மழைக்காற்று ( தொடர்கதை ) --- அங்கம் 53 முருகபூபதி


அபிதா,  குழந்தையைப்போன்று வீதியின் இருமருங்கையும் வைத்த விழி வாங்காமல்

பார்த்துக்கொண்டிருந்தாள். அதற்கு முன்னர் என்றைக்குமே பார்த்திராத வீதியில் அவள் கண்ணில் தென்பட்டவை  வாகனத்தின் வேகத்தினால் பின்னோக்கி விரைந்து நகர்ந்தன. அருகிலிருந்த ஜீவிகா,  கைத்தொலைபேசியில் முகநூலில் மூழ்கியிருந்தாள். சாரதியிடம்,  அபிதா அடிக்கடி  “அண்ணை… அது என்ன…. இது என்ன… “  கைநீட்டிக்காண்பித்த  இடங்களை கேட்டுத் தெரிந்துகொள்வதையும் சாரதி ரசித்தார்.   சாரதி, கழுத்தை திருப்பி,   “ நீங்கள் முன்பு இந்த கொழும்பு ரோட்டில் போனதே இல்லையா..?  “ எனக்கேட்டார்.  “  எங்கே அண்ணன்… வாழ்க்கையில் முதல் தடவையாக இப்போதான் இந்த வீதியால் வருகிறேன்.   “    ஜீவிகாவை வழக்கமாக பணிக்கு அழைத்துச்செல்லவரும்  வாகனம், அன்று அபிதாவையும் ஏற்றிக்கொண்டது. ஜீவிகாவின்  சுடிதார் துப்பட்டாவிலிருந்து மலர்ந்த பெர்ஃபியும் மணம்  அபிதாவின் நாசியை உரசியது.  சாரதியினதும் அபிதாவினதும் உரையாடலை ரசித்து மனதிற்குள் சிரித்துக்கொண்டே ஜீவிகா முகநூலில் மூழ்கியிருந்தாள்.  “  இதுதான் விமான நிலையத்திற்கு திரும்பும் ரோட்டு .  இப்போது நாங்கள்,  வலதுபக்கத்தால் கொழும்புக்கு அகலமான ரோட்டில் ஏறப்போகிறோம் “   சாரதி காண்பித்த இடப்பக்கத்தை அபிதா பார்த்துவிட்டு,   “ இதால போனால் ஏயார்போட் வருமா..?  அண்ணை “ எனக்கேட்டாள்.  “  ஓம். வரும்.  நீங்கள் போனதில்லையா…?   “ எனக்கேட்டாள் ஜீவிகா.  “  எங்கேயம்மா…  இதுவரையில் நான் அதனைப் பார்த்ததேயில்லையே… அதற்கான சந்தர்ப்பமும் வரவில்லை.  
வடபகுதிப் பிள்ளைகளை முன்பெல்லாம்  அவர்கள் படிக்கும் பாடசாலைகளிலிருந்து  வெளியூருக்கு

அழைத்துவந்து காண்பிக்கும் சுற்றுலா முறை இருந்தது.  போர் தொடங்கியதும் அதெல்லாம் பழைய கதையாகிவிட்டது.  முன்பே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன்தானே…  உங்கட நிகும்பலையூரையே நான் முன்னர் பார்த்திருக்கவில்லை.  அன்றைக்கு  நான் இரவு பஸ்ஸில் வரும்போது கண்ணுறங்காமல்தான் வந்தேன்.  எங்கே தவறான இடத்தில் இறங்கிவிடுவேனோ என்ற பதட்டத்தில் தூக்கமே வரவில்லை.    அன்று நான் நிகும்பலையை பார்க்க வந்ததும் உங்கட புண்ணியத்தில்தான். இப்போது கொழும்பு பார்க்கச்செல்வதும் உங்கட புண்ணித்தினால்தான் அம்மா.  “  சாரதி, அதனைக்கேட்டதும்  நெகிழ்ந்துவிட்டார்.   ஜீவிகாவை அழைத்துச்செல்ல வரும் சந்தர்ப்பங்களில் பல தடவை அபிதாவின் கைப்பக்குவத்தில் தேநீர் அருந்தியிருக்கும் அவருக்கு அபிதா மீது பச்சாதாபம் வந்தது.  “  எயார்போட் பார்த்ததில்லை.  கொழும்பு வீதியில் சென்றதில்லை.   கொழும்பையே வாழ்நாளில் பார்த்ததில்லை.  ஆனால், இன்றைக்கு ரி.வி.யில் தோன்றப்போகும் அதிசயம் எங்கட அபிதாவின் வாழ்வில் நடக்கப்போகுது அண்ணை. தெரியுமா..?  “ எனச்சொன்ன ஜீவிகா, அபிதாவின் மடியில் செல்லமாகத்தட்டினாள். தனக்கு முன்னால் இருக்கும் கண்ணாடியூடாக சாரதி அபிதவை பார்த்தார்.  வன்னியின் வட்டத்துக்குள்ளேயே  தனது  வாழ்க்கை குறுகியிருந்துவிட்டதை எண்ணிப்பார்த்து  அபிதா வெட்கமுற்றவாறு,  தொடர்ந்தும்  அகன்ற வீதியின் இருபுறத்தையும் பார்த்துக்கொண்டிருந்தாள். அருகிலிருந்த ஜீவிகா, கைத்தொலைபேசியை அணைத்துவிட்டு கண்ணயர்ந்தாள்.   “ அண்ணை ,  உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்.  “ என்று அபிதா கேட்டாள்.  “ இரண்டு.  ஒரு ஆண், ஒரு பெண். ஆஸ்திக்கு ஒன்று  ஆசைக்கு ஒன்று அவ்வளவுதான்.   உங்களுக்கு…?   “   “ ஆஸ்தியும் இல்லை, ஆசையும் இல்லை. வேறு எதுவுமே இல்லை.  

இந்த அம்மா போடும் சாப்பாடும் தரும் சம்பளமும்தான் இருக்கிறது அண்ணை.  இந்தப்பயணமும் இந்த

அம்மாவால்தான் எதிர்பாராமல் வந்தது.   அந்த சீலன்  தம்பியும் இதற்கு காரணம் அண்ணை. அந்த ரீவிக்குப்போய் என்ன பாடு படப்போகிறேனோ… தெரியவில்லை. பயமாக இருக்கிறது . “  “ ஜீவிகா சொன்னாங்க.  நீங்க, சீலன் வேலை செய்யும் அந்த ரீவி செனலில் ஏதோ சமையல் பக்குவம் பற்றி பேசிச்செய்து காண்பிக்கப்போறீங்களாம்.  எப்போது அது ரெலிகாஸ்ட் ஆகும். தெரிந்தால் சொல்லுங்க.  என்ர  வைஃபுக்கும் சொல்லவேண்டும்.   “   “  ஒரு விடயம் யோசித்துவைத்து, அதற்குத்தகுந்த ஏற்பாடுகளுடன்தான் போகிறேன் அண்ணை.  ஆனால், அங்கே போனதும் நிகழ்ச்சியில் என்ன மாற்றம் செய்வாங்களோ தெரியாது.  மனதில் பதட்டமாக இருக்கிறது.  “   “ யோசித்திருப்பதையாவது சொல்லுங்க.. “  வாகனம் அப்போது பேலியாகொடை களனி பாலத்தை நெருங்கியது.  அபிதா சற்று எழுந்து தலையை தூக்கி,                     “ அண்ணை இது என்ன ஆறு… அழகாக இருக்கிறது  “ எனக்கேட்டாள்.  “ இதுவா… இதுதான் களனி கங்கை.  இப்படியே வலது பக்கத்தால் சென்று முகத்துவாரம் கடலில் கலக்கிறது. இந்த களனியையும் நீங்கள் முன்னர் பார்க்கவில்லையா..?  “  “  எங்கேயண்ணை… மகாவலி, களனி, மாணிக்க கங்கை, ஜின் கங்கை, மாதுரு ஓயா, மகா ஓயா,  தெதுறு  ஓயா… இப்படி புத்தகத்தில்தான் படித்தேன்.  இன்றைக்குத்தான்… இதுதான் களனி கங்கையா… என்ன அழகு… பார்த்துக்கொண்டே இருக்கலாம் அண்ணை.  “ உலகமே தெரியாமல் இவளை இவ்வாறு வாழவிட்டது எது…?   கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்த ஜீவிகா யோசித்தாள். இவ்வாறு  எத்தனைபேரை  அந்த வன்னி பெருநிலப்பரப்பு  உருவாக்கியிருக்கிறது. ஆனால், முழு உலகிற்கும் அந்த வன்னி நிலமும் அதன் நிலக்காட்சியும் தெரிகிறது. அங்கிருந்தவர்களில் பலர் வெளியே ஓடும் நதிகளையும் மலைச்சிகரங்களையும் தலைநகரில் வானுயர எழுந்திருக்கும் கட்டிடங்களையும் பார்க்கத்தவறியவர்களாக இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களே… அவர்களின் பிரதிநிதியாக இங்கே என்னருகே அமர்ந்திருக்கும் இவளை நானாவது வெளியிடங்களுக்கு

அழைத்துச்சென்றிருக்கலாம்.  இவள்  காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச்செல்லும் வரையில்  இவளிடமிருந்து வீட்டு வேலைகளைத்தானே வாங்கு வாங்கு என்று வாங்கியிருக்கிறேன். இந்த இலட்சணத்தில், நான் உள்நாட்டு  அரசியல் பற்றியும் , உலகைப் பதறவைக்கும் கொரோனா பற்றியும்  பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறேன்.   உலகமே தெரியாமல் வளர்ந்திருக்கும் இவளை உலகமே பார்க்கப்போகும் தொலைக்காட்சியில்  போயும் போயும்   சாப்பாட்டு சமையல்  பற்றி பேச வைப்பதற்கு நானும் சீலனும் தயாராகியிருக்கிறோமே.  எவ்வளவு வெட்கக்கேடு.  அபிதா சமையல் நிகழ்ச்சியை சற்று பிற்போட்டுவிட்டு,  இவளைப்பற்றிய ஒரு நேர்காணலை  பதிவுசெய்து ஒளிபரப்பினால்,  அது முழுத்தேசத்தின்  கண்களையும்  குறிப்பாக அரசியல்வாதிகளின் குருட்டுத்தனத்தையும் திறக்கும்.  போர் முடிந்து எத்தனை வருடங்களாகிவிட்டன.   அது முடிவுறாமல் தொடர்ந்த காலப்பகுதியிலும்  முடிவுற்ற பின்னர் நிகழ்ந்தவற்றையும் அபிதாவின் பார்வையில்  ஒரு தொடரை அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால்  சமூகப்பயன்பாடு இருக்குமே… ஏன், எனக்கும் சீலனுக்கும் அப்படி ஒரு யோசனை தோன்றவில்லை.   இவளது சமையலை ருசி பார்த்துவிட்டு,  வெறும் சமையல்காரியாகவே  இவளை காண்பிக்கத்தோன்றிய எமக்கு, இவளது உலகமறியாத வெகுளித்தனத்தின் ஊடாக, நீடித்த போரினால் இவள் பார்க்கத்தவறிய விடயங்கள் பற்றி சொல்வதன் மூலம்,  ஒரு தலைமுறை அந்தப்போரினால் எவ்வளவு விடயங்களை இழந்துவிட்டது என்பதையாவது இந்த கொடாக்கண்டர்களுக்கும்  அவர்களை ஆதரித்துக்கொண்டு வெளிநாடுகளில் அனைத்து சுகபோகங்களைம் அனுபவித்த விடாக்கண்டர்களுக்கும் இடித்துரைக்கலாமே. விமான நிலையம் தெரியாது, கொழும்பையே பார்த்ததில்லை,  நாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் நதிகளின் பெயர் தெரியும். ஆனால், அதன் அழகு தெரியாது. வெளிநாடுகளிலிருந்து வரும் உல்லாசப்பயணிகளை கவருவதற்காக காலிமுகத்திலிருந்து,  காலிக்கு அப்பால் வரையில் நகரத்தை வடிவமைக்கிறார்கள். ஆனால், நாட்டின் ஒரு மூலையில் போரினால் சிறைப்பட்ட எம்மவருக்கு பார்க்கக் கிடைத்தது எறிகணை வீச்சும் குண்டு வீச்சும் பதுங்கு குழிகளும் துடிதுடித்து மாண்ட உயிர்களும்தானே.. ஜீவிகா, தன்னையும் அறியாமல் அபிதாவை அணைத்துக்கொண்டாள்.   “  என்னம்மா… திடீரென்று…  “  அபிதா கூனிக்குறுகினாள்.  “ வெறி சொரி அபிதா… ஒன்றும் இல்லை.  எதனையோ யோசித்தேன்.  நான் வெறும் பத்திரிகையாளர்தான்.  எழுதவும் பேசவும்தான் தெரிந்திருக்கிறது.  நீங்கள் ட்ரைவர் அண்ணனுடன் பேசிக்கொண்டு வந்ததை கண்ணை மூடி கேட்டுக்கொண்டுதான் வந்தேன். அதுதான் வேறு ஒன்றும் இல்லை.   “ ஜீவிகா சமாளித்தாள்.  “  நீங்கள் சீலன் தம்பியுடன் கொழும்போடு போய்விட்டால், என்னை மிஸ் பண்ணிவிடுவீங்களா அம்மா.  சொல்லுங்க…. “ ஜீவிகாவின் அந்த திடீர் அணைப்பு அபிதாவிடத்தில் சிறு சலனத்தையும் ஏற்படுத்தியது.  “  அண்ணை,  கொட்டாஞ்சேனையில் அபிதாவை சீலன் வீட்டருகில் இறக்கிவிட்டு, அதுக்குப்பிறகு என்னை எங்கட ஒஃபீஸ்ல விடுங்க…

சரியா…. “  சாரதி தலையாட்டினார்.  “ அய்யோ… அம்மா…வேணாம். நீங்களும் வாங்க…. எனக்குப்பயமாக இருக்கிறது.  “   “ இப்படி பயந்து பயந்து வாழ்ந்தால் நீங்கள் உருப்படமாட்டீங்க அபிதா.  இனி அடிக்கடி நீங்கள் கொழும்பு வரவேண்டியிருக்கும்.  “   என்றாள் ஜீவிகா.  “  இதெல்லாம் எனக்குத் தேவையில்லையம்மா. பேசாமல் வீட்டுவேலைகளையே செய்துகொண்டிருந்திருப்பேன். கண்டறியாத ரீவி ஷோ.  “   “  இல்லை அபிதா… நீங்கள்  இதுவரையில்  பார்க்காத உலகத்தை நான் பார்த்திருக்கிறேன்.  இந்தப்பயணத்தில்தான்,  உங்கள் ஊடாக நானும்  இதுவரையில் பார்க்காத உங்கள் உலகத்தைப்பற்றி தெரிந்துகொள்கிறேன்.  எனக்கு இந்த அனுபவம் புதியது.  அரசியல்வாதிகளை கலைஞர்கள் எழுத்தாளர்கள், பிரமுகர்களைத்தான் இதுவரை காலத்தில் பேட்டி கண்டு எழுதியிருக்கின்றேன்.  ஆனால்,  பிறந்த  உள்நாட்டிலேயே ஓடிக்கொண்டிருக்கும் நதிகளைக்கூட பார்க்கத்தவறியிருக்கிறீங்க.  வேடிக்கை பார்க்கக்கூட விமான நிலையத்தின் பக்கமும் நீங்கள் வரவில்லை என்பது தெரிகிறது.  இதெல்லாம் மற்றவர்களுக்கும் தெரியவேண்டும்.   சீலன்,  அபிதா அறுசுவை நிகழ்ச்சிபற்றி சொன்னபோது,  நான் இப்படியெல்லாம் சிந்திக்கவேயில்லை.  “  ஜீவிகா, அபிதாவின் கரத்தை பற்றியவாறு சொன்னாள்.  இவர்களின் உரையாடலைக்கேட்டுக்கொண்டு, ஆமர்வீதி சந்தியில் வாகனத்தை வலதுபக்கம் திருப்பிய சாரதி,  “ அபிதா.. நான் கேட்டதற்கு நீங்கள் எதுவும் சொல்லவில்லையே. அதுதான் இன்றைக்கு நடக்கப்போகும் நிகழ்ச்சியில் நீங்கள் செய்யப்போவது பற்றித்தான் கேட்டேன்.   “  “   ஓம் அண்ணை.  சாதத்தில் எத்தனை வகை எத்தனை சுவை..? இதுதான் நான் நடத்துவதற்கு தீர்மானித்திருக்கும் விடயம். தயிர் சாதம், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரை சாதம், தக்காளி சாதம்,  புளிச்சாதம்.  ஆறுவகையான சாதம். அறுசுவை இந்த சாதங்களில் எப்படி இருக்கும் என்பது பற்றிப்பேசி செயல் முறை விளக்கத்துடன் காண்பிக்கவிருக்கிறன் அண்ணை.   “   “ அப்பாடா… இதெல்லாம் செய்வீங்களா…?  “  சாரதி முகத்தை திருப்பிக்கேட்டார்.  “ அண்ணன், ரோட்டைப்பார்த்து ஓடுங்க. சாதம் பிறகு சாப்பிடலாம்.   “ ஜீவிகா,  சிரித்துக்கொண்டு சொன்னாள்.  “ ஓகே… ஜீவிகா.   “  வாகனம் சீலன் வீடுக்கு முன்னால் வந்து நின்றது.  ஜீவிகா கைத்தொலைபேசியில் வந்துவிட்டதாக சீலனுக்கு தகவல் சொன்னாள். சில நிமிடங்களில் சீலன் வந்தான்.       “  என்ன ரெடியா… ?  உங்களுக்குத்தான் காத்திருந்தேன்.   ரீவியிலிருந்து எங்களை அழைத்துச்செல்ல வேன்  வரும். வழியில் போக்குவரத்து நெரிசலாம்.  ஜீவிகா,  நீங்க அபிதாவை இறக்கிவிட்டுப்போங்க.     “   அபிதா  அமர்ந்திருந்த பக்கத்தின் கதவை திறப்பதற்கு சீலன் நெருங்கியதும், “  சீலன்.  வெயிட் … ஒரு முக்கிய விடயம் பேசவேணும்.  “ எனச்சொல்லிக்கொண்டு இறங்கிய ஜீவிகாவை சீலன் மென்மையாக அணைத்துக்கொண்டான். சாரதியும் அபிதாவும் முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டார்கள்.  ஜீவிகா,  மனதிற்குள் நினைத்திருந்ததை சீலனிடம் சொன்னாள்.  “ அது சரி ஜீவிகா. அப்படி ஒரு புரோகிறாம் செய்யலாம்தான். நீரே அதனைச்செய்யும். ஆனால்,  அபிதா அறுசுவைதான் இன்றைக்கு நாம் ஒளிப்பதிவு செய்யப்போகும் நிகழ்ச்சி.  அபிதாவும் அதற்குத்தயாராகத்தான் வந்திருக்கிறா.  “ என்றான் சீலன். அவர்களின் உரையாடலில் என்ன பேசப்படுகிறது என்பது தெரியாமல் அபிதா திரு திருவென முழித்தாள்.  சற்று நேரத்தில் அந்த தொலைக்காட்சியின் பெயர் பதியப்பட்ட ஒரு வாகனம் வந்து நின்றது.   ஜீவிகா, தான் வந்த வாகனத்தின் கதவைத்திறந்து,                             “   வாருங்கள் அறுசுவையே… இறங்குங்கள் அறுசுவையே  “ என்று கிண்டலுடன் சொன்னாள். சீலனும் சாரதிகளும் சிரித்தனர்.  “ சும்மா இருங்கம்மா…. வெட்கமாக இருக்கிறது.    நீங்கள் இரண்டுபேரும் எனக்குத் தண்டனைதான் தந்திருக்கிறீங்க. நான் அப்படி என்ன குற்றம் செய்தேன்  “ அபிதா முகத்தை சுழித்துக்கொண்டே சொன்னாள்.  “  ஓம்… ஓம்…இப்போது அப்படித்தான் சொல்வீங்க.  பிறகு என்ன சொல்வீங்க என்பதையும் பார்க்கத்தானே போகிறோம்.  “ என்று சொன்ன சீலன், அபிதாவை தொலைக்காட்சியிலிருந்து வந்த வாகனத்தில் ஏற்றிவிட்டு, முன் ஆசனத்தில் ஏறிக்கொண்டான். ஜீவிகாவுக்கு கையசைத்தான். அபிதாவும் அசைத்தாள்.  “   உங்களுடைய பெயரை எழுதித்தாங்க.   இங்கிலிஷ்ல எழுதுங்க.  செக் எழுதவேண்டும்  “  அந்த அலுவலகத்தில் காசாளர் மேசைக்கு அருகில் நின்ற அழகிய யுவதி சொன்னாள்.  அபிதா, சீலனைப்பார்த்தாள்.  “ எழுதுங்க.  உங்களுக்கு பேங்கில் அக்கவுண்ட் இருக்கிறதுதானே..?  எழுதுங்க. அதனைப்பார்த்துத்தான் செக்கில் பெயரை பதிய வேண்டும்  “ என்றான். அபிதா எழுதினாள். அபித குசலாம்பிகை  பார்த்திபன்  “ வித்தியாசமான பெயர்.  எவ்விடம்…?  “ அந்த யுவதி கேட்டாள்.  “  முல்லைத்தீவு.    இப்போது நிகும்பலையில் இருக்கிறேன்.  “  அந்த யுவதி காசோலையில்   அபிதாவின் பெயரை பதிவுசெய்துவிட்டு ஒரு கடித உறையில் வைத்துக்கொடுத்தாள்.  அந்தப்பெயரில் எழுதப்பட்ட வவுச்சரிலும் அபிதாவிடமிருந்து கையொப்பம் பெற்றாள். அபிதா, அவள் நீட்டிய கடித உறையை திறந்து காசோலையை பார்த்தாள். ஆச்சரியத்தால் அவளது முகம் விரிந்தது.  நாசியும் கன்னக்கதுப்பும்  சிவந்தது.  ( தொடரும் ) 

No comments: