பாதச் சுவடுகள் .......

 


இயற்றியவர் இளமுருகனார் பாரதிகந்தனை நினைந்து பெற்றோர் இட்ட

சந்திர வடிவேல் எனும்பேர் கொண்டோன்

அந்தமில் தெய்வச் சுந்தரத் தமிழில்

செந்தமிழ்க் கவிதை யாத்து மகிழ்வான் 

இணுவையூர்; பயந்த இன்றமிழ்ச் சான்றோன்

அணுகுவோர் தம்மை ஆதரித் திடுவோன்!

பாமர மக்களுக் கென்றும் உதவி 

தூமனத் துடனே இயற்றும் தூயோன்! 

நிதந்தொழும் தெய்வம் பரசிவ மான

சிதம்பரச் செல்வனைச் சிரமிசை ஏத்தித்

தினமும் தேனுல ராமலர் பறித்தே

மனமும் உவப்ப அர்ச்சித் திடுவோன்!

திருமுறை பண்ணொடு தினமும் பாடிக்

குருவெனத்; திகழ்ந்த யோகரைத் தொழுவோன்

சந்தன நிறத்தோன் சாதிகள் பாராச்

சுந்தரன் வாணிகம் செய்வதில் வல்லோன்  

கனிவாய்ப் பேசும் பண்பில் உயர்ந்தோன்!

மனித நேயம் ஓம்பிடும் மனத்தோன் 

சாந்த சொரூபி தலைக்கனம் இல்லோன்! 

மாந்தர் போற்றும் மாணிக் கமானான்!

விதிப்படி வருவதை விரும்பி ஏற்போன்!

மதிப்பொடு வாழும் நல்லோர் குடிமகன்!

இல்லம் நாடி வருவோர்க் கெல்லாம்

பல்சுவை விருந்து ஓம்பும் பெரியோன்!

இரப்பவர்க் கெல்லாம் இல்லை யெனாது

பரந்த மனதொடு பலதும் ஈய்பவன்

போதும் என்ற நிறைமனங் கொண்டோன்!

சூதும் வாதும் அற்ற மனத்தோன்!..............

இறையருள் சொரியச் சொரிய அவனும்

குறைவிலாச் செல்வம் குவிந்திடக் கண்டான்!

காளையாய் இருந்த போது தானோர்

ஏழையாய் இருந்ததை நினைந்து சிரித்தான்!

இல்லம் சிறந்திடப் பொருள்கள் குவிந்தன! 

செல்வம் பெருகச் செல்வந் தனானான்

அல்லும் பகலும் அயரா துழைத்தான்

வெல்லும் வகையெலாம் கைகொடுத் துதவின

வேண்டுவ தெல்லாம் வீட்டிற் சேர்ந்தன

ஆண்டவன் கழல்தொழ நேரமோ இன்றி

ஆரா தனைசெய ஐயகோ மறந்தான்!

தீராப் பிணக்கினால் செல்வம் இருந்தும்

நேரா ததெல்லாம் நேர்ந்திடக் கண்டான்

மறைமுக மாகச் சிறிது சிறிதாய்

நிறைந்த மனத்தின் நிம்மதி இழந்தான்

நனவிலே கிட்டிய மகிழ்ச்சி எல்லாம்

கனவாய் மறைந்திடக் கவலை உற்றான்


வறியவ னாக இருந்த நிம்மதி

பறிமுத லான நிலையை உணர்ந்தான்!

வாய்த்த அமைதி தொலையக் கண்டான்

குறைவிலா நிதியென மனதிற் சாந்தியை 

நிறைவாய்க் கொடுத்த கடவுளை மறந்ததால்

'இறைவன் தந்த தண்டனை இதுவோ?

கறைபடிந் திட்டதன் செயலின் விழைவோ?'

என்றே நினைந்தவன் அரற்றி அழுதான்

'தாராய் நிம்மதி தாராய் கவலையைத்

தீராய் தீர்த்துக் காவாய்' என்றே

திருவினைத் தந்த செல்வனை நினைந்து

உருகி உருகிக் கண்கள் பனித்திட

'ஒப்பிலா நிலைக்கு உயர்த்திய உம்பனே

தப்பினைப் பொறுப்பாய் தயவுகாட் டிடாயோ?

ஒருகண மேனும்; பரி;யா திருந்து

அருளிக் காத்திடாய்' என்றவன் கதறினான்!

சித்தம் அதனைச் சிவன்பால் வைத்து

உத்தமன் நல்லோhர் வரமுங்; கேட்டான்

ஐயனும் வரத்தை அளிக்க விழைந்து

'மெய்யாய் நீயும் எனைமற வாது

நெய்விளக் கேற்றி நித்தமும் தொழுவாய்! 

சத்திய மாக உன்னுளம் உறைந்தே

சித்திகள் அளித்;தே உன்னுடன் இருப்பேன்

பக்தனே என்னருள் என்றும் உண்டே

எக்கண மேனும் எனைமற வாய்'எனக்

கனவிலே இறைவனும் காட்சி கொடுத்திட

மனநிறை வடைந்து மகிழ்ந்தனன் வடிவேல்.........


 
அன்று தொட்டு 'அரன்கழல் மறவேன'

என்று மனதாற் சத்தியம் செய்தான்

இழந்த அமைதியை மீண்டும் பெற்றான்

வளங்கள் மறுபடி மகிழ வைத்தன

தன்னுளக் கோவிலில் இறைவன் வேறாய்

தன்னுடன் ஒன்றாய் உடனாய் என்றும்

இருந்தே அருளிட உணர்ந்து கொண்டான்! 

புதிது புதிதாய் எத்தனை சோதனை 

எதிர்கொண்ட வேளை துணையாய் இருந்து

பக்குவ மாக வெற்றியைத்  தந்த

முக்கணன் அருளை எண்ணி மகிழ்ந்தான்

இந்தநம் பிக்கை இதம்செய அவனும்

வந்த இரவெலாம் நிம்மதி அணைத்;தது

முன்பு வருத்திய சஞ்சலம் தீர்ந்தது

இன்துயில் கொண்டு மகிழ்ச்சியில் மலர்ந்தான்.........

 

ஆண்டுகள் ஒருசில ஓடி மறைந்தன

வேண்டிய அமைதியில் அவன்;பூ ரித்தான்!...........

 

சூழ்ந்த வெண்ணிலாப்; பௌர்ணமி இரவு

ஆழ்ந்து நித்திரை கொள்ளும்; வேளை

வடிவினன் அற்புதக் கனவொன் றுகண்டான்

விடியலின்  நட்சத் திரங்கள் மின்ன 

மையிருள்; போக்க வானில் முழுதாய் 

பெய்யும் ஒளியுடன் தண்மதி கண்டான்

நுரைவிடும் பேரலை எழுப்பும் கடலின் 

கரைதனில் ஈர வெண்மணல் மீது

எடுத்தடி வைத்தே நடந்தான் தன்னைப்

படுத்திய வாழ்க்கையிற்; பட்டு முடிந்த

எல்லா நிகழ்வும் ஒவ்வொன் றாக

நல்லாய்க் கிழக்கு வானிலே தோன்றி  

மேற்கிலே மறைந்ததை அவனும் கண்டான்

தோற்றிய தெல்லாம் நடந்தது போல 

வரைபடம் போல ஒவ்வொன் றாகத்

திரைபடம் போன்று தோன்றி மறைந்தன

அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்தான்

துக்கமும் இன்பமும் மாறி மாறித்

தோன்றிய விந்தையைப் பார்த்து நகைத்தான்

ஏன்இப் படியென் வாழ்க்கையில் நடந்த 


அதிசயம் இவையோ என்றவன் மலைத்தான்

விதியினால் வந்த அதிசயம் என்றுதான்

நடந்த வழியைத் திரும்பிப் பார்த்தான்

கிடந்த மணலில் வலம்இடம் ஆக

சோடியாயப்; பதிந்த சுவடுகள் கண்டான்!

வாடியே சூம்பிய சுவடுகள் நிரையாய்

மண்ணிலே வலமாய்ப் பதிந்திடக் கண்டான்

கண்ணிலே மின்னிய ஒளிமிகு சுவடுகள்

கடவுளின் கால்கள் பதித்த தென்றவன்

இடமதிற் கண்டு மிகவும் மகிழ்ந்தான்

மன்று ளாடியின் பதிவின் பக்கம்

தன்றன் மெலிந்த பதிவைக் கண்டான்

கூறிய படியே கடவுளும் தன்னுடன்

மாறிலா அன்பொடு வந்துளார் என்று

பொங்கிடும் நன்றிக் கடனுடன் அவனும் 

அங்கு மேலும் ஊன்றிப் பார்த்தான்

தன்சிறு சுவடுகள் காணா தேங்கினான்

பொன்னென மின்னிடும் சுவடுகள் மட்டும் 

ஐயமே றித் தெரிவதைக் கண்டான்

தெய்வமே ஏனெனை மறந்தாய் என்றான்!

அண்மைக் கால வாழ்க்;கையில் அடிக்கடி

உண்மையில் தாக்கிய பிணியும் மிடியும்

கண்ணெதிர் முன்னே மின்னெனத் தோன்றின

திண்ணமாய் இஃதவன் சோதனை என்றுமுக்

கண்ணனை நினைந்திரு கரங்கள் கூப்பி

எண்ணிய தெல்லாம் பேசிட வெண்ணி

இன்பமும் செல்வமும் இருந்த போது

என்றன் சுவடொடு இணைந்தே தோற்றிடத்

துன்பமும் வறுமையும் உற்றபோ தெல்லாம்

தோன்றிடா தென்னடி மறைந்தது மேனோ?

என்னைநீ தனிமையில் எங்குதான் விட்டாய்?

'என்றுமே துணையாய் இருப்பே னென்று

மன்னிய வரத்தை இடையிலேன் மறந்தாய்?

என்னதான் பாவம் இயற்றினேன் அறியேன்!ளூ

என்றுசுந் தரன்அழ இறைவனுந் தோன்றி.....

 

'அப்பனே கேட்பாய் அஞ்சுதல் வேண்டா

செப்பிய வார்த்தையை மீறினேன் அல்லேன்!

இன்பமும் செல்வமும் நீபெற்ற போது

என்னரும் பக்தனுன் கூடவே வந்தேன்

ஆதலால் அன்றோ பக்கம் பக்கம்

பாதச் சுவடுகள் பதிந்திடக் கண்டாய்!

துன்பமும் வறுமையும் சோதனை தரவே

அன்பநீ கீழே வீழ்ந்திடா திருக்க

அன்புடன் உனைநான் அணைத்தே தூக்கித்

தென்புடன் துயரைத் தாண்டிட வைத்தேன்

ஆதலால் அவ்வப் போதுன் சுவடுகள்

பேதையே! பக்கம் பதிந்திட வில்லை

பத்தனே உன்னைச் சுமந்த வேளை

பித்தனென் சுவடுகள் மட்டுமே கண்டாய்'

என்றே செம்பொற் சோதியன் செப்பிட

என்னே பாய்க்கியம்! என்னே பாய்க்கியம்!

இறையருள் பெற்றேன் என்று விம்மிட

நன்றே கலைந்தது சுந்தரன் கனவே!

இன்றே செய்யும் ஈகையும் தொண்டும்

நின்றே தந்திடும் திருவருள் அருளே.


ஓர் அறிஞர் ஆங்கிலத்தில எழுதிய 'பாதச் சுவடுகள்' (அதாவது'FootPrints' ) என்ற கவிதையின் கருப்பொருளை மையமாக வைத்துத் தமிழில் விரிவான கவிதையாய் இயற்றப்பெற்றது.


No comments: