ரஸனைக்குறிப்பு: எழுத்தாளர் சமூகப்பணியாளர் முருகபூபதி வாழ்வும் பணியும் - ரஸஞானி ஆவணப்படம் சுபா – மெல்பன்

                               


                                ங்கை வெள்ளத்தைக் கமண்டலத்தில் அடக்க முடியுமா? ஆனால்,  அதன் இயல்பையாவது ஒரு பாத்திரத்தில் அள்ளியெடுத்துத் தந்து உணரவைக்க முடியும் அல்லவா? எல்லைகளற்றுப் பணியாற்றும் ரஸஞானி முருகபூபதி லெட்சுமணனின், ஏறக்குறைய ஐம்பதாண்டு கால வாழ்வும் பணியும் பற்றிய தகவல்களை ஒரு மணிநேர ஆவணப்படத்தினுள் உள்ளடக்கி அளித்திருக்கிறார்கள். இந்த எண்ணத்தை உளம் கொண்டு எழுதி, செயற்படுத்திய திரு. எஸ் கிருஸ்ணமூர்த்திக்கும், ஒளி, ஒலி, படத்தொகுப்பு, ஒலிச்சேர்க்கை செய்த திரு. மூர்த்திக்கும் நன்றிகளும், வாழ்த்துகளும். 

எனக்கு முருகபூபதி அவர்களுடன் அண்மைய நாட்களில் நெருக்கமான பிணைப்பு உருவாகி இருக்கிறது. கிழமைக்கு ஒரு தடவையாவது தொலைபேசியில் குடும்பம், இலக்கியம், அரசியல் என மிகச் சுவாரசியமாக என்னுடன் அளவளாவுவார். மிக ஆர்வமாக இருக்கும்.  அதே வேளையில், இந்தத் தகவல் களஞ்சியத்தின் நாட்கள் பற்றிய ஒரு ஒழுங்குமுறையான தொடர்பை மனதில் காட்சிப்படுத்த முடியாமல் நான் தடுமாறுவேன். ரஸஞானி பற்றிய ஆவணப்படம் எனக்குக் கோப்பு ஒன்றை உருவாக்கித் தந்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சி. திரு. நவரத்தினம் அல்லமதேவன் அளவான வேகம், இடைவெளி, அத்துடன் தெளிவான உச்சரிப்புடன் பின்னணிக்குரல் கொடுத்திருக்கிறார். மிகச்சிறு வயதிலேயே பாரதியார் ஏற்படுத்திய பாதிப்பால் நேர்மை நோக்கும், பாரதியை என்றும் மனதில் பதித்து வைத்துக்கொண்டு, ‘இலங்கையில் பாரதி' என்ற மிகத் தேவையான ஆய்வு நூலை உருவாக்கியவருமான


முருகபூபதி பற்றிய படத்தின் பின்னணி இசையாக 'சின்னஞ்சிறு கிளியே' வீணை நாதம் பொருத்தமாக இருந்தது. இங்கு திருமதி மாலதி முருகபூபதி, எழுத்தாளர் வைத்தியர். நடேசன், திரு லயனல் கோப்பகே, கவிஞர் கருணாகரன், ஞானம் ஆசிரியர் திரு ஞானசேகரன், எழுத்தாளர் ஜேகே, சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன், திருமதிகள் சாந்தி சிவகுமார்,  வித்தியா ஶ்ரீஸ்கந்தராஜா, கலாநிதி கௌசல்யா அந்தோனிப்பிள்ளை,  கலைஞர்  மாவை நித்தியானந்தன், திருவாளர்கள்  இராஜரட்ணம் சிவநாதன், ஆவூரான் சந்திரன், விமல் அரவிந்தன், கொர்னேலியஸ்  இவ்வளவு பேரிடமும் தகவல்கள் சேகரித்து, குறுகிய நேரத் தொகுப்பாக ஆக்கியது சாதனையே.  இரண்டு விடயங்கள் படத்தைத் தொய்வில்லாமல் பார்ப்பதற்கும், தொடர்புபடுத்தி அறிந்து கொள்வதற்கும் உபயோகமாக அமைந்தன. ஒன்று, தகவல்களுக்குப் பொருத்தமான படங்கள், காணொளிகளை ரஸஞானி பற்றி ஒவ்வொருவரும் கருத்துக்கூறும் காணொளியின் பின்னணியில் இணைத்தது. இரண்டாவது, தனித்தனிப் பகுதியாகப் பிரிக்காமல் முருகபூபதி அவர்கள் தன்னைப்பற்றிக் கூறுவதையும், இடையிடையே மற்றவர்கள் கருத்தையும் கலந்து தொகுத்தது. 

தவிர, ஒரு காணொளிக்காகவென்று எழுதி, ஆயத்தப்படுத்தி வாசிக்காமல், முருகபூபதி அவர்கள் சாதரணமாக எம்முடன் உரையாடுவது போன்று தனது கதையைச் சொல்வது யதார்த்தமாக, பேச்சாளரின் கதையுடன் இலகுவில் மூழ்கிவிடக்கூடியதாக அமைந்தது.  தனது பணியை யோகமெனச் செய்யும் முருகபூபதியை அவரது மனைவி மாலதி , ‘ ரோபோ மனிதன் ' எனக் குறிப்பிட்டார். ஆனால்,  இது உணர்ச்சிகள் உள்ள ரோபோ. வேண்டுமாயின், ' சிட்டி ரோபோ ' என வைத்துக்கொள்ளலாம். வீரகேசரி பத்திரிகையில்  ஒப்பு நோக்காளராய்  முன்பு இருந்தவருக்கு எழுத்துப்பிழை திருத்தவும், கணினி கற்பிக்கவும் தமிழ் ஆசிரியை தேவைப்படுவது காலத்தின் மாற்றம்தான். கவிஞர் கருணாகரன், முருகபூபதி அவர்களின் பணியை ஊடகவியல், சமூகசேவை, இலக்கியப் பணி என எல்லை வகுத்துக்


கூறியதுடன், ஒன்றில் மாத்திரம் தனிக்கவனம் செலுத்தி மேலும் புகழும் பெயரும் வாங்குவதற்கு ஆசைப்படாத இவரின் தன்னலமற்ற சேவையை அழகாகக் குறிப்பிட்டார்.   இலக்கியவாதிகள் நடேசன், சாந்தி சிவகுமார், ஜேகே இவர்கள் எல்லாம் கூறியது போலவே தகவல் களஞ்சியம் நிறைந்திருக்கும் இந்த இலக்கியத் தோட்டக்காரனின் விளைச்சல் என்னை அதிசயத்தில் ஆழ்த்துகிறது. பாரதி ஆய்வாளர் தொ.மு.சி. ரகுநாதனின் பேரன் முறையான இவருக்குப் பாரதியின் பாடல்கள் பிறப்பிலேயே இரத்தத்துடன் கலந்திருக்கலாம். மாவை நித்தியானந்தன் சொல்வதுபோல் அயராத உழைப்பும், நேர்மையற்றதற்கு முரண்படும் குணமும் இவரிடமுள்ளன. ஆனால்,  இவரின் ரௌத்திரம் குத்திக் கிழிக்காமல், தட்டிச் சொல்தாகவே இருந்திருக்கிறது.                                “ தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அப்பால் ஒருவரை நேசிக்க முடியும்   “ என்றும், அவுஸ்திரேலிய கலை இலக்கிய விழாவின் நோக்கம், “   அறிந்ததைப் பகிர்ந்து அறியாததைத் தெரிந்து கொள்ள வேண்டும்  “ என்றும் கூறும் முருகபூபதி அவர்களின் கூற்றிலிருந்து அவரின் பரந்த மனதை அறியலாம். இதனை இவர் இந்த ஆவணப்படத்திற்காகக் கூறவில்லை. நேற்றுப் பழகிய என்னிடமே ஏதாவது தெரியாதது போல் கேட்டறிவதும், பொறுமையாகச் செவிமடுப்பதும் இந்த மனிதரிடம் எனக்குள்ள அனுபவம். பொதுவாக ஆவணப்படங்களில் நகைச்சுவைக் காட்சி இடம்பெறுவதை  நான் பார்த்ததில்லை. ஆனால்,  இங்கே எழுத்தாளர் ஆவூரான் சந்திரனின்,   “ முருகபூபதி அவர்கள் 'செம்மணியாள்' எனும் பெயரில் நூல் எழுதி வெளியிட்டிருக்க வேண்டும்  “  என்ற கருத்துக்கு நான் வாய்விட்டுச் சிரித்தேன். எழுத்தாளர் ஒருவரின் எழுத்து அவரின் அனுபவம், பின்புலம், கிடைக்கும் தகவல்கள், அத்துடன் எழுத்தாளர் எழுதுவதற்காகத் திட்டமிட்டதைத் தாண்டியும் அவர்

எழுத்து அழகாகும் அற்புதக் கணங்கள் இவை எல்லாவற்றையும் கொண்டது. ஒரு எழுத்தாளர் ஏன், எந்தப் படைப்பாளியும் கூட தன்னிடமிருந்து இயல்பாகத் தோன்றுவதைப் படைப்பவர்கள். இவர்களிடமிருந்து எமக்குப் பிடித்ததை எடுத்துக்கொண்டு நயக்கலாம். இதை இவர்கள் செய்ய வேண்டும் எனச் சுட்டிக்காட்டுவது நல்லதல்ல. தவிர, கிருஷாந்தி 'கைதடியாள்'. அவளுக்கு அநீதி நடந்த இடமே செம்மணி. ஒருவேளை 'செம்மணியாள்' என்ற பெயர் ஜனாதிபதி சந்திரிகாவிற்குப் பொருந்தலாம். ஜேகே பகிர்ந்துகொண்ட விடயங்கள் முருகபூபதி அவர்களுடனான என் உறவிற்கும் ஒத்துப் போகிறது. எல்லாவற்றையுமே ஒரு சின்னச் சிரிப்புடன் எடுத்துக்கொள்ளும் இந்த மனிதரின் குணம், இவரின் அனுபவம் பாற்பட்டதா..? அல்லது இயற்கையாகவே அமைந்த இயல்பா..?  என அதிசயப்பட்டதுண்டு. இலங்கை தேசிய சாகித்திய விருது, அவுஸ்திரேலிய விருதுகள் பெற்றவர், இருபது நூல்கள் எழுதியவர், இன்னமும் தொடர்ந்து இதழ்களுக்கு எழுதிக் கொண்டிருப்பவர், இலங்கை, இந்தியாவின் மிகப்பெரிய இலக்கியவாதிகள், எழுத்தாளர்களுடன் நண்பராக இருப்பவர், அதீத அனுபவம் வாய்ந்தவர், இவை எதனையும் காட்டிக்கொள்ளாமல் அடுத்த தலைமுறையினரிடமும், பழகும் எவரிடமும் நெருக்கமான உறவுத் தோற்றத்தை ஏற்படுத்தும் கவசமணியாத இந்த மனிதரை என்னவென்பது? இந்த வழிகாட்டி மரம் நானாக இளைப்பாறச் செல்லாமலேயே, தன் கிளையை நீட்டி என்னைத் தூக்கி இடுப்பில் வைத்து உயர்த்திக்காட்ட முனைகிறது. கங்கைக்கென்ன? மலர்தூவி வணங்கினாலும் சரி, மதிக்காது அழுக்காக்கினாலும் சரி, அது தூய வெள்ளமாய் தனது போக்கினில் பெருக்கெடுத்துச் சென்றுகொண்டே இருக்கும். என்னைப் போன்றவர்கள் படிக்கட்டில் நின்றாலும் சரி, இன்னும் உள்ளே இறங்கினாலும் சரி, எல்லாரையும் நனைத்தே செல்லும்.  No comments: