பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 19 - என் அண்ணன் - சுந்தரதாஸ்




இன்று திரைப்பட ரசிகர்கள் தாங்கள் விரும்பும் புதிய, பழைய படங்களை தொலைக்காட்சியில் வீட்டில் இருந்தபடி பார்த்து ரசிக்கலாம். ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி வசதி இல்லாத காலத்தில் கொழும்பு திரையரங்கில் வெளியான புதிய படத்தை பார்க்க முண்டியடித்த ரசிகர்களில் ஒருவனுக்கும், திரையரங்க மனேஜருக்கும் இடையில் ஏற்பட்ட சச்சரவு கத்திக்குத்தில் போய் முடிய மேனேஜர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த சம்பவம் இடம்பெற காரணமாக அமைந்த படம் எம்ஜிஆர் நடித்த என் அண்ணன். கத்திக்குத்துக்கு பலியான மேனேஜர் ராசையா. இவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையை சேர்ந்தவர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக இவர் தனது பெல் ட்டினால் சிலரை அடிக்க பாதிக்கப்பட்ட ஒருவனின் கத்திக்கு பலியானார். கொழும்பு கேப்பிடல் தியேட்டரில் இந்த சம்பவம் இடம்பெற்றது.


ஏழை வண்டிக்காரன் ரங்கன். அவரின் தங்கை தங்கம், கல்லூரியில் படித்துக்கொண்டே ஒரு டாக்டரையும் காதலிக்கிறாள். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது ஆனால் அதன் பின்னரே டாக்டர் முரளி தன் தந்தையை கொலை செய்தது தன் மனைவியின் தந்தை என்று தெரிய வருகிறது. ஆனால் இது அபாண்டமான பழி என்று கூறி ரங்கன் உண்மை கொலையாளியை தேடி புறப்படுகிறான். அவனுக்கு அவளின் காதலி வள்ளியும் உதவுகிறாள்.



தெலுங்கில் வெளிவந்து வெற்றிபெற்ற போலரங்குடு என்ற படத்தைத் தழுவி தமிழில் இப்படம் கலரில் தயாரானது. புகழ்பெற்ற வீனஸ் பிக்சர்ஸ் படத்தை தயாரித்தார்கள் படத்தை நீலகண்டன் இயக்க பல படங்களுக்கு வசனம் எழுதிய சொர்ணம் படத்துக்கு வசனம் எழுதினார். பாடல்களை கண்ணதாசன், வாலி இருவரும் இயற்ற கேவி மகாதேவன் அருமையாக இசையமைத்திருந்தார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, நீல நிறம் வானுக்கும் கடலுக்கும், கடவுள் ஏன் கல்லானான் ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்தன. ராமமூர்த்தியின் ஒளிப்பதிவு தரமாக அமைந்தது. காட்சி ஜோட னைகளும் தரமாக இருந்தது.



எம்ஜிஆர் ஜெயலலிதா முத்துராமன், விஜய நிர்மலா என்று படத்தில் இரண்டு ஜோடிகள். எம்ஜிஆருக்கு உருக்கமாகவும் நடிக்க வாய்ப்பு. முத்துராமனும் விஜயநிர்மலாவும் தங்கள் பங்கை குறையின்றி பூர்த்தி செய்தார்கள். சோவின் நகைச்சுவை படத்தை கலகலப்பாக்கியது.


நம்பியார் அசோகன் இரண்டு வில்லன்கள் ஆனால் ஜஸ்டின் உடன் எம்ஜிஆர் போடும் சண்டை தூள் கிளப்பியது. இந்தியாவிலும் இலங்கையிலும் என் அண்ணன் படம் வெற்றிப்படமானது



No comments: