அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 32 – மகுடி – சரவண பிரபு ராமமூர்த்தி


மகுடி – ஊதுகருவி  பாம்பாட்டிகள் பயன்படுத்தும் தொன்மை இசைக்கருவி மகுடி. இது துளைக்கருவிகள் அல்லது காற்று இசைக்கருவிகள் வகையைச் சேர்ந்தது. மகுடி இசைத்து பாம்பாட்டிகள் வித்தை காட்டும் சிற்பங்கள் தமிழக கோவில்களில் காணக்கிடைகின்றன. இக்கருவி அன்று முதல் இன்று வரை அதே அமைப்பில் தொன்மை மாறாமல் இருக்கின்றது. அம்பாசமுத்திரம் காசிபநாதர் கோயில் திருச்சுற்றிலுள்ள பாம்பாட்டி புடைப்பு சிற்பம் உள்ளது. இது 10ஆம் நூற்றாண்டு காலத்தியது. திருச்செங்கோடு மாதொருபாகர் கோவிலிலும் இவ்வாறான சிற்பம் உள்ளது.  உலர்ந்த காட்டு சுரைக்காய்(மகுடி சுரைக்காய்) எனப்படும் தாவரத்தின் காய் இதற்குப் பயன்படும். நன்கு முற்றிய சுரைக்காயின் கழுத்துப் பகுதி நீக்கப்பட்டு அதில் இரண்டு மூங்கில் குழல்கள் பொருத்தப்படும். இசையை ஏற்படுத்தக் கூடியவாறு அதில் ஏழு துளைகள் வரை இடப்படும்.  தேன்மெழுகில் கரித்துளை கலந்து சுரைக்காயை மூங்கிலுடன் இணைக்கும் பகுதியில் காற்று ஒட்டைகள் அடைக்கப்படும். இதே மெழுகில் சில அலங்கார வேலைகளும் செய்யப்படும்.  தமிழகம், இலங்கை மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இது பயன்பாட்டில் உள்ளது. சுமார் 30 ஆண்டுகள் முன்பு வரை சாதாரணமாக பாம்பாட்டிகளை தமிழகத்தில் காண முடிந்தது. தமிழகத்தில் பாம்பு பிடித்து வித்தை காட்டுதல் தடை

செய்யப்பட்ட பிறகு பாம்பாட்டிகள் அருகி விட்டார்கள். வேறு தொழில்களுக்குச் சென்று விட்டனர். வேறு தொழில் அறியாதவர்கள் வெறும் மகுடி இசைத்து யாசகம் பெறுகிறார்கள்.   மகுடியின் இசைக்கு மயங்காதவர்கள் இல்லை. மகுடி இசையின் நீட்சியாகத் தான் கோவில் விழாக்களில் இன்றளவும் நாதசுரத்தில் மகுடி இசைக்கும் வழக்கம் உள்ளது. என்ன தான் செவ்வியல் ராகங்கள் இசைக்கப்பட்டாலும் காவடி சிந்து மற்றும் மகுடி இசைக்கப்படும் பொழுது தான் வெகுமக்கள் உற்சாகமடைகின்றனர். ஏற்கனவே அழிந்துவிட்ட அல்லது ஒன்று இரண்டு இடங்களில் மட்டுமே காணப்படும் மகுடி இசையை நாம் எப்படிக் காப்பாற்ற போகிறோம்? விலங்குகள் வேட்டை தடை செய்யப்பட்ட பிறகு வேட்டையோடு தொடர்புடைய எக்காளக்கூத்து போன்ற நாட்டார் கலைகள் அழிந்தன. இதே நிலை தான் பாம்பாட்டிகள் மற்றும் அவர்களின் மகுடி இசைக்கும் இன்று. 

  
இவர்களைக் கண்டால் நாம் அவர்களை ஆதரிக்கலாம்.  காணொளி: https://www.youtube.com/watch?v=9TWhZQRhbho https://www.youtube.com/watch?v=fyF8IpDaBQs https://www.youtube.com/watch?v=kYWPpoyI87I https://www.youtube.com/watch?v=uCBPAngACGU https://www.youtube.com/watch?v=7Hspdoezj-M  ¬-சரவண பிரபு ராமமூர்த்தி


No comments: