்றி ஒரு எவர்சில்வர் தட்டத்தில் வைத்தாள். சுராங்கணி குழந்தை தம்மிகாவுடன் வீட்டின் பின்புறம் சென்றாள். அபிதா, குளிர்பானத்துடன் அவளைப்பின்தொடர்ந்து சென்று அனைவருக்கும் நீட்டினாள். குழந்தைக்கு தாய் பருக்கினாள். வந்தவர்கள் ஏக குரலில் அபிதாவுக்கு நன்றி சொன்னார்கள். சுராங்கணி, பின்காணி மரக்கறி தோட்டத்தை ரசித்தவாறு, கறிவேப்பிலை கொழுந்தை பிடுங்கி முகர்ந்துவிட்டு, சிரித்தாள். தோட்டத்தை யார் பராமரிப்பது எனக்கேட்டாள். “ நான்தான்… இவை எனது குழந்தைகள்.. அழகாக இருக்கின்றனவா…? நிறைய தண்ணீர் கேட்கும் குழந்தைகள் “ என்று அபிதா சிங்களத்தில் சொன்னதும் இன்ஸ்பெக்டருடன் சேர்ந்து மூவரும் உரத்து சிரித்தனர். அவர்களின் முகங்களிலிருந்து, வீடும் காணியும் அவர்களுக்கு நன்றாக பிடித்துவிட்டது என்பது அபிதாவுக்கு புலப்பட்டது. அத்தோடு கவலையின் ரேகைகளும் மனதிலிருந்து மெதுமெதுவாக நகர்ந்து முகத்தை நோக்கி விரையத்தொடங்கியதை உணர்ந்தவளாக, வேப்பமரத்தின் கிளைகளைப்பார்த்தாள். வழக்காமாக வந்து செல்லும் அணில், குண்டுமணி விழியானால் பார்த்துக்கொண்டு, எதனையே கொரித்துக்கொண்டிருந்தது. இரண்டு சிட்டுக்குருவிகள் கீச்சிட்டுக்கொண்டு பறந்தன. இந்த வீட்டுடனான தனது சொந்தம், வந்திருப்பவர்களினால் முடிவுக்கு வரப்போகிறதா..? சொந்தங்கள் நிரந்தரமேயில்லையா…? அபிதா, குளிர்பானம் அருந்திய கண்ணாடி தம்ளர்களை வாங்கிக்கொண்டு உள்ளே திரும்பினாள். வந்தவர்கள் வெளியே நின்றவாறு மரங்களையும் செடி கொடிகளையும் பார்த்துக்கொண்டு பேசுவதை செவிமடுப்பது நாகரீகம் இல்லை என கருதிக்கொண்டு, உள்ளே வந்து தம்ளர்களை சிங்கில் வைத்தாள். கண் இமைகள் கசிந்ததும், சேலைத்தலைப்பால் துடைத்துக்கொண்டாள். ஜீவிகாவுக்கு அழைப்பெடுத்தாள். இணைப்பு கிடைக்கவில்லை. சில நிமிடங்களில் லண்டனிலிருந்து சண்முகநாதன் தொடர்புகொண்டார். வீடு பார்ப்பதற்கு ஆட்கள் வந்திருக்கும் தகவலை அவரிடம் அவள் சொன்னார். வந்தவர்களை நன்கு உபசரித்த பாங்கையும் விவரித்தாள். கைத்தொலைபேசியை வீடு விற்பளைப்பிரதிநிதியிடம் கொடுக்கச்சொன்னார். அபிதா மீண்டும் பின்புறம் வந்து, கைத்தொலைபேசியை குறிப்பிட்ட ஆளிடம் நீட்டிவிட்டு, சற்றுத்தள்ளி நின்றாள். குழந்தை தம்மிகா அவளைப்பார்த்து புன்னகை சிந்தியது. அபிதாவுக்கு அவளது குழந்தை தமிழ்மலர் மனதில் வந்தாள். சில நிமிடங்களில் வந்தவர்கள், புறப்பட்டார்கள். அபிதா, அணைக்கப்பட்ட தனது கைத்தொலைபேசியை சேலை முந்தானையில் துடைத்துக்கொண்டு, கையசைத்து வழியனுப்பினாள். அவள் எழுதிவரும் நாட்குறிப்பில் அந்தக் குழந்தை உட்பட நான்குபேரும் இடம்பெறவிருந்தனர். ( தொடரும் )
No comments:
Post a Comment