வியப்புமிகு உயிர் அற்ற உடல்கள் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

 .



அண்மையில் ஒரு அம்மையார் என்னிடம் கூறினார், தனது பேரப்பிள்ளைகளிடம் கூறியுள்ளாராம், தான் இறந்தபின் திரும்பவும் குழந்தையாக அவர்களுக்கே வந்து பிறப்பேன் என, ஏன் பெரியவர் ஆன எமக்கு எமது வாழ்வு முடிந்து விடுகிறது. நான் என்ற ஒன்று இல்லாமல் போய்விடுகிறது என்பதை மனம் ஏற்பது இல்லையா? அதுவும் நான் உங்கள் குழந்தையாக வந்து பிறப்பேன் எனும்போது, எமது உறவுகளை பிரிய எமக்கு மனம் இடம் கொடுப்பதில்லை. இப்படியான எமது மனதுக்கு அமைதி அளிக்கத்தான் இந்த சித்--- மறுபிறப்பு தத்துவம் தோன்றியதோ, மறுபிறப்பு நாம் அழிந்து போகிறோம் என எண்ண விரும்பாத மனித மனதிற்கு ஆறுதல் அளிக்கிறதா?

நாம் திரும்ப பிறப்போம் என்ற நம்பிக்கை, ஏன் ஆசை எனவே வைத்துக் கொள்வோம் இது இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. பல்லாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த எகிப்திய மன்னர்களான Faroக்கள் தமது மறுபிறப்பிற்காக கட்டிய மாபெரும் பிரமிட்டுகளை காண்கிறோம். இந்த பெரிய பிரமாண்ட மலை போன்ற கட்டிடத்தில் உள்ள கற்களை நேராக இந்த பூகோழ உருண்டையில் இருந்து சந்திரனை நோக்கி அடுக்கினால் அது சந்திரனையே போய் அடையுமாம். நான் இதை ஏதோ கற்பனையில் கூறவில்லை. ஆராய்ச்சியாளர்களின் முடிவே இது.


தாம் அடுத்த உலகில் சொகுசாக வாழ்வதற்கு இந்த மாமன்னர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பல. தமது வாழ்கை முளுவதையுமே இந்த பிரமிட்டை கட்டி எழுப்புவதிலேயே செலவு செய்துள்ளார்கள். அதற்குள்ளே வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள், தாம் இந்த வாழ்கையில் வாழ்ந்தது போலவே மறு உலகிலும் வாழ்வதற்காகவே வைக்கப்படுகிறது. இவர்கள் இறந்தபின் மதகுருமாரே இவர்களது உடலை பதனம் பண்ணுகிறார்கள். உடலில் இருந்து உள் உறுப்புகள் எல்லாம் வெளியே எடுக்கப்பட்டுவிடும். இவை ஒரு மண் பாண்டத்தில் பதனப்படுத்தி வைக்கப்படும். மூளையும் மண்டை ஓட்டை உடைத்து எடுக்காமல் மூக்கு துவாரம் வழியாக உறிஞ்சி எடுத்துவிடுகிறார்கள். தனது மறுபிறவிக்காக நிறைந்த பொருட்களை எடுத்துச்செல்லும் மன்னர்கள் பாவம் தமது உடலை தான் முழுமையாக எடுத்துச் செல்ல முடிவதில்லை. அவர்கள் பிறிதொரு உலகுக்கு போகிறார்களோ இல்லையோ அவர்கள் இறந்து நாலாயிரம் வருடங்கட்கு பின்னும் அவர்கள் உடலை எம்மால் பார்க்கமுடிகிறது. அல்லவா? இது ஒரு விந்தையும் இப்படி கிடைத்த அரச வம்ச உடல்கள் பல. இவை இன்றைய விஞ்ஞான ஆய்வுக்கு உதவுகிறது. இந்த உடலை ஆராய்ந்து இவருக்கு இறக்கும் பொளுது வயது என்ன? எந்த வியாதியால் இவர் இறப்பு நேர்ந்தது என்றெல்லாம் இன்றைய விஞ்ஞான உதவிபோல் கண்டறிய முடிகிறது.

ரம்சே என்ற மன்னர் 50 ஆண்டுகட்கு மேலாக ஆட்சி புரிந்த மாமன்னர். இவரது உடலை தொலைகாட்சியில் காட்டினார்கள். இவர் இறந்தோ நாலாயிரம் வருடங்கட்கு மேலானபோதும் அவரது எடுப்பான மூக்கும் பரந்த நெற்றியும், வார்த்தெடுத்தது போன்ற அவரது கன்னமும் அவரை இன்னும் எம்மால் ஆஜானுபாகுவான களையான மன்னராக காணமுடிகிறது. இவரது உடல் ஆராய்ச்சிக்காக பி---- எடுத்துப் போகப்பட்டது. பாரிஸ் விமான நிலையத்தில் இவரது உடல் அடங்கிய பேளை சிவப்பு கம்பள விரித்து அரச மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டது. அது மட்டுமல்ல நாட்டின் தலைவர்கட்கு வணங்கப்படும் 21 பீரங்கி வெடித்து ராஜ மரியாதை அளித்தது பிரஞ்சு அரசு.

பல் வியாதியே இவர் இறப்புக்குக் காரணம், அந்த காலத்தில் பல் வயித்தியம் வளர்ச்சி அடையவில்லை. மேலும் பல் சொத்தை அன்று பெரும் நோய், பல் புடுங்கப்படுவதில்லை. அதுவே பெரிய நோயாகி மன்னர் இறந்திருக்கிறார். இன்றும் இவரது உடல் எகிப்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

சூரியன் அஸ்தமனமாகாத சாம்ராட்சியம் கட்டி எழுப்பிய பிருத்தானியர் தாம் ஆண்ட நாடுகளில் இருந்து கலை செல்வங்களை எடுத்துப்போய் தமதாக்கினர். இவ்வாறே எகிப்தின் அரசியாகிய கிளியோபெற்றாவின் உடலும் பிருத்தானியாவிற்கு எடுத்துப் போகப்பட்டு இது இன்றும் லண்டன் தொல் பொருட்காட்சி சாலையில் உண்டு. இவரோ மாபெரும் அழகி, இவர் அழகில் யூலிய சீசர் மயங்கிய கதை எல்லாம் உலகம் அறிந்ததே. இவரது முகத்தின் எலும்புகளை கொண்டு அவர் முகத்தின் வடிவத்தை இன்றைய குற்றப்புலன் ஆய்வாளர்கள் கணனியின் உதவியுடன் Computer வரைபடமாக காட்டினார்கள், அவர் மாபெரும் அழகியாக அல்ல வெகு சாதாரண பெண்ணாகவே தோற்றம் அளித்தார்.

இவ்வாறு இறந்த உடலை பதனப்படுத்தி காப்பாற்றுவது எகிப்தில் மட்டும் அல்ல உலகின் பல பாகங்களிலும் நடந்துள்ளது. சீனாவிலும் இவ்வாறான புதைகுழிகள் காணப்பட்டன. இவையும் மன்னர்களதே. இந்த மன்னர்கள் தமது மறுபிறப்பு இராட்சியத்திற்கு தேவையான போர் வீரரையும் மண்ணால் செய்து வைத்துள்ளார்கள். பணம் படைத்தோரும் தமது உடலை பதனப்படுத்தி புதைக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஒரு சீன பெண் தனது உடலை அடக்கம் பண்ண ஒரு வினோத முறையை கையாண்டுள்ளாள். உடலை சுற்றி நிலக்கரி கொண்ட புதை குழி இது. இங்கோ நிலகரி உடல் கெட்டுப்போகாமல் பாதுகாத்துள்ளது. ஆயிரம் வருடங்கட்கு பின் கண்டெடுக்கப்பட்ட போதும் உடல் சீரான நிலையில் உள்ளது. இவரது வயிற்றை X-Ray எடுத்து பார்த்ததில் அம்மையாரின் வயிற்றில் Water Melon விதை இருந்தது கண்டனர். அதுவே அவரது கடைசி உணவாக இருந்திருக்கும் என கூறப்பட்டது. அவரது இறப்புக்கு காரணம் மார் அடைப்பு எனவும், இவர் அதிகப்படியாக உணவு உண்ணும் வளக்கம் உள்ளவர் அதுவே அவரது இறப்புக்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் கூறப்பட்டது.

இனிமேல் இந்த சுவாமிமார்களை பார்ப்போம். எம்முடன் வாழ்ந்த சுவாமிகள் இறந்துவிட்டால் மரியாதை கருதி அவர் காலமாகிவிட்டார் எனக் கூறாமல் அவர் “சமாதியாகிவிட்டார் என்பது மரபு. ஆனால் சமாதி அடைவது என்பது ஒருவர் தன் புலன்களை அடக்கி தியானத்தில் இருந்து தனது சுவாசத்தை தன்வயப்படுத்தி சுவாசத்தை நிறுத்துவது. இதற்கு சிறந்த விசேஷ பயிற்சி வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் சிலரே. இப்படிபட்டவர்கள் இமயமலை அடிவார குகைகளில் இருக்கிறார்கள் என நாம் கேள்விப்பட்டது உண்டு. அண்மையிலே தொலைகாட்சியில் Discovery Channel இல் காண்பித்தார்கள். இவ்வாறு உயிர் நீர்த்தவர் உடல்கள் பளுதடையாத நிலையில் பலகாலம் இருந்துள்ளது தலாய் லாமாக்கள் வாளும் பகுதிகளில் இவை காணப்பட்டது . சீன அரசு கலாசார புரட்சி காலத்திலே இத்தகைய சமாதி அடைந்தோர் இருக்கக்கூடாது என கருதி அவர்கள் உடலை நெருப்பில் போட்டு எரிப்பதையும் தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

இறந்த உடலைத் தேடி ஆராய்வது இன்று மிகவும் விரும்பப்பட்ட ஒரு ஆய்வு துறையாக உள்ளது. இந்தோநேஷியாவில் ஒருவர்  தனது தந்தையார் பலகாலம் தியானத்தில் இருந்து இறந்ததாக காட்டுகிறார். இவரது உடல் ஒரு கோயிலில் உள்ளது. சம்மணம் கொட்டி உட்கார்ந்த நிலையில் காணப்படுகிறார். இவரது உடல் ஒரு கண்ணாடி பேளையில் உள்ளது. மக்களும் அவரை வந்து வணங்குகிறார்கள். ஆய்வாளர் பலவகையான X-Ray உபகரணங்களுடன் அங்கு போகிறார். வந்தவர் அந்த உடலில் பல ஆய்வுகள் நடத்துகிறார். ஆய்வின் மூலம் கண்டறிந்தது அவரது உள் உறுப்புக்களான ஈரல், பெருங்குடல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் யாவும் சுருங்கிய நிலையிலே காணப்படுகிறது. இது எப்படி சாதாரண மனிதர் உடல் இறந்தபின் கெட்டுப்போவது போல கெடாது உள்ளது என்பது ஆய்வாளருக்கு புரியாத புதிராக உள்ளது. அவர் ஒரு சமயம் இறக்கும் தறுவாயில் உப்பு நீர் அருந்தினாரா, அதனால் உள் உறுப்புகள் பளுதடையவில்லையோ என வியக்கிறார். உள் உறுப்புகள் மட்டுமல்ல அவர் உடலும் ஒருவனது காய்ந்த நிலையில் உள்ளது. பதனபடுத்தப்படாமல் உடல் இந்த நிலையில் இருப்பது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாகவே உள்ளது. இந்த இந்து சாமியார் சாதாரண மனிதர் அல்ல, சுவாசத்தின் வித்தையை கண்டறிந்த ஞானிகள் என்கிறார் ஆய்வாளர். இறுதியாக அந்த ஆய்வாளர் இந்துபோல் நிலத்தில் விளுந்து அந்த இறந்தவருக்கு நமஸ்காரம் பண்ணி மரியாதை செலுத்தினார்.

தமது உடல் பலகாலம் பாதுகாக்கப்பட வேண்டும் என விரும்புவோருக்கு இன்றைய விஞ்ஞான வளர்ச்சி கைகொடுக்கிறது. இதற்காக தயாரிக்கப்பட்ட பெரிய பனிகட்டி கிணறுகளில் உடல் தாழ்த்தப்பட்டு வைக்கப்படுகிறது. வருங்கால விஞ்ஞான வளர்ச்சி சில சமயம் இந்த உடலுக்கு உயிரும் கொடுக்கலாம் என்ற எண்ணமும் உண்டு.

இறந்த மனித உடலை வைத்து ஒருவர் அழகிய சிலையாக்கியும் உள்ளனர். இறந்தவர்களின் உடலை எடுத்து மேலே போர்வையாக உள்ள தோலை நீக்கி அதன் உள்ளே உள்ள பளுதடைய கூடிய பாகங்களை நீக்கி, தசை நார்களையும் நரம்புகளையும் வைத்து அவற்றிற்கு மெளுகு தடவி, தசை நார்களையும் எலும்புகளையும் வைத்து ஒரு மனிதனை பல நிலைகளில் பார்ப்பதற்கு இரம்மியமாக இருக்கும் வண்ணம் தயாரிக்கிறார். இவர் இவ்வாறு செய்த உடல்களை வைத்து கண்காட்சியும் நடத்தி வருகிறார். பெரும் திரளான மக்கள் கூடி இக்கண்காட்சியை பார்வையிடுகிறார்கள். B.B.C. தொலைக்காட்சியில் இதை காட்டினார்கள். ஒரு உதைபந்தாட்ட வீரர் பந்தடிக்கும் நிலையில் காட்சி கொடுக்கிறார். 71 வயதான பலே நடன ஆடல் நங்கை தனது உடலை இவரிடம் ஒப்படைத்துள்ளார். இவரின் கை வண்ணத்தில் இந்த ஆடல் நங்கை 21 வயது ஆடல் நங்கை பலே ஆடுவது போல் தோற்றம் அளிக்கிறார். பதனப்படுத்தப்படும் போது வயோதிக ஊளை சதை தொந்தி யாவும் அகற்றப்பட்டுவிடும். தனியாக எலும்பும் தசை நார்களுமே பயன்படுத்துவதால் இந்த அழகு தோற்றம் இறந்தும் இந்த உலகை விட்டு போகாது மனிதர்களின் உடல் வாழ்வதையும் அதன் விந்தைகளையும் கண்டோம்.


No comments: