கொரொனோ கால உறவுகள் ( சிறுகதை ) முருகபூபதி

 

“ அப்பா… உங்களது மெயிலுக்கு ஒரு தகவல் இணைத்துள்ளேன்.  “ என்றாள் மூத்த மகள். நான் வெளியே புல்வெட்டிக்கொண்டிருந்தபோது மகளின் அழைப்பு எனது பொக்கட்டில் இருந்த கைத்தொலைபேசியில் சிணுங்கியவாறு வந்தது. புல்வெட்டும் இயந்திரத்தை நிறுத்திவிட்டு,   “ என்ன தகவல்…?  “ எனக்கேட்டேன்.   “ நாளைக்கு மகள் ஜானுவின் பிறந்த தினம்.  யாரும் வரமுடியாது.  ஐந்து மைல்களுக்கு அப்பால் எவரும் நகரமுடியாது. கம்பியூட்டரின் முன்னால் அமர்ந்து ஸும்  ஊடாக சந்தித்துப்பேசி பிறந்த தினத்தை கொண்டாடவிருக்கிறோம்.  நீங்கள் நாளை ஃபிரீயாக இருப்பீங்கதானே…?  “   

 

 “  நான், பேத்தியை மிகவும் மிஸ்பண்ணுகிறேன்.  அவளை மட்டுமல்ல,  எனது எல்லாப்பேரக்குழந்தைகளையும் மிஸ்பண்ணிக்கொண்டிருக்கிறேன்.  என்றைக்குத்தான் இந்தக் கொரோனா போய்த்தொலையுமோ தெரியாது.  ஆறு ஏழு மாதமாகிவிட்டது குழந்தைகளைப்பார்த்து  “ சொல்லும்போது எனக்கு தொண்டை அடைத்தது. கண்கள் கலங்கின. சிரமப்பட்டு அடக்கினேன்.  “  என்னப்பா செய்யிறது.  நானும் அவரும்கூட வீட்டிலிருந்துதான் ஒன்லைனில் வேலைசெய்கிறோம். ஆளுக்கொரு அறையை எடுத்துக்கொண்டு, காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணிவரையும் அசையமுடியாத வேலை.  பிள்ளைகள் இருவருக்கும் தெரியும்தானே…?  அவர்களுக்கும் படிப்பு வீட்டிலிருந்துதான்.  ஒன்லைன் ஸ்டடி.  அவர்களையும் கவனித்துக்கொள்ளவேண்டும்.  வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது.   

“ மகள் மறுமுனையிலிருந்து அலுத்துக்கொண்டாள். எனது இளைய மகளுக்கும் இளைய மகனுக்கும் மற்றும் சில உறவினர்களுக்கும் தகவல் சொல்லவேண்டும், நாளை ஸ்கைப் ஸுமில் பேசுவோம் எனச்சொல்லிவிட்டு,  மூத்த மகள் இணைப்பினை துண்டித்துக்கொண்டாள். புல்வெட்டும் இயந்திரத்தை மீண்டும் இயக்காமல், அதன் கைப்பிடியை பிடித்துக்கொண்டு சில நிமிடங்கள் நின்றேன். குருவிகளும் பெயர் தெரியாத சில பறவைகளும்  இணைந்தும் பிரிந்தும் ஆங்காங்கே பறந்துகொண்டிருக்கின்றன.  எனது வீட்டின் காணியில் நிற்கும் மரத்தில் கூடுகட்டியிருக்கும் குருவி, தனது குஞ்சுடன் கொஞ்சி விளையாடுவது தெரிகிறது. அது பறந்து திரிந்து தேடி எடுத்துவந்த குச்சிகளையும் சருகுகளையும் இணைத்து அழகான கூட்டை அமைத்து முட்டை இட்டு அடைகாத்து, குஞ்சுபொரித்து இப்போது கொஞ்சிக்கொண்டிருக்கிறது. அந்தக்குஞ்சும் சில நாட்களில் வளர்ந்து பறந்து இணையும் தேடி  கூடு கட்டி கருத்தரித்து முட்டையிட்டு அடைகாத்து, குஞ்சுபொரித்து தன் குழந்தையுடன் கொஞ்சிக்குலாவும்.  இவ்வாறே அவற்றின் சந்ததி பெருகிவிடும். அவைகளை எந்தவொரு வைரஸ் கிருமியும் அண்டுவதில்லைபோலும்.  சுதந்திரமாக பிறக்கின்றன.  பறக்கின்றன.  இனவிருத்தியும் செய்துகொள்கின்றன.  

ஆறுஅறிவுடன் பிறக்கும் மனிதகுலத்துக்குத்தான் தேவைகளும் அதிகம், பிரச்சினைகளும் அநேகம். நெருக்கடி வந்துவிட்டால், அதிலிருந்து மீண்டுவிடுவதற்கும் புதிய புதிய நடைமுறைக்கு தன்னை பழக்கப்படுத்திக்கொள்கிறது இந்த மனித இனம்.      செய்தி ஊடகங்களிலிருந்து  தொடக்கத்திலேயே  கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பை உணர்ந்து மாஸ்க் அணிந்து ஒருநாள் வெளியே நடைப்பயிற்சிக்குச்சென்றேன். வீதியால் வந்த சிலர் என்னைப்பார்த்து ஏளனச்சிரிப்பை உதிர்த்துக்கொண்டு சென்றனர். காரில் சென்ற சில இளவட்டங்கள்,  ஹோர்ன் அடித்து கிண்டல் செய்தனர். நான் வாழும் அவுஸ்திரேலியாவில்  அவசியமின்றி ஹோர்ன்  அடித்தல் அவமானப்படுத்துவதற்கான அறிகுறிச்செய்கை.  நடைப்பயிற்சியிலிருந்த எனக்கும் அவர்களை  அவமதிப்பதற்கு  நடுவிரல் சைகை காண்பிக்கமுடியும்.  மௌனமாக நடந்தேன்.  மாதங்கள் உருண்டோடின.  மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டபோது,  அணியாவிட்டால் தண்டப்பணம் என்பது சட்டமானபோது, எவரும் என்னைப்பார்த்து ஏளனச்சிரிப்பை உதிர்க்கவில்லை. 

காரில் பயணித்த இளவட்டங்கள்  ஹோர்ன் அடிக்கவில்லை. நானும் எனது நடைப்பயிற்சியை நிறுத்தவில்லை. தலையில் தொப்பியும்,  கண்ணில் சூரியனை சகிக்க கருப்புக்கண்ணாடியும் அணிந்துகொண்டு முன்னர் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட எனக்கு இந்த கொரோனா முகக்கவசத்தையும் புதிதாக தந்துள்ளது.  வெளியே செல்லப்புறப்படும்போது,  முகக்கவசம் எடுத்தேனா எனக்கேட்டு நினைவுபடுத்தும் பழக்கத்திற்கு மனைவியும் வந்துவிட்டாள். ஷொப்பிங் செய்துகொண்டு திரும்பினால்,  பின்வளவு கேட்டைத் திறந்துதான் வீட்டின் பின்புறம் வரவேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்துவிட்டாள். அங்கே ஒரு வாளி நிறைய மஞ்சள் தண்ணீர் எனது வருகைக்கு காத்திருக்கிறது.  அதனை, தலையில்  உடலில் தெளித்துவிட்டேன் எனத் தெரிந்ததும்தான் சென்று வந்த களைப்புத்தீர்வதற்கு தாகசாந்தியாக இஞ்சி இடித்துக்கலந்த சீனியில்லாத தேநீர் அருந்தக்கிடைக்கிறது. வாங்கிவந்த பொருட்களை பின்வளவு மேசையில் பழைய பத்திரிகைகளை விரித்து பரப்பிவைத்து, Anti-Bacterial Household Wipes ரிஸுவினால் முற்றாக துடைத்துவிட்டு,  அணிந்துசென்ற மாஸ்க்கையும் வெளியே இருக்கும் குப்பைத்தொட்டியில் போட்டபின்னர்தான் வீட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி தருகிறாள். அன்பினால்,  “ தொட்டுத் தொட்டுப்பாடவா  “ என்று பாடினால்,  “ ஓரம்போ…. ஓரம்போ… கொரோனா வருது ஓரம்போ…. “ என்று திருப்பிப்பாடுகிறாள். பாட்டுக்குப்பாடு புகழ் பி. எச். அப்துல்ஹமீட் நினைவுக்கு வருகிறார். 

விருந்தினர் வந்தால் தங்கும் அறையை எனக்கு ஒதுக்கிவிட்டு, பிரதான படுக்கை அறையை அவளே ஆக்கிரமித்துவிட்டாள்.  எஞ்சியிருந்த புல்லையும் வெட்டிவிட்டு,  குளியலைறை சென்று என்னைச்சுத்திகரித்துக்கொண்டு உடை மாற்றி திரும்பியபின்னர்,  மகள் கோல் எடுத்து பேத்தி ஜானுவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடக்கவிருக்கும் இணையவழி காணொளி பற்றி மனைவியிடம் சொல்கிறேன்.  “ நீங்கள் உங்கள் அறையிலிருந்து உங்களிடமிருக்கும் கம்பியூட்டரில் பாருங்கள். நான் எனது அறையிலிருந்து எனது ஐபேர்டில் பார்க்கின்றேன். சரியா..?   “ என்றாள். மீண்டும் வெளியே வந்து,  வீட்டின் பின்வளவு புற்தரையை பார்க்கின்றேன்.                                சில குருவிகள் வந்து  தரையில் இரைதேடிவிட்டுப் பறப்பதைக்  கண்டேன்.  எங்கள் வீட்டு மரத்தின் குருவிக்கூட்டில்   “ கீச்… கீச்…  “  என ஒலிகேட்கிறது. இரையெடுத்துச்சென்ற தாய்க்குருவி தனது குஞ்சுக்கு கொடுத்து கொஞ்சுகிறது. அந்த மரத்தையே பார்த்துக்கொண்டு நிற்கிறேன். ---0--- ( நன்றி:  கிழக்கிலங்கை அரங்கம் இதழ் )  letchumananm@gmail.com

 No comments: