படித்தோம் சொல்கின்றோம்: நூலகர் நடராஜா செல்வராஜா தொகுத்திருக்கும் ஈழத்தின் தமிழ் நாவலியல் கையேடு பதினாறு தசாப்தங்களுக்கு ( 1856 – 2019 ) மேற்பட்ட காலப்பகுதிகளில் வெளியான ஈழத்தவர் நாவல்கள் பற்றிய அறிமுகம் ! முருகபூபதி


ல்கலைக்கழகங்கள், ஆவணக் காப்பகங்கள், அரசு சார்பு தேசிய சுவடிகள் திணைக்களங்கள் மேற்கொள்ளவேண்டிய பெறுமதியானதோர் சேவையை, நீண்ட  காலமாக தனியெருவராக சுமந்தவாறு,  ஆக்கபூர்வமாக அயர்ச்சியின்றி இயங்கிவரும் நூலகரும் எனது இனிய இலக்கிய நண்பருமான திரு. நடராஜா செல்வராஜா  அவர்கள் தமது தொடர் உழைப்பின் ஊடாக மற்றும் ஒரு வரவாக ஈழத்தின் தமிழ் நாவலியல் ஆய்வுக்கையேட்டின் முதலாவது தொகுதியை தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளார். இதற்காக அவர் செலவிட்டிருக்கும் நேரம் எம்மை பிரமிப்படையவைக்கிறது. இதற்காக அவர், மேற்கொண்ட பயணங்கள்,  இரவு பகலாக முயன்ற தேடல், தொடர்ச்சியான வாசிப்பு அனுபவம் முதலான இன்னபிற செயல்கள் அவரை,  One Man Army ஆகவும் அவதானிக்கத் தோன்றுகிறது. 1856 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரையிலான நீண்டதோர் காலகட்டத்தில் இலங்கையில் வெளியான அனைத்து தமிழ்நாவல்கள் தொடர்பான  குறிப்புகளையும், அவற்றின் ஆசிரியர்கள் பற்றிய அறிமுகத்தையும்,  நாவல் வெளியான வருடம்,  பதிப்பகம், உள்ளடக்கம் முதலான துல்லியமான தகவல்களையும் திரட்டி  தொகுத்து வழங்கி, சமூகப்பயன்பாடு மிக்க அரியதோர் மகத்தான சேவையை நூலகர் நடராஜா செல்வராஜா அவர்கள் மேற்கொண்டுள்ளார். ஏறக்குறைய 163 ஆண்டுகாலத்தில்,  அதாவது ஒன்றரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட  காலப்பகுதியில்  வரவாகியிருக்கும் ஈழத்து தமிழ்நாவல்களைப்பற்றிய தரவுகளை  ஒரு தனிநூலுக்குள் அடக்கியிருக்கும் அவரது செயல் போற்றத்தக்கது. நூலகர் செல்வராஜா, யாருக்காக

இந்தச்சிலுவையை தொடர்ந்து சுமந்துவருகிறார்…!?   நாம் எமது வாழ்நாளில் எத்தனையோ நூல் நிலையங்களை பார்த்திருப்போம். பயன்படுத்தியிருப்போம், அவற்றில் பணியாற்றிய நூலகர்களையும் அவதானித்திருப்போம்.   நூல் நிலையங்கள் அரசு சார்பாகவும் அரசு சார்பற்றும் இயங்கியவை. அங்கிருந்த  நூலகர்களும் வேதனத்திற்குத்தான் வேலைசெய்திருப்பார்கள்.  ஆனால், தாம்  நேசித்த தொழிலை, பங்கேற்ற தமிழியல் ஆய்வை இவ்வளவு தூரம் அர்ப்பணிப்போடு  எங்கள் நூலகர் செல்வராஜா போன்று மேற்கொண்டிருப்பார்களா..?! இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது,                                                           “ மருத்துவமனைகளையும் நூல் நிலையங்களையும் தாக்கவேண்டாம்.  “  என்றுதான் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் சொன்னதாக தகவலிருக்கிறது!  ஆயுதத்தை நேசித்த அந்த மனிதன் கூட  அறிவையும் ஆவணங்களையும் நேசித்தான். எங்கள் தாயகத்தில் யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு, அந்த வலிசுமந்த காலத்தை நாம் கடந்து வந்திருக்கின்றோம். அந்தக் கோரம் பற்றி தொடர்ச்சியாக எழுதவும் பேசவும்படுகிறது. ஆனால், இழந்தவற்றை தேடி எடுத்து சேகரித்து ஆவணப்படுத்தவேண்டும் என்ற பெரும் பணியில்  யாரும் ஈடுபட்டார்களா..? ஈடுபடுகிறார்களா..? நூலகம் ஆவணக்காப்பகம் தன்னால் முடிந்த பணிகளை தொடருகிறது.  இலங்கையில்  யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரி, வடமாகாண சர்வோதய மத்திய நூலகம், முள்ளிப்பொத்தானை பொது நூலகம், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நூலகம், இனத்துவத்துக்கான சர்வதேச நிலையம் முதலானவற்றில்  முன்பு நூலகராக பணியாற்றியிருக்கும் செல்வராஜா அவர்கள் அந்தப்பணிகளையெல்லாம் ஏதோ தொழில் நிமித்தம் வேதனம் பெற்ற ஊழியமாக கொண்டிருந்தவர் இல்லை என்பதை அவரது தொடர் உழைப்பிலிருந்தும், இங்கிலாந்திற்கு புலம்பெயர்ந்து சென்ற பின்னரும் அயராமல் அதே துறையில் ஆவணப்படுத்தும் பணிக்கு தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார் என்பதையும் அறியும்போது வியக்காமலிக்கமுடியவில்லை.  

தற்போதைய தமிழ்த்தலைமுறையினருக்கும், தமிழினி செத்துப்போகலாம் என்று பிதற்றிக்கொண்டிருக்கும் தமிழை மறந்துகொண்டிருக்கும் தமிழர்களுக்கும் முன்மாதிரியான பணியை மேற்கொண்டுள்ளார். ஈழத்து நாவல்கள் – மொழிபெயர்ப்பு நாவல்கள் , குறுநாவல்கள் – மொழிபெயர்ப்பு நாவல்கள் – குறுநாவல்கள்-  சிறுவர் நாவல்கள் – கதை நூல்கள் – சிறுவர் மொழிபெயர்ப்பு நாவல்கள் – சிறுவர் கதை நூல்கள் –  இவ்வாண்டில்  வெளிவந்ததாகக் கருதப்படும்  நாவல்கள் முதலான  தலைப்புகளில் எம்மவரது புதினங்களை வரிசைக்கிரமமாக பதிவுசெய்துள்ளார். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு வளமிட்டவர்களையும்  புகலிடத்திலும் தொடரும் புலம்பெயர்ந்தவர்களின் எழுத்தூழியத்தையும் இந்த நூல் விரிவாக பதிவுசெய்துள்ளமையால், இதன் உள்ளடக்கம் கனதியாக எமது கண்முன்னே விரிகின்றது!  இலங்கை பத்திரிகைகள், இலக்கிய இதழ்கள், வானொலி ஊடகம் முதலானவற்றில் தொடர்கதைகளாக வெளிவந்த படைப்புகளையும் முடிந்தவரையில் தவிர்த்துவிடாமல், அவற்றையும் உள்ளடக்கி இந்த ஈழத்து நாவலியல் ஆய்வேட்டை  முழுமைப்படுத்தி தொகுத்துள்ளார் செல்வராஜா. அத்துடன் ஈழத்தின் வெளியான பத்திரிகைகள், இலக்கிய சிற்றிதழ்கள் பற்றிய அறிமுகமும் அவற்றின் காலப்பகுதியும் துல்லியமாகத் தெரிகிறது. மேலைத்தேய இலக்கியங்களை தமிழுக்கு மொழிபெயர்த்தவர்கள் பற்றியும், அவர்கள்  மொழிபெயர்த்த நாவல்கள் தொடர்பாகவும், சகோதர சிங்கள இலக்கியங்கள் தமிழுக்கு வரவாகியிருக்கும் தகவல்களையும் தரவாக்கியிருப்பதன் மூலம் மொழிபெயர்ப்புத்துறைக்கு கடுமையாக உழைத்தவர்களையும் இந்த ஆய்வேட்டில் கனம்பண்ணி மரியாதை செலுத்தியிருக்கிறார். 

இவ்வாறு செய்வதற்கு விருப்பு வெறுப்பற்ற பரந்த மனம் தேவை. அத்தகைய விரிந்த மனப்பான்மை இருந்தமையால்தான், பொருளாதார ரீதியில் எத்தனையோ இழப்புகளையும் , தேடுதல்களின்போது கசப்பான அனுபவங்களையும் பெற்றவாறு, எந்த நிலையிலும் தன்னை தேங்கிவிடச் செய்திடாமல்,  சோர்ந்துவிடச்செய்யாமல்,  அயர்ச்சியின்றி தனது பணியை தொடர்ந்துவருகிறார். இப்படிப்பட்ட ஒருவர் எம்மத்தியிலிருக்கும்போது எப்படி  வாழ்த்தாமலிருக்கமுடியும். ஒரு காலத்தில் இலங்கை நாணயத்தில்  ஐம்பது சதத்திற்கும் நாவல்கள் வெளிவந்திருப்பதையும் காலத்தின் கோலத்தினால், ஆயிரம் ரூபாவுக்கும் அய்ரோப்பிய மற்றும் அமெரிக்க – கனேடிய – அவுஸ்திரேலிய வெள்ளிகளிலும்  தமிழ் நாவல்கள் வெளிவரும் சுவாரசியமான செய்திகளையும் அறிகின்றோம்.  ஈழத்தின் மூத்த தலைமுறையினரும் இடைநிலை தலைமுறையினரும் தற்காலத்தலைமுறையினரும் தமிழ் நாவல் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு வழங்கியிருக்கும் பங்களிப்புகளையும் இந்நூலின் ஊடாக நாம் தெரிந்துகொள்கின்றோம். ஈழத்து நாவல் இலக்கியத்தை வளம்படுத்தியவர்கள்  அங்கிருந்த காலகட்டங்களையும்  மாந்தரின் வாழ்வுக்கோலத்தையும்  பிரதிபலித்தனர்.  

பின்னர், ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து அந்நிய தேசங்களுக்கு புலம்பெயர்ந்தவர்கள்  உருவாக்கிய ஆறாம் திணை இலக்கியமும் ( பனியும் பனிசார்ந்த நிலப்பரப்பு ) நாவல் வடிவில் வெளியாகின.  நூலகர் செல்வராஜா சுமார்  பதினாறு தசாப்த  ஈழத்து – புகலிட இலக்கிய வரலாற்றையும் ஒன்றுசேர அறிமுகப்படுத்தியிருக்கிறார்.  எனவே இந்த நூல்,  ஈழத்தின் பல்வேறு பரிமாணங்களையும் எம்மவரின் புகலிட  வாழ்வுக்கோலங்களையும் பதிவுசெய்திருப்பதாகவே கருதமுடிகிறது.  இந்த நூலைப்படிக்கும் எந்தவொரு தேர்ந்த இலக்கிய  வாசகரும், செல்வராஜா வழங்கியிருக்கும் நாவல் அறிமுகக்குறிப்பிலிருந்து, குறிப்பிட்ட நாவலைத் தேடி வாசிப்பதற்கே முனைவார்!. அதனால், இந்தக் கையேடு, ஈழத்திலும் புகலிடத்திலும் நாவல் எழுதியவர்களுக்கும் வாசகர்களுக்குமிடையே ஆரோக்கியமான பாலத்தையும் நிர்மாணித்து எழுப்பியிருக்கிறது. நூலகர் செல்வராஜா அவர்களை இந்த நூலின் வாயிலாக வாழ்த்துக்கூறுவதற்கு எனக்கு என்ன உரிமையும் தகுதியும் இருக்கிறது என்றும் ஒருகணம் யோசித்தபோதுதான்,   நாமிருவரும் கடந்துவந்துள்ள  காலம் நினைவுக்கு வருகிறது. அதனை நனவிடை தோய்ந்தால் பல சுவாரசியங்கள் மனக்குகை ஓவியங்களாகின்றன. எனது பூர்வீக ஊர் இலங்கையில்  நீர்கொழும்பில் 1950 களில் தமிழ் – சமய – சமூக - கல்விப்பணிகள் மேற்கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர்தான் செல்வராஜா. 

நான் ஆரம்பக்கல்வி கற்ற அதே கல்வி நிலையத்தில்தான்                                     ( அன்றைய விவேகானந்தா வித்தியாலயம் இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ) இவரும்  தனது ஆரம்பக்கல்வியை தொடங்கியவர். காலம் செய்த கோலம், நீண்ட இடைவெளிக்குப்பின்னர்  மீண்டும் புகலிட வாழ்வில்  மற்றும் ஒரு புள்ளியில் சந்தித்திருக்கின்றோம். அச்சந்திப்பு,  பரஸ்பரம் எமது  இலக்கிய எழுத்து ஊழியத்தை தரிசிக்கும் மற்றும் ஒரு வாழ்க்கையில் நேர்ந்துள்ளது. 

சில வருடங்களுக்கு முன்னர் நண்பர் செல்வராஜா, நான் வதியும் தற்போதைய வாழ்விடம் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்து,  எமதில்லத்தில் தங்கியிருந்து இந்த கங்காரு தேசத்தின் இலக்கிய வரவுகள் பற்றிய தொகுப்பினை எழுதினார். பயணியாக புறப்பட்டு வந்து பயண இலக்கியம் படைத்து தன்னைத் தக்கவைத்துக்கொள்வதை விடுத்து, மற்றர்களின் இருப்பை இலக்கிய வரலாற்றில் தக்கவைத்திருக்கவேண்டும் என்ற பெருமனதுடன் இயங்கியதை அருகிருந்து பார்த்திருக்கின்றேன். அந்த நேசத்துடனும்,  நீண்டகாலமாக எந்தவொரு விக்கினமுமில்லாமல் உறவை பரஸ்பரம் பாரட்டிவந்துள்ளமையாலும் நூலகர் செல்வராஜா அவர்களை இந்தப்பதிவின் ஊடாக வாழ்த்துகின்றேன். அவருடைய நீண்டகால தேடலின் விளைவு வீணாகிப்போய்விடலாகாது.  அவரது உழைப்பு விதையாகி விருட்சமாகியிருக்கிறது. அந்த விருட்சத்தின் நிழலின்  கீழே எமது  ஈழத்து இலக்கியம் மேலும் வளம் பெறவேண்டும். letchumananm@gmail.com   


1 comment:

Orbi Setup Issue said...

ThankYou for sharing this informative content. We are providing the Netgear Orbi Setupsolutions. If you are trying to set up, but are unable to do so, you need to contact our experts. visit our website to get our toll-free number to call our experts to resolve your
Orbi setup Issues
.