பண்டைத் தமிழன் பாரை ஆண்ட
பழமை வாய்ந்த திருவா ரூரில்
அண்டை மொழியாம் இந்தி மொழியே
அரங்கில் ஏறக் கண்டும் அதனைச்
சண்டை போட்டுத் தடுத்தாய் இல்லை
சங்கம் வளர்த்த தமிழும் இல்லை
கண்டும் வாளா களிக்குந் தமிழா
கண்ணுங் குருடோ தானுனக் கோடா? 1
இரத்தஞ் சிந்தி உயிரைக் கொடுத்து
இந்தி வரநீ தடுத்தாய் அன்று
பரத்தை போல உணர்வே இன்றிப்
பதுங்கி வாழ்வாய்ப் பாரில் இன்று
வரத்தைப் பெற்றோந் தமிழ ரானோம்
வாழ்வோம் தலையை நிமிர்த்தி யென்றால்
சிரத்தை இன்றி வாழுந் தமிழா
செருப்பிற் கீழாய்ப் போன தேன்டா? 2
உலப்பில் மொழியாம் ஓங்கு தமிழின்
உணர்வே இன்றி வாழுந் தமிழா
கலப்புச் செய்து தமிழின் தரத்தைக்
கரைத்து நாளுங் கெடுக்குந் தமிழா
தலைப்புப் பலகை தன்னில் தானும்
தமிழே தங்கும் என்றி ருந்தோம்
மலைக்கு நிகராம் மொழியைத் தகர்ப்பார்
மலக்க முழித்து நிற்ப தேன்டா? 3
இந்தி தெரியா போடா என்று
ஏதோ சொல்லிப் பிதற்று கின்றாய்
முந்தை மொழியை முடிக்க நிற்பார்
முனைப்பை அறியாய் கைமு டமோடா?
சந்தி தோறும் முழக்கஞ் செய்து
சழக்கர் செயலைத் தடுக்க வாடா!
அந்தி சாயும் பொழுதாய்த் தமிழை
அழிக்க விடுதல் அறந்தா னோடா? 4
விலத்தி வைப்பார் தமிழை இங்கே
வீணே வெறுமே விழிப்பா யோடா?
நலத்தைக் காக்க நாட்கள் இல்லை
நாட்டைத் திரட்டி உடனே வாடா!
பலத்தைக் காட்டு பயந்து போவார்
பாரில் தமிழைக் காக்க வாடா!!
நிலத்தில் தமிழும் நீடு வாழ
நெஞ்சை நிமிர்த்தி எழுந்து வாடா!!! 5
கவிஞர் த. நந்திவர்மன்
புரட்டாசி 2020
சிட்னி, அவுத்திரேலியா
உலப்பில் - அழிவில்லாத
No comments:
Post a Comment