எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் – 09 தீர்க்கதரிசனம் இல்லையேல் தீர்வுகளும் இல்லை ! இலக்கியத்தோடு இணைந்த மாணவர் இயக்கம் !

         ஆறறிவு படைத்த மனித குலத்திற்கு  மிக மிக அவசியமான தேவை தீர்க்கதரிசனம்.  தமிழ்

சமூகத்தில் இது விடயத்தில் எமக்கு முன்னுதாரணமாக திகழ்பவர் மகாகவி பாரதி. இமயமலையில் எம்பெருமான் சிவன் வீற்றிருக்கிறார் என்றும்  அவரது உச்சந் தலையிலிருந்துதான் கங்கை ஊற்றெடுத்து பீறிட்டு   வற்றாத ஜீவநதியாக வருகிறாள் என்றும்   எமது முன்னோர்கள் சொல்லிக்கொண்டிருந்தபோது,  வெள்ளிப்பனி மலையில்  மீதுலாவுவோம் என்று சொன்னவர் பாரதி.  சந்திரனில் அவ்வையார் வடை சுடுகிறார் என்று சொல்லி குழந்தைகளை பெற்றவர்கள் நிலவுகாண்பித்து சோறூட்டுவதற்கு  பேக்காட்டியபோது,  சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்றார். தெருக்கூட்டுபவர்களை தோட்டி எனவும் தாழ்த்தப்பட்டவர்கள் எனவும் சமூகம் ஒதுக்கிவைத்தபோது,  “ தெருக்கூட்டும் சாத்திரம் கற்போம்  “ என்றவர் பாரதி. வெளிநாடுகளில் அதுபோன்ற தொழிலுக்கு Commercial Cleaning Course & Services எனப்பெயர்.  நான் பிறந்து தவழ்ந்து வளர்ந்த நீர்கொழும்பூரிலும் எமது தீர்க்கதரிசனமான ஒரு செயல்  1954 இல் நிகழ்ந்தது.  எனது இலக்கிய - ஊடகத்துறை வாழ்வோடு அந்த நிகழ்வும் தொடர்புபட்டது.  கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழ்ந்த எங்கள் நீர்கொழும்பூரில் வாழ்ந்த சைவசமயத்தைச்சேர்ந்த

தமிழ் மக்களின் பிள்ளைகள் படிக்கச்சென்றது கத்தோலிக்கப் பாடசாலைகள்தான். எனது அம்மா,  தனது கல்வியை நீர்கொழும்பு நியூஸ்ட்ரட்  கத்தோலிக்க மகளிர் பாடசாலையில் கற்றவர். எனது தாய் மாமனார் அங்கே பெரியமுல்லை என்ற பிரதேசத்திலிருந்த அல்கிலால் வித்தியாலயத்தில் கற்றவர். எனது அக்கா, கடற்கரை வீதி றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும் மாமாவின் மகள் ஆவேமரியா மகளிர் பாடசாலையிலும் மாமாவின் மூத்த மகன் புனித மரியாள் வித்தியாலயத்திலும் கற்றுக்கொண்டிருந்தார்கள். இந்நிலைதான் 1954 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த நிலை.  கடற்கரை வீதியில் மூன்று கோயில்கள் நீண்ட நெடுங்காலமாக இருக்கின்றன.  திருவிழாக்கள்,  வருடாந்த ரதோற்சவங்கள்  இடம்பெறுகின்றன.   அதே வீதியில்    இந்து வாலிபர் சங்கம் ஒரு கட்டிடத்தில் ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் முன்பாக அரசமர நிழலில் இயங்கியது. அதில் அங்கம் வகித்தவர்கள், நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்ட கைதிகள் வணங்குவதற்காக ஒரு சிறிய கிருஷ்ணர் கோயிலையும் நிர்மாணித்தார்கள்.  தங்கள் சமயத்தைச்சேர்ந்த பிள்ளைகள் கத்தோலிக்க பாடசாலையில் பரிசுத்த வேதாகமத்தை படித்து திரும்புகிறார்கள்,  அதனால்,  சைவசமயத்தை மறந்துவிடுவார்களே என்ற அச்சத்தில்,  குறிப்பிட்ட இந்து வாலிபர் சங்க மண்டபத்தில்  ஞாயிற்றுக்கிழமைகளில்  சைவசமயம் பற்றி சொல்லிக்கொடுக்கவும், தேவாரம், சிவபுராணம்  பராயணம் செய்யவும் ஏற்பாடு  செய்து,  வகுப்பு நடத்த முன்வந்தனர். 

சாமிசாஸ்திரியார் என்ற ஒரு முதிய பிரம்மச்சாரியை அதற்கு நியமித்தார்கள்.  பிள்ளைகளின் வரவை

அதிகரிக்கச்செய்யவேண்டும் என்பதற்காக, சமயபாட வகுப்புக்கு வரும் பிள்ளைகளுக்கு சுத்தமான பசும்பால் காய்ச்சிக்கொடுத்தார்கள். இந்த சமயவகுப்பு நடக்கும் காலத்தில் எனக்கு மூன்று – மூன்றரை வயதுதானிருக்கும்.  அக்கா அந்த வகுப்புக்குச்செல்லும்போது நானும் உடன் வரப்போகின்றேன் என்று அடம்பிடித்து அழுவேன். அம்மாவின் அப்பா, பொலிஸ்தாத்தா என்னைத்தேற்றி, மடியில் அமரவைத்து கதைகள் சொல்வார். தேவாரம் சொல்லித்தருவார்.  பாட்டியும் கதைகள் சொல்வார்.  இவ்வாறு எனது மூன்று வயதிலிருந்து கதைகேட்டு வளர்ந்தமையால்,  அக்காவைப்போன்று நானும் எப்போது ஸ்கோலுக்குப்போவேன் என்று கேட்டு  வீட்டில் நச்சரிப்பேன். ஸ்கூலை,  ஸ்கோல் என்றுதான் அந்த வயதில் சொல்லியிருக்கின்றேன்.  எனது  வயதிலிருந்த குழந்தைகள் வீட்டிலும் இந்த நச்சரிப்பு தொடர்ந்திருக்கவேண்டும்.  இந்து வாலிபர் சங்கம் அதன்பின்னர் விழித்துக்கொண்டது. அச்சமயம் அந்தச்சங்கத்தின் தலைவராக இருந்தவர் எஸ். கே. விஜயரத்தினம் என்ற பெரியவர். அவர் சட்டம்படித்து நீர்கொழும்பு நீதிமன்றங்களில் வழக்கறிஞராகவும் பணியாற்றியவர்.  நாம் வசித்த  கடற்ரை வீதியில்தான்  அவரது வீடும் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகில், இந்து வாலிபர் சங்கத்திற்கு முன்னால் அமைந்திருக்கிறது.  இன்றும் அந்த வீட்டில் அவரது இளைய மகன் நவரத்தினத்தின் மனைவி மகாலக்ஷ்மி அம்மா வசிக்கிறார்கள்.   அந்த இல்லம் எங்கள் ஊரின் பிரதான அடையாளம்.  நவரத்தினம் விஜயரத்தினம், எனது அம்மாவுடன் நியூஸ்ட்ரட்  கத்தோலிக்க மகளிர் பாடசாலையில்  ஆரம்ப வகுப்புகளில் கற்றவர். இந்துவாலிபர் சங்கத்தில்,  நீர்கொழும்பு சுருட்டுத் தொழிலாளர்கள் பலரும் அங்கம் வகித்தனர்.  அவர்களது பிள்ளைகளும் கத்தோலிக்க பாடசாலைகளுக்கே செல்ல நேர்ந்தபோதுதான், அச்சங்கத்தினருக்கு விழிப்பு வந்தது. எதிர்காலத்தில் அந்தப்பிரதேசத்தில் ஒரு சைவப்பாடசாலை தேவை என்ற சிந்தனை காலத்தின் கட்டாயமாகியது.  அதனால்  1954 ஆம் ஆண்டு நவராத்திரி காலத்தில் வரும் விஜயதசமி வரையில்  காத்திருந்தனர். அச்சங்கம் நவராத்திரி காலத்தில் அங்கே கும்பம் வைத்து தினமும் மலைவேளையில் பூசையும் கூட்டுப்பிரார்த்தனையும் நடத்திவந்தது. சங்கத்தின் தலைவர் எஸ்.கே. விஜயரத்தினம் வடபுலத்தில்  காரைநகரிலிருந்து வந்து குடியேறியவர்.  இவரும் இவரது தம்பி எஸ். கே. சண்முகமும் கடற்கரை வீதியில் எதிரெதிரே வீடுகளை வாங்கி குடியிருந்தனர். விஜயரத்தினம் அவர்களின் மூத்த மகள் விஜயமணி ராஜேந்திரா குமாரசாமியின் பிள்ளைகள்தான் பின்னாளில்  ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றிய ராதிகா குமாரசாமி,  இலங்கை வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி ஆகியோர். விஜயரத்தினம் அவர்கள் 1950 களில்  நீர்கொழும்பு நகரபிதாவாகவும் இருந்தவர்.  இவ்வாறு ஒரு தமிழர்  இக்காலத்தில் அங்கு அந்த பதவிக்கு வரத்தான் முடியுமா..? காலம் மாறிவிட்டது! அன்னாரின் தம்பி சண்மும் அவரைத் தொடர்ந்து ஜெயம் விஜயரத்தினமும் நீர்கொழும்பு மாநகர சபைக்காக குறிப்பிட்ட கடற்கரை வீதி பகுதியில் 3 ஆம் வட்டாரத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டார்கள். அவுஸ்திரேலியா – சிட்னியில் வதியும் எழுத்தாளர் தேவகி கருணாகரனின்  தந்தையார்  துரைசிங்கம்  அவர்களின்  மூத்த அண்ணன்தான் குறிப்பிட்ட விஜயரத்தினம் அய்யா.  இந்த பின்னணி - முன்னணி செய்திகளுக்கு மத்தியில் தோற்றம் பெற்ற இன்றைய  விஜயரத்தினம்  இந்து மத்திய கல்லூரி 1954 ஆம் ஆண்டு விஜயதசமியன்று 32 குழந்தைகளுடன் விவேகானந்தா வித்தியாலயம் என்ற பெயருடன் தொடங்கியபோது,  விஜயரத்தினம் அய்யாவின் மடியில் அமர்ந்து

எனக்கு முன்னால் இருந்த பெரிய பித்தளை தாம்பாலத்திலிருந்த அரிசியில்  அ ,  ஆ, இ, ஈ எழுத்துக்களை எழுதினேன்.   இடைக்கிடை அதிலிருந்து நெல்லும் பொறுக்கினேன்.  தொடங்கப்பட்ட அந்த புதிய பாடசாலையின் தலைமை ஆசிரியர் பண்டிதர் க. மயில்வாகனன் அருகிலிருந்து  “ டேய் நெல்லு பொறுக்குவது இருக்கட்டும்.  அ, ஆவன்னா  “  எழுது என்று கண்டித்தார். பின்னாளில் அவர் பற்றி சில பதிவுகள் எழுதியிருக்கின்றேன்.  எனது இலங்கையில் பாரதி நூலையும் அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்தேன். அமரர்கள் விஜயரத்தினம் தம்பதியர்  உருவப்படங்களிலிருந்து  இக்கல்லூரியின்   வளர்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.   ஆறாம் வகுப்பு வரையில் படித்துவிட்டு அங்கிருந்து வெளியேறி, யாழ்ப்பாணம் சென்று படித்து திரும்பி, நீர்கொழும்பு அல்கிலால் மகா வித்தியாலயம் செல்ல நேர்ந்தமைக்கு பிரதான காரணமாக இருந்தது விஞ்ஞான ஆய்வுகூடம்தான்.  பெயர் மாற்றப்பட்ட விஜயரத்தினம் பாடசாலை மகா வித்தியாலயமாக தரமுயர்ந்திருந்தாலும், அங்கே விஞ்ஞான ஆய்வுகூடம் இருக்கவில்லை. படிப்பு முடிந்து வேலைதேடும் படலத்திலிருந்தபோது,  அந்தப்பாடசாலையின் அதிபராக இருந்தார் வித்துவான் இ.சி. சோதிநாதன்.   அவர் இலங்கை வானொலி நாடகக்கலைஞராகவும் தனது பெயருக்குப்பின்னால் பல பட்டங்களை சுமந்தவராகவும்  திகழ்ந்தார். விஞ்ஞான ஆய்வுகூடம் அங்கில்லாமலிருந்தமையால்,  பல மாணவர்கள் படிப்படியாக விலகி வேறு பாடசாலைகளுக்கு செல்லத் தொடங்கியதை பழையமாணவர்களாகிய எம்மில் சிலர் அவதானித்தோம். 1972 ஆம் ஆண்டு இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் தாமதிக்காமல் ஒன்றுகூடினோம்.  பாடசாலை பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் அதிபருக்கும் இடையில் நிழல் யுத்தம் நடந்து கொண்டிருந்ததையும் அவதானித்தோம். அந்த அதிபருக்கு எதிராக மினுவாங்கொடை கல்வி இலாகாவுக்குச்சென்ற புகார்க்கடிதங்களை, அவரே அங்கு ஒரு சிற்றூழியரை கையூட்டுக்கொடுத்து அப்புறப்படுத்திக்கொண்டிருக்கிறார் என்ற தகவலும் எமது காதுகளில் கசியத் தொடங்கியது. அதிபர் வித்துவான் இ.சி. சோதிநாதனுக்கு எதிராக மொட்டைக்கடிதங்களும் வெளிவந்துகொண்டிருந்தன.  அதில் ஒன்றை அவரே என்னிடம் காண்பித்து கவலைப்பட்டார். அச்சமயம் நான் வீரகேசரி நீர்கொழும்பு பிரதேச நிருபராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். அவர் நல்ல மனிதர். ஆனால், புகழ்விரும்பி. தினமும் கொழும்பு மத்திய மகா வித்தியாலய வீதியிலிருந்து ( முன்னைய பாபர்வீதி – கிங்ஸ்லி திரையரங்கின் அருகிலிருந்து )  நீர்கொழும்புக்கு வந்துகொண்டிருந்தார். ஆசிரியர் மாணவர் அனைவருக்கும்  முன்பே காலை ஏழுமணிக்கு முன்னர்  வந்து, நேரே சித்திவிநாயகர் ஆலய தரிசனம் முடித்துவிட்டுத்தான் பாடசாலைக்குள் பிரவேசித்து கடமைகளை தொடருவார்.  தனது பெயர் அடிக்கடி பத்திரிகையில் வரவேண்டும் என்பதும் அவரது விருப்பம்.  வெள்ளவத்தையில் ஆடிவேல் விழா வரும்போது,  அலரிமாளிகைக்கு முன்பாக ரதம் வருமுன்னரே அவர் வந்து நின்றுகொண்டு,  பிரதமர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கு தரிசனம் தருவார்.  ஆடிவேல் ரதத்தில் முருகப்பெருமான் பவனி வந்து அலரிமாளிகைக்கு முன்பாக தரிக்கும்போது,  நடக்கும் தீபாராதனையின்போது அவரும் அம்மையாருடன் சேர்ந்து நின்று பக்திப்பரவசத்துடன் வணங்குவார்.    “ அபே கதரகம தெய்யோ மெடம்  “  என்பார்.  “ யெஸ்… ஐ…நோ…  “ என்று அம்மையார் சொல்வார். பத்திரிகை ஒளிப்படப்பிடிப்பாளர்கள் படம் எடுப்பார்கள். மறுநாள் பத்திரிகைகளில்  அம்மையாரும் அவரும்  ஆடிவேல் ரதத்தின் முன்னால் நிற்கும் படம் வெளிவரும். அதே படம் பெரிதாக்கப்பட்டு, அதிபரின் வீட்டு கூடத்தில் சுவரில் தொங்கும்.  அவருடைய புகழ்மோகத்திற்கு  இது வெறும் பதச்சோறுதான்.

ஆனால்,  அவர் நல்ல மனிதர். இவ்வாறு பலர் எம்மத்தியில் வாழ்கிறார்கள். நாம் கற்ற பாடசாலை  பலவகையிலும் பின்தங்கியதற்கு  அங்கே விஞ்ஞான ஆய்வுகூடம் இல்லையென்பதும் பிரதான காரணமாகவிருந்தது. எமது பழைய மாணவர் சங்கம் எதற்காக தோற்றம் பெருகிறது என்பது குறித்து அதிபர் சோதிநாதனுக்கு கலக்கமும் வந்துவிட்டது.  அவரையும் மன்றத்தின் காப்பாளராக்கிவிட்டு அது பற்றிய செய்தியை பத்திரிகையில் வெளியிட்டு அவரது கலக்கத்தை போக்கினேன். பாடசாலையின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை காண்பித்த ( அமரர் ) விஜயரத்தினம் அவர்களின் புதல்வர் ஜெயம் விஜயரத்தினம், என்னை சிறிய வயதில் தூக்கிச்சென்று ஏடுதுவக்கி வித்தியாரம்பம் செய்வித்த மயில்வாகனன் மாமா, மற்றும் எங்கள் ஊரில் பிரபலமான மருத்துவ கிளினிக்கை நடத்திக்கொண்டிருந்த டொக்டர் சோ. பாலசுப்பிரமணியம் ஆகியோரை மன்றத்தின் காப்பாளராக்கினோம். எமது அங்குரார்ப்பணக்கூட்டத்தில் எமது பாடசாலைக்கு ஒரு விஞ்ஞான ஆய்வுகூடம்  அமைப்பதுதான்  மன்றத்தின் பிரதான நோக்கம் என்றும் அறிவித்தோம். முதல் நிகழ்வாக அவ்வாண்டு  பாடசாலையில் மன்றத்தின் ஏற்பாட்டில்  அதிபர் சோதிநாதன் தலைமையில் நாமகள் விழாவையும் விமரிசையாக நடத்தி,  அவருடைய படத்துடன் செய்திகளையும் பத்திரிகைகளில் வெளிவரச்செய்தேன். எனது பாட்டி சிறு வயதில் சொல்லும் பழமொழிகள் பல இன்றும் நினைவில் தங்கியிருக்கின்றன. அதில் ஒன்று  “  ஆடுற மாட்டை ஆடிக் கற… பாடுற மாட்டை பாடிக் கற. “    1972 ஆம் ஆண்டு  கட்டிடக்கலைஞர் வி. எஸ். துரைராஜாவின்  குத்துவிளக்கு திரைப்படத்தை கொழும்பு கொட்டாஞ்சேனை செல்லமகால்  திரையரங்கில் பார்த்தேன். 1971 ஆம் ஆண்டு இந்தத் திரைப்படத்தின்  படப்பிடிப்பை , கொழும்பு வோர்ட் பிளேஸில்  துரைராஜாவின் அலுவலகத்தில்  தென்னிந்திய நடிகை செளகார் ஜானகிதான் கெமராவை இயக்கிவைத்து தொடக்கியிருந்தார். கட்டிடக்கலை        பணியகத்தை    நடத்திக்கொண்டிருந்த                துரைராஜா அவர்களுக்கு    தாமே  ஒரு   தமிழ்த்திரைப்படம்   தயாரிக்கவேண்டும் என்ற எண்ணம்    உருவானது   தற்செயலானது  என்று    சொல்ல முடியாவிட்டாலும்,   அன்றைய   காலப்பின்னணியும்   அவரை அந்தப்பரீட்சைக்கு    தள்ளியிருந்தது    எனச்சொல்லலாம். ஈழத்திருநாடே    என்னருமைத்தாயகமே    இரு  கரம்  கூப்புகின்றேன்  வணக்கம்   அம்மா   எனத்தொடங்கும்    எம். ஏ. குலசீலநாதன்  பாடும்  முதல் பாடல்  திரைப்படக்லைஞர்களின்  பெயர்கள்   வரும்   முதலாவது   ரீலில்   ஒலித்தது.   இலங்கை நதிகளும்    மலையகமும்  இலங்கைப்பெரியோரும்   யாழ்ப்பாணம்   கோட்டையும்    காண்பிக்கப்பட்ட     அந்தத்திரைப்படம்தான் நான் இலங்கையில் பார்த்த முதலாவது ஈழத்து தமிழ் திரைப்பட  முயற்சி.  மகேந்திரன் இயக்கத்தில்  நடன   நர்த்தகி  லீலா நாராயணன் ,   ஜெயகாந்த்,  பொறியிலாளர்  திருநாவுக்கரசு,   யோகா    தில்லைநாதன் ,  கலைவளன்  சிசு. நகேந்திரன், மரைக்கார்   ராமதாஸ் , சிங்கள    திரைப்பட  நடிகை சாந்திலேகா    உட்பட   பல   ஈழத்துக்கலைஞர்கள்    நடித்திருந்தார்கள்.  ஈழத்து  இரத்தினம் வசனமும்  பாடல்களும்  எழுதியிருந்தார். மூலக்கதையை    வி.எஸ். துரைராஜா   எழுதினார். எனினும் ,  இத்திரைப்படம்   வெளியானபொழுது   எமது நண்பர் சில்லையூர்  செல்வராசனின்  தணியாத   தாகம்  திரைப்படச்சுவடி நூலும்   வெளியாகி    சலசலப்புத்தோன்றியது.  குறிப்பிட்ட   குத்துவிளக்கின்    மூலக்கதை    தன்னுடையது                என்று

              வாதாடினார்    சில்லையூர்.    ஆனால்,  அதுகுறித்து    எந்தக்கருத்தும் சொல்லாமல் தமது    திரைப்படம்    குத்துவிளக்கு    எங்கெங்கே எத்தனை     நாட்கள்   ஓடிக்கொண்டிருக்கின்றன  என்பதை              தமது வோர்ட்  பிளேஸ்    அலுவலகத்திலிருந்து அவதானித்துக்கொண்டிருந்தார்    துரைராஜா. துரைராஜாவின்    குத்துவிளக்கு   திரைப்படம்                                  கொட்டாஞ்சேனை செல்லமஹாலில்    திரையிடப்பட்டபொழுது    சில    திரையரங்குகளில் எம்.ஜி.ஆரின்    புதிய    படம்   ஒன்றை    காண்பித்தார்                  சினிமாஸ் குணரத்தினம். என்ன                                                                                                                              நடக்கும் ?  என்பதை    புரிந்துகொள்வது   சிரமமில்லை. எம்.ஜி.ஆர்.   படம்  திரையிடப்பட்ட   அரங்குகளில்   ஹவுஸ்ஃபுல் அட்டைகள்   தொங்கின.    ஆனால்,  குத்துவிளக்கு   திரைப்படம் காண்பிக்கப்பட்ட   ஒரே   ஒரு   திரையரங்கு வெறிச்சோடிப்போயிருந்தது. இந்தக்கொடுமை பற்றி    ஈழத்து    எழுத்தாளர்கள்    குரல்    எழுப்பினோம்.  குத்துவிளக்கு   பற்றி   நீர்கொழும்பில்   எமது பழைய மாணவர் மன்றத்தின் காப்பாளர் அ. மயில்வாகனன் மாமாவிடம் சொன்னேன்.  மயில்வாகனன்   மாமா   சில்லையூர்  செல்வராசனின்   நண்பர். ஏற்கனவே பரவியிருந்த   குத்துவிளக்கின் மூலக்கதை   பற்றிய சர்ச்சையை   அவரும்   அறிந்திருந்தார்.    கொழும்பு    சென்று குத்துவிளக்கு படத்தை பார்க்கும்    சந்தர்ப்பத்தையும்    இழந்திருந்தார். அச்சமயம்    அவருக்கும் என்னைப்போலவே    நல்லதொரு   யோசனை உதித்ததது.    குறிப்பிட்ட    விஞ்ஞான   ஆய்வு  கூடத்தின்                           கட்டிட    நிதிக்காக குத்துவிளக்கு    படத்தினை   காண்பிக்கும்    யோசனையை மயில்வாகனன்     மாமா    முன்மொழிந்தார் அது    ஈழத்து  தயாரிப்பு.    எதிர்பார்க்கும்    வசூல்  கிடைக்காது   என்று பலரும்   எச்சரித்தனர்.    வித்தியாலயத்தில்    பணியாற்றிய                                    பவாணி ரீச்சரின்    கணவர்    பொறியியலாளர்    திருநாவுக்கரசு   நடித்த   படம் குத்துவிளக்கு.    திருநாவுக்கரசு   எழுத்தாளர்   டொக்டர்   நந்தியின் சகோதரர்.    நீர்கொழும்பில்    திருநாவுக்கரசுவை   சந்தித்து துரைராஜாவுடன்   தொடர்புகொண்டோம்.  துரைராஜா   எம்மை தமது   வோர்ட்  பிளேஸ் அலுவலகத்திற்கு அழைத்து,   எமது    விநோதமான   விருப்பத்தை  அறிந்து வியப்புற்றார். எமது மன்றத்தின் மற்றும் ஒரு காப்பாளரான டொக்டர் பாலசுப்பிரமணியத்தின் தம்பி யோகநாதன் மன்றத்தின் தலைவர். நான் துணைத்தலைவர்.  மயில்வாகனன்    மாமாவுடன்   பழைய   மாணவர் மன்றத்தின் தலைவர்    யோகநாதன்   செயற்குழு உறுப்பினர் நவரத்தினராசா ஆகியோருடன்   சென்றேன்.   படத்தில் நடித்த பொறியியலாளர் திருநாவுக்கரசுவும் உடன் வந்தார்.  நவரத்தினராசா  அக்காலப்பகுதியில்    சிலோன்    தியேட்டர்ஸ்   கொழும்பில்   நடத்திய அச்சகத்தில்    பணியாற்றிக்கொண்டிருந்தார். நான்    நீர்கொழும்பின்    வீரகேசரி    நிருபராகவும் -   நண்பர் யோகநாதன்    நீர்கொழும்பு  ராஜ்  சினிமா   திரையரங்கில்                          படம் காண்பிக்கும்   ஒப்பரேட்டராகவும்    பணியாற்றினோம். என்னையும் திருநாவுக்கரசுவையும் தவிர    நீர்கொழும்பைச்சேர்ந்த   வேறு  எவரும்   குத்துவிளக்கு   படத்தை    பார்த்திருக்கவில்லை. நாம்    விஞ்ஞான  ஆய்வுகூடம்  அமைக்கும்  முயற்சியில் ஈடுபட்டிருப்பதை   அறிந்தவுடன்    தமது   திரைப்படத்தை                   காண்பிக்க அந்தத்    திரைப்படச்சுருளை   இலவசமாகவே   தரலாம்   எனச்சொன்ன     துரைராஜா  எமக்கு   ஆதரவுக்கரம்   நீட்டினார்.  குத்துவிளக்கு   திரைப்படச்சுருள்   சிலோன்   தியேட்டர்ஸ்                   வசம் இருப்பதாகவும்  சொன்னவர்,   எம் முன்னிலையிலேயே   அதன்  இயக்குநர்   செல்லமுத்துவுடன்   தொலைபேசியில்   தொடர்புகொண்டு    தகவல்    தெரிவித்து விட்டு  எம்மை   அவரது அலுவலகத்திற்கு  அனுப்பிவைத்தார். அவரும்                 எமது

நல்ல   நோக்கத்தைப்  புரிந்துகொண்டு நீர்கொழும்பிலிருக்கும்     அவரது   ரீகல்   திரையரங்கினை   இலவசமாகத்தருவதற்கு விரும்பினார். எமது   முன்னிலையில்  நீர்கொழும்பு   ரீகல்  திரையரங்கு முகாமையாளருடன்தொலைபேசியில் தொடர்புகொண்டு  ஒரு சனிக்கிழமை    முற்பகல்  பத்து   மணிக்காட்சிக்கு   திரையரங்கினை முன்   பதிவுசெய்துதந்தார். திட்டமிட்டவாறு  குத்துவிளக்கு   திரைப்படம்   நீர்கொழும்பில்    ரீகல் திரையரங்கில்   முற்பகல்   காட்சியாக   காண்பிக்கப்பட்டது. துரைராஜாவுடன்    அவரது  நண்பர்   கண்   மருத்துவ  சிகிச்சை  நிபுணர் ஆனந்தராஜா   மற்றும்    திரைப்படத்தில்   நடித்த  ராமதாஸ், ஜெயகாந்த்  ஆகியோரும்   வருகைதந்து  இடைவேளையின்பொழுது மேடையேறி    உரையாற்றினர்.    குத்துவிளக்கு  சிறப்பு  மலரும்  வெளியிட்டோம் ரீகல்  திரையரங்கு  மண்டபம்   நிறைந்த  காட்சியாக                            குத்துவிளக்கு காண்பிக்கப்பட்டது.    துரைராஜா     நீர்கொழும்பு   ரசிகர்களை மனந்திறந்து    பாராட்டினார்.    அன்று    துரைராஜாவுடன்                   வருகை தந்திருந்தவர்களுக்கு    மயில்வாகனன்   மாமா   வீட்டில்   மதிய விருந்துபசாரம்    வழங்கினோம். நீண்ட  இடைவெளிக்குப்பின்னர்    துரைராஜாவை   அவுஸ்திரேலியா சிட்னியில்   2008   இல்    சந்தித்தேன்.    அச்சந்திப்பில்  நண்பர்கள்   காவலூர்  ராஜதுரை,    திருநந்தகுமார்   மற்றும் குத்துவிளக்கு   படத்தில்    நடித்திருந்த   கலைவளன்         சிசு. நாகேந்திரன் ஆகியோரும்  என்னுடன்  இணைந்திருந்தனர். 1954 இல்  எமது முன்னோர்களின் தீர்க்கதரிசனத்தால் அங்கே ஒரு  இந்து  தமிழ் வித்தியாலயம் 32 குழந்தைகளுடன் தோன்றியது. 1972 இல் எமது பழைய மாணவர்

மன்றத்தின் தீர்க்கதரிசனத்துடன்  ஈழத்து திரைப்படத்தின் நிதியுதவிக்காட்சியுடன் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான அத்திவாரம்  இடப்பட்டது. தற்போது,  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுடன்  விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியாக கம்பகா மாவட்டத்தில் ஒரே ஒரு மத்திய  இந்துக்கல்லூரியாக  அன்று எனக்கு ஏடு துவக்கிய பாடசாலை திகழ்கிறது. எனது  மூத்த மகளும் அங்கே கற்றாள்.  எனது உடன்பிறப்புகளின் பிள்ளைகள்,  பேரக்குழந்தைகளும் அங்கே கற்றனர்.  சமூகப்பணிசெய்ய முன்வருவோர், எதனையும் தீர்க்கதரிசனத்துடன் சிந்தித்து செயலாற்றவேண்டும். அவர்களின் செயல்கள்  குத்துவிளக்கின் ஒளிபோன்று சுடர்விட்டுப் பிரகாசிக்கவேண்டும். ( தொடரும் )  letchumananm@gmail.com 







No comments: