அண்மையில் தன் 80ஆவது அகவைக்குள் காலடி பதித்திருக்கும்இ சிட்னி - கவிஞர் பல் வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி அவர்களின் அமுத விழாவிற்கான கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களின் பாராட்டுக் கவிதை.

                                                                   உ

           நூறுவரை உன் ஆயுள் நீளவேண்டும்!


உலகமது தழைத்தோங்க உயர்ந்தே நின்று

        ஓங்குதமிழ் தனைவளர்த்த வழியில் வந்தோன்

நிலமகளைத் தன்தமிழால் நிமிரச் செய்த

        நேசமிகு பண்பாளன் நெறியில் நின்று

பலகவிதை சுவைபடவே ஆக்கி இந்தப் 

         பார்மகிழத் தந்தமகன் பலரும் போற்ற

தளமதனில் பற்சிகிச்சை தன்னில் ஓங்கி

         தரணியது புகழ்ந்திடவே வாழும் ஐயன்.!


ஒப்பற்ற பெரும் புலவர் உலகம் போற்றும்

          ஓங்கு புகழ் சோமசுந் தரனார் தன்னின்

செப்பும் பேர் நிலைத்திடவே செய்த அண்ணல்

          சிறப்போங்கும் இளமுருகர் வழியில் வந்த

தப்பற்ற விழுதாகத் தரணி தன்னில் 

            தன்னைத்தான் நிறுவியவர் தமிழர் போற்ற

இப்புவியில் எழுச்சியுடன் தமிழும் காத்து

            ஏற்றமுற மருத்துவத்தின் எழிலும் காத்தார் 


கவிதைகளைப் பற்பலவாய் ஆக்கித் தந்தோன்.

            கற்றவர்கள் உளம் மகிழ நூல்கள் செய்தோன்.

புவியதனில் எங்குதமிழ் விளைந்தபோதும்

         போயிருந்து கேட்டு மகிழ் பெரிய அன்பன்.

அவிந்தடங்கி ஆன்ற பெரும் பண்பினாலே

         அனைவரையும் தன் உறவாய் ஆக்கி வைப்போன்.

சவியுறவே தெளிந்தறிவின் துறைகள் தோறும்

         சால்பறிந்து உள் நுழையும் பெருமை மிக்கோன்.


கங்காரு நாட்டினிலே கம்பன் தன்னை 

           கனிவுடனே முன்னெடுக்கும் எங்கள் அன்பன்

தங்காதல் பெருகிடவே தமிழைப் போற்றி

            தன்னிகரில் கம்பவிழாப் பலவும் செய்யும்

மங்காத பெருமையுடை ஜெயராம் கூட்டும்

          மாபெரிய விழவதனில் உன்னைக் கண்டேன்.

பங்காக அவ்விழவில் இணைந்து நின்று

          பரிசளித்து எனைப் போற்றிப்  பலவும் செய்தாய். 


யுகக் கவிஞன் பாரதியின் பேரதாலோ

           யுக்தியோடு கவிதைபல சமைத்ததாலோ

சகம் புகழும் முன்னோர்தம் பெருமையாலோ

          சாற்றியதாம் மருத்துவத்தின் வலிமையாலோ

தகமையொடு நல் அறிஞர் சபைகள் தன்னில்

            தனித்தேதான் தமிழ்வளர்க்கும் பெருமையாலோ

பகலவனாய்த் திகழுகிறாய் பாரில் உந்தன் 

            பணி தொடர வாழ்த்துகிறேன். உயர்வு கொள்க


பாரதியாம் பெயரேற்ற பெரியோய் உன்னை

         பலகாலம் தமிழுலகம் நினைந்து நிற்கும்

ஊரறிய அமுதவிழாக் கண்ட ஐய! 

         உனைப்போற்றி அறிஞரெலாம் உவந்து நிற்பர்.

நூறுவரை உன் ஆயுள் நீளவேண்டும்

          நுவலுகிறேன் கம்பனவன் தமிழைக் கொண்டு

தேறுகிற இலட்சுமியாய் தொடரும் உந்தன்

         தேவியுடன் பல்லாண்டு வாழ்க! வாழ்க!

 


வாரிதி ஐயாவின் அன்பு வாழ்த்துக்குப் பாரதியின் பதில்-


பாரதிக்கு வாழ்த்தளித்த வாரிதியே!


மூவாத தமிழ்கொண்டு கம்பன் யாத்து

    முதுசொமென எமக்களித்த இராமா யணத்தில்

நாவாலே 'நனிசிறக்க நயங்கள் தேர்ந்து

    நாடெல்லாம் பவனிவந்து' உரைவி ரிக்கும்

கோவாகிப்; புகழ்சேர்த்தாய் கம்ப ரசத்தைக்

     குழைத்தூட்டப் பாரிலெவர் உன்போல் உண்டோ?

பாவாலே பாரதியைப் பாடிம கிழ்ந்த 

     பண்பாளா பல்லாண்டு வாழி! வாழி!!.


இன்பநினை வெல்லாம்நினைந் தின்பம் எய்த   

    ஈடிணையில் வித்தகாவுன் இதயம் உகுத்த 

அன்புதனைத் தேன்றமிழிற் சுவையும் விஞ்ச

   ஆசைதீர முகநூலிற் பாவாய்ப் படைத்தாய்!

என்புவரை ஊடுருவிக் கிறங்க வைக்கும்

   எழிலுரைகள் ஆற்றிவரும் ஏந்தல் உனக்கு

நன்றிதனை நவில்வதற்கு என்செய் கேனோ?

   நாளெல்லாம் கம்பவிருந் தளித்து வாழி! 


பணியெனவே உன்சீடன் ஜெயராம் கூட்டும்

    பார்போற்றும் கம்பன்புகழ் பாடும் விழாவும் 

மணிமுடியால் அரசாண்ட தமிழ்அன் னைக்கு

    வாழ்நாளை அர்ப்பணித்து மகுடம் வைத்து

அணிசேர்த்துத் 'தமிழ்வளர்த்த சான்றோர் விழா'வும் 

    ஆண்டாண்டாய்த் தடம்பதிக்கும் பெருவி ழாக்கள்!

 தணியாத வேட்கையொடு கம்பனைப் போற்றும்

    சகலகலா வித்தகனே வாழி வாழி!! 


    .....................பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி


2013ஆம் ஆண்டு முதன்முதலாகத் 'தமிழ்வளர்த்த சான்றோர் விழா' அருள்மிகு துர்க்கை அம்மன் வளாகத்தில் அமைந்திருக்கும் தமிழர் மண்டபத்திலே கோலாகலமாக அரங்கேறியது. 600க்கும் அதிகமான தமிழ் அன்பர்கள் அரங்கை அலங்கரிக்க பேராசிரியை திருமதி ஞானா குலேந்திரன் திரு திருநந்தகுமார் திருமதி பாலம் இலக்குமணன் சிவத்திரு நிர்மலேசுவரக் குருக்கள் ஆகியோரின் அற்புத உரைகள் விழாவிற்கு மெருகூட்டியது. தமிழ் ஆர்வலரகள்; கருணாசலதேவா - திரு ஈழலிங்கம் - மற்றும் திருமதி சௌந்தரி அவர்கள் முன்னின்று உதவிக்கரம் நீட்டப் பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதியின் ஆளுமையில் வெற்றிவிழாவாக மலர்ந்திருந்தது இந்த விழா. கீழே அவையினரின் ஒரு பகுதியைக் காணலாம்.  




No comments: