அழகி ஒருத்தி இளநி விற்கிறாள் திருவண்ணாமலையிலே…. இயற்கை எழிலில் கண்ட உயிரோவியம் ! சுபாஷினி சிகதரன்


  

திருவண்ணாமலை ரமணாச்சிரமம் முன் வாயிலிலிருந்து கோயில் செல்லும் திசை நோக்கி பிரதான வீதியால் சிறிது தூரம் நடந்தால் வீதியின் இடப்பக்கத்தில் ஓர் ஒழுங்கை வாயில் போன்ற சிறிய சந்து தென்படும்.  இதற்குள் பிரவேசித்து மேற்கொண்டு நடந்தால் மலையினூடு செல்லும் ஒற்றையடிப் பாதை ரமண மகரிஷி வருடக்கணக்கில் தவம் செய்த விருபாக்ஷி குகை எனப்படும் ஆற்றங்கரையோரக் காட்டுக் குகைக்கு அழைத்துச் செல்லும். ஆறு எல்லாம் வற்றிவிட்டது. வெறும் தடயம் மாத்திரமே உள்ளது. நாம் கடைசியாகத் திருவண்ணாமலை சென்றது கிட்டத்தட்ட நான்கு வருடங்களின் முன். அப்போது வறட்சி நிலை. இப்போது மழைநீர் அதிகரித்து ஆறு ஓரளவுக்கு நடைபயிலக்கூடும். மிக அருமையான இடம்.  எங்கேயாவது சென்றால் ஏதாவது அறியாத சந்துபொந்துகளுக்குள் புகுந்து புறப்படுவது  எனது துணைவர் சிகனின் வழமை. திருவண்ணாமலை இது மூன்றாவது தடவை. காரணம், நான் ஒரு திருவண்ணாமலைப் பைத்தியம். கால்போன போக்கில் நடந்து திரிவோம். இம்முறை மூன்று நாட்கள் திருவண்ணாமலைப் பயணம், யோகி ராம்சுரத்குமார் ஆச்சிரமத்தில் தங்கியிருந்தோம். 

 

  

சிகனுக்கு மலைக்குள்ளாகப் பயணப்பட்டு யாராவது சித்தர் அதிசயம் காண வேண்டும் என்பது பேரவா.  எனது அழுகிய மனதின் முன் எந்தச் சித்தரும் தோன்ற மாட்டார்கள் என்பது எனது திண்ணமான எண்ணம். தெருவில் சந்தித்த ஊர் மனிதர்களிடம் மலைக்குள் போகும் வழி கேட்டால் எல்லோருமே போக வேண்டாம் என்று எச்சரித்தார்கள். மலைக்குள்ளாகப் போனவர்கள் மீது பல திருட்டு,  பாலியல் வன்முறை ,  அடிதடி குற்றங்கள் நிகழ்ந்ததால் காவல்துறை இதனைத் தடைசெய்துள்ளது எனவும், அழைத்துச்செல்லும் வழிகாட்டிகள் எவரும் இப்போது இல்லை என்றும் தெரிவித்தனர்.  முக்கியமாக என்னைப்பார்த்து பெண்கள் போகவே முடியாது என்றனர். ஆனால் மலைக்குள் இருக்கும் விருபாக்ஷி குகை பற்றிய தகவல் எவ்வாறோ அறிந்து, நடக்கத் தொடங்கினோம். இந்தப் பாதையின் மறு எல்லை ரமண மகரிஷி ஆச்சிரமம் பின் வாயிலில் முடிவடைவது கூடத் தெரிந்திருக்கவில்லை. குருட்டாம்போக்கில் நடக்கத் தொடங்கி எமக்கு முன்னால் சில வெளிநாட்டவர்கள் போவதைப் பார்த்து உற்சாகமாகப் பின்தொடர்ந்தோம்.  மலையின் பிரதான உட்பகுதிக்குள் போக முடியாவிட்டாலும், கால்வாசிப் பகுதியையாவது கவர் பண்ணியதும், ரமணரின் அழகிய விருபாக்ஷி குகைச் சூழலும் மிகுந்த நிறைவை ஏற்படுத்தியது. தவிர, அங்கே குறும்புத்தனமும், குழப்படியும் மிக்க அனேக குரங்குகள் நின்றிருந்தன. எனக்குப் பக்கத்தில் நட்புப் பாராட்டுவது போல் அமர்ந்திருந்த குட்டிக்குரங்கு நான் அறியாமல் எனது நீளக்காற்சட்டைப் பையினுள் கைவிட்டு வியர்வை துடைப்பதற்கு நான் வைத்திருந்த துண்டை எடுத்துக்கொண்டு ஓடியது. கைத்தொலைபேசியை சும்மா சும்மா நோண்டிக் கொண்டு மிலாந்த வேண்டாம் என சிகனை எச்சரிக்கை செய்ய வேண்டியிருந்தது. 

 

விருபாக்ஷி குகை முடித்து ரமணாச்சிரமம் நோக்கிய மலைப்பாதையில் நடக்கத் தொடங்கிய போது பாதையோரத்தில் ஒரு பெண் இளநீர் விற்றுக்கொண்டிருந்தாள். அவளிடம் இளநீர் வாங்கிய வெள்ளைக்காரனின் விரைவான ஆங்கில உச்சரிப்பு புரியாத தடுமாற்றத்தைத் தன் சிரிப்பினால் சமாளித்துக்கொண்டு நின்றாள். கொவ்வைச் செவ்வாய்! குமிண் சிரிப்பு! முத்துப் பற்கள்! குனித்த புருவம்! கயல் விழி! பிறை நுதல்! நெளிவான கருங்கூந்தலைக் கூட்டி முடிச்சாக்கிய கொண்டை! கருமாம்பழக் கன்னங்கள்! சங்குக் கழுத்து! அளவாகப் பணைத்த மார்பக எழுச்சி! ஒட்டிய உதரம்! இறுக்கிய இடை! அகன்று கீழிறங்கும் எழுச்சி! வரிந்த சேலைக்கட்டு. கறுப்பழகி! இவள் பெயர் சங்கீதா! சங்கீதாவின் நினைவு ஒரு பசுஞ்சாந்து மணம்போல என் மனதினுள் பல நாட்கள் இருந்து பின்னர் மறைந்து விட்டது. இதனை மீண்டும் கிளறியது இலக்கியவாதி பவா செல்லத்துரையின் கதை சொல்லல். அண்மையில் முகநூல் மூலம் நட்பான கங்காதரன் என்பவரின் அறிவுரைப்படி நான் பவா செல்லத்துரையின் கதைகளைக் கேட்கவும், வாசிக்கவும் ஆரம்பித்து இப்போது ஒரு கதையாவது கேட்காமல் படுப்பதில்லை என்ற நிலைக்கு ஆளாகி விட்டேன்.  

 

பவா செல்லத்துரை தனது 'வேட்டை' என்கிற கதை பற்றிய கதைசொல்லலில் திருவண்ணாமலை - காணான் நகரில் வாழ்கின்ற நரிக்குறவர் இனப் பெண்கள் பற்றிக் கூறுவார். "இந்தப் பெண்களைத் துலக்கி மொடேர்ண் ட்ரெஸ் அணிவிச்சோம்னாக்க, இந்த சினிமா நடிகைங்க, ஐஸ்வர்யா ராய் எல்லாம் தோத்துப் போவாங்க. அப்படி ஒரு அழகு!".  இவரின் இன்னொரு கதை சொல்லலில் வண்ணதாசன் கதைகளைப்பற்றிப் பேசுவார். வண்ணதாசன் படைத்த ஒரு பெண் பாத்திரம் அன்னம் ஜூலி. தேவதை போன்ற இந்த அன்னம் ஜூலி, அவளைத்தான் காதலிக்கின்றோம் எனத் தெரியாமலே அவளின் அழகில் கிறங்கியிருந்த, ஆனால் அதைவிடத் தன் தொழிலை நேசிக்கும் புகைப்படக்காரன் என்ற பாத்திரங்களைப் பற்றிய கதை. திருமணத்தின் பின் வாழ்க்கையின் கொடுமைக்கு இரையாகி முழுமையாக மாறியிருந்த அன்னம் ஜூலியை அந்தப் புகைப்படக்காரன் சந்திக்கச் செல்வதோடு கதை முடிவடையும். இந்தக் கதையின் விவரணையில் அமைக்கப்பட்ட நுட்பங்கள் பற்றி பவா செல்லத்துரை வியந்து உரைப்பார். சங்கீதா தேவதை அல்ல. நிச்சயமாக அன்னம் ஜூலி இல்லை. இவளின் வாழ்வு சாக்கடையில் முடிந்ததாகத் தெரியவில்லை. எனக்குப் பார்த்தவுடன் தோன்றியது வள்ளிக்குறத்தி என்று மனதில் உருவகித்து வைத்துள்ள தோற்றம்தான். கருமையின் வெவ்வேறு அழகை திரௌபதி, கர்ணன், கிருஷ்ணன் இந்த மூன்று பாத்திரங்களிலும் எழுத்தாளர் ஜெயமோகன் வெண்முரசில் வர்ணித்திருப்பார்.  'திரௌபதி பிறந்த போதே நீலக்கருமலர் போலிருந்தாள். குழந்தைப்பருவத்தில் வாழைப்பூ நிறம் கொண்டிருந்தாள். ஒளிகொள்வதற்குரிய உரிமை கொண்டது கருமை மட்டுமே. பிற அனைத்தும் ஒளியை அப்படியே திருப்பி அனுப்பி விடுகின்றன. ஒளிபட்டதுமே தங்களை முழுமையாக இழந்து ஒளியாக ஆகிவிடுகின்றன. கருமை ஒளியை உள்வாங்கிக்கொள்கிறது. எத்தனை குடித்தாலும் ஒளிக்கான அதன் விடாய் அடங்குவதில்லை'.  இதோ, இந்தச் சங்கீதாவும் நீலக்கருமலர் போன்றே இருக்கிறாள். இவளும் கிருஷ்ணை! கருமைக்கும் மெல்லிய சாம்பலுக்கும் இடையேயான மினுக்கமான நிறம். 

  

மஞ்சள் பூசிக் குளித்த முகம் அந்த நிறத்தை உள்வாங்கி அவள் வைத்திருக்கும் செவ்விளநீர் காய்களின் செம்மஞ்சள் நிறம்போல் ஒளிவிடுகிறது. பொழுது சாயும் மாலைக்கதிரின் செம்மஞ்சள் ஒளி காட்டு மரங்களை ஊடறுத்துப் பின்வாங்குகிறது. அந்த அழகிய மலைப்பகுதி, பறவைகளின் ஓசை, பூச்சிகளின் ரீங்காரம், குரங்குகளின் கும்மாளம், கீழே அடிவாரத்தில் கம்பீரமாகத் தெரியும் அண்ணாமலையார் கோபுரங்கள், வெண்துளிகளாகத் தோன்றிய நகரின் கட்டடங்கள், மெல்லிய காட்டுத் தென்றல், இவை எல்லாவற்றையும் தோற்கடித்து அப்படியே ஒரு புத்தம்புதிய காட்டு மலராக நிற்கிறாள் இந்த சங்கீதா. குழந்தை முகம். ஒரு முப்பது வயது இருக்கும். எப்படியும் முப்பத்தைந்து தாண்டாது. "உங்கட பேர் என்ன?" "சங்கீதாங்க" "எப்பிடி, இவ்வளவு இளனியையும் கீழேருந்து கொண்டு வந்தனிங்கள்?" "எங்க வூட்டுக்காரரும், நானுமாக் கொண்டு வருவோமுங்க. அவரு இந்தா இப்பத்தான் நாலஞ்சு வெள்ளக்கார ஆக்கள மலை காட்டக் கூட்டினு போயிருக்காங்க". "என்ன! உங்க வீட்டுக்காரர் மலை காட்டுவாரா? ஒருத்தரும் போறதில்லை எண்டு கீழே சொன்னாங்களே" "இல்லீங்க, அவரோட தொழிலே அதுதான். ஆம்பிள, பொம்பிள எல்லா வெள்ளக்காரரும் வருவாங்க. அது ஒண்ணும் பயமில்ல. ரொம்ப நல்லாருக்கும்".  "ஐயோ சங்கீதா, முதலே தெரியாமப் போச்சே. நாங்கள் நாளைக்கு நேரத்தோட வெளிக்கிட வேணும். வாகனம் ஒண்டும் ஹயர் பண்ணி வரேல்லை. பஸ் ஸ்டாண்டில லைன் பஸ் தேடிப்பிடிச்சு பெங்களூர் போக வேணும்". எமக்கு அதற்கும் மறுநாள் பெங்களூரிலிருந்து கொழும்புக்கு விமானப் பயணம் இருந்தது. "நீங்க நாளைக்கு வெள்ளனக்கியே வீட்டுப் பக்கம் வாங்க. நான் அவுங்ககிட்ட சொல்லி வெக்கிறன். மத்தியானத்துக்கு திரும்பீடலாங்க. அப்புறமா பஸ் புடிச்சு போயிக்கலாம்": ஆனால் நாம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. தவிர, மலையேறிக் களைத்து விழுந்து வந்து மீண்டும் குளித்துப் புறப்பட வேண்டும். அரைநாள் பஸ் பயணத்தில் இருக்க இடம் கிடைக்குமோ தெரியாது. காலையில்தான் பேரூந்து நிலையம் சென்று விசாரித்து ஏற வேண்டும். "இல்லை சங்கீதா, அடுத்த வருஷம் வந்தால் பாக்கலாம். உங்களை எங்கே பிடிப்பது? நீங்கள் இங்கேதான் இருப்பீங்களா". "நாங்க எங்கின போப்போறம்? அதோ அதுல புளூ பெயிண்ட் அடிச்சிருக்கிற சொவரோட இருக்கிற வீடுகள்ள ஒண்ணு. அதுல வந்து விசாரிச்சீங்கன்னா காட்டுவாங்க".  அந்தப் பெண் மலையின் கீழ்ப்பக்கக்கத்தில் உள்ள ஏழைக் குடியிருப்புப்பக்கம் கை காட்டிற்று. அந்த நேரத்தில் அந்த இடம் சுலபமாகக் கண்டுபிடித்துக்கொள்ளலாம் போலத் தோன்றியது.  "ஓகே, இப்ப இளநி தாங்கோ" "மூணுதான் மிச்சம் இருக்கு. மூணையும் வாங்கிக்குங்கம்மா". "அப்ப விலை குறைச்சு தாங்கோ. கீழே குறைஞ்ச விலதானே". சிகன் மல்லுக்கு நிற்க ஆரம்பிக்க, அந்தப்பெண் என்னைப் பரிதாபமாகப் பார்த்தது. "இல்லீங்க சார். கீழேருந்து தூக்கி வருவோம்ங்க. அதான் ஜாஸ்தி சொல்றது".   எனக்கு சிறுவியாபாரிகளிடம் பேரம் பேசுவது பிடிக்காது. பெரிய கடைத்தொகுதிகள் பற்றி அறிவில்லை. எனக்கும், ஷொப்பிங்குக்கும் வெகுதூரம். ஆனால் இந்த சங்கீதாவை சிகன் சீண்டுவதும், அந்தப் பெண் தலைசரித்துக் குழந்தை போல் பிடிவாதமாகக் கெஞ்சுவதும் பார்க்க ஆனந்தமாக இருந்தது. இந்தப் பெண்ணுடன் கதை வளர்த்துக் கதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது. "நீங்க கம்மியா காசு தந்தா எங்க வூட்டுக்காரரு கோச்சுப்பாருங்க". 'அடி கள்ளச் சிறுக்கி' என எனக்குள் நினைத்துக்கொண்டேன். "உங்கட புருஷனுக்கு எப்பிடி எங்களிட்ட வித்தது தெரியும்?". "அவுங்களும் என்னோடதான் இங்க விப்பாங்க. மலைக்குள்ளார போற ஆக்கள் வந்தா மட்டும் போயிடுவாங்க". "உங்களுக்கு இதுதான் வருமானமா? இரண்டு பேரும் வந்து போறது கஷ்டம் இல்லையா". "ஆமாங்க, புள்ளைங்க படிப்புச் செலவுக்கு வேணுந்தானே". "எத்தனையாம் வகுப்பு உங்கட பிள்ளையள்?". "மூத்த பொண்ணு பன்ரண்டு படிக்குது". "என்ன?! பன்ரண்டாம் வகுப்பில படிக்கிற பிள்ளை இருக்கா?" - என்னால் நம்ப முடியவில்லை. "நான் சின்ன வயசிலயே கல்யாணம் பண்ணிட்டேங்க. எங்கம்மா நான் குழந்தயா இருக்க செத்துப்போச்சு. எங்கய்யா பொம்பிளப்பிள்ள பொறுப்பு எண்டதால சீக்கிரமா கட்டி வெச்சுட்டாரு". எனக்குள் சின்னதாய் வலித்தது. ஆனால் என்ன, இந்தப் பெண் இவ்வளவு காலம் கடந்தும் இதோ காதலித்தவனோடு முதன்முதலில் சல்லாபித்தது போல் அப்படியே மலர்ந்து நிற்கிறது. அப்படியாயின் இவளின் புருஷன் தாங்குபவனாய் இருக்க வேண்டும். நிறையத் தெரிந்து, காலம் கடந்து, பவிசும் படிப்புமாய்த் தேடி என்ன வாழ்க்கை? இவள் கணவன் ஒருவேளை சிறுவயதிலிருந்தே தெரிந்தவனாக, மாமன் மச்சானாக இருக்கலாம். இயற்கையோடு ஒன்றிய காட்டாளன், கனிந்தவனாக இருக்கலாம். பாசமும், காதலும் கலந்த காமத்தைப் பகிர்பவனாய் இருக்கலாம். கருணை செறிந்த வீரம் உடையவனாக இருக்கலாம். அதுதான் இந்தப் பெண்ணுக்குள் ஒரு சந்தோஷ அலைவீச்சும், பயமற்ற தன்மையும், குழந்தைத்தனமும் அவள் அழகோடு ஒட்டி இருக்கின்றன. இந்த சந்தோஷ அதிர்வுதான் இவளைவிட்டு விலகிச்செல்ல விடாமல் இழுக்கிறது. இவளுடன் பேசிக்கொண்டே இருக்க, இவளின் பாவனைகளை இரசித்துக் கொண்டேயிருக்கத் தோன்றுகிறது.  என்றாலும், பன்னிரண்டாம் வகுப்புப் பெண்ணுக்கு அம்மாவாக, இந்த சங்கீதாவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! சங்கீதாவின் புருஷன், பிள்ளைகள், குடும்பம் எல்லாவற்றையும் பார்க்க, இவளுக்கு பொருத்தம்தானா என ஒப்பீடு செய்ய ஏனோ மனம் பரபரத்தது. ஆனால் முடியவில்லை. 

  

மறுநாள் காலை கிளம்ப வேண்டியதாயிற்று. சங்கீதாவின் ஓவியம் மன மூலையில் பதிந்து விட்டது. அதற்குப்பிறகு அடுத்த வருடமோ, பின்னரோ மீண்டும் இதுவரை திருவண்ணாமலை செல்லவில்லை. எனக்கும் இதுவரை சென்றமட்டிலும் போதும் என்றவொரு மனநிலை ஏற்பட்டுவிட்டது. இப்போது பவா செல்லத்துரை, கதைகள் என்று மூழ்கியபின் திரும்பவும் ஒரு திருவண்ணாமலை ஆசை துளிர்க்கிறது. எப்போதாவது சந்தர்ப்பம் அமைந்து சென்றால்கூட, இவ்வளவு வருடம் கழித்து இந்த சங்கீதாவை சந்திக்க முடியுமா? எங்கேயெனத் தேடுவது? ஒருவேளை இவர்கள் வாழ்க்கையில் முன்னேறி, ஏதாவது பெரியளவில் வியாபாரம் ஆரம்பித்திருக்கலாம். வேறு இடத்திற்குப் போயிருக்கலாம். இவளின் மகள் ஏதாவது உயர்கல்வி, தொழில் என்றிருக்கலாம். மகளுக்கும்கூடத் திருமணம் ஆகியிருக்கலாம். சங்கீதாவை பேரப்பிள்ளையும் கையுமாகப் பாட்டியாக நினைத்தே பார்க்க முடியவில்லை. சே.., இந்தப் பெண்ணை இரசித்த மயக்கத்தில் ஒரு படம்கூட எடுத்து வைக்கத் தோன்றவில்லை. நான் மீண்டும் எப்போதாவது திருவண்ணாமலை செல்வேன். அங்குள்ள எல்லா நிறைவுகளையும் தாண்டி, சங்கீதாவைத் தேடுவேன். விருபாக்ஷி குகைப் பாதை வழியே நடந்து, இன்னமும் இளநீர் விற்கின்றாளா எனப் பார்ப்பேன். அவள் இன்னமும் பொங்கிப் பிரவாகிக்கும் ஆறு போல் இருக்கின்றாளா அல்லது வெறும் தடயமாக மாறிவிட்டாளா எனக் கவலைப்படுவேன். அவள் அப்படியே நீலக் காட்டுமலராக இன்னமும் இருக்க வேண்டுமென விரும்புவேன். சங்கீதாவை இனி நான் பார்ப்பதற்கு நிச்சயமாகச் சாத்தியம் எதுவும் இல்லை. எனினும் நான் தேடுவேன். தேடி, நெஞ்சில் ஒரு ஏமாற்றம் சுமந்து திரும்புவேன்.            

No comments: