வெள்ளை மாளிகைக்கு திரும்பிய டிரம்ப் கொரோனா தொற்று பற்றி குறைமதிப்பீடு
உலகில் பத்தில் ஒருவருக்கு கொரோனா
மாலைதீவு முன்னாள் துணை ஜனாதிபதிக்கு 20 ஆண்டுகள் சிறை
ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ்பெற திட்டம்
போர் நிறுத்த முயற்சிகளுக்கு இடையே அசர்-ஆர்மேனியா தொடர்ந்தும் மோதல்
புர்கினா பாசோ தாக்குதலில் இடம்பெயர்ந்த 25 பேர் பலி
ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து கிரிகிஸ் பிரதமர் இராஜினாமா
வெள்ளை மாளிகைக்கு திரும்பிய டிரம்ப் கொரோனா தொற்று பற்றி குறைமதிப்பீடு
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மூன்று நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளார்.
தொடர்ந்து நோய்த் தொற்று இருக்கும் நிலையில் அவர் வெள்ளை மாளிகை மாடி முகப்பில் தோன்றி புகைப்படத்திற்காக தமது முகக்கவசத்தையும் அகற்றினார்.
மருத்துவமனையில் இருந்து வெளியேறும் அளவுக்கு டிரம்ப் உடல்நிலை தேறிவிட்டதாகவும், கடந்த 72 மணிநேரமாக அவருக்கு மூச்சித்திணறல், காய்ச்சல் எதுவும் இல்லை எனவும் வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
எனினும் டிரம்ப் மீது தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவரது மருத்துவர், அவர் இன்னும் முழுமையாக ஆபத்து நிலையில் இருந்து விலகவில்லை என்று தெரிவித்தார்.
அண்மைய தினங்களில் டிரம்பின் பணிக் குழுவைச் சேர்ந்த பலருக்கும் கொவிட்–19 தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
டிரம்பின் உடல் நிலை குறித்து கடந்த வார இறுதியில் முரண்பாடான தகவல் வெளியான சூழலில் அவரது நோய்த் தீவிரத்தன்மை குறித்து இன்னும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், டிரம்பை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பணிபுரியும் எத்தனை பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்ற கேள்விக்கும் இதுவரை பதிலில்லை. உலகில் கொரோனா வைரஸினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் அமெரிக்காவில் 7.4 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 210,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி தனது இரண்டாவது தவணைக்காக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனை எதிர்த்து போட்டியிடும் நிலையிலேயே டிரம்ப்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வொசிங்டன் டி.சி புறநகர் பகுதியில் இருக்கும் இராணுவ மருத்துவமனையில் இருந்து கடந்த திங்கட்கிழமை மாலை வெளியேறிய டிரம்ப் ஹெலிகொப்டரில் சிறிது தூரம் பயணித்து வெள்ளை மாளிகையை வந்தடைந்தார்.
அங்கு அவர் தனது முகக்கவசத்தை அகற்றி இராணுவ பாணியில் வணக்கம் தெரிவித்தார்.
தொடர்ந்து பிரசார பாணியில் தாம் திரும்பி வரும் வீடியோ ஒன்றை அவர் ட்விட்டரில் பதிவிட்டார்.
வீடியோ செய்தி ஒன்றையும் வெளியிட்ட அவர், அமெரிக்க மக்கள் பணிக்கு திரும்பும்படி அழைப்பு விடுத்தார்.
“கொவிட்–19 வைரஸ் தொற்றுக்கு அஞ்சாதீர்கள். அது உங்கள் வாழ்க்கையை ஆட்கொள்ளவிடாதீர்கள். எங்களது நிர்வாகத்தில் நல்ல மருந்துகளைத் தயாரித்துள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டார். நன்றி தினகரன்
உலகில் பத்தில் ஒருவருக்கு கொரோனா
உலகில் 10இல் ஒருவருக்கு கொவிட்–19 தொற்று பரவி இருக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டின்படி உலகின் மிகப் பெரும்பான்மையான மக்கள் அச்சுறுத்தலில் இருப்பாத உலக சுகாதார அமைப்பு தலைவர்களின் சிறப்புக் கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
உலகில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 மில்லியனாக இருந்தபோதும், இதன் உண்மையான எண்ணிக்கை 800 மில்லியனை நெருங்குவதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையை விடவும் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர்.
நோய்த் தொற்றை சர்வதேச அளவில் கையாள்வது குறித்து சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்திலேயே இந்தக் கூட்டம் கடந்த திங்களன்று இடம்பெற்றது.
இந்த நோய்த் தொற்று ஏற்பட்டு பத்து மாதங்களை தொட்டிருந்தபோதும் அது முடிவுக்கு வருவதற்கான சமிக்ஞைகள் குறைவாகவே காணப்படுகின்றன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து பல நாடுகளிலும் இரண்டாவது அலை தாக்கம் ஏற்பட்டுள்ளதோடு அது சில நாடுகளில் முன்னரை விடவும் தீவிரம் அடைந்துள்ளது.
உலக மக்கள் தொகையில் 10 வீதத்தினர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாய் மதிப்பிடப்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பின் அவசரகாலத் திட்டங்களுக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் மைக் ரியான் தெரிவித்தார். நன்றி தினகரன்
மாலைதீவு முன்னாள் துணை ஜனாதிபதிக்கு 20 ஆண்டுகள் சிறை
ஊழல், பண மோசடி மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட மாலைதீவு முன்னாள் துணை ஜனாதிபதி அஹமது அதீப்புக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு நெருக்கமானவராக இருந்த அதீப், அவரை படுகொலை செய்ய முயன்றதாக 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் மாலைதீவு குற்றவியல் நீதிமன்றம் கடந்த திங்களன்று அளித்த தீர்ப்பில் அதீப்புக்கு இரண்டு மில்லியன் ரூபியா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ்பெற திட்டம்
ஆப்கானில் இருக்கும் அனைத்து அமெரிக்கத் துருப்புகளும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வீடு திரும்புவார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஆப்கானில் இருக்கும் அமெரிக்கத் துருப்புகள் 2,500 ஆக குறைக்கப்படும் என்று அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறிய நிலையிலேயே டிரம்ப் கடந்த புதன்கிழமை இதனைத் தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கு இடையே கடந்த பெப்ரவரியில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி தலிபான்களின் தீவிரவாத எதிர்ப்பு உத்தரவாதத்திற்கு பகரமாக 2021 மே மாதத்திற்குள் வெளிநாட்டுத் துருப்புகள் ஆப்கானில் இருந்து வெளியேற இணக்கம் எட்டப்பட்டது.
இதற்காக ஆப்கான் அரசுடன் தலிபான்கள் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கு வரவேண்டி இருப்பதோடு அதிகார பகிர்வு முறை ஒன்றுக்கு இணங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பரில் ஆப்கானில் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை 5,000 மற்றும் 4,000க்கும் இடையே குறைக்கப்படும் என்று டிரம்ப் மற்றும் ஏனைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் டிரம்பின் புதிய அறிவிப்பு அவரது உத்தரவா அல்லது வாக்குறுதியா என்ற தெளிவில்லாமல் உள்ளது. நன்றி தினகரன்
போர் நிறுத்த முயற்சிகளுக்கு இடையே அசர்-ஆர்மேனியா தொடர்ந்தும் மோதல்
தெற்கு காகசஸில் முழு அளவில் போர் ஒன்று வெடிப்பதை தவிர்ப்பதற்கு அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா, ஜெனீவா நகரில் கூடவிருக்கும் நிலையில் அசர்பைஜான் மற்றும் ஆர்மேனிய இனப் படைகளுக்கு இடையில் நேற்றும் மோதல் ஏற்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய நகொர்னோ கரபக் பிராந்தியத்தைச் சூழவே புதிய மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
கன்ஜா நகர் மீது ஆர்மேனிய படைகள் பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக அசர்பைஜான் குறிப்பிட்டுள்ளது.
கொரன்போன் பிராந்தியத்தில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. ஏனைய கிராமங்கள் மீது ஆர்மேனிய இனப்படையினர் சூடு நடத்தியதாகவும் அசர்பைஜான் கூறியது.
கடந்த செப்டெம்பர் 27 ஆம் திகதி மோதல் ஆரம்பமானது தொடக்கம் 30 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அசர்பைஜான் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இதில் மேலும் 143 பொதுமக்கள் காயமடைந்ததாகக் குறிப்பிடும் அசர்பைஜான் இராணுவத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து குறிப்பிடவில்லை.
மறுபுறம் தற்போதைய நிலையில் மாற்றம் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் நகொர்னோ கரபக் பிராந்திய ஆர்மேனிய இன நிர்வாகத்தினர் தொடர்ந்து பீரங்கி மற்றும் ரொக்கெட் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
மலைப் பிராந்தியமான நகொர்னோ கரபக் அசர்பைஜான் நாட்டு எல்லைக்குள் இருந்தபோதும் அது ஆர்மேனிய இனப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த மோதல் ஆரம்பித்தது தொடக்கம் 12 பொதுமக்கள் மற்றும் 320 படையினர் கொல்லப்பட்டிருப்பதாக ஆர்மேனிய இனப் படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பில் ஜெனீவாவில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைக்கு அசர் பைஜான் வெளியுறவு அமைச்சர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் ஆர்மேனியா தனது வெளியுறவு அமைச்சரை அனுப்பவில்லை.
இந்நிலையில் ஆர்மேனிய வெளியுறவு அமைச்சரை வரும் திங்கட்கிழமை மொஸ்கோவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாட்டு பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.
அசர்பைஜானின் நெருங்கிய நட்பு நாடான துருக்கி மற்றும் ஆர்மேனியாவின் பாதுகாப்பு கூட்டாளியான ரஷ்யா இந்த மோதலில் நேரடியாக தலையிடும் வாய்ப்பு அதிகரித்திருப்பதே சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நன்றி தினகரன்
புர்கினா பாசோ தாக்குதலில் இடம்பெயர்ந்த 25 பேர் பலி
புர்கினா பாசோவில் இடம்பெயர்ந்தவர்களை ஏற்றி தமது சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவத்தில் ஆயுததாரிகள் ஆண்களை மாத்திரம் வேறாக பிரித்து கொன்றிருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது. இதன்போது பெண்கள் மற்றும் சிறுவர்களை விடுவித்ததாக உயிர்தப்பியவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாதுகாப்பு நிலை மேம்பட்டிருப்பதான நம்பிக்கையில் இடம்பெயர்ந்த மக்கள் பசில்லா நகரில் இருந்து தமது சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மேற்கு ஆபிரிக்காவில் அமைதியான நாடுகளில் ஒன்றாக இருந்த புர்கினா போசோவில் ஆயுதப் போராட்டங்கள் காரணமாக வன்முறை அதிகரித்திருப்பதோடு, இவ்வாறான வன்முறைகளில் இந்த ஆண்டில் 2,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இந்த மோதல்களால் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து கிரிகிஸ் பிரதமர் இராஜினாமா
தேர்தலுக்குப் பின்னரான ஆர்ப்பட்டங்களால் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கும் சூழலில் கிரிகிஸ்தான் பிரதமர் குபட்பக் பொரொனோவ் பதவி விலகியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அவசரக் கூட்டத்தில் பொரொனோவ்வுக்கு பதில் எதிர்க்கட்சியின் சடிர் சபரோவ் நாட்டின் பதில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு தினத்திற்கு முன்னரே அவர் சிறையில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் விடுவிக்கப்பட்டிருந்தார். 2013 இல் அரச அதிகாரி ஒருவரை பணயக் கைதியாகப் பிடித்ததற்கு சமரோவ்வுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக கிரிகிஸ்தானில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதை அடுத்து அந்தத் தேர்தல் முடிவு ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஜீன்பெகொவ் தொடர்ந்து பதவியில் இருந்தபோதும் பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கிரிகிஸ்தானில் அரசியல் எழுச்சி இடம்பெறுவது வழக்கமாகும். கடந்த 15 ஆண்டுகளில் அந்நாடு இரண்டு எழுச்சிகளை சந்தித்துள்ளது. ஊழல் அரசியல் வகுப்பு மற்றும் தேர்தல் மோசடிக்கு எதிராக 2005 மற்றும் 2010 ஆண்டுகளில் தீவிர மக்கள் போராட்டம் வெடித்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment