இலங்கைச் செய்திகள்

வடக்கில் 6,682 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டம் 

சர்வதேச அங்கீகாரமுள்ள ஊழியர்களுக்ேக இனி வெளிநாட்டு வேலைவாய்ப்பு

சீன உயர்மட்ட குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்திப்பு


வடக்கில் 6,682 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டம் 

அடுத்த ஆண்டுக்குள் பூர்த்தி - பிரதமர்

வடக்கில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கான 6,682 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டம் அடுத்த ஆண்டு பூர்த்தியாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை அரசாங்கம் முழுமைப்படுத்தி வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) பிரதமருக்கான கேள்வி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கிற்கு இந்த வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் சில கால தாமதம் ஏற்பட காரணம் என்னவெனில், 2018 ஆம் ஆண்டில் வீடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2019 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2020 ஆம் ஆண்டுக்கும் என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த ஆண்டுக்கென முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் 2021 ஆம் ஆண்டில் முழுமையாக பூர்த்தியாகும். எமது அரசாங்கம் அதற்கான நடவடிக்கையை எடுக்கும்” என்றும் பிரதமர் இதன்போது கூறினார்.

லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம் - நன்றி தினகரன் 







சர்வதேச அங்கீகாரமுள்ள ஊழியர்களுக்ேக இனி வெளிநாட்டு வேலைவாய்ப்பு

திட்டத்தை துரிதமாக தயாரிக்க ஜனாதிபதி பணிப்பு

சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தகைமை சான்றிதழ்கள் உள்ள பயிற்றப்பட்ட ஊழியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் ஈடுபடுத்தும் திட்டத்தை துரிதமாகவும் முறையாகவும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன் மூலம் நாட்டுக்கும் ஊழியர்களுக்கும் அதிக நன்மைகளை பெற்றுக்கொள்ள முடிவதுடன், தொழில் பாதுகாப்பையும் உறுதிசெய்ய முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைத்துவ இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

பயிற்றப்பட்ட ஊழியர்களுக்கு உலக தொழில் சந்தையில் அதிக கேள்வி உள்ளது. கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளின் தொழிற் சந்தைகளை இலக்காகக் கொண்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் தேவையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபை இணைந்து இதனை திட்டமிடுமாறும் பணிப்புரை விடுத்தார். போலந்து, ரூமேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தொழிற் சந்தைகள் தற்போது இலங்கைக்கு திறந்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில் ஊழியர் படையொன்றை உருவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பட்டதாரிகளுக்குள்ள வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இது வரையில் அது குறித்து உரிய கவனம் செலுத்தப்படவில்லை. கலை பட்டதாரிகளுக்கும் இந்த சந்தர்ப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். தொழில்வாய்ப்புக்காக புலம்பெயர்வது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிப்பதுடன், இலங்கையின் மொத்த புலம்பெயர் ஊழியர்கள் 1.2 மில்லியன் பேராகும். வருடாந்தம் சுமார் இரண்டு லட்சம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக செல்வதோடு, கொவிட் நோய்த்தொற்று காரணமாக இவ்வருடம் அத்தொகை 40,000க்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்து வெளிநாட்டு விமான நிலையங்கள் திறக்கப்பட்டதும் பயிற்றப்பட்ட ஊழியர்களை அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக இக்காலப்பகுதியில் அவர்களுக்கு மொழி அறிவு மற்றும் பயிற்சிகளை விரிவுபடுத்தி வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு தேவையான பயிற்றப்பட்ட ஊழியர் குழாமொன்றை உருவாக்குவதற்காக தற்போது 17 பயிற்சி நிலையங்களில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது. தொழில் ஒப்பந்தங்கள் நிறைவுபெற்றாலும் கொவிட் 19 காரணமாக தமது நாடுகளுக்கு திரும்ப முடியாமல் உள்ள ஊழியர்களின் தொழில் ஒப்பந்தங்களை நீடிப்பதற்காக குறித்த நிறுவனங்கள் மற்றும் துறைகளுடன் கலந்துரையாடுமாறும் ஜனாதிபதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பணிப்புரை விடுத்தார்.    நன்றி தினகரன் 







சீன உயர்மட்ட குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்திப்பு

இலங்கை வந்துள்ள முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி (Yang Jiechi) யின் தலைமையிலான சீன உயர்மட்ட குழுவினர் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோது...நன்றி தினகரன் 

No comments: