பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 17 - நடு இரவில் - சுந்தரதாஸ்

.



தமிழ் திரையுலகில் பல புரட்சிகரமான படங்களை உருவாக்கிய இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் ஆனால் அவருக்கு முன்பே இன்னும் ஒரு பாலச்சந்தரும் பல புதுமையான படங்களை இயக்கி ரசிகர்களை பிரமிக்க வைத்தார் அவர்தான் வீணை வித்துவான் எஸ் பாலச்சந்தர். இவர் டைரக்ட் செய்த பாடல்களே இல்லாத அந்தநாள் படம் வித்தியாசமான படமாக அமைந்தது. அதுபோல் அவர் உருவாக்கிய அவனா இவன், இது நிஜமா, பொம்மை போன்ற படங்களும் மாறுபட்ட படைப்புகளாக ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட்டன.

கர்நாடக இசைத் துறையில் வீணை வித்துவானக கோலோச்சிய பாலசந்தர் திரையுலகை பொறுத்தவரை மர்மப் படங்களை உருவாக்குபவராக திகழ்ந்தார். இவருடைய படங்கள் எல்லாம் அடுத்தது என்ன என்று சஸ்பென்சாக இருக்கும். அந்தவகையில் 1970 ஆம் ஆண்டு எஸ் பாலச்சந்தர் தயாரித்து இயக்கிய படம் நடுஇரவில்.


ஒரு தீவு அங்கே ஒரு மாளிகை அதில் வயதான கோடீஸ்வரரான தயானந்தன் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் தன் உறவினர்கள் மீதுள்ள கோபம் காரணமாக எல்லாரையும் விட்டு தனித்து வாழும் அவருக்கு நோய் காரணமாக விரைவில் தான் இறக்கப் போவது தெரிகிறது. தன் நண்பன் சரவணனின் ஆலோசனைப்படி உறவினர்கள் எல்லோரையும் தீவுக்கு வரவழைக்கிறார். அனைவரும் சொத்தில் பங்கு கிடைக்கும் என நம்புகிறார்கள் ஆனால் சொத்துக்கு பதில் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக செத்து விழுகின்றார்கள். இவர்களை கொலை செய்தது யார் என்பதுதான் மர்மம்.


தயானந்தனாக மேஜர் சுந்தரராஜன் அவர் மனைவியாக பண்டரிபாய் டாக்டர் சரவணனாக எஸ் பாலச்சந்தரும் நடித்தனர். இவர்களுடன் சவுகார்ஜானகி, வி கோபாலகிருஷ்ணன், சகாதேவன், வி எஸ் ராகவன் ஆகியோரும் நடித்தனர் நடுஇரவில் படம் 1966 ஆம் ஆண்டளவில் உருவாக திட்டமிடப்பட்டு சோவின் இரண்டாவது படமாக கருதப்பட்டது, ஆனாலும் எழுபதாம் ஆண்டு அது வெளிவரும்போது சோ பல படங்களில் நடித்திருந்தார்.


படத்தின் வசனங்கள் பாடல்கள் இரண்டையும் வித்துவான் வே லட்சுமணன் எழுதினார் தயாரிப்பு டைரக்ஷன் இசை நடிப்பு என்று எல்லாவற்றையும் பாலச்சந்தரே கையாண்டார். படத்தில் எல் ஆர் ஈஸ்வரி குரலில் இடம்பெற்ற நாலு பக்கம் ஏரி பாடல் இனிமையாக இருந்தது. நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்களைக் கொண்டு நடுஇரவில் உருவானது. ஆனாலும் இந்தப் படத்திற்கு பிறகு எஸ் பாலச்சந்தர் திரையுலகில் இருந்து ஒதுங்கி கர்நாடக இசையில் வித்துவானாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

No comments: